Published:Updated:

கம்பீரமான வருமானம் தரும் கால்மிதி தயாரிப்பு பிசினஸ்!

மாதம் 3,60,000...லோ.இந்து, படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

கம்பீரமான வருமானம் தரும் கால்மிதி தயாரிப்பு பிசினஸ்!

மாதம் 3,60,000...லோ.இந்து, படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

Published:Updated:

வாழ்க்கையின் சிக்கல்களை சவால்களாக்கி, இன்னல்களை எல்லாம் இனிதானவையாக்கிக் காட்டுவாள் பெண். அதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு... கால்மிதி பிசினஸில் கலக்கிக்கொண்டிருக்கும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, இந்து.

நான்காம் வகுப்பு படிக்கும் மகன், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் கணவர் என்று அழகான குடும்பத்தில் இருந்துகொண்டு, தொழிலில் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் இந்து!

''ஆழம் தெரியாம காலைவிட்ட கதைதான் என்னோட கதை. வாழ்க்கையில நான் செஞ்ச மிகப்பெரிய தவறு, ஒரு விஷயத்தைப் பத்தி தெரியாம அதுல இறங்கினதுதான். என் வாழ்க்கையில நான் செஞ்ச சரியான விஷயமும் அதுதான்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இப்படி வித்தியாசமாக இந்து கொடுத்த அறிமுகம், அவரை மேலும் உற்றுநோக்க வைத்தது!

கம்பீரமான வருமானம் தரும் கால்மிதி தயாரிப்பு பிசினஸ்!

''ஒருநாள் எதேச்சையா என் தோழிகூட சேர்ந்து, சின்னாளப்பட்டி போயிருந்தேன். அங்க கால்மிதி செய்யுற தறியைப் பார்த்தேன். உடனே கால்மிதி பிசினஸ் எனக்கு ஆசை கொடுக்க, அதைப் பத்தி எந்த விவரமும் தெரியாமலேயே, அதில் இறங்க முடிவெடுத்தேன். என் தம்பி கொடுத்த 15 ஆயிரம் ரூபாயோட, கூட்டுறவு வங்கியில கடன் வாங்கி, ரெண்டு தறிகள் வாங்க காசை கட்டினேன்.

மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை வெச்சி வேலை பார்க்கலாம்ங்கிற எண்ணத்துல, கால்மிதி செய்யுற இடத்துக்கே கூட்டிட்டுப் போய் காட்டினேன். ரொம்ப நம்பிக்கையா பேசினவங்க, தறி இயந்திரம் என் வீட்டுக்கு வந்து இறங்கின பிறகு, 'இவ்வளவு பெரிய மெஷின்ல எல்லாம் நம்மளால வேலை செய்ய முடியாதுப்பா!’னு எதிர்மறையா பேசினாங்க. தொழிலை எடுத்துச் செலுத்த முடியாம, வாங்குன தறி இயந்திரங்களை ஈரோட்டுல தறி பிசினஸ் செய்ற வாசுதேவன் சாருக்கு பாதி விலைக்கு வித்துட்டேன்'' என்று சொல்லி, சற்றே இடைவெளி கொடுத்தார் இந்து.

தொடர்ந்தவர், 'இனி என்ன செய்யுறது?'னு முழிச்சிட்டு நின்னப்போ, ஒரு ஐடியா தோணுச்சு. வாசுதேவன் சாரையே கட்டணம் கொடுத்து எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, தறிகளை எப்படி இயக்கணும், கால்மிதிகள் எப்படி தயாரிக்கணும்னு நானும், வேலைக்காக புதுசா நான் சேர்த்துக்கிட்ட பெண்களும் கத்துக்கிட்டோம். ஒரு தெளிவு கிடைச்சது. மறுபடியும் அவர்கிட்டயே தறிகளை வாங்கி, தொழிலைத் தொடங்கினேன்.

கம்பீரமான வருமானம் தரும் கால்மிதி தயாரிப்பு பிசினஸ்!

தொழில் ஒரு பக்கம் பிக்கப் ஆக, கால்மிதி தொழில் பயிற்சிகளும் கொடுக்க ஆரம்பிச்சேன். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 6 நாளுக்கு 6,000 ரூபாய் கட்டணத்திலும், தனி நபர்களுக்கு ஒரு நாளுக்கு 500 ரூபாய் கட்டணத்திலும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இடையில வேலை சரியா செய்யத் தெரியாத பணியாட்களால நஷ்டம் வர ஆரம்பிச்சது. உடம்பும் சரியில்லாம போச்சு. சுத்தியிருந்தவங்கள்ல பலரும் அவநம்பிக்கையா பேசி, தொழிலைக் கைவிடச் சொன்னாங்க. 'எதுவாயிருந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்’னு துணிஞ்சி பல தடைகளைத் தாண்டினேன். தொழிலோட நெளிவு சுளிவு, லாப நஷ்டம் எல்லாத்தையும் அடிபட்டு அடிபட்டே கத்துக்கிட்டேன்.

ஒரு யூனிட் வெச்சி பிசினஸை ஆரம்பிச்ச எங்கிட்ட, இப்போ மூணு யூனிட் இருக்கு. இந்த வளர்ச்சிக்கு இடையே அத்தனை தடைகள், கஷ்டங்களையும் தனியாளா நின்னு சந்திக்க வேண்டிய கட்டாயங்கள் நிறைய இடத்துல ஏற்பட்டது. அம்மாவும், தம்பியும் என் மேல இருக்குற நம்பிக்கையை என்னிக்கும் இழந்ததே இல்ல. என் கணவரும் அத்தையும் கொடுத்த சுதந்திரம், தெரியாத விஷயத்தைக்கூட தைரியமா இறங்கிக் கத்துக்கலாம்னு துணிச்சலைக் கொடுத்துச்சி. இவங்க எல்லாரும்தான் இந்த வெற்றிகிட்ட என்னை தள்ளிவிட்டிருக்காங்க!'' என்று பெருமை பொங்கச் சொல்லும் இந்துவிடம் வேலை செய்பவர்கள் அனைவருமே இல்லத்தரசிகள். அவர்கள், சுற்றுவட்டாரப் பகுதியினர் என்பதால் குழந்தைகளையும் கூடவே அழைத்து வந்துவிடுகின்றனர். இதனால் 'மகளிர் மட்டும்’ எஃபெக்ட் கொண்டு தடதடக்கிறது இவரின் தறிகள்!

கால்மிதி தயாரிப்பு மற்றும் வருமானம் பற்றி பேசிய இந்து, ''இப்போ பருத்தி, பனியன் துணி, மெல்லிய துணினு மூணு வகையான கால்மிதிகளைத் தயாரிக்கிறேன். ஈரோடு, மதுரை, திண்டுக்கல், காரைக்குடினு கால்மிதிகளைத் தயாரிச்சு அனுப்புறேன். கோவில்பட்டி, காரைக்குடி, நெல்லை, மணப்பாறைனு பல இடங்கள்ல நான் போட்டுக் கொடுத்த தறிகளும் இயங்கிட்டு இருக்கு.

கால்மிதி செய்ய தறியில் நூல் கோக்கறதுக்கு ஒண்ணரை மணி நேரம் ஆகும். ஓரிடத்துல தப்பு வந்துட்டாகூட மொத்தமும் பாழாகி, ஒரு கால்மிதிகூட செய்ய முடியாம போகலாம். அந்த லாகவம் கை வந்துட்டா, கால்மிதி செய்யுறதுங்கிறது 10 நிமிஷ வேலைதான்.

இப்போ எங்கிட்ட 9 தறிகள் இருக்கு. சரியான ஆட்களா தேர்ந்தெடுத்து முறையா வேலை வாங்கினா... ஒரு தறியில எப்படியும் குறைந்தது மாசத்துக்கு 1,000 கால்மிதிகள் செய்யலாம். 9 தறியிலயும் 9,000 கால்மிதிகள் கிடைக்கும். ஒரு கால்மிதி 40 ரூபாய்னு விக்கலாம். 9,000 கால்மிதிகளுக்கு 3,60,000 மாசத்துக்கு வியாபாரம் ஆகும். கணிசமான லாபம் பார்க்கலாம். ஆர்டர் கொடுக்கற கம்பெனிகள் எல்லாமே அதிக எண்ணிக்கையிலதான் கேட்பாங்க. அதனால நம்பிக்கையா கால்மிதி பிசினஸில் கால் வைக்கலாம்!''

- கடகட தறி சத்தங்களுக்கு இடையே கம்பீரமாக சொன்னார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism