Published:Updated:

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

சம்பளக்காரர்களை ரொம்பவுமே படுத்துகிறமாதிரி அறிவுரைகளைச் சொல்கிறீர்களே? சேமிப்பு, சேமிப்பு என்று சேமிப்பே கதியாக இருந்தால் வாழ்க்கையை எப்போதுதான் அனுபவிப்பது என்று சிலர் கேட்கின்றனர்.

உங்கள் ஆதங்கம் நியாயம்தான். ஆனால், ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். இது வேலையில் இருப்பவருக்கு மட்டுமல்ல, தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும். ஒரு தொழில் அதிபர் இருக்கிறார். தொழில் நன்றாகப் போகிறது. அந்த வருடம் நல்ல லாபம் வந்துள்ளது. ஆறு லட்சம் செலவில் கார் வாங்கவும், 30 லட்சத்தில் வீடு கட்டவும் தேவையான லாபம் அவருக்கு இருக்கிறது. அவர் 4 லட்சத்தில் காரும், 20 லட்சத்தில் வீடும் வாங்கிவிட்டு மீதத்தைத் தொழிலிலேயே விட்டுவைக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த வருடம் தொழிலில் லாபமே இல்லை. அந்த வருடமும் பிரச்னை இல்லாமல் வாழ்க்கை ஓடும் இல்லையா? அதற்கு மாறாக, சூப்பர் லாபம் வந்துவிட்டதே என்று 50 லட்சத்துக்கு (20 லட்சம் கடன் வாங்கி) 'கேட்டட் கம்யூனிட்டி’யில் வில்லா வீடு வாங்கியும், 25 லட்சத்துக்கு பென்ஸ் காரும் வாங்கிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். லாபம் இல்லாத அடுத்த வருடத்தில் அவருடைய நிலைமை என்னவாகும்? பிரச்னைக்குள்ளாகும்தானே? சேமிப்பில் சம்பளக்காரர் என்ன, தொழிலதிபர் என்ன, சேமிப்பில்லை எனில் இருவரின் நிலைமையுமே திண்டாட்டமே!

பணவளக் கலை!

இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். பணக்காரர்கள் சிக்கனமாகவே இருப்பதனாலேயே பணக்காரர்களாக இருக்கிறார்கள். பணக்காரர்கள் வாகனங்கள் தேர்ந்தெடுக்கும்போதும் சிக்கனம் பார்க்கிறார்கள். பணக்காரர்கள் அவர் களுடைய தகுதிக்கு சற்றே குறைவான சைஸ் வீட்டிலேதான் வசிக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் சற்றே சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

சம்பளக்காரர்களுடைய வாழ்க்கை முறையைப் பணக்காரர்களுடைய வாழ்க்கைமுறையோடு ஒப்பிடும் போதுதான் அவர்கள் பிரமாண்ட வாழ்க்கை வாழ்வதுபோல் தெரிகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் சிக்கனமாக வாழ்ந்தாலே பணக்கார வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

'என் கை ஓட்டைகை, ஸார். என்ன வந்தாலும் செலவாயிடுது’ என்று சொல்பவரா நீங்கள்? செலவுப் பழக்கத்தைக் கைவிட என்ன செய்வது என்று யோசியுங்கள். முதலில் நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்று பாருங்கள். அந்தத் தவறு நடப்பதற்குக் காரணமான விஷயத்தைச் செய்வதைத் தவிருங்கள். ஒரு மாலுக்கு விசிட் அடித்தால் கண்டதை வாங்கிப்போடும் பழக்கம் இருக்கிறதா? மால் பக்கமே போகாதீர்கள். சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் கண்டதையும் கை எடுக்கிறதா? அந்தப் பக்கமே போகாதீர்கள். வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மளிகைக்கடையில் சாமான் வாங்குங்கள்!

பணவளக் கலை!

உங்கள் வாழ்க்கைக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பணத்தை இறைத்து நீங்கள் இன்றைக்கு வாங்கினீர்கள் என்றால், சீக்கிரமே வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான விஷயங்களை நீங்கள் விற்கவேண்டியிருக்கும் என்கிறார் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்திச் சொல்லும் பங்குச் சந்தை நிபுணர் வாரன் பஃபெட். எனவே, தேவையில்லாத எதையும் வாங்கமாட்டேன் என்ற உறுதிமொழியை உடனடியாக எடுங்கள்.

இரண்டு சூழ்நிலைகளில் நீங்கள் வெட்டிச்செலவுகளை ஒட்டுமொத்தமாகத் தவிர்க்கவேண்டியிருக்கும். ஒன்று, கையில் காசே இல்லாதபோது; மற்றொன்று, கையில் காசு இருக்கும்போது. கையில் காசு இல்லாத போதுகூட மனம் கொஞ்சமாவது வெட்டிச்செலவுக்கு பிரேக் போடும். கையில் காசு இருக்கும்போதுதான் பிரேக் இல்லாத வண்டிபோல் மனம் வெட்டிச் செலவை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும்.

பணவளக் கலை!

தேவை இல்லாதது சரி. தேவை யானவற்றை வாங்குவதிலும் சேமிக்க ஏதும் வழி இருக்கிறதா என்று கேட்டீர்கள் எனில் அதற்கும் வழி இருக்கிறது. உணவுப்பொருள், மருந்து, பிராண்டடு பேக்கேஜ்டு உணவு என எல்லாவற்றிலுமே தள்ளுபடி தரும் நிறுவனங்களும் கடைகளும் இருக்கவே செய்கின்றன. எம்ஆர்பி-ல் விற்கும் கடைகளும் இருக்கவே செய்கின்றன. தள்ளுபடி தரும் கடைகள் தொலைவில் இருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் அங்கே போனால் பெட்ரோல் செலவு சரியாகிவிடும் என்று சொல்லலாம். முறையான திட்டமிடுதலின் மூலம் ஒரே டிரிப்பில் பல அத்தியாவசிய சாமான்களை அந்தத் தள்ளுபடிக் கடையில் வாங்கலாம். நான் தள்ளுபடி கடை என்று சொல்வது, ஒன்று வாங்கவேண்டிய இடத்தில் நான்கு வாங்கினால் கிடைக்கும் தள்ளுபடியை நான் குறிப்பிடவில்லை. ஒன்றையே வாங்கும்போதும் குறைவான லாபத்துடன் விற்கும் இடத்தையே குறிப்பிடுகிறேன்.

பொதுவாக, மனிதர்கள் அதிகம் செலவு செய்துவிட்டு பின்னர் வருத்தப்படுவது சினிமா, டிவி போன்ற பொழுதுபோக்கு விஷயங்கள், கேட்ஜெட்கள், துணிமணிகள் போன்றவற்றில்தான். சிலர் வெளியூர் பயணங்களில் பணத்தை வீணாகச் செலவு செய்துவிட்டு பின்னர் வருத்தப்படுவார்கள். சிலர் வருத்தப் படாமலேயே வாழ்ந்துவிடவும் செய் வார்கள். இவை அனைத்திலுமே செலவினங்களை நினைக்கும் முன்னரே கட்டுப்படுத்திவிட வேண்டும். இறங்கி விட்டாலோ பணத்தை வீணடிப்பது உறுதியாகிவிடும்.

கடுமையான செலவுச் சுருக்கம் என்பது அனைத்து விஷயங்களிலுமே ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்துச் செய்யும் நிலையாகும். தீபாவளி, பொங்கலுக்குத்தானே இந்தச் செலவு செய்கிறோம், மற்ற வேளைகளில் செய்வதில்லையே எனப் பல சால்ஜாப்புகளைச் சொல்லிக்கொண்டு வருடம் முழுவதுமே செலவுகளைத் தொடர்ந்கொண்டே இருப்பதுதான் மனித இயல்பு.

இதிலெல்லாம் கணக்குப் பார்த்தால் என்னை கஞ்சன் என்று ஊரே சொல்லாதா என்று நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு டெஸ்ட். இந்த மாதம் செலவு கொஞ்சம் ஓவராக இருக்கிறது என்று சொல்லி, உங்கள்கூட இருக்கும் நண்பரிடம் உங்கள் மாத சம்பளத்துக்கு நிகரான பணத்தைக் கடன் கேட்டுப்பாருங்கள். எத்தனை பேருக்கு கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

பணம் இல்லாதபோது உங்களுக்குப் பணம் தந்து உதவாத உலகம், பணம் இருக்கும்போது உங்களை கஞ்சன் என்று சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே! அப்படியெல்லாம் இல்லை ஸார் என் நண்பர்கள், எள் என்றால் எண்ணெய்யாய் இருப்பார்கள் என்று வாதிட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரேயொரு கேள்வி. நண்பர்கள் உடனுக்குடன் அனைவரின் பற்றாக்குறைக்கும் உதவுவார்கள் என்றால் வங்கிகளிலும்/கிரெடிட் கார்டிலும் பர்சனல் லோன் வாங்க ஆளே இருக்காதே? உங்களுக்கென ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அவற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பெரும்பான்மையான மனிதர்கள் அதிக வட்டி தரும் கடனை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது என்பதே உண்மை.

பணவளக் கலை!

வெட்டிச் செலவுகள், கடன் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்தாததால் நேரும் அபராத வட்டிகள், பில் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்தாததால் வரும் அபராதங்கள், மறந்து வசூலிக்காமல் விட்ட பாக்கிகள், குளோஸ் பண்ணி பணத்தை வாங்காமல்விட்ட சேமிப்புக் கணக்குகள், நான்கு வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்பதனால் இரண்டு மட்டுமே நமக்குத் தேவைப்படும் விஷயத்தில் நான்கை பணம் கொடுத்து வாங்கி இரண்டில் வீணடித்த தொகைகள், ஸ்விட்ச் ஆஃப் பண்ண மறந்த விளக்குகள் என எல்லாருமே ஏராளமான வீணடிக்கவே செய்கிறார்கள்.

சரியான திட்டமிடுதல் மற்றும் கணக்குவழக்குகளை ஒழுங்காக வைத்திருக்கும் ஒழுங்குமுறை போன்றவைதான் இதுபோன்ற வீணாகும் பணத்தை நமக்கு மீட்டுத் தரும்.

சம்பளக்காரர்கள் மிகவும் கவனத்துடன் இந்த விஷயங்களில் செயல்பட்டால் நாளடைவில் கணிசமான சேமிப்பை எட்டி, பணரீதியான பயம் இல்லாமல் வாழ முடியும்.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism