Published:Updated:

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய எக்ஸிட் போல்!

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய எக்ஸிட் போல்!

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய எக்ஸிட் போல்!

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய எக்ஸிட் போல்!

Published:Updated:

''பங்குச் சந்தை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது. மாலையில் உம்மை சந்திக்கும்போது அதற்கான காரணத்தைச் சொல்கிறேன்'' என வெள்ளிக்கிழமை அன்று மதியமே நமக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார் ஷேர்லக். ஓகே என்று பதில் அனுப்பிவிட்டு, மாலையில் அவர் வரவுக்காக காத்திருந்தோம். மாலையில் அவர் வந்தவுடன் ''சென்செக்ஸ் ஒரேநாளில் 700 புள்ளிகளுக்கு மேல் எகிறி இருக்கிறதே, என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''சந்தையின் இந்த திடீர் ஏற்றத்துக்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள்.  அமெரிக்கா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கைபடி, பிரதி மாதம் வாங்கும் கடன் பத்திர அளவு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இதனால் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு உருவானது.

ஆனால், முக்கிய காரணம் இதுவல்ல. இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் தொண்ணூறு சதவிகிதம் முடிந்து விட்டது. இந்த நிலையில், இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் பல ஆய்வு நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போலில் (வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு) பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என்கிற தகவல் தெரியவந்துள்ளதாம். இந்த எக்ஸிட் போலில் உள்ள தகவல்களை சிலர் எப்படியோ தெரிந்துகொண்டு, அதை எஃப்.ஐ.ஐ. காதுகளுக்கு கொண்டுசெல்ல, அடுத்து மோடி தலைமையில் ஆட்சி எனில் அதிரடியான பொருளாதார மாற்றம் வரும் என்று நினைத்து, பல ஆயிரம் கோடி ரூபாயை நம் சந்தைக்குள் பாய்ச்சியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய  எக்ஸிட் போல்!

இதனால், ஒரேநாளில் சந்தை வீறுகொண்டு எழுந்திருக்கிறது. பொதுவாக, தேர்தல் முடிவு வெளியாகும் சமயத்தில்தான் இதுமாதிரி நடக்கும். ஆனால், இந்தமுறை முடிவு வெளியாவதற்கு முன்பே இப்படி நடந்திருக்கிறது. டிரேடர்கள் நடத்தும் திருவிளையாடல்தான் இது. சிறுமுதலீட்டாளர்களின் பங்கு இதில்

கிஞ்சித்தும் இல்லை என்று நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது'' என்றவருக்கு, சூடான ஏலக்காய் டீ தந்தோம். அதைக் குடித்தவர், அடுத்த செய்திகளைச் சொல்லத் தயாரானார்.

''இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் முதலீடு வங்கிப் பங்குகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறதே?'' என்றோம்.

''இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு வங்கிப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் தேனா பேங்கின் பங்கில், கடந்த 2011 மார்ச்-ல் 6.37 சதவிகிதமாக இருந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு, 2014 மார்ச்-ல் 16.56 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே, யூனியன் பேங்கின் பங்கில், 3.41-லிருந்து 11.02 சதவிகிதமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகளில் 12.22-லிருந்து 16.5 சதவிகிதமாகவும், பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கில் 10.43-லிருந்து 14.3 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல், தனியார் துறை வங்கிப் பங்குகள் சிலவற்றில் முதலீட்டை அதிகரித்துள்ளது. குறிப்பாக, யெஸ் பேங்கில், 4.75-லிருந்து 14.28 சதவிகிதமாகவும், டி.சி.பி பேங்கில் 0.03-லிருந்து 3.81 சதவிகிதமாகவும், கர்நாடகா பேங்க் பங்கில் 3.42-லிருந்து 6.1 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது'' என்று விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 27% வீழ்ச்சிகண்டிருக்கிறதே?'' என்றோம்.  

''எல்லாம் கடந்த மார்ச் காலாண்டில் இந்த வங்கியின் வாராக்கடன் அதிகரித்திருப்பது மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்திருப்பதாகும். நிகர லாபம் குறைந்துபோன தகவல் வெளியானதையடுத்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை ஒரேநாளில் 8.5% குறைந்தது'' என்று சொன்னார்.

''யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 15 மடங்கு அதிகரித்துள்ளதே?'' என்று ஆச்சர்யத்தோடு கேட்டோம்.

''இந்த வங்கி 2012-13 மார்ச் காலாண்டில் நிகர இழப்பைச் சந்தித்து இருந்தது. இந்த நிலையில் முடிந்த மார்ச் காலாண்டில் இழப்பிலிருந்து லாபத்துக்கு திரும்பி இருக்கிறது. அந்தவகையில் இதன் நிகர லாபம் 15 மடங்கு அதிகரித்து, 469 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வாராக்கடன் வசூலிப்பு அதிகரிப்பு மற்றும் காலாவதியான கடன்கள் மறுசீரமைக்கப்பட்டது போன்றவை முக்கிய காரணங் களாக இருக்கின்றன. மார்ச் காலாண்டில் மட்டும் 645 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2013-14 முழு நிதி ஆண்டில் இந்த வங்கியின் நிகர இழப்பு ரூ.1,213 கோடியாக உள்ளது'' என்றார்.

''சிட்டி யூனியன் பேங்கின் விலை திடீரென உயர என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''இந்த வங்கிப் பங்கில் அந்நிய நிதி நிறுவனங்களின் (எஃப்.ஐ.ஐ.) முதலீட்டு வரம்பு தற்போது 25 சதவிகிதமாக உள்ளது. இதை 35 சதவிகிதமாக அதிகரிக்க ரிசர்வ் வங்கி  அனுமதி அளித்துள்ளது. இதனால்தான், விலை ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

''கடைசியில் ஒருவழியாக ஜிக்னேஷ் ஷாவை கைது செய்திருக்கிறதே காவல் துறை?'' என்றோம்.

''என்.எஸ்.இ.எல் முறைகேடு பிரச்னையில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜிக்னேஷ் ஷா, எம்.சி.எக்ஸ் முன்னாள் சி.இ.ஓ ஸ்ரீகாந்த் ஜாவல்கேகர் ஆகியோரை ஒருவார காலத்துக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை செஷன்ஸ் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இந்த கைதுகளால் எம்.சி.எக்ஸ்., ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் பங்குகளின் விலை ஒரேநாளில் 5 சத விகிதத்துக்குமேல் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சின் முன்னாள் தலைமை நிர்வாகி அஞ்ஜனி சின்ஹா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக் கிறார்கள்.

ஜிக்னேஷ் ஷாவுக்கு ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை. அவர் எல்லாவற்றையும் ஜோதிடம் பார்த்துதான் செய்திருக்கிறார். ஜூன் மாதத்துக்குள் இவர் கைது செய்யப்படுவார் என ஏற்கெனவே ஒரு ஜோதிடர் அவரிடம் சொல்லியிருக்கிறார். அது இப்போது நிறைவேறி இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்'' என்றவர் புறப்படத் தயாரானார்.

''ஷேர் டிப்ஸ் ஏதாவது?'' என்று கேட்டோம். ''சந்தை மிக  உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஷேர் டிப்ஸ் தருவது சரியாக இருக்காது'' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism