Published:Updated:

பணவளக் கலை!

டாக்டர்.எஸ்.கார்த்திகேயன்

பணவளக் கலை!

டாக்டர்.எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

ணவளக் கலையின் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறோம். எல்லாருக்கும் சமமாகக் கொடுக்கப்பட்டுள்ள இருபத்திநாலு மணி நேரத்தில் சிலர் கோடிகளைக் குவிக்கின்றனர். சிலரோ தேவைகளைப் பூர்த்திசெய்யவே தடுமாறுகின்றனர். எப்படி இந்த நிலையை முயற்சியால் மாற்றுவது என்பதிலிருந்து, சூழ்நிலைகளால் வேலைக்குக் கட்டாயம் போய்க்கொண்டிருப்பவர்கள் எப்படி பணரீதியான பயமில்லாமல் வாழ முயற்சி எடுக்கவேண்டும் என்பது வரையிலுமான பல்வேறு விஷயங்களையும் இதுவரையில் பார்த்தோம். திரும்பத்திரும்ப ஒரேமாதிரியான விஷயங்களே பணம் சேர்த்தலுக்கான வழிவகைகள் என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொன்றிலும் சிறுசிறு மாறுதல்களும் நுணுக்கங்களும் தனிநபர்களின் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்.

பணவளக் கலை!

சரியான நேரத்தில் சரியான தொழிலில் ஒரு முதலாளியாக (உதாரணத்துக்கு, 2000-த்தில் இருந்து ரியல் எஸ்டேட் துறையில்!) இருந்தால் பணம் சேர்க்கலாம். சரியான நேரத்தில் சரியான தொழிலில் ஒரு தொழிலாளியாக (உதாரணத்துக்கு, அதே 2000-த்தில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில்) இருந்தாலும் பணம் சேர்க்கலாம். அனுபவரீதியாகப் பார்த்தால் ஓர் எளிய உண்மை அனைவருக்குமே பிடிபடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனித வாழ்க்கையின் சராசரி அளவு 65 வயது என்று வைத்துக்கொண்டால், அதில் ஏறக்குறைய  முதல் 25 வருடங்கள் தன்னை அவன் தயார்படுத்திக்கொள்வதில் தீர்ந்துபோய்விடுகின்றது. மீதமிருக்கும் நாற்பது வருடங்களில் மட்டுமே மனிதன் பணத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். பொருளாதாரச் சுழற்சியும், ஒரு தொழிலின் அபரிமிதமான வளர்ச்சியும் சராசரியாகக் கிட்டத்தட்ட பத்தாண்டு காலத்துக்கு (12 வரையிலும் கூட!) மட்டுமே இருக்கின்றது. ஒரு சாதாரண வருமானத்தைத் தருகின்ற தொழிலாயினும் சரி, மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமானாலும் சரி தொழில் வளர்ச்சி என்பது ஒரு சக்கரச்சுழற்சிதான். இந்தச் சுழற்சி மேல்நோக்கிச் செல்லும் முதல் பத்துவருட காலத்தில் அதில் கால்பதித்து வேரூன்றிவிட்டால் பணம் தானாகச் சேர்ந்துவிடும். ஒருவர் முதலாளியாக இருந்தால் கூட, சரியாகப் போகாத ஒரு தொழிலில் இருந்து மற்றொரு தொழிலுக்கு சரியான நேரத்தில் மாறிவிட்டால் அதன்மூலம் பெரும்பணத்தைப் பார்க்க முடியும். ஒரு வேலைக்குப் போகின்றவராக இந்தவகை மாற்றத்தைச் செய்துகொள்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. இருந்தாலும் வேலை பார்க்கும் சிலர்கூட பல்வேறு தொழில்களுக்கு மாறி வெற்றிபெற்றுள்ளதை உங்களுடைய அக்கம்பத்தில் இருப்பவர்களை உற்றுப்பார்த்தால் நீங்களே கண்டறிய முடியும்.

பணவளக் கலை!

தொழிலோ/வேலையோ பத்து முதல் பதினைந்து வருட காலத்தில் மட்டுமே கணிசமான பணத்தைச் சேர்க்க முடியும். முதல் ஐந்து வருடம் நம்மை நிலைநிறுத்திக்கொள்ளவும், அடுத்த ஐந்துவருடம் கணிசமான லாபம் பார்க்கவும், கடைசி ஐந்துவருடம் சூப்பர் லாபம் பார்க்கவும் முடியலாம். நாம் வாழும் வாழ்க்கையில் நம் கையில் இருக்கும் 45 வருடத்தில் இந்தப் பதினைந்து வருடம் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதுதான் சஸ்பென்ஸே. சிலருக்கு 25 வயதிலேயே இந்தப் பதினைந்து வருடம் ஆரம்பிக்கலாம். சிலருக்கு 40 வயதில் ஆரம்பிக்கலாம். சிலருக்கு ஐம்பது வயதில்கூட ஆரம்பிக்கலாம். சிலர் இரண்டு மூன்று தொழில்களில் தோல்வியுற்ற பின்னர்கூட இந்த கோல்டன் வருடங்களைச் சந்திக்கலாம்.

பெரிய நிறுவனங்களெல்லாம் காலம் காலமாய் இருந்து கொழித்துக்கொண்டு இருக்கின்றதே என்ற எதிர்கேள்வியை நீங்கள் கேட்கலாம். பெரிய நிறுவனங்களை நிறுவி நடத்துபவர்கள் இன்ஸ்டிட்யூஷன் பில்டர்கள். அவர்களுடைய எண்ணமும் செயலும் தனிநபர் சம்பாத்தியத்துக்கு முயலுவதைப் போன்றதாய் இருக்காது.

நாம் தனிநபர் முன்னேற்றம் பற்றியே இந்தத் தொடர் முழுவதும் பேசிவருகின்றோம். பிசினஸ்மேன் என்பது வேறு. இன்ஸ்டிட்யூஷன் பில்டிங் என்பது வேறு என்பதை நீங்கள் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.

பிசினஸ்மேன் என்பவர் அன்றைக்கு லாபம் பார்க்கும் தொழிலை விரும்பிச் செய்வார். லாபம் இல்லை என்றால் அந்தத் தொழிலைவிட்டு வேறொரு தொழிலை நோக்கி ஓடுவார். ஆனால், இன்ஸ்டிட்யூஷன் பில்டரோ நீண்டநாள் பலன் கருதி தொழிலை தொடங்கி நடத்துபவராக இருப்பார். இடைப்பட்ட காலத்தில் நஷ்டமே வந்தாலும் புதிய முதலீடுகளைச்செய்து, செய்துகொண்டிருக்கும் தொழிலை காப்பாற்றி நடத்திச் சென்று வெற்றிகாண்பவராய் இருப்பார்.

முதல் தலைமுறை இன்ஸ்டிட்யூஷன் பில்டர்கள் எல்லாருமே முதலில் பிசினஸ்மேனாக வாழ்க்கையை ஆரம்பித்து அதில் வந்த அபரிமித லாபத்தால் இன்ஸ்டிட்யூஷன் பில்டர்களாகும் அடுத்த நிலைக்குச் செல்கின்றார்கள். பணவளக் கலையில் நாம் தனிநபர் பணம் சேர்ப்பது சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே எக்ஸ்க்ளூஸிவ்வாகப் பார்த்தோம்.

என்னதான் பணம் வாழ்வின் அத்தியாவசியம் என்றாலும், பணத்தை எதற்காகச் சம்பாதிக்கின்றோம் என்ற அடிப்படை கேள்வியினை நாம் அவ்வப்போது கேட்டுக்கொள்ள வேண்டும். நம்மால் சேர்க்கப்படும் பணம் நம்மை மகிழ்ச்சியுறச் செய்கின்றதா? இல்லை மகிழ்ச்சியைக் குறைக்கின்றதா? என்பதை அவ்வப்போது சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். வரும் பணம் மகிழ்ச்சியைக் குறைக்கின்றது என்றால், நாம் அங்கே ஒரு பிரேக் போட்டு ஏன் மகிழ்ச்சி குறைகின்றது என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கின்றானா என்ற கேள்விக்குப் பதிலை எப்படி கண்டுபிடிப்பது? அவருடைய சம்பளத்தை வைத்தா? அவருடைய சொத்தின் மதிப்பை வைத்தா என்றால் இது எதுவுமேயில்லை என்கின்றார்கள் ஆய்வாளர்கள். ஒருவருடைய நட்பு மற்றும் உறவுகளை வைத்தே அவருடைய மகிழ்ச்சியின் அளவு என்பது நிர்ணயம் செய்யப்படுகின்றது என்கின்றனர். எத்தனை நண்பர்கள், எந்த அளவுக்கு குடும்பம் மற்றும் நண்பர்களிடத்தில் அந்நியோன்யமாக இருக்கின்றார், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் அலுவலகத்தில் அவருடன் வேலை பார்ப்பவர்கள் போன்றவரிடத்தில் இருக்கும் சுமூகமான உறவு போன்றவையே ஒருவருடைய மகிழ்ச்சியின் அளவை ஏறக்குறைய 70% வரையிலும் நிர்ணயம் செய்கின்றது என்கின்றன ஆய்வுகள்.

மகிழ்ச்சி என்பது பலவகைகளில் நம்முடைய வாழ்க்கைக்கு உதவுகின்றது. மகிழ்ச்சியில்லாமல் இருக்கும் நபர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் எந்த ஒரு யூகிக்க முடியாத விஷயத்திலும் / செயலிலும் அந்தச் செயலின் முடிவு அவர்களுக்கு எதிராக இருக்கும் என்றே நினைக்கின்றார்கள் என்கின்றது ஆய்வுகள்.

பணவளக் கலை!

உதாரணத்துக்கு, ஒரு புதிய நபரை சந்திக்கின்றீர்கள். அவர் நல்லவரா, கெட்டவரா? என்று யூகிக்க முடியவில்லை. நீங்கள் மனமகிழ்ச்சியுடன் இருந்தீர்கள் என்றால் அவர் நல்லவராக இருப்பார் என்று யூகித்து அவருடன் நட்பு பாராட்டுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியில்லாதவராக இருந்தீர்கள் என்றால் அவர் கெட்டவராக இருப்பார் என்று நினைத்து அவரைத் தவிர்ப்பீர்கள்.

நீங்கள் ஒரு தொழில் துவங்குகின்றீர்களா? மகிழ்ச்சியாய் இருந்தால் வெற்றி பெரும் என்று நினைப்பீர்கள். இல்லாவிட்டால் தோல்வி பெறும் என்றே நினைத்து செயல்படுவீர்கள். அதே போல் மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் தோல்வியைச் சந்தித்தால் நாலு விஷயம் செய்யும்போது ஒரு தடவை தோல்வி வரத்தான் செய்யும் என்று நினைப்பார்கள். மகிழ்ச்சியில்லாதவர்களோ, இந்தத் தோல்வியைப்போல் இனி எல்லா விஷயத்திலும் நான் தோற்றுப்போவேன் என்று நினைப்பார்கள் என்று சொல்கின்றது ஆய்வுகள். எனவே, மகிழ்ச்சியாய் இருப்பது என்பது வாழ்க்கையில் மிகமிக முக்கியமான ஒன்றாகும்.

அதேபோல் மகிழ்ச்சி குறித்த மற்றுமொரு ஆய்வில் பணம் இல்லை என்ற கவலையைவிட ஆட்கள் இல்லை என்ற கவலை ஒன்பது மடங்கு அதிகக் கவலையாய் இருக்கின்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, பணம் சம்பாதிக்கும் பாதையில் ஆட்களைத் தொலைத்துவிடாதீர்கள். ஆட்கள் இருந்து பணம் இல்லையென்றால்கூட சிக்கல் குறைவு. பணம் இருந்து ஆட்களே இல்லையென்றால் சிக்கல் மிகமிக அதிகம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்ற நோக்கோடு செயல்படுவதையும் தவிருங்கள். இன்றிருக்கும் நிலையிலிருந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவதே சாலச் சிறந்தது. எல்லாவற்றிலும் வெற்றி, எதிலும் முதல் இடம், முதன்மையான சம்பாத்தியம் என்ற எண்ணத்துடன் செயல்படாதீர்கள். இப்படிச் செயல்படுவதினாலும் மகிழ்ச்சி குறைய வாய்ப்புகள் அதிகம்.

மாணவர்களுக்கு ஒரு கணக்கைக் கொடுத்து போடச்சொல்லி சீக்கிரம் முடிப்பவர்களில் சிலருக்கு பரிசு என்று சொன்னார்களாம் ஆய்வாளர்கள். முதலில் முடித்த மாணவரைத் தொடர்ந்து முடித்தவர்கள் நம்மால் முதலில் முடிக்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்தார்களாம். மெதுவாக முடித்தவர்களோ அவர்களுக்குப் பின்னால் முடிக்காமல் கணக்குப்போட்டவர்களைப் பார்த்து, அப்பாடி நான் எவ்வளவோ மேல் என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்தார்களாம். இந்த நிலைதான் பணத்திலும் என்பதை மனத்தில்கொள்ளுங்கள்.

ஏன் நாம் பணத்தைத் தேடுகின்றோம். மகிழ்ச்சியாக வாழ. அந்தப் பணத்தைத் தேடும் வழிமுறைகளிலோ அல்லது பணம் நம்மிடம் வந்துசேர்ந்த பின்னரோ மகிழ்ச்சியும் வந்து சேர்ந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மகிழ்ச்சி வராமல் பணம் மட்டுமே வந்ததென்றால் நாம் நினைத்ததை அடையவில்லை என்றுதானே அர்த்தம். எனவே, சந்தோஷமான பணக்காரராய் மாற இன்றிலிருந்தே முயலுங்கள். உங்கள் முயற்சி வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்!

(நிறைவு பெற்றது)

 மக்கள் கருத்து

ஐ லவ் யூ  நாணயம் விகடன்

சாமிநாதன், சென்னை.

பணவளக் கலை!

''நாணயம் விடனின் முதல் இதழை பார்த்ததுமே நான் அதன் ரசிகனாகிப் போனேன். அன்றிலிருந்து இன்றுவரை திகட்டாத அறிவை நாணயம் விகடன் எனக்கு வழங்கி வருகிறது. எனக்கு வாழ்வு மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியதே நாணயம் விகடன்தான். பொருளாதார ரீதியான தெளிவுகளை, சேமிப்பு, முதலீடு குறித்த வழிகாட்டுதல்களை வழங்கி என்னை வாழ்வில் முன்னேறச் செய்துவருகிறது நாணயம் விகடன். முன்பெல்லாம் நாணயம் விகடன் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் வரும். அன்றெல்லாம் என் மனம் வாரம் ஒருமுறை நாணயம் விகடன் வராதா என்று ஏங்கியிருக்கிறது. காரணம், நாணயம் விகடன் ஏராளமான செய்திகளை தாங்கிவருவதுதான். நாணயம் விகடனில் வரும் பங்குச் சந்தை செய்திகளை வாரத்தின் முதல்நாளிலேயே வாசித்துவிட்டால் அதற்கடுத்த நாட்களில் திருப்தியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யமுடியும்.'