கேள்வி - பதில்
?நகைச் சீட்டு போட்டு வைத்துள்ளேன். சீட்டு முதிர்வில் தங்கமாக வாங்கலாமா அல்லது வெள்ளி வாங்கலாமா? எது லாபமாக இருக்கும்?
மரகதவள்ளி, ராஜபளையம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுவாமிநாதன், இயக்குநர், ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டர்.
''தற்போதைய நிலவரப்படி, மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கான வேலைகளைச் செய்வார்கள். ரூபாயின் மதிப்பு உயரும்போது தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையவே செய்யும். மேலும், தங்கம் இறக்குமதிக்கான வரியையும் குறைக்கவே செய்வார்கள். எனவே, உங்களது தேவை என்ன என்பதையும், முதிர்வு தொகையின் மதிப்பையும் பொறுத்து எதை வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.''

?தொழில் கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தேன். அதற்கு மார்ஜின் மணி, லிவரேஜ் ஆகியவற்றைக் கேட்டார்கள். லிவரேஜ் என்றால் என்ன?
மணிகண்டன், சிவகாசி
மா.பாரி, முன்னாள் உதவி பொது மேலாளர், லஷ்மி விலாஸ் பேங்க்.
''தொழில் செய்வதற்கான நிதி தேவையில் சொந்தமாக எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது, கடனாக மொத்தம் எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்ற விவரத்தையே லிவரேஜ் என்கிற வார்த்தையின் மூலம் குறிப்பிடுகிறோம். வங்கிக் கடன் மட்டுமல்லாது நாம் மொத்தமாக வெளியிலிருந்து பெறும் கடன் தொகை, நம் சொந்த முதலீடு போல எத்தனை மடங்கு என்பதை இந்த லிவரேஜ் குறிக்கும். இதனை வங்கிகள் கூர்ந்து கவனிக்கும். ஆகவே, 'கடன் முதலீட்டுக்கான விகிதம்’ (Debt Equity Ratio)போன்றவை குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வங்கிகள் வரையறுத்திருக்கும். லிவரேஜ் அதிகமானால் (உதாரணத்துக்கு, சொந்த முதலீடுபோல 20 மடங்கு மொத்தக் கடன் பெறும் நிறுவனமாக இருந்தால்) அந்த நிறுவனத்துக்கு கடன் தருவது அபாயகரமானதாக வங்கிகள் கருதலாம்.''

?புளூ பேர்ட் நிறுவனத்தின் பங்குகளை 200 வைத்திருக்கிறேன். இந்தப் பங்கு தற்போது டிரேடிங் ஆகவில்லை. இந்தப் பங்கை என்ன செய்வது?
நடராஜன், ஈரோடு.
எம்.எஸ்.ஒ. அண்ணாமலை, பங்குச் சந்தை நிபுணர்.
''புளூ பேர்ட் (Blue Bird) நிறுவனம் டிரேடிங் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதால் அதன் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடைசியாக இந்தப் பங்கு 0.85 பைசாவுக்கு வர்த்தகமாகியுள்ளது. வர்த்தகமாகாத பங்குகளை வைத்திருப்பதால், உங்களுக்கு உடனடியாக எந்தவிதமான தீர்வும் கிடைக்காது. அந்த நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் வர்த்தகமானால் உங்கள் பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புண்டு''.
?கடந்த வருடத்தில் ஆறு மாதம் சிங்கப்பூரில் வேலை பார்த்தேன். அப்போது சம்பளமாகக் கிடைத்த 10,000 டாலரை அப்படியே வைத்துக்கொள்ளலாமா அல்லது இந்திய ரூபாயாக மாற்றிப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?
சரவணன், சென்னை.
சிவசுப்ரமணியம், மூத்த ஆய்வாளர், ஆதித்யா பிர்லா மணி.
''டாலர்களைக் கையில் வைத்திருப்பதை விட வங்கிக் கணக்கு அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதே அதிக லாபம் தரும். ரூபாயின் மதிப்பு அதிகபட்சம் 5 - 6% அளவுக்கே குறைய வாய்ப்புள்ளது. எனவே, உங்களிடம் உள்ள டாலரை ரூபாயாக மாற்றி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதே நல்லது. இதில் 60 சதவிகித தொகையைப் பங்குச் சந்தையிலும் (நீண்ட காலத்தில் 10 - 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பங்குகள்), 40 சதவிகித தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டிலும் முதலீடு செய்யலாம். இதன் மூலமாக 8 சதவிகித வருமானம் கிடைக்கும்.''

?ஃபார்ம் இந்தியா என்ற நிறுவனம் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது. இதற்கு அதிக வட்டி தருவதாக சொல்கிறது. முதலீடு செய்யலாமா?
@ என்.முருகப்பன், திருச்சி.
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்
''ஃபார்ம் இந்தியா நிறுவனம், உற்பத்தி துறையின் கீழ் வருகிறது. உற்பத்தி துறையில் இருக்கும் நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டுவதற்கு ஆர்.பி.ஐ.யிடமிருந்து அனுமதி பெற தேவையில்லை. அந்த வகையில், இந்த நிறுவனம், ஆர்.பி.ஐ. இடம் அனுமதி பெற தேவை இல்லை. இந்த நிறுவனங்கள் எம்.சி.ஏ.வின் (Ministry of Company Affairs) கம்பெனிகள் டெபாசிட் சட்டம் 1975-ன் கீழ் வருகின்றன. எம்.சி.ஏ-ன் விதிமுறைகளின்படி, ஒரு கோடி நிகர மதிப்புக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்து டெபாசிட் வாங்கக் கூடாது. மேலும், 12.50 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வழங்கக் கூடாது. அந்த வகையில் பார்த்தால், இந்த நிறுவனம் அதிக வட்டி வழங்குவது சட்ட விரோதமாகும். மேலும், இந்த நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இல்லாமல் இருந்தால், இந்த நிறுவனம் டெபாசிட் வாங்குவது சட்ட விரோதமாகும்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மூலம் எந்த அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும், இந்த நிறுவனத்தின் மூலதனமே வெறும் ரூ.5 லட்சம்தான். இந்த நிறுவனத்துக்கு எந்தவிதமான கிரெடிட் ரேட்டிங்கும் இல்லை, வரலாறும் இல்லை. எனவே, இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.''

?புரோமோட்டர்களின் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
செல்வராஜ், கோவை.
பி.சங்கர், இயக்குநர், டைமண்ஷனல் செக்யூரிட்டீஸ்.
''புரமோட்டர்களின் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டு, அந்த கம்பெனி லிஸ்ட் ஆகியிருந்தால் அதை பங்குச் சந்தைக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவலை பங்குச் சந்தையின் இணையதளங்களில் காணலாம். பி.எஸ்.இ., என்.எஸ்.இ.-ல் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.
http://www.nseindia.com/corporates/corporateHome.html?id=spatterns
http://www.bseindia.com/corporates/Sharehold Searchnew.aspx?expandable=0