Published:Updated:

ஷேர்லக் - புதிய உச்சத்தைக் கண்ட சந்தை!

ஷேர்லக் - புதிய உச்சத்தைக் கண்ட சந்தை!

பிரீமியம் ஸ்டோரி

'இந்தியா வென்றது; நல்ல நாட்கள் எதிர்நோக்கி இருக்கிறது!’ - தேர்தல் முடிவுக்குப்பின் மோடி ட்விட் செய்திருந்த குறுஞ்செய்தியை வாசித்தபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''பா.ஜ.க இத்தனை பெரிய வெற்றி கண்டிருப்பதை மக்கள் மட்டுமல்ல, தொழில் துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் மன மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார் ஷேர்லக்.

''தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சந்தையில் அரசல்புரசலாக விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள்'' என்றோம். தொண்டையை செருமியபடி நம் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

''தேர்தல் முடிவு காரணமாக மத்தியில் நிலையான மற்றும் வலிமையான ஆட்சி அமைந்திருப்பதால், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,480 புள்ளிகள் அதிகரித்து 25,385 வரை சென்றது. இதுவே, நிஃப்டி 502 புள்ளிகள் அதிகரித்து 7,625 வரை சென்றது. மதியத்துக்குமேல் எஃப்.எம்.சி.ஜி, ஐ.டி, ஹெல்த்கேர் பங்குகளில் பெருமளவில் பிராஃபிட் புக்கிங் நடந்ததால் சந்தை சரிந்தது.

சந்தையின் ஏற்றத்தில் வங்கிப் பங்குகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. எஸ்.பி.ஐ., ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா வங்கி, ஆந்திரா வங்கி பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்தன. அடுத்து, இன்ஃப்ரா துறையைச் சேர்ந்த ராம்கோ இண்டஸ்ட்ரீஸ், ஆர்.இ.சி, அதானி என்டர்பிரைசஸ், பவர் ஃபைனான்ஸ், சேச ஸ்டெர்லைட் போன்ற பங்குகள் விலை ஏறி இருக்கின்றன.  

ஷேர்லக் - புதிய உச்சத்தைக் கண்ட சந்தை!

அதேநேரத்தில், மணப்புரம் ஃபைனான்ஸ் (20%) பங்கின் விலை மிக அதிகமாக இறங்கி இருக்கிறது. பங்குச் சந்தை நன்றாக செயல்பட ஆரம்பிக்கும்போது தங்கத்துக்கான தேவை குறையும். அப்போது தங்கத்தை சார்ந்திருக்கும் நிறுவனங்களின் செயல்பாடு மந்தமாகும் என்கிற கணிப்பில் மணப்புரம் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், டைட்டன் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கம் கண்டிருக்கின்றன.

மோடி வந்தால் நன்கு விலை ஏறும் என்று சொல்லப்பட்ட அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 6 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்தது.

மோடியின் வருகையால், இந்திய பொருளாதாரம் மேன்மேலும் வளர்ச்சியடையும் என்கிற எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. இதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு 58.62 வரை அதிகரித்தது.

தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப பங்குச் சந்தையில் பெரும் பணக்காரர்கள் மற்றும் எஃப்.ஐ.ஐ.கள் எப்படி முதலீடு செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க செபி சிறப்பு குழு ஒன்றை அமைத்திருப்பதாகத் தகவல். செபி அலுவலகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்பெஷல் கன்ட்ரோல் ரூமிலிருந்து இந்தக் குழு, இந்த மாதம் 23-ம் தேதி வரை நடக்கிற பெரிய டிரான்ஸாக்ஷன்களை கண்கொத்திப் பாம்பாக கவனிக்க இருக்கிறது. தேர்தல் முடிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு குழுவினரோ அல்லது தனிப்பட்ட நபர்களோ சந்தையை செயற்கையாக ஏற்றினால் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவே செபியின் இந்தக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்..  

பங்குச் சந்தையில் ஒரேநாளில் ரூ.2,000 கோடி முதலீடு செய்துள்ள புதுடெல்லியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் கூர்க் என்பவருக்கு செபி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதுவரைக்கும் இவர் பங்குச் சந்தையில் இவ்வளவு அதிகமான தொகையை முதலீடு செய்யவில்லை. இப்போது திடீரென இத்தனை கோடிகளை முதலீடு செய்வதற்கு என்ன காரணம் என செபி விளக்கம் கேட்டிருக்கிறது.  

இந்திய பங்குச் சந்தையில் தனிநபர்களின் பங்களிப்பு என்பது இன்னும் ஒற்றை இலக்கத்தில் தான் இருந்து வருகிறது. அமெரிக்காவில் இது 42%, சீனாவில் 14% என இருக்கிறது. இந்தியாவில் இது வெறும் 8 சதவிகிதமாகவே உள்ளது. இதை அதிகரிக்க செபி அமைப்பு விரும்புகிறது. அதற்காக அது ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம், இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகையை அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. புதிய அரசு அமைக்கப்பட்டதும் இந்தக் கோரிக்கையை வற்புறுத்தவும் செபி திட்டமிட்டுள்ளது.

பங்குச் சந்தை குறியீடுகள் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. சந்தையின் ஏற்றத்துடன் பல பங்குகள் வேகமாக விலை ஏறி இருக்கின்றன. அந்தவகையில் பல பங்குகளின் விலை மிகவும் அதிகமாக ஏறி, அதிக விலையில் இருக்கின்றன. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல், சீமென்ஸ், ஏபிபி இந்தியா, ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகளில் முதலீடு செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அனலிஸ்ட்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இனிமேலும் சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து ஒதுங்கி நிற்கக் கூடாது. இனி இந்தியாவின் வளர்ச்சி பிரமாதமாக இருக்கும்.  எப்போதெல்லாம் நமக்கு பணம் கிடைக்கிறதோ, அதில் ஒருபகுதியை நல்ல பங்குகளை வாங்கி முதலீடு செய்யலாம். 2004-க்குப் பிறகு இப்போது இன்னொரு பொன்னான வாய்ப்பு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இனியும் சந்தை மீது நம்பிக்கை இழக்காமல், அதில் பங்கு பெறுவதே நல்லது'' என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார் ஷேர்லக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு