ஸ்பெஷல்
Published:Updated:

ஷேர்லக் - லாபம் தரும் 3 வங்கிகள்!

ஷேர்லக் - லாபம் தரும் 3 வங்கிகள்!

நாணயம் விகடனின் 300-வது சிறப்பிதழின் இறுதிகட்ட வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்க, கால் சத்தம்கூட தெரியாதபடிக்கும் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ஏற்கெனவே அச்சாகிவந்திருந்த சில பாரங்கள் நம் டேபிள் மீது இருக்க, அதை எடுத்து புரட்டியவர், 'பலே, அருமையாக வந்திருக்கிறது 300-வது சிறப்பிதழ். நிதி தொடர்பான விஷயங்களில் நாணயம் செய்யும் சேவைக்கு தமிழகம் முழுக்க உள்ள முதலீட்டாளர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள். தொடரட்டும் உமது சேவை’ என்று நம்மைப் பாராட்ட, நன்றி சொல்லிவிட்டு, விஷயத்துக்குள் அவரை அழைத்துச் சென்றோம்.

''எப்போது வேண்டுமானா லும் வெடிக்கலாம் எனச் சில மாதங்கள் வரை பூச்சாண்டி காட்டி வந்தது பல பொதுத்துறை வங்கிகளின் என்.பி.ஏ. இப்போது இந்திய வங்கித் துறை எப்படி இருக்கிறது?'' என்று முதல் கேள்வியைக் கேட்டோம்.

''பெரும்பாலான வங்கிகள், இனி வரவே வராது என்கிற நிலையில் காணப்படுகிற கடன்களை மறுசீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. அந்தவகையில், கூடிய விரைவில் ரூ.2,000 கோடி கடன்களை அவற்றின் கணக்கு புத்தகத்திலிருந்து நீக்க உள்ளன. குறிப்பாக, ஆக்ஸிஸ் வங்கி ரூ.1,000 கோடி, ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் ரூ.700 கோடி கடனை சொத்து சீரமைப்பு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இருக்கின்றன. இவைதவிர, கனரா பேங்க், எஸ்பிஐ போன்றவை சில நூறு கோடி வாராக்கடன்களை விற்பனை செய்ய உள்ளன.

ஷேர்லக் - லாபம் தரும் 3 வங்கிகள்!

கடந்த 2012-13-ம் ஆண்டில் ரூ.12,500 கோடியும், 2013-14-ம் ஆண்டில் ரூ.50,000 கோடி மதிப்புள்ள வாராக்கடன்களையும் இப்படி விற்பனை செய்திருக்கின்றன. வங்கிகள் இப்படி வாராக் கடனை குறைத்து வருவதால் கூடியவிரைவில் வங்கிகளின் செயல்பாடு மேம்படும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் வங்கித் துறை தொடர்பாக அனலைஸ் செய்துவரும் என் நண்பர்கள்'' என்றவருக்கு, சில்லென லெமன் ஜூஸ் தந்தோம். அதை கொஞ்சம் குடித்தவர், வங்கி பற்றி இன்னொரு செய்தியையும் சொன்னார்.

''இந்திய பொருளாதாரம் புத்துயிர் பெற்றால் அதிகம் பலன் அடையப்போவது தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கிகள்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிப்பாக, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் அதிக ஆதாயம் அடையும் என்கிறார்கள்.

மார்ச் காலாண்டில் இந்த மூன்று வங்கிகளின் நிகர லாபம் முறையை 15%, 18.5% மற்றும் 23% அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ பேங்க் உடன் ஒப்பிடும்போது, ஆக்ஸிஸ் பேங்க் பங்கின் விலை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. ஆக்ஸிஸ் பேங்க், பொருளாதார மந்தநிலையைத் தாண்டி வளர்ச்சி காண்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லறை வணிகத்தில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது'' என்றார்.

''ஹெச்யூஎல் நிகர லாபம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகரித்துள்ளதே?'' என்றோம் கொஞ்சம் ஆச்சர்யப்பட்டபடி.

''பொருளாதாரம் மந்தநிலை யில் இருப்பதால் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ஒற்றை இலக்கத்தில் அதாவது, 8 சதவிகிதமே அதிகரிக்கும் என சந்தை நிபுணர்களும் அனலிஸ்ட்களும் எதிர்பார்த் தனர். ஆனால், இதைத் தாண்டி இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 11 சதவிகிதம் அதிகரித்து, ரூ.872 கோடியாக உயர்ந்துள்ளது. கூடவே, விற்பனை 9 சதவிகிதம் அதிகரித்து, ரூ.6,682.2 கோடியாக உயர்ந்துள்ளது'' என்று சொன்னார்.

''டிவிஎஸ் மோட்டார் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறதே?'' என்றோம்.

''2012-13-ம் ஆண்டு மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.33 கோடியை நிகர இழப்பாக சந்தித்தது. நடப்பு 2013-14-ம் ஆண்டு மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம், ரூ.52 கோடியை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. காரணம், இதன் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி அதிகரித்ததால் லாபம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், விற்பனை வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் பெரும்பாலான அனலிஸ்ட்கள், இந்த நிறுவனப் பங்கை விற்க பரிந்துரை செய்து வருகிறார்கள். இங்கேதான் சிறு முதலீட்டாளர் கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்'' என்றார்.

ஷேர்லக் - லாபம் தரும் 3 வங்கிகள்!

''மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிகர லாபம் 89% அதிகரித்து ரூ.962 கோடியாக உயர்ந்துள்ளதே?'' என்றோம்..

''கடந்த ஆண்டின் இதேகாலத்தில் வருமானம் 13.5% அதிகரித்து ரூ.22,219 கோடிதான் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் டேட்டா, வாய்ஸ் ரிங் போன்ற அதிக லாப வரம்பு உள்ள பிரிவில் இதன் வருமானம் உயர்ந்ததே நிகர லாப அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது'' என்று விளக்கம் தந்தார்.

''அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதே? இது எங்கே போய் முடியும்?'' என்று கேட்டோம் சிறிது அச்சத்துடனேயே.

''2014-ம் ஆண்டில் இதுவரை 500 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை அந்நிய நிதி நிறுவனங்கள் வாங்கியிருக் கின்றன. மார்ச் காலாண்டில் அதானி என்டர்பிரைசஸ், ஹெச்சிஎல், டிவிஸ் லேப், லூபின் நிறுவன பங்குகளில் எஃப்ஐஐகள் முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ், டைட்டன், தாபர், சன் பார்மா, அதானி போர்ட், ஐடியா செல்லுலார், யெஸ் பேங்க் பங்குகளில் எஃப்ஐஐ முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், லார்ஜ் கேப் பங்குகளான பார்தி ஏர்டெல், டாடா பவர், ரிலையன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிண்டால்கோ போன்ற பங்குகளில் இந்த நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ளது. எஃப்ஐஐகளின் முதலீடு தொடர்ந்து இங்கே இருக்குமா அல்லது ஒருபகுதி உடனே இங்கிருந்து செல்லுமா என்பது வருகிற 16-ம் தேதிக்குப் பிறகு தெளிவாகத் தெரிந்துவிடும். அதுவரை உஷாராக இருப்பது நம் கடமை'' என்று விளக்கம் தந்தார்.

''எம்சிஎக்ஸ் நிறுவனம் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறதே?'' என்றோம்.

''எம்சிஎக்ஸ் மற்றும் எஃப்டிஐஎல்-ல் 2004-2009 இடையே அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே பெருமளவில் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாக பி.டபிள்யூ.சி ஆடிட்டிங் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தவிதமாக 676பேர் டிரேட் செய்திருக்கிறார்கள். இந்த அறிக்கையில் எம்சிஎக்ஸ் இல்லாத நிறுவனங்களுக்கு மோசடியாக ரூ.100 கோடிக்கு மேல் வழங்கி உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.

இது ஒருபக்கமிருக்க இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த மனோஜ் வைஷ் திடீரென ராஜினாமா செய்திருப்பது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கி இருக்கிறது. உடல்நலம் சரியில்லை என்பதால் ராஜினாமா செய்திருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், பணி அழுத்தம்தான் இந்த ராஜினாமாவுக்கு உண்மையான காரணம் என்று சொல்கிறார்கள் சிலர். எம்சிஎக்ஸ் நிறுவனத்தில், அதன் புரமோட்டர் நிறுவனமான ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸ் (எஃப்டிஐஎல்) 26% பங்கை வைத்திருக்கிறது. இதை மே 6-ம் தேதிக்குள் 2 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என பார்வேர்டு மார்க்கெட் கமிஷன் (எஃப்எம்சி) சொல்லியிருந்தது. இதற்கான முயற்சியில் எம்சிஎக்ஸ் தீவிரமாக களமிறங்கியபோதும், அதை எளிதாகச் செய்துவிட முடியவில்லை. இந்தநிலையில் மனோஜின் ராஜினாமா எம்.சி.எக்ஸுக்கு புது சங்கடத்தையே உருவாக்கி இருக் கிறது'' என்றவர், புறப்படும்முன் இப்படி சொன்னார்.

''இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று தங்கம்  வாங்காதவர்கள் தப்பித்தார்கள் என்பேன். காரணம், தரம் குறைந்த நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதித்திருப்பதாக செய்தித்தாள் களில் போட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் தங்கம் கடந்த ஓராண்டில் 9% மட்டுமே லாபம் தந்திருக்கிறது. பங்குச் சந்தை 17% லாபம் தந்திருக்கிறது. இனி நம் முதலீடு பங்குச் சந்தையை நோக்கியதாகவே இருக்கட்டும்'' என்றவர் சட்டென புறப்பட்டுச் சென்றார்.