Published:Updated:

ஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி?

இரா.ரூபாவதி படங்கள்: வீ. நாகமணி, ப. சரவணக்குமார்.

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

விடுமுறை முடிந்து குழந்தைகள் பள்ளிக்குப் போகத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான கல்வி சார்ந்த பொருட்களை வாங்குவதற்குத் தேவையான பணத்தை இந்த மாத பட்ஜெட்டில்  ஏற்கெனவே ஒதுக்கி வைத்திருப்பீர்கள்.

குழந்தைகள் புத்தகத்தை வைத்துக்கொண்டு செல்வதற்கான பேக், அணிந்து செல்வதற்கான மூன்று ஜோடி ஷூக்கள்,  மதிய உணவு கொண்டுசெல்வதற்கான  லன்ச் பாக்ஸ், குடி தண்ணீரைக் கொண்டுசெல்வதற்கான வாட்டர் பாட்டில், பென் பாக்ஸ், ரப்பர், கிராஃப்ட் ஐட்டங்கள் என அத்தனை பொருட்களையும் வாங்குவதற்குக் குறைந்தது  இரண்டு ஆயிரம் ரூபாய் செலவாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மே, ஜூன் மாதங்களில் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் மற்றும் பெரிய பெரிய கடைகளில் பள்ளி குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த பொருட்களுக்கு முதலிடம் தருவார்கள். மேலும், இந்தப் பொருட்களை இந்தச் சமயத்தில் எல்லாருமே வாங்குவதால், இந்தப் பொருட்களின் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். அதாவது, சாதாரண நாட்களில் 100 ரூபாய்க்கு கிடைக்கும் லன்ச் பாக்ஸின் விலை இந்தச் சமயத்தில் 125 ரூபாயாக இருக்கும். மேலும், இந்தப் பொருட்கள் காலமாற்றத்துக்கேற்ப டிசைனும் தரமும் உயர்வதோடு, விலையும் கணிசமாக உயர்ந்துகொண்டே போகிறது. நல்ல நிறத்தில், நல்ல டிசைனில், தரமான ஒரு வாட்டர் பாட்டிலின் விலை இப்போது 100 ரூபாய்க்கு மேல் இருக்கிறது.

 ஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி?

இந்தப் பொருட்களில் பலவற்றை விலையைப் பார்த்து  எந்த பெற்றோராலும் வாங்க முடியாது என்பது முக்கியமான விஷயம். காரணம், இந்தப் பொருட்களில் எதை வாங்குவது என்பதை முடிவு செய்கிறவர்கள் குழந்தைகள்தான். டோரா பொம்மை போட்ட பைதான் வேணும், அந்த ரோஸ் கலர் பாட்டில்தான் வேணும் என்று கேட்டால், பெற்றோர்களால் மறுக்க முடியாத நிலையே இருக்கிறது. இதை நன்றாகப் புரிந்துகொண்ட வியாபாரிகள் அதிக விலை வைத்து விற்க தயங்குவதே இல்லை.

வித்தியாசமான வடிவங்களிலான பொருட்களை வாங்கித் தந்தால் பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள், இதனால் அவர்களின் கற்பனா சக்தி  வளரும் என நம்புகிறார்கள். இதனால் மட்டும் குழந்தைகளின் படைப்பாற்றல் வளர்ந்துவிடுமா என்பது குறித்து கல்வித் துறை சிந்தனையாளர் ஆயிஷா நடராஜன் விளக்குகிறார்.

''படைப்பாற்றல் என்பது இயற்கையாக உருவாகக்கூடிய விஷயம். அதிகமான வாசிப்பு, சூழல் சார்ந்த விஷயங்கள்தான் குழந்தைகளைத் திறமையுடையவர்களாக மாற்றும். இதுபோன்ற பொருட்களை வாங்கித் தருவதால் மட்டும் புத்திசாலித்தனமும், படைப்பாற்றலும் வளர்ந்துவிடாது.  

Click to download

 ஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி?

மேலும், இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றனர். பல வீடுகளில் ஒரே ஒரு குழந்தையே இருக்கிறது. இதனால் குழந்தை கேட்பதை வாங்கித் தருவதே சரி என்று நினைக்கின்றனர். குழந்தைகள் கேட்கும் பொருட்களையெல்லாம் வாங்கித் தரத் தொடங்கினால், பிற்பாடு தான் கேட்பது எல்லாம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதையும் பெற்றோர்கள் மறக்கக்கூடாது.  

உணவைக் கொண்டுசெல்லும் லன்ச் பாக்ஸை பிளாஸ்டிக்கில்தான் பல பெற்றோர்கள் வாங்குகின்றனர்.  இதில் உணவை சூடச்சுட வைக்கும்போது, பிளாஸ்டிக் லேஸாக உருகுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சில நோய்கள் வர வாய்ப்புண்டு. எனவே, லன்ச் பாக்ஸை முடிந்தவரை பிளாஸ்ட்டிக் அல்லாத வேறு ஒரு பொருள் மூலம் தயாரானதாகப் பார்த்து வாங்குவது நல்லது.

 ஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி?

கல்வி சார்ந்த பொருட்களை நம் குழந்தையுடன் படிக்கும் மற்ற குழந்தைகள் அடிக்கடி மாற்றுவதால், நம் குழந்தைகளும் அப்படி செய்ய நினைக்கலாம். ஆனால், இந்த எண்ணத்தை குழந்தைகளிடம் வளரவிடக் கூடாது. காசு கொடுத்து வாங்கும் பொருளினால் என்ன பயன் என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்'' என்றார் அவர்.  

பள்ளிக்குத் தேவையான பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த குடும்பத் தலைவி கவிதா பாண்டே சொன்னார்.

''என் பிள்ளையுடன் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களை எனக்கு நன்றாகத் தெரியும். இதனால் 3, 4 பெற்றோர்கள் ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாகக் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை சென்னை பாரிமுனையில் உள்ள கடைகளில் வாங்குவோம். இப்படி மொத்தமாக சேர்ந்து வாங்கும்போது பேரம் பேசி வாங்க முடியும். மேலும், 2 ஆயிரம் ரூபாய்க்கு மதிப்புள்ள பொருட்களை 1,500 ரூபாய்க்கு வாங்க முடியும். இதே பொருட்களை சில்லறையாக வாங்கும்போது 1,800 ரூபாய் ஆகும்.

 ஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி?

ஸ்கூல் பேக், சாக்ஸ், ஷூ போன்றவற்றை பிராண்டட் ஐட்டங் களாக வாங்குவேன். இந்தப் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன். கடைக்குப் போகும்முன்பே என்னென்ன பொருட்கள் வாங்கப் போகிறேன் என்பதை லிஸ்ட் போட்டு எடுத்துக்கொண்டு செல்வதால், தேவை யில்லாத பொருட்கள் வாங்குவதை என்னால் தவிர்க்க முடிகிறது.

குழந்தைகளுக்கு சேமிப்பு குறித்து சொல்லிக்கொடுத்து அந்தப் பணத்தில் பொருட்களை வாங்கச் செய்வேன். அதாவது ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து ரூபாய் காசுகளை கொடுத்து அதைச் சேமித்து வைத்து அதில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளச் சொல்வேன்.

மேலும், 400 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்குவதற்கு 300 ரூபாய் தான் சேர்த்து வைத்துள்ளார்கள் என்றால், மீதம் நூறு ரூபாயும் சேர்ந்த பிறகுதான் அந்தப் பொருளை வாங்க வேண்டும் எனச் சொல்வேன். இப்படி செய்யும்போது, அவர்களின் பணத்தில் வாங்கிய பொருள் என்பதால் அதைப் பொறுப்பாக வைத்திருப்பார்கள்.

 ஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி?

குழந்தைகள் நாலு பொருள் கேட்டால், நான் ஒரே ஒரு பொருள் வாங்கிக்கொள்வதற்கான ஆப்ஷன் கொடுப்பேன். இப்படி செய்தும்போது அவசியம் எது தேவை என்பதை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இதில் ஓரிருமுறை தவறு செய்வார்கள். இருந்தாலும் அடுத்தமுறை சரியானதைத் தேர்வு செய்வார்கள். இதனால் குழந்தைகளே செலவை குறைக்கக் கற்றுக்கொள்வார்கள்.

எல்லா பள்ளிகளிலும் கிராஃப்ட்டுக்குத் தேவையான பொருட் களை அடிக்கடி வாங்கச் சொல்வார்கள். இதற்கு வீட்டு அருகில் ரெகுலராக ஒரு கடையில் வாங்குவது நல்லது. இதனால் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே வாங்கிக்கொள்ள முடியும். இதனால் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை அதிகரித்து, புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்கள்'' எனப் பல டிப்ஸ்களை வழங்கினார் கவிதா.

 ஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி?

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அவர்கள் சேமிக்கும் பணத்தை வைத்தே அவர்களுக்குத் தேவையான கல்வி சார்ந்த பொருட்களை வாங்கித் தருவதற்கான முயற்சியை ஒவ்வொரு பெற்றோரும் செய்யலாம். இப்படி உண்டியலில் சேரும் பணத்தை மாதக் கடைசியில் எடுத்து, வாங்கி ஆர்.டி சேமிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம்.

ஒரு குழந்தை ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயை  வங்கி ஆர்.டி.யில் கட்டினால்கூட, வருடத்துக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் 1,260 ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தைக் கொண்டு அடுத்த வருடம் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்தப் பழக்கத்தை குழந்தைகள் பெரியவர்களான பிறகும் தொடரும்பட்சத்தில், தங்கள் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள   திட்டமிடுபவர்களாக மாறிவிடுவார்கள்.  

குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது அவர்களின் மனத்தில் நல்ல விஷயங்களுக்கான விதையை விதைத்துவிட்டால், அதன் பலன் அவர்கள் பெரியவர்களாக வளர்ந்தபிறகு கிடைக்குமே!