Published:Updated:

தேர்தல் முடிவு... சென்செக்ஸின் அடுத்த இலக்கு 30000...

சி.சரவணன்

தேர்தல் முடிவு... சென்செக்ஸின் அடுத்த இலக்கு 30000...

பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி எதிர்பார்த்தது போலவே மத்தியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே தனிப் பெரும்பான்மைக்கும் (272 இடங்கள்) அதிகமான இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.  கடந்த 1984-ம் ஆண்டுக்குபிறகு, அதாவது முப்பது  ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் தனியரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளது.

16-ம் தேதி அன்று காலையிலேயே தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக வரத் தொடங்கியதும், சென்செக்ஸ் 1000 புள்ளிகளைத் தாண்டியும், நிஃப்டி புள்ளிகள் 275-ம் அதிகரித்தன. சென்செக்ஸ் 25300-க்கும், நிஃப்டி 7600-க்கும் எகிறின. இந்த ஏற்றத்தை பங்குச் சந்தை டிரேடர்கள் உற்சாகத்தில் கொண்டாடினர். ஆனால், இந்த ஏற்றம் சந்தை முடியும் தருவாயில் முதலீட்டாளர்கள் லாபம் எடுக்கத் தொடங்கியதால் நிலைக்கவில்லை. இந்த நிலையில் இனி சந்தை ஏற்றம் தொடருமா என மும்பையை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே பிரபாகரிடம் கேட்டோம்.

''புதிய அரசு, வளர்ச்சிக்கான திட்டங்களை வேகமாக நிறைவேற்றும். அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் நல்ல வளர்ச்சிக் காணும். கூடவே உள்கட்டமைப்பு, சிமென்ட், கட்டுமானப் பொருட்கள், கேப்பிட்டல் கூட்ஸ் போன்ற துறை நிறுவனங்களும் சிறப்பான வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கலாம்'' என்றார் ஏ.கே.பிரபாகர். சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதையும் அவர் விளக்கி சொன்னார்.

''சென்செக்ஸ் குறுகிய கால இலக்காக இன்னும் இரண்டு, மூன்று  மாதங்களில் 29000 - 30000-ஆக இருக்கும்.

அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டியது, புதிய அரசின் பட்ஜெட்தான். அதில் என்னென்ன வரிச் சலுகைகள் அளிக்கப்படுகிறது, எந்த வரிகள் குறைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து பங்குச் சந்தையின் அடுத்தகட்ட ஏற்றம் இருக்கும். குறிப்பாக, பாரதிய ஜனதா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறது என்பதை ஒட்டியே சந்தையின் ஏற்றம் இருக்கும்.

அதேநேரத்தில் சர்வதேச சந்தைகள் பலவீனமாக இருந்தாலும், இந்திய சந்தை ஏறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. தற்போதைய நிலையில், ஐடிஎஃப்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, பிஹெச்இஎல், ராம்கோ சிமன்ட்ஸ், அம்புஜா சிமன்ட்ஸ், ஐஎல்எஃப்எஸ் டிரான்ஸ்போர்ட், ஐஆர்பி இன்ஃப்ரா, அதானி போர்ட், செயில், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனப் பங்குகள் கணிசமாக விலை ஏற வாய்ப்புகள் இருக்கின்றன'' என்றார்.

தேர்தல் முடிவு... சென்செக்ஸின் அடுத்த இலக்கு 30000...

பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியத்துடன் பேசினோம். ''பாரதிய ஜனதா தலைமையில் வலிமையான மத்திய அரசு அமைந்திருப்பதால், இந்திய பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிக நன்றாகவே இருக்கும். இன்ஃப்ராஸ்ட்ரக்சர், குறிப்பாக, பவர் துறை மேம்படும். நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைவதால் அரசு நிர்வாகம் மேம்படும். லஞ்ச ஊழல் குறையும். அதிகாரிகள் பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள் என்பதால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். இரண்டு ஆண்டு காலத்தில் தொழில் துறை 7 - 8% வளர்ச்சி காண வாய்ப்பு இருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7 சதவிகிதமாக வளர்ச்சி காணும்.

இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஆதரவு அதிகரிக்கும். சூப்பர் பவர் என்கிற இந்தியாவின் கனவு நனவாகப் போகிறது. இனிதான் உலக நாடுகளுக்கு இந்தியாவின் உண்மையான வலிமை என்ன என்பது தெரியப்போகிறது.

தேர்தல் முடிவு... சென்செக்ஸின் அடுத்த இலக்கு 30000...

கடனுக்கான வட்டி விகிதம் உடனடியாக குறையும் என எதிர்பார்க்க முடியாது. அதற்கு எப்படியும் குறைந்தது 12 - 18 மாதங்கள் ஆகும். அடுத்த ஐந்தாண்டு காலத்தில் இந்திய பங்குச் சந்தை சராசரியாக 18 - 20% ஆண்டு வருமானம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்'' என்றார்.  

மொத்தத்தில், நம் நாட்டில் கேள்விக்குறியாக இருந்த பொருளாதார வளர்ச்சி இனி வேகமெடுக்கும் என நம்பலாம். 2008 பங்குச் சந்தை சரிவுக்குப்பின் சந்தை பக்கம் எட்டி பார்க்காத முதலீட்டாளர்கள்  இனியும் பங்குச் சந்தையிலிருந்து ஒதுங்கி நிற்காமல், நல்ல பங்குகளை கொஞ்சம்

கொஞ்சமாக வாங்கிப் போட்டால் அடுத்தகட்ட வளர்ச்சியில் பயன் அடையலாம் என்பதில் சந்தேகமில்லை!

எந்த பங்குகள் வாங்கலாம்?

நரேந்திர மோடி பிரதமராகி இருப்பதால் குஜராத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் செயல்பாடு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, எல் அண்ட் டி, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனப் பங்குகளை பல புரோக்கிங் கம்பெனிகள் பரிந்துரை செய்துள்ளன.

இனி எந்தெந்த புரோக்கிங் நிறுவனம் என்னென்ன பங்குகளை பரிந்துரைக்கிறது என்று பார்ப்போம்.

சிஎல்எஸ்ஏ: ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, எல் அண்ட் டி

மாக்கியுர்:  எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஐஆர்பி, அதானி போர்ட்ஸ்

ஆக்ஸிஸ் கேப்பிட்டல்:  மாருதி, ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி, எல் அண்ட் டி, கோல் இந்தியா, சேச கோவா, ஆர்.இ.சி, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, பஜாஜ் ஃபைனான்ஸ், எய்ஷர், மதர்சன் சுமி, எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ், அபான் ஆஃப்ஷோர், அதானி பவர், ஜிஎம்ஆர் இன்ஃப்ரா, ஜிவிகே பவர், ஐடியா செல்லுலார்.

குறுகிய காலத்தில் சந்தை ரேஞ்ச் பவுண்டில் இருக்கும்..!

 திபென் ஷா, ஹெட் - பிரைவேட் கிளைன்ட் குரூப் ரிசர்ச்,
கோட்டக் செக்யூரிட்டீஸ்

தேர்தல் முடிவு... சென்செக்ஸின் அடுத்த இலக்கு 30000...

''பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகள் சிறப்பாக செயல்பட மத்தியில் ஸ்திரமான ஆட்சி அமைவது அவசியம். அது இப்போது ஏற்பட்டிருக்கிறது. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையில் பப்ளிக் மற்றும் பிரைவேட் முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சிறந்த நிர்வாகம், தேவையில்லாத மானியங்களை கட்டுப்படுத்துவது மூலம் நிதி ஆண்டு பற்றாக்குறை குறைப்பு, புதிய வருமான வரி விதிப்பு, புதிய சரக்கு சேவைகள் வரி விதிப்பு, மத்திய மாநில அரசு உறவுகளில் மேம்பாடு, பணவீக்க விகிதம் குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலத்தில் பங்குச் சந்தைகள் லாபம் தருவதாக இருக்கும். ஆனால், குறுகிய காலத்தில் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள் ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கும். இதற்கான காரணமாக பிராஃபிட் புக்கிங் இருக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு