Published:Updated:

ஷேர்லக் - சாதனை படைத்த இந்திய பங்குச் சந்தை!

ஓவியம்: அரஸ்

தேர்தல் முடிந்துவிட்டது. இத்தனை நாளும் கடுமையாக உழைத்ததால் ஒரு சிறு ரிலாக்சேஷன் தேவை என்று நினைத்து மூன்று நாள் டூர் செல்கிறோம். எனவே, வியாழக்கிழமை இரவே நாணயம் விகடனை முடிக்கிறோம். நீங்கள் வெள்ளிக்கிழமை மாலை வருவதற்குப் பதில் வியாழக்கிழமை மாலையில் வந்துவிட முடியுமா?'' என்று நாம் ஷேர்லக்கிடம் கேட்க, ''ஓ, பேஷா வந்துடலாமே'' என்று பதில் அனுப்பியிருந்தார். வியாழன் மாலை சொன்னபடி ஆஜராகவும் செய்தார்.

''உலக அளவில் இந்திய பங்குச் சந்தை புதிய சாதனை படைத்திருக்கிறதே?'' - குதூகலமாக வந்தவரிடம் உற்சாகமாகக் கேட்டோம்.  

''நரேந்திர மோடி பிரதமரானதை அடுத்து இந்திய பங்குச் சந்தை உலக அளவில் புதிய சாதனை படைத் திருக்கிறது. அதாவது, உலக அளவில் பெரிய பங்குச் சந்தைகளில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படையில் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலகப் பங்குச் சந்தைகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் இந்தியாவின் பங்களிப்பு 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் 1.8 சதவிகிதமாக இருந்தது. அது தற்போதைய சந்தை ஏற்றத்தில் 2.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது'' என்றார்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஆனால், தேர்தல் முடிவையட்டி எக்கச்சக்கமாக உயர்ந்த சந்தை, கடந்த ஐந்து நாட்களில் பெரிய அளவில் ஏறவில்லையே?'' - சில்லென பாதாம் பாலை அவருக்குத் தந்தபடி கேட்டோம்.

ஷேர்லக் - சாதனை படைத்த இந்திய பங்குச் சந்தை!

''இந்த ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம் தொடர்பாக எந்தப் பெரிய விஷயமும் நடக்கவில்லை என்பதால் மதில்மேல் பூனையாக இருந்தார்கள் வர்த்தகர்கள். வரும் திங்களன்று பிரதமர் பதவியை மோடி ஏற்றுக்கொண்டபின், அவர் வெளியிடும் அறிவிப்புகளை வைத்து எதிர்வரும் வாரத்தில் சந்தை செல்லும். முக்கியமாக, நிதித் துறைக்கும், தொழில் துறைக்கும் யார் அமைச்சர்களாக வருவார்கள் என எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். நிதி அமைச்சர் பதவிக்கு அருண் ஜெட்லி, அருண்

ஷோரியின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது. இப்போது புதிதாக சுப்பிரமணிய சுவாமியின் பெயரும் அடிபடுகிறது. இந்த இரு துறைகளுக்கான அமைச்சர் யாரென்று தெரிந்து, அவர்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி ஏதாவது தெரிந்தால் மட்டுமே இனி சந்தை மேலே செல்லும்'' என்றார்.

''சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறதே?'' என்றோம்.

''மோடி மீது நம்பிக்கை வைத்து சிறு முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச் சந்தைக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்து இருப்பதாகத் தகவல். அந்த வகையில் கடந்த வாரத்தில் புதிதாக ஏராளமான டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. பழைய டீமேட் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய பங்குச் சந்தையில் ரொக்க வர்த்தகம் சமீபமாக அதிகரித்துள்ளது. கடந்த நாலரை மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.12,588 கோடிக்கு வர்த்தகமாகி இருக்கிறது. இது கடந்த வாரத்தில் ரூ.30,000 கோடிக்குமேல் அதிகரித்துள்ளது.

என்றாலும், சிறு முதலீட்டாளர்கள் உஷாராக இருக்கவேண்டிய நேரம் இது..! ஸ்மால் கேப், மிட் கேப் பங்கு களில் முதலீடு செய்து சந்தையின் உச்சத்தில் அவை நல்ல லாபத்தில் இருந்தால் அந்தப் பங்குகளை விற்று பிராஃபிட் புக்கிங் செய்யுங்கள் என அனலிஸ்ட்கள் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். விலை ஏறியிருக்கும், எளிதில் பணமாக்க முடியாத இல்லிக்விட் பங்குகளை பெரும் பணக்காரர்களும் அந்த நிறுவனங்களின் புரமோட்டர்களும் விற்றுதள்ளிக் கொண்டிருப்பதாகத் தகவல். கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் இதுபோன்ற பங்குகள் ரூ.1,400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், இதுபோன்ற பங்கு களில் 600 கோடி ரூபாய் முதலீடும் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, சிறு முதலீட்டாளர்கள் உஷார்'' என்று எச்சரித்தார் அவர்.  

''வியாழக்கிழமையன்று ஒரே நாளில் எம்.சி.எக்ஸ். பங்கின் விலை 20%  அதிகரித்துள்ளதே, என்ன காரணம்?'' என்று வினவினோம்.

''ரூ.5,600 கோடி மோசடியில் சிக்கி இருக்கும் என்.எஸ்.இ.எல். அதன் இ-சீரிஸ் முதலீட்டாளர்களுக்கான முதல் தவணை தொகையான ரூ.140 கோடி வழங்கவிருக்கிறது. அந்த வகையில் குழும நிறுவனமான எம்.சி.எக்ஸ். விலை கணிசமாக ஏறி இருக்கிறது. இதேபோல, மணப்புரம், முத்தூட் நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்திருக்கிறது. தங்கம் இறக்குமதி தொடர்பான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியிருப்பதே இதற்குக் காரணம்'' என்று விளக்கம் தந்தார்.

''ரிலையன்ஸ் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் திரட்ட இருக்கிறதாமே?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டோம்.

''ரிலையன்ஸ் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக 10,000 கோடி ரூபாய் திரட்டவிருக்கிறது. இந்தத் தொகை 2014-15ம் ஆண்டில் திரட்டப்பட இருக்கிறது. பங்குதாரர்களின் அனுமதி ஜூன் 18-ம் தேதி நடக்கவுள்ள அதன் 40-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கோரப்பட இருக்கிறது. மேலும், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நிட்டாவை இயக்குநராக நிறுவனத்தில் சேர்க்கவும் பங்குதாரர்களின் அனுமதி கோரப்பட இருக்கிறது. நிட்டா, தற்போது ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவராக உள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல பிரச்னைகள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்தப் பங்கின் விலை சுமார் 35% அதிகரித்துள்ளது. தற்போதைய காளை சந்தையில் ரிலையன்ஸ் பங்களிப்பு நன்றாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.    

ரிலையன்ஸ் நிறுவனம் போலவே, ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனமும் 10,000 கோடி ரூபாய் விரிவாக்கத்துக்காகத் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனமும் விரைவில் அதன் பங்குதாரர்களின் ஒப்புதலை பெற இருக்கிறது'' என்று சொன்னார்.

அவர் புறப்பட்டுச் செல்லும்முன் பங்கு பரிந்துரை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டோம். நீண்ட கால நோக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கவேண்டிய பங்குகள் இவை என்று சொல்லிவிட்டு, பின்வரும் பங்குகளை சொன்னார்.

ஜி.எஸ்.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எல்.ஐ.சி. ஹெச்.எஃப்.எல்., மதர்சன் சுமி, ஸ்ரீசிமென்ட்.