இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

நினைப்பதெல்லாம் நடக்குமா என்று கேட்கிறார்கள் சிலர்.  நினைப்பதெல்லாம் நடக்காது என்பதில் சிலருக்கு அப்படியொரு அபார நம்பிக்கை. ஆனால், நாம் நினைப்பது நடக்கும், நாம் நினைக்கும் எண்ணம் நல்லதாக இருந்தால். நம்முடைய உள்மனது நல்லதை நினைத்து செய்கிற விஷயங்கள் உலகிலுள்ள நல்லவர்களின் உணர்வுகளோடு கலக்கிறபோது நாம் நினைப்பது நிச்சயம் நடக்கும்.  

உதாரணமாக ஒரு நல்லவரைப் பற்றி நினைப்போம்; திடீரென்று அவர் நமக்கு போன் செய்வார் அல்லது நம்முன் வந்து நிற்பார். கோயிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்போம். நம்மை அறியாமலேயே அதற்கான சந்தர்ப்பங்கள் வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், சுயநலத்தோடு நினைக்கப் படும் எண்ணங்கள் பெரும்பாலும் நிறைவேறாது. ''கடவுளே, நான் கஷ்டப்பட்டு அந்த சேப்ட்டர் படிச்சிருக்கேன்; அதிலிருந்தே கேள்விகள் வரணும்' என்று நினைத்தால், வராது. அப்படியே வந்தால் அது குருட்டு அதிர்ஷ்டம்தான்.  

உலகம் முழுக்க எங்கும் எதிலும் நல்ல சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் நல்லது நினைத்தால், நமக்கும் நல்லது நடக்கிறது. இது சத்தியமான வார்த்தை.

நல்லதே நடக்கும் என்று நிச்சயமாக நம்புங்கள். உலகில் உண்மை மட்டுமே நிலைத்துநிற்கும் என்று நம்புங்கள். ஆனால், தற்போதைய வாழ்வில் உலகம் நிலையானதா என்று கேட்கும் அளவுக்கு, பாதுகாப்பின்மை, நிச்சயமற்ற தன்மை, கவலைகள், வெறுப்புகள், மன அழுத்தங்கள் என்பதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் மனிதனிடம் வேரூன்ற ஆரம்பித்திருக்கின்றன.

உனக்கும் மேலே நீ

இந்த நிலைக்குக் காரணம், மனிதன் தர்மம் மறந்து, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நிலை மறந்து,  பண்டைய கலாசாரத்தையும், முன்னோர் சொன்ன நல்ல சொற்களையும் கேட்காமல் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளச் செயற்கையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதுதான்.

நம்முடைய குறிக்கோளை அடைய வேண்டுமானால், உலகிலுள்ள நல்லவைகளோடு நாம் இணைவதே வெற்றியடைய வழியாகும். இந்த நல்ல வழியைப் பின்பற்றாமல், கலாசாரங்களை மறந்து, அதர்ம வழியில், குறுக்கு வழியில் வெற்றியடைய நினைப்பது தற்காலிக வெற்றியைத் தரும் என்றாலும், நிரந்தரமாக ஜெயிக்க முடியாது.

பழங்கால வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால், புகழ், செல்வம், வாக்கு, ஞாபகசக்தி, புத்திகூர்மை, விடாமுயற்சி, மன்னிக்கும் மனப்பான்மை போன்றவை அறிஞர்களின் வாழ்க்கையோடு கலந்திருந்தன. ஏற்றத்தாழ்வுகளும், ஏமாற்றங்களும், பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை கொண்டு மற்றவர்களை அழிக்க நினைத்த கதைகள் நமக்குத் தெரியும்.

உனக்கும் மேலே நீ

பண்டைய தர்மம் நிறைந்த உலகில் வாழ்ந்த முன்னோர்கள் அனைவரும் அவரவர் செய்யும் பணியைப் பொறுத்து அந்தஸ்தும், அறிவை கண்டு மரியாதையும், சக்தியைப் பொறுத்து அதிகாரமும் அமையப் பெற்று உலகில் வெற்றி பெற்ற நாயகர்களாக விளங்கினர். அதே தரங்களை நிகழ்கால வாழ்வில் கொண்டிருந்தால் அந்த மரியாதை நமக்கும் கிடைக்கும் என்பதையே தற்போதைய வாழ்க்கை முறைகளும் உணர்த்துகின்றன.

என்னதான் நாகரிகம் வளர்ந்து, தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் பெருகி இருந்தாலும் நம்முடைய பண்டைய கலாசாரங்கள் என்றும் அழிவதில்லை. அவைதான் எல்லா வளர்ச்சிக்கும் மூலதனம் என்பதை அவசியம் புரிந்துகொள்ளுங்கள். இன்றைய அறிவியல் கொள்கைகளும், நிர்வாக நடைமுறைகளும், பண்டைய கொள்கைகளை அடியொற்றியே அமைக்கப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிநாட்டுக் கலாசாரங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தும் பண்டைய முறையில் அமைந்துள்ள நம் நடத்தை களோடும் நல்ல பழக்கங்களோடும் இணைந்தால்தான் நம்மால் எல்லாக் காலத்துக்கும் ஏற்றாற்போல் நம்மை மாற்றிக்கொண்டு வெற்றியாகச் செயல்பட முடியும்.

தற்போது நம் நாடு நல்ல தலைவர் களை வேண்டி தவம் கிடக்கிறது. இந்தப் பயணத்தில் இவர் நல்லவரா, அவர் நல்லவரா என்று மனம் பல்வேறு சந்தேகங்களோடு அலைபாய்கிறது. உங்களுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறான் என்பதை உணருங்கள்.

பல இளைஞர்கள் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகள், குடும்பச் சுமைகள், கிடைத்திருக்கிற வேலைவாய்ப்புகள் என முழுமையாக அவர்களால் அவர்களின் பங்களிப்பை செய்ய முடிவதில்லை.

நினைத்த மாற்றங்களையெல்லாம் கொண்டுவர முடியவில்லை என்றாலும், முடிந்தவரையிலான மாற்றங்களைக் கட்டாயம் கொண்டுவர இன்றைய இளைஞர்கள் கட்டாயம் பாடுபட வேண்டும்.

ஒரு சிறந்த குடும்பத் தலைவனாகவோ, நல்ல படிப்பாளியாகவோ அல்லது அலுவலகத்தில் ஒரு சிறந்த பணியாளரா கவோ, நாட்டின் இயற்கைச் சூழலுக்கு உங்கள் பங்களிப்பு இருந்தாலோ அல்லது சமூக அக்கறையுடன் நீங்கள் நடந்துகொண்டால்கூட இந்த நாட்டுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

உனக்கும் மேலே நீ

குப்பையைத் தெருவில் போடாமல் குப்பைத்தொட்டியில் போட்டால்கூட உங்கள் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். நான் தலைவனாகி நாட்டுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதைவிட இந்தச் சிறு பங்களிப்புகூட சிறந்ததாகும்.

மின்சாரம் இல்லை என்று கூக்குரலிடுவதைவிட, தேவையற்ற நேரங்களில் உங்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் மின்சாரத்தை சேமித்தாலே நீங்கள் நாட்டுக்கு நன்மை செய்கிறீர்கள்.

மக்கள்தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் ஒவ்வொரு துறையையும் விமர்சிப்பது எளிதான காரியம். ஆனால், நாட்டுக்கு நான் ஏதேனும் நல்லது செய்யவேண்டும், மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று வேட்கை உள்ள நீங்கள் வீட்டில் ஒரு மரம் நட்டாலே நீங்கள் நாட்டுக்கு நல்லது செய்தவராகிவிடுவீர்கள். எப்பாடுபட்டாலும் மனிதகுலம் சிறக்க பாடுபடுங்கள்!

(நிறைவு பெற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism