Published:Updated:

SME கைடுலைன்!

Vikatan Correspondent

எம்.எஸ்.எம்.இ-களுக்கு ஆன்லைன் தொழில்நுட்பம் அவசியம்! ச.ஸ்ரீராம்

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களான எஸ்.எம்.இ.களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், அவர்களுக்கான சந்தையை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (FICCI) உருவாக்கியுள்ள சி.எம்.எஸ்.எம்.இ. (Confederation of MSME)என்னும் அமைப்பு சென்னையில் ஒரு கருத்தரங்கத்தை கடந்த மே 2-ம் தேதி அன்று நடத்தியது. எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் கடன், சந்தைப்படுத்துதல், தரம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும், புதிய சந்தையை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் இன்ஷ§ரன்ஸ், பிராண்ட், இணையதளம் மூலமான தகவல் தொடர்பு குறித்து மூன்று நிபுணர்கள் பேசினார்கள். முதலில் பேசினார் செக்யூர் நவ் இன்ஷூரன்ஸ் புரோக்கர் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கபில் மேத்தா.

SME கைடுலைன்!

''எஸ்.எம்.இ.கள் தங்கள் தொழிலை இன்ஷூரன்ஸ் செய்வதில் பலவிதமான சிக்கல்களை சந்திக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு சிறுதொழில்முனைவரும், தான் செய்துவரும் தொழிலை இன்ஷூர்

SME கைடுலைன்!

செய்வது மிகமிக முக்கியம். அப்படி இன்ஷூரன்ஸ் செய்யும்போது எதற்கெல்லாம் இன்ஷூரன்ஸ் க்ளைம் பெறமுடியும், எதற்கெல்லாம் பெறமுடியாது என்பதை நன்கு தெரிந்துகொண்டு இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம். சிலர் தங்கள் தொழிலில் ஏற்படும் திடீர் இழப்புகளுக்காக இன்ஷூரன்ஸ் செய்திருப்பார்கள் ஆனால், அவர்கள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு இன்ஷ§ரன்ஸ் எடுத்திருக்க மாட்டார்கள். இதனால் மிகப் பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய துர்பாக்கியமான சூழலுக்கு உள்ளாவார்கள். சிறுதொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனம் தொடர்பாக இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது இந்த விஷயங்களை எல்லாம் கவனிப்பது மிகவும் அவசியம்'' என்றார்.

அடுத்து பேசவந்தார் வெரிசைன் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு தலைவரான நிதின் வாலி. ''எஸ்.எம்.இ.கள் நல்ல தரத்தில் பொருட்களை தயாரித்து விடுகின்றனர். ஆனால், அதனை சிறந்த முறையில் பிராண்ட் செய்வதில் கவனம் செலுத்தத் தவறிவிடுகின்றனர். தரமான பொருட்களை தயாரித்தும் மற்ற பிராண்டுகளுடன் போட்டியிட முடியாத சூழல் உருவாகிறது. இந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்க, எஸ்.எம்.இ.கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு உரிய தரச்சான்றிதழ் வாங்கி, தயார் செய்யும் பொருட்களை தகுந்த முறையில் பிராண்ட் செய்தால், பொருளை எங்கு வேண்டுமானாலும் எளிதாக விற்பனை செய்ய முடியும்'' என்றார்.

SME கைடுலைன்!

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பவர்2 எஸ்.எம்.இ.யின் நிறுவனர் ஆர்.நாராயணன், எஸ்.எம்.இ.கள் தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு மேம்பட்டுள்ளனர் என்று பேசினார். 'இன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக ஆன்லைன் வர்த்தகம் உள்ளது. மிகப் பெரிய நிறுவனங்கள் ஆன்லைனில் லாபம் பார்க்கும்போது எஸ்.எம்.இகளும் ஆன்லைனில் தொழில் தொடங்கினால் லாபம் பார்க்கலாம். மூலப்பொருட்களை ஆன்லைனில் கொள்முதல் செய்வது தொடங்கி, தயார் செய்த  பொருட்களை விற்பது வரை அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்யலாம். இதன் மூலம் எஸ்.எம்.இ.கள் 75 - 80 சதவிகித செலவுகளைக் குறைக்கலாம். இதற்கு அதிக முதலீடு தேவைபடுமே என்ற பயம் சிறுதொழில்முனைவோர் களுக்குத் தேவையில்லை. ஆரம்ப முதலீடு சற்று அதிகமாக இருந்தாலும் பின்னர் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம்'' என்றார்.

SME கைடுலைன்!

கூட்டம் முடிந்தவுடன் எஸ்.எம்.இ.கள் இன்றைக்கு தொழில்நுட்பத்தை எந்த அளவு பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி ஆர்.நாராயணனுடன் தனியாக பேசினோம். ''தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, எஸ்.எம்.இக்கள் ஓரளவுக்கே தொழில்நுட்ப அறிவோடு உள்ளனர். அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவு குறைவாக உள்ளதாலும் அவர்களால் அதனைச் சரிவரச் செய்ய முடியவில்லை. அவர்களுக்குச் சரியான விழிப்பு உணர்வு பயிற்சி அளிக்கும்பட்சத்தில் அவர்களும் முன்னணி பிராண்டுகளோடு போட்டியிடும் அளவுக்கு வளரமுடியும். அவர்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ளும்போது அவர்களுக்கான கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம். தரம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரிக்கும், வர்த்தகத் தகவல்கள் பராமரிக்கபடும் இதுபோன்ற பல நன்மைகள் எஸ்.எம்.இ.களுக்குக் கிடைக்கும்.

மேலும், தொழில்முனைவோர் கள் பல வழிகளில் ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களைச் சந்தைப்படுத்தலாம். சமூக வலைதளங்கள் மூலமாகவும், இ-காமர்ஸ் வசதியுடன் உருவாக்கப்பட்ட இணையதளங்கள் மூலமாகவும் தங்கள் பொருட்களை விற்க முடியும். தொழில்நுட்ப வசதியை மேம்படுத்திவிட்டால் தஙகளுக்கான ஆர்டர்களையும் ஆன்லைனிலேயே பெறுகிறமாதிரி  செய்யமுடியும். விற்பனையை ஆன்லைனில் பெறுவதன் மூலம் சேவையைத் துரிதப்படுத்த முடியும்''  என்றார்.

நாம் தயாரிக்கும் பொருட்கள் உள்ளூரில் மட்டும் விலை போனால் போதும் என எஸ்.எம்.இ.கள் நினைக்காமல், உலகம் முழுக்க கொண்டு சென்று விற்க வேண்டும் என நினைத்தால் மட்டுமே, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

படங்கள்:  தி.குமரகுருபரன்

 SME Q& A

நான் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கிறேன். இங்கு சோளம் அதிகமாக விளைவதால் அதிலிருந்து கால்நடை தீவனம் உற்பத்தி செய்து வருகிறேன். இதனை எவ்வாறு சந்தைப் படுத்துவது மற்றும் வங்கிக் கடன் பெறுவது?

@ சக்தி ராயப்பன்.  

இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறார் பி.ராமகிருஷ்ணன், எம்.டி அண்ட் சிஇஓ., கார்ப்பரேட் கிளினிக்.

SME கைடுலைன்!

''சோளம் என்பது பொதுவாகக் கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் தீவனமாகப் பயன்படுகிறது. இந்தத் துறையில் பலரும் முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு அரசாங்கம் மானியம் தருகிறது. நீங்கள் இந்தத் தொழிலில் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. என்றாலும் உங்கள் தொழிலுக்குத் தேவையான திட்ட முதலீட்டில் 25 சதவிகிதத்தை நீங்கள் முதலீடு செய்தாலே போதும். மீதமுள்ள 75 சதவிகித பணத்தை கடனாகவும், ஒரு சிறுபகுதியை மானியமாகவும் நீங்கள் பெறலாம்.

சிறுதொழில்முனைவோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டேர்ம் லோனும் வொர்க்கிங் கேப்பிட்டல் லோனும் குறைந்த வட்டியில் தரும்படி வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. ஏற்கெனவே சொல்லி இருக்கிறது. இந்த கடன்களுக்கு பிராசஸிங் கட்டணமும் குறைவுதான். என்றாலும், தொழில் தொடங்குபவரின் பின்னணி, தொழிலின் எதிர்காலம், கொடுக்கும் கடன் திரும்ப வருவதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து, கடன் தரவேண்டிய முடிவை எடுக்கும் அதிகாரம் வங்கிகளுக்கு மட்டுமே உண்டு.

நீங்கள் தயாரிக்கும் பொருளை சந்தைபடுத்துவதற்கு ஏதாவதொரு பால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். சோளத்தில் உள்ள புரதச் சத்து பாலின் கொழுப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் மாடு வளர்ப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இதனால் நீங்கள் தயார் செய்யும் பொருள் ஒரு பிராண்ட்-ஆக மாறி, மாடு வளர்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் உங்கள் தயாரிப்பை வாங்க வாய்ப்பு இருக்கிறது.''

ஸ்டார் SME

புதுமைகளை அறிமுகப்படுத்துகிறோம்!

செல்வ முரளி, விஷ§வல் மீடியா டெக்னாலஜீஸ், கிருஷ்ணகிரி

SME கைடுலைன்!

''கிருஷ்ணகிரியில் விஷ§வல் மீடியா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இதன் மூலம் நாங்கள் கணினி சேவை மற்றும் கணினி உபகரணங்களை விற்பனை செய்து வருகிறோம். கணினி சேவை அளிப்பதில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறேன்.  தொழில்முனைவோர்களுக்குக் குறைந்த செலவில் இணையதளங்களை கிளவ்ட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கி தருகிறேன். மேலும், சி.பேடு என்ற கையடக்கக் கணினியை குறைந்த செலவில் உருவாக்கி இருக்கிறோம். இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக இருக்கும். இதில் தமிழில் விசைப்பலகையைப் பயன்படுத்தாமல் திரையில் எழுதினாலே கணினியில் தமிழ் வார்த்தைகள் தோன்றும் சாஃப்ட்வேரை பயன்படுத்தியுள்ளோம்.

புதுமைகளைப் பயன்படுத்தி தொழில் செய்யும் எங்களுக்குத் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான  வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால், பொதுவாக மக்கள் மத்தியில் இது ஒரு சிறிய நிறுவனம் தானே, இவர்களிடம் கணினி போன்றவற்றை வாங்கினால் எப்படி இருக்குமோ என்று நினைக்கின்றனர். ஆனால், எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் அதிகத் தரத்துடன் இருப்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதற்கான சான்றுகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்.

நாங்கள் உடனடி சேவையையும் வழங்குகிறோம். பெரிய நிறுவனங்கள் அளிக்கும் அனைத்து சேவைகளையும் நாங்களும் அளிக்கிறோம். இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டாலே போதும்; எங்கள் தயாரிப்புகளுக்கு புதிய வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துவிடும்''.    

SME கைடுலைன்!