Published:Updated:

நிதியை மதியால் வெல்வோம் பணவீக்க சூட்சுமங்கள்!

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்

பிரீமியம் ஸ்டோரி

ஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 3

 பணவீக்கம் என்றவுடன் சிலர் குழப்பத்தில் புருவத்தை உயர்த்துகிறார்கள். ஆனால், விலைவாசி உயர்வைத்தான் பணவீக்கம் என்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்போது அட, விஷயம் இவ்வளவுதானா என்று தெளிவடைகிறார்கள். இந்த இதழில் பணவீக்கமானது நிதித் திட்டமிடுதலில் எந்த விதத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பார்ப்போம்.

பணவீக்கம் என்றால்..!

சமீப காலமாகவே நாளிதழ்களைப் புரட்டும்போது பணவீக்கம் அதிகரித்தது என்கிற செய்தியை அடிக்கடி பார்க்கிறோம். பணவீக்கம் என்பது அத்தியாவசிய பொருட் களின் விலை நாளுக்குநாள் அதிகரிப்பதையும், இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்குநாள் குறைவதையும் குறிக்கும்.

உதாரணத்துக்கு, இப்போது நம் வீட்டுச் செலவுகள் மாதத்துக்கு 20,000 ரூபாயாக இருக்கிறது.  10 வருடத்துக்குப்பின் அதே செலவுக்கு 39,350 ரூபாய் தேவைப்படும் (பணவீக்கம் 7 சதவிகிதமாக இருந் தால்). இதனால் நாம் அறிந்துகொள்ள வேண் டியது என்னவெனில், நமது சம்பாத்தியம் அதிகமாகிறதோ இல்லையோ, வாழ்க்கைத் தேவை களின் மதிப்பு ஆண்டுக்காண்டு அதிகமாகிறது என்பதே.

பணவீக்கம் உங்களின் அன்றாட வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதற்கு ஒரு சில உதாரணங்களைச் சொல்லவா?

1990-ல் நீங்கள் டூத் பேஸ்ட்டை 15 ரூபாய் தந்து வாங்கியிருப்பீர்கள். அதே டூத் பேஸ்ட்டை இன்றைக்கு (2014-ல்) வாங்கவேண்டுமெனில் 85 ரூபாய் நீங்கள் தரவேண்டும். இதே டூத்பேஸ்ட்டை 2020-ல் நீங்கள் வாங்க நினைத்தால், 130 ரூபாய் தரவேண்டும்.

நிதியை மதியால் வெல்வோம் பணவீக்க சூட்சுமங்கள்!

டூத் பேஸ்ட் உதாரணம் பிடிக்கவில்லையா, ஒரு மசால் தோசை உதாரணம் சொல்கிறேன். 1990-ல் ஒரு மசால் தோசையின் விலை 10 ரூபாய். இதுவே இன்று 120 ரூபாய். 2020-ல் ஒரு மசால் தோசையின் விலை 211 ரூபாயாக இருக்கும்.

1987-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 ரூபாயாக இருந்தது. அதுவே இன்று 75 ரூபாயாக  உயர்ந்துள்ளது. இன்னும் சில வருடங்களில் விலை அதிகரித்து, 2020-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 150 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.

இப்படியாக மனிதன் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டிருப்பதைத்தான் பணவீக்கம் அதிகரிக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத் தரமும் காலத்துக்கு ஏற்றமாதிரி மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணத்துக்கு, அலைபேசி, எல்.சி.டி மற்றும் எல்.இ.டி டிவி, லேப்டாப்,  கம்ப்யூட்டர், இன்டர்நெட், குளிர்சாதனப் பெட்டி போன்ற அனைத்துப் பொருட்களுமே சில வருடங்களுக்கு முன்பாகப் பலரால் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. ஆனால், இன்று அவை எல்லாருக்கும் அத்தியாவசிய பொருட் களாகவே மாறிவிட்டன. அதற்குண்டான செலவுகளும் கட்டாயமானதாகிவிட்டன.

உங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை நீங்களே பட்டியலிட்டு 2000-ம் ஆண்டில் என்னென்ன பொருட்கள் இருந்தது / இல்லை என்றும் இப்போது அதே பட்டியலில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது / இல்லை என்றும் தெரிந்துகொண்டால், ஒவ்வொரு பொருளின் கட்டாயத்தையும் நீங்கள்  உணரமுடியும்.

பணம், நேரம் மதிப்பு கணக்கீடு:

நிதியை மதியால் வெல்வோம் பணவீக்க சூட்சுமங்கள்!

'காலம் பொன் போன்றது; அதனை வீணாக்காதீர்கள். 'பணத்தைச் சம்பாதித்துவிட லாம், காலத்தைச் சம்பாதிக்க முடியாது’ என்பதுபோன்ற பழமொழிகளைக் கேட்டிருப்பீர் கள். இது எந்த அளவுக்கு  உண்மை என்பதை இப்போது பார்ப்போம். ஓர் உதாரணத்துக்கு, ஒரு லாட்டரி சீட்டில் 50 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணத்தைக் கீழ்க்கண்ட இரண்டு முறையில், ஏதேனும் ஒரு முறையில் நீங்கள் பெறலாம் என்றால், என்ன செய்வீர்கள்?

* 50 லட்சம் ரூபாயை இன்றே ரொக்கமாகப் பெறுதல்.

* ஆண்டுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் மொத்த பணத்தையும் ஐந்து ஆண்டுகளில் பெறுவது.

முதலில் கூறியதே சிறந்தது என்பதே சரியான முடிவாக இருக்கும்தானே. ஏனெனில், இன்றைய பணத்தின் மதிப்பானது நாளைய பணத்தின் மதிப்பைவிட உயர்ந்தது.

முதலீட்டின் வளர்ச்சிக்கு காலம் எவ்வளவு முக்கியம் என்பதை பவர் ஆஃப் காம்பவுண்டிங் மூலம் இப்போது பார்க்கலாம்.

ஃபார்முலா: (FV = PV(I + R)^N) FV= FUTURE VALUE (எதிர்கால மதிப்பு),

PV= Present value (தற்கால மதிப்பு) , I= Rate of return ;   (ஆண்டு வருமான சதவிகிதம்), N= Number of Period. (முதலீட்டுக் காலம்)

மேற்கண்ட ஃபார்முலாவில் வட்டி என்பது நேரத்துக்கு நேரம் மாறுபடும். மேலும், முதலீட்டின் தன்மைக்குத் தகுந்தவாறு வட்டி விகிதம் மாறும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் சுமாராக 7 - 8% வரை வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவே சிறிது துணிந்து பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், 12 - 15% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், ரிஸ்க்கும் உண்டு. மேற்கண்ட ஃபார்முலாவில் கால அளவு என்பது நம் கையிலேயே உள்ளது. உங்கள் தேவைக் காலம் அதிகரிக்கும்போது லாபம் / வட்டியும் அதிகமாகக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு, கரண் மற்றும் கபில் என்கிற இருவரில், கரண் வயது 20. மாதத்துக்கு 4,000 ரூபாய் வீதம் 10 வருடங்களுக்கு மட்டுமே முதலீடு செய்த பணத்தை எடுக்காமல், அதனை அவருடைய ஓய்வுக்கால நிதிக்காக ஒதுக்கினார். அவருடைய மொத்த முதலீடு 4,80,000 ரூபாய். இது வளர்ந்து அவருடைய 60-வது வயதில் 275 லட்சம் ரூபாயாக இருந்தது (வட்டி விகிதம் 12% CARG). கபில் தன்னுடைய 30-வது வயதில் மாதம் 4,000 ரூபாய் வீதம் 30 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தார். 30 வருடங்களில் அவர் முதலீடு செய்த மொத்த தொகை ரூ.14.4 லட்சம். இந்த முதலீடு வளர்ந்து அவருடைய 60-வது வயதின்போது 139.70 லட்சமாக இருந்தது. இதன் மூலம் அறிவது கரண் தன் இளம் வயதிலேயே ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை ஆரம்பித்துவிட்டதால் அதிகமான வருமானத்தைப் பெற்றிருக்கிறார் என்பதுதான். அதனால் முதலீடு செய்வதில் பணம், நேர மதிப்பீடு முக்கியமாகிறது.

(திட்டமிடுவோம்)

''பணப் பற்றாக்குறை வந்ததே கிடையாது!''

''எங்கள் மாத வருமானம் 35,000 ரூபாய். ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் அன்றைய மாதத்துக்கான செலவுகளை பட்டியலிடுவேன். மாதம் ரூ.35,000 வருகிறது என்றால், ரூ.25,000-க்குள் எல்லாம் முடித்துவிட வேண்டும் என்று நினைத்து, 25,000 மட்டுமே வரவில் வைத்துக்கொள்வேன். பெரும்பாலும் ரூ.25,000 தாண்டி ரூ.30,000 வரை செலவுகள் வந்துவிடும். இப்படி குறைந்த வரவுக் கணக்கு வைத்துக்கொள்வதால் அவசியமில்லாச் செலவுகளை தவிர்த்து, சேமிப்பை பெருக்க உதவுகிறது.

நிதியை மதியால் வெல்வோம் பணவீக்க சூட்சுமங்கள்!

குழந்தைகள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிப்பதால் படிப்புக்கு அதிக செலவு ஆவதில்லை.  இன்ஷூரன்ஸ், கார் லோன், நகைச் சீட்டு கட்டுகிறேன். செலவுகள் போக மீதமுள்ள பணத்தை அவசரத் தேவைக்காக வங்கியில் சேமித்து வருகிறேன். மாதாமாதம் செலவுகளை எழுதிவைத்து செய்வதால் வரவு, செலவு, சேமிப்பு என்று எங்கள் வீட்டின் நிதி நிலைமையை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. எப்போதும் சேமிப்புபோக அவசரத்தேவைக்காகவும் தனியாக பணத்தை எடுத்துவைத்துவிடுவதால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டதே கிடையாது.''

- ந.ஆஷிகா,
படம்: பா.காளிமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு