ஸ்பெஷல்
Published:Updated:

பண்ணை விவசாயம்... பக்கா லாபம்!

ஆர்.குமரேசன் படங்கள் : க.தனசேகரன்.

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டன் பாளையம், அபிநவம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், ஒன்பது ஏக்கர் நிலத்திலிருந்து ஆண்டுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் வருமானம் சம்பாதிக்கிறார். இவரது ஒருங்கிணைந்த பண்ணைதான் தமிழகத்தின் முக்கிய மாடல் ஃபார்மாக இருக்கிறது. ஒன்பது ஏக்கர் என்பது பலருக்கும் சாத்தியம் இல்லாத ஒன்று என்பதால், இரண்டு ஏக்கரில் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கும் வகையில் இவர் தயார் செய்துதந்த திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட இந்தியன் வங்கி, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க இவருக்கு ரூ.5 லட்சம்  கடன் தந்திருக்கிறது.

இதுதொடர்பாக ஜெயராமனிடம் பேசினோம். ''நான், ஒன்பது ஏக்கர்ல தென்னை, அதுக்கு இடையில பாக்கு, வாழை சாகுபடி செஞ்சிகிட்டு இருக்கேன். அதோட ஆடு, மாடு, கோழி, மீன், தேனீ வளர்த்து அதன்மூலமா வருமானம் பாத்துகிட்டு இருக்கேன். பல மாவட்டத்துல இருந்தும் வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகளைக் கூட்டிட்டுவந்து என்னோட பண்ணையைக் காட்டுறாங்க...

அப்படி வர்றப்ப ஒரு விவசாயி, 'அய்யா, எங்கிட்ட  2 ஏக்கர்தான் இருக்கு... இதுல பண்ணை விவசாயம் செய்ய முடியுமா?’னு கேட்டாரு. 'ஏன் முடியாது. 2 ஏக்கர்ல மாசம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம்’னு சொன்னேன்'' என்றவர்,  அந்தத் திட்டத்தை விளக்கினார்.

பண்ணை விவசாயம்... பக்கா லாபம்!

''ரெண்டு ஏக்கர் நிலத்துல ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கிறதுக்கு, 15 லிட்டருக்கு குறையாம பால் தர்ற மூணு பசு மாடுக, 50 ஆடுகள், 100 கோழிகள், 10 வாத்து அல்லது வான்கோழி, ரெண்டு தேனீ பெட்டி, ரெண்டு அசோலா தொட்டி, ரெண்டு மண்புழு உரம் தயாரிக்கிற தொட்டி இருந்தாப் போதும்.

10-க்கு 24 அடியில ஒரு மாட்டுக்கொட்டகை, 10-க்கு 20 அடியில ஓர் ஆட்டுக் கொட்டகை அமைக்கணும். இது எல்லாத்தையும் 25 சென்ட் இடத்துக்குள்ள அமைச்சிடலாம். ஓர் ஏக்கர் நிலத்துல ஆட்டுக்கு தேவையான கோ4 தீவனப்புல், கோ.எப்.எஸ்29 தீவன சோளம், சூபாபுல், அகத்தி மாதிரியான பசுந்தீவனங்களை வளர்க்கணும். மீதியிருக்க இடத்துல தண்ணி வசதியைப் பொறுத்து அந்தந்த பகுதிகள்ல சிறப்பா விளையிற காய்கறி, வாழை, நெற்பயிர்களைச் சாகுபடி செஞ்சிக்கலாம்.

இதுதான் ரெண்டு ஏக்கர் பண்ணைக்கான திட்டம். இதுக்கு மொத்தம் 5 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாகும்.

பண்ணை விவசாயம்... பக்கா லாபம்!

மாட்டைப் பொறுத்தவரை, நிறை சினையிலதான் வாங்கிட்டு வரணும். நம்ம இடத்துக்கு வந்துதான் கன்னு போடணும். ஒரு மாடு 15 லிட்டர் வீதம் 3 மாடுகள் மூலமா தினமும் 45 லிட்டர் பால் கிடைக்கும். மாசத்துக்கு 1,350 லிட்டர் கிடைக்கும்; சராசரியா 1,200 லிட்டர்னு வெச்சிகிட்டாலும் லிட்டர் 20 ரூபாய் வீதம் 24 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதுல 50% தீவன செலவுக்குப் போயிடும். மீதம் ரூ.12 ஆயிரம் மாதந்தோறும் கிடைக்கும்.

அதுபோக, மாடுகளோட சாணத்தை வெச்சி மண்புழு உரம் தயாரிக்கலாம். இதைப் பயிர்களுக்குப் பயன் படுத்துனதுபோக மீதமானதை கிலோ 3 ரூபாய்க்கு விற்கலாம். .

ஆடுகளை வாங்கும்போது ஒரே வயசுள்ள ஆடுகளை வாங்கக்கூடாது. அந்தந்த பகுதியில எந்த ரகம் நல்லா வளருமோ, அந்த ரக வெள்ளாடு களை வாங்கி வளக்குறதுதான் நல்லது. 2,500 ரூபாய் விலையில 10 குட்டிக, 2,000 விலையில 10 குட்டிக, 1,500 ரூபாய் விலையில 10 குட்டிகன்னு மொத்தம் 30 கிடா குட்டிகளை வாங்கணும். ஆடுகளுக்குத் தீவனம், பிண்ணாக்கு தண்ணி தந்து வளர்த்தா ஆடுக கொழு கொழுன்னு வந்திடும்.

பண்ணை விவசாயம்... பக்கா லாபம்!

ஒரு மாசம் வளர்த்து, பிறகு 2,500 விலையில வாங்குன குட்டிகள்ல ரெண்டு குட்டிகளை விக்கணும். ஒரு குட்டி 3-6 ஆயிரம் விலையில கிடைக்கும். அதுல 1,500 ரூபாய் விலையில ரெண்டு சின்னக் குட்டிகளை வாங்கிப் பட்டியில விட்டுட்டு, மீதியிருக்க 3 ஆயிரத்தை எடுத்து நம்ம பாக்கெட்ல வெச்சிக்கலாம். வார வாரம் இப்படி செய்றதால மாசம் 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதே நேரம் பட்டியில இருக்கக் குட்டிகளோட எண்ணிக்கையும் குறையாது.

கோழி, வான்கோழிகளை ஆறு மாசம் வளர்த்து, அடை வெச்சு, எண்ணிக்கை அதிகமான பிறகு வித்தா அது மூலமா வருஷத்துக்கு 12 ஆயிரம் கிடைக்கும். அதுபோக நாம விவசாயம் செய்ற பயிர்க மூலமா வருஷம் ரூ.50 ஆயிரம் கிடைக்கும். ஆக, மாதந்தோறும் மாடுக மூலமா 12 ஆயிரம், ஆடு மூலமா 12 ஆயிரம், கோழி மூலமா ஆயிரம், பயிர்கள் மூலமா 5 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். இதுபோகத் தேன் மூலமா கிடைக்குற வருமானம் தனி.

இப்ப சொல்லுங்க.. கைநிறைய லாபம் ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு ஒப்பற்ற தொழில்தானே?'' என்று அவர் கேட்க, ஆமால்லே என்று அதிசயித்து நின்றோம்.