Published:Updated:

வருமானம் தரும் ஓவியங்கள்... பொழுதுபோக்காகச் சம்பாதிக்கலாம்!

செ.கார்த்திகேயன் ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து, தி.குமரகுருபரன்.

வருமானம் தரும் ஓவியங்கள்... பொழுதுபோக்காகச் சம்பாதிக்கலாம்!

செ.கார்த்திகேயன் ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து, தி.குமரகுருபரன்.

Published:Updated:

ஹாபிஸ்

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது போலவே ஓவியத்திலும் இப்போது பலர் முதலீடு செய்து வருகின்றனர். இன்றைய தேதியில் சில ஆயிரம் ரூபாய் தந்து வாங்கப்படும் ஓவியங்கள், பிற்காலத்தில் பல லட்ச ரூபாய்க்கு விலைபோக வாய்ப்புண்டு என்பதால், பலரும் ஓவியங்களை வாங்கி, அதில் முதலீடு செய்கின்றனர். தவிர, வீடுகளில் இந்த ஓவியங்கள் வைக்கும்போது, நம் வீடே கலைநயம் மிக்கதாக மாறிவிடுகிறது.

பிறவி ஓவியர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண ஓவியராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்கு ஓவியங்களை விற்பதன் மூலம் தன் வாழ்நிலையை குறிப்பிடத் தகுந்தளவு உயர்த்திக்கொண்டவர் 75 வயதான எம்.சேனாதிபதி. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் சோழ மண்டலம் ஓவியர் கிராமத்தில் அவரை சந்தித்துப் பேசினோம்.  

வருமானம் தரும் ஓவியங்கள்... பொழுதுபோக்காகச் சம்பாதிக்கலாம்!

''எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே ஓவியம் வரைவதில் ஆர்வம் பிறந்தது. இன்றுபோல் அன்றைய நிலையில் ஓவியம் குறித்த அறிவை புகட்ட ஆட்கள் கிடையாது. ஓவியம் வரைவதற்காக பென்சில், வாட்டர்கலர் போன்ற விஷயங்களும் கிடையாது. கரித்துண்டுகள், வெள்ளை நிற சுண்ணம்புக் கட்டிகள் (சாக்பீஸ்) ஆகியவற்றில்தான் வரைந்து பழகுவேன். களிமண்ணை எடுத்து வைத்து அதில் உருவம் செய்து அழகு பார்ப்பேன்.

நான் கொஞ்சம் பெரியவன் ஆனதும் எனது ஓவியமும் முதிர்ச்சி பெற்றிருந்தது. அனுபவத்தால் நன்றாக வரைய ஆரம்பித்தேன். ஓவியங்கள் மீது எனக்கு இருந்த காதலாலே அதுசார்ந்த படிப்பை படித்து, அதையே தொழிலாக அமைத்துக்கொண்டேன்.

வருமானம் தரும் ஓவியங்கள்... பொழுதுபோக்காகச் சம்பாதிக்கலாம்!

அழகும் மதிப்பும் அதிகம்!

பொழுதுபோக்காக நான் செய்துவந்த விஷயத்தை அப்படியே விட்டிருந்தால் இன்று என் வாழ்க்கைத்தரம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்காது. இதை ஒரு  தொழிலாக மாற்றிக்கொண்டதால்தான் இன்று என் ஓவியங்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றன. நான் ஓவியம் வரையும்போது நமது இதிகாசங்களின் காட்சி அமைப்புகள், மனிதர்களின் உணர்ச்சிகள், மனித உறவுகள் என்கிற மாதிரியான தீம்களை அமைத்துக்கொள்வேன். இப்படியான தீம்களை அமைத்து ஓவியம் தீட்டும்போது அதற்குண்டான அழகும் மதிப்பும் அதிகமாக இருக்கும். அதேபோல, ஓவியங்களில் தீட்டப்படும் வண்ணங்கள். இந்த இரண்டு விஷயங்களிலும் எல்லோரும்  கவனம் செலுத்துவது அவசியம்.  

ஓவியமே என் வாழ்க்கை!

கடந்த 55 வருடங்களாகவே ஓவியங்களை வரைவது, அதைக் கேட்பவர்களுக்குக் கொடுத்து வருமானம் பார்ப்பது என்பதுதான் என் தொழில். அதனால் நாம் வரைந்த ஓவியங்களின் எண்ணிக்கையைத் தோராயமாகக்கூடக் குறிப்பிட முடியாது. நான் வரையும் ஓவியங்கள் குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சம் பல லட்ச ரூபாய் வரை விற்றிருக்கிறேன்.

வருமானம் தரும் ஓவியங்கள்... பொழுதுபோக்காகச் சம்பாதிக்கலாம்!

நீங்கள் வரையும் ஓவியம் உன்னதமாக இருந்தால், அது உங்களை உலகத்துக்கே எடுத்துக் காட்டும். வெறும் பொழுதுபோக்காக மட்டுமே ஓவியம் வரையாமல், தங்கள் கிரியேட்டிவ் விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும்'' என்றார் சேனாதிபதி.

மாற்றம் கண்ட மதுரை ஓவியர்!

மதுரையைச் சேர்ந்த சுமா கந்தராஜ் பொழுதுபோக்காக ஓவியம் ஆரம்பித்து, தற்போது அதையே தொழிலாக செய்வதன் மூலம் மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

''பள்ளிப் பருவம் முதலே என் பொழுதுபோக்கு  ஏதாவது ஒன்றை வரைவதுதான். இதற்கென்று தனியாகப் பயிற்சி எடுத்தது கிடையாது. எனக்குள் இருந்த ஆர்வத்தாலேயே பென்சில் ஷேடிங், வாட்டர் கலர் என்று வரையக் கற்றுக் கொண்டேன். கல்லூரிப் படிப்பு,  திருமணம் என சில காலம் நான் வரைவது தடைப்பட்டது. திருமணத்துக்குப்பின் ஓவியங்களுக்கு டாடா சொல்லி விடலாம் என்கிற சமயத்தில்தான் என் கணவருக்கு என் ஓவியங்கள் பிடித்துப்போக, அவர் தந்த உற்சாகமும், ஊக்கமும் என்னை இந்தளவு உயர்த்தி இருக்கிறது.

வருமானம் தரும் ஓவியங்கள்... பொழுதுபோக்காகச் சம்பாதிக்கலாம்!

என் கணவரின் தொழில் காரணமாகச் சிலகாலம் நான் அமெரிக்காவில் வசிக்க நேர்ந்தது. அங்கேதான் 'அட்வான்ஸ் இன் சீனரி பெயிண்டிங்’ கற்றுக்கொண்டேன். அங்கே நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்த பலரும் என்னை வெகுவாக பாராட்டினார்கள். இந்தியா வந்தும் பல புத்தகங்கள், இணையங்களைப் பார்த்து அட்வான்ஸுடு டிராயிங், ஃபிகர் டிராயிங், அட்வான்ஸுடு கார்ட்டுனிங், பென்சில் ஸ்கெட்சிங், இங்க் ஆர்ட், ஒன் ஸ்ட்ரோக் பெயின்ட்டிங், ப்ரோட்ரைட் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், அக்ரலிக் பெயின்டிங், ஃபேப்ரிக் பெயின்டிங்,வாட்டர் கலர் என்று பல வகைகளைக் கற்றுத் தேர்ந்தேன்.

மாதம் 50,000 சம்பாதிக்கிறேன்!

ஆரம்பத்தில் பொழுது போக்காக செய்துவந்த நான், பிற்பாடு இதையே ஏன் ஒரு தொழிலாகச் செய்யக்கூடாது என்று நினைத்தேன். என் கணவரிடம் இதை சொன்னபோது நல்ல ஐடியாதான்.  தாராளமாகச் செய் என்றார். பின்னர் மதுரையில் ஓவியக் கண்காட்சி நடத்தினேன். அங்கே பார்க்க வந்தவர்கள் ஓவியங்கள் விற்பனைக்குக் கிடைக்குமா என்று கேட்டனர். பெரிய, பெரிய நிறுவனங்கள் வரவேற்பு அறைகளில் வைக்க, எனது ஓவியங்களை விரும்பி வாங்கிச் சென்றனர்.

இதன் அடுத்த கட்டமாக ஒரு இண்டீரியர் டெக்கரேட்டர், தான் விரும்பும்படியாக ஒரு கேன்வாஸ் பெயின்டிங் வேண்டுமென்று ஆர்டர் தந்து வாங்கிச் சென்றார். இவரைத் தொடர்ந்து பலரும் ஆர்டர் தந்தனர்.  இப்போது மாதம் 50,000 ரூபாய் ஓவியம் விற்பதன் மூலம் சம்பாதிக்கிறேன்'' என்றார்.

வருமானம் தரும் ஓவியங்கள்... பொழுதுபோக்காகச் சம்பாதிக்கலாம்!

  ஓவியங்களின் சங்கமம்!

நீங்கள் வரைந்த ஓவியங்களை விற்பதற்கும் முதலீட்டு நோக்கில் ஓவியங்களை வாங்குவதற்கும் மையமாக இருப்பவை ஆர்ட் கேலரிகள். இங்கே ஓவியக் கண்காட்சி வைப்பது குறித்து சென்னை மயிலாப்பூரில் இருக்கும் வின்யாசா பிரீமியர் ஆர்ட் கேலரியின் துணை மேலாளர் ஏ.செந்தில்குமாரிடம் கேட்டோம்.

''ஓவியம் வரைவதில் நாட்டம் இருப்பவர்கள் தங்களின் ஓவியங்களை ஓவியப்பிரியர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது அவசியம். அதற்கு ஒரேவழி, ஓவியக் கண்காட்சிகளில் அவரவர்களின் ஓவியங்களை கண்காட்சிக்கு வைப்பதே. ஓவியக் கண்காட்சி நடத்துவதற்கான இடம் எங்களிடம் வாடகைக்குக் கிடைக்கும். 550 சதுரஅடி கொண்ட இடத்தின் ஒருநாள் வாடகை 3,000 ரூபாய். 475 சதுர அடி அளவுகொண்ட இடத்தின் வாடகை 2,000 ரூபாய் எனக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன (மின்சாரக் கட்டணமும் சேர்ந்து).

இந்த ஆர்ட் கேலரி கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இளம் ஓவியர்கள், பொழுதுபோக்காக ஓவியம் வரைபவர்கள் தொடங்கி அனுபவம் மிக்க ஓவியர்கள் வரை எண்ணற்ற ஓவியங்கள் இந்த ஆர்ட் கேலரியை அலங்கரித்திருக்கின்றன.

இந்த ஆர்ட் கேலரியைப் பொறுத்தவரை ஓவியர்கள் கவனிக்கவேண்டிய விஷயம், அவர்கள் வரையும் படத்தில் முதிர்ச்சி இருக்க வேண்டும் என்பதுதான். வரைந்திருக்கும் ஓவியங்கள் உலகுக்கு ஏதேனும் ஒரு செய்தியை சொல்லும்படியாகவும் அல்லது ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.

ஓவியங்களை முதலீட்டு நோக்கில் வாங்கி பத்திரமாக வைத்திருந்தால் பல ஆண்டுகளுக்குப்பின் நல்ல லாபம் பார்க்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism