Published:Updated:

ஷேர்லக் - பட்ஜெட்டுக்குமுன் சென்செக்ஸ் 30000

ஷேர்லக் - பட்ஜெட்டுக்குமுன் சென்செக்ஸ் 30000

பிரீமியம் ஸ்டோரி

மதியம் 3.30 மணிக்கு மார்க்கெட் முடிந்தவுடனே நம் கேபினுக்குள் உற்சாகமாக நுழைந்தார் ஷேர்லக். இருக்காதா பின்னே, இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று மட்டுமே சென்செக்ஸ் 376 புள்ளிகளும், இந்த வாரம் முழுக்க சென்செக்ஸ் 1179 புள்ளிகளும் உயர்ந்தால், முதலீட்டாளர்கள்போல ஷேர்லக்கும் குஷியாகமாட்டாரா என்ன? குதூகலமாக வந்து உட்கார்ந்தவருக்கு சில்லென்ற எலுமிச்சைப் பழ ஜூஸைத் தந்தபடி கேள்வியைக் கேட்க ஆரம்பித்தோம்.

''சென்செக்ஸ் 25000-த்தைத் தொட்டு விட்டது. இனி, அடுத்து என்ன டார்கெட்?''

''நாடு முழுக்க பருவமழை பெய்வதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்கிற தகவலால் முதலீட்டாளர்களிடம் எதிர்காலம் குறித்த நம்பிக்கை துளிர்விட் டிருக்கிறது. தவிர, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6.2 சதவிகிதமாக இருக்கும் எனவும், அடுத்த மூன்றாண்டில் 8 சதவிகிதமாக வளரும் எனவும் ஆய்வு நிறுவனமான யர்னஸ்ட் அண்ட் யங்க் கணித்திருக்கிறது. மேலும், எஃப்ஐஐகளின் முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் சந்தை புதிய உச்சத்தைக் கண்டிருக்கிறது. இதேவேகத்தில் சந்தை முன்னேறினால், அடுத்த மாதத் தொடக்கத்தில் தாக்கலாக இருக்கும் மத்திய பட்ஜெட்டுக்குமுன் சென்செக்ஸ் 30000 புள்ளிகளைத் தொட அதிக வாய்ப்பு இருப்பதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள்.

இது குறுகிய காலத்துக்கான எதிர்பார்ப்புதான். ஒருவேளை இந்த அளவைத் தொடவில்லை என்றாலும், சந்தை நீண்ட காலத்தில் காளையின் பிடியிலேயே இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அவ்வப்போது சந்தை கொஞ்சம் இறங்கினாலும் அந்த இறக்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பாகவே முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார் நம்பிக்கையோடு.

ஷேர்லக் - பட்ஜெட்டுக்குமுன் சென்செக்ஸ் 30000

''ஆனால், சென்செக்ஸ் 100000 புள்ளிகள் உயரும் என்கிறதே ஒரு நிறுவனம்?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டோம்.

''கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனம் 2020-ம் ஆண்டுக்குள் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளைத்  தாண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சி, வேளாண் மற்றும் சேவைகள் துறை, உள்கட்டமைப்பு துறை போன்றவற்றின் மேம்பாட்டால் நிறுவனங்களின் லாப வளர்ச்சி 20-25 சதவிகிதமாக இருக்கும் என்பதால், இந்த வளர்ச்சி சாத்தியம் என்று அது கூறியுள்ளது'' என்று விளக்கம் தந்தார்.

''இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை புதிய சாதனை படைத்திருக்கிறது போலிருக்கிறதே?'' என்றோம்.

''ஆமாம், கடந்த மே மாதத்தின் முடிவில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த தொகை 10 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது'' என்றார்.

''மத்திய அரசு என்னென்ன அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரத் தயாராகிறது?'' என்று கேட்டோம்.

''புதிய அரசு தடாலடி மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. முதல் இரண்டு ஆண்டுகளில் குறைகளை சீர்செய்யும், அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்ளும் என்றும் சொல்கிறார்கள். இப்படி செய்தால்தான் வளர்ச்சி என்பது நிலையானதாக இருக்குமாம்!

இன்ஷூரன்ஸ் துறையில் தற்போது அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 26% அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை 49 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. மேலும், அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூடவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு அளிக்கப்படும் வரிச் சலுகையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிகம் பேரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வைக்க, அதிக நிறுவனங்கள் தேவை. எனவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச பங்கு மூலதனம் 50 கோடி ரூபாய் என்பதுபோல கொண்டுவரப்பட இருப்பதாகத் தகவல்.  

விவசாயத் துறையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், இந்தத் துறையில் முதலீட்டை அதிகரிக்க நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும், நீர்பாசனத் திட்டங்களை முறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த முடியும் என மத்திய அரசு நம்புகிறது'' என நீண்ட விளக்கம் தந்தார் ஷேர்லக்.

''பிராஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக கைமாறி இருக்கிறதே?'' என்று விசாரித்தோம்.

''இந்தப் பங்குகள் 50 சதவிகித லாபத்தில் இருக்கவே, முன்னணி பங்கு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (1.22 கோடி பங்கு) மற்றும் அவரது மனைவி (20 லட்சம்) பங்குகளை விற்றுத்தள்ளி இருக்கிறார்கள். அதேநேரத்தில், இந்தப் பங்கின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் 1.1 கோடி பங்குகளை வாங்கியுள்ளது'' என்றார்.

''பிரமிட் சாய்மீரா கம்பெனியின் பெயர் மீண்டும் அடிபடுகிறதே?'' என்று கேட்டோம்.

''பங்குச் சந்தை விதிமுறை மீறல்கள் பிரச்னையில் செபிக்கு இந்த நிறுவனம் 1.27 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கான கெடு தேதி கடந்த ஜூன் 3-ம் தேதி. இந்த தேதி கடந்தும் பணம் செட்டில் செய்யப்படவில்லை என்பதால், பிரமிட் சாய்மீராவின் முன்னாள் புரமோட்டர் பி.எஸ்.சுவாமிநாதனின் மனைவி உமா பெயரில் காஞ்சிபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை செபி முடக்கி வைத்திருக்கிறது.'' என்றார்.

''ஓ.என்.ஜி.சி பங்கின் விலை 10.5% உயர்ந்தி ருக்கிறதே, என்ன காரணம்?'' என்று வினவினோம்.

''இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்த ஆயில் கம்பெனிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கலாம் என்ற செய்தியால் ஒரேநாளில் ஓ.என்.ஜி.சி பங்கின் விலை 10.5% உயர்ந்துள்ளது. இதேபோல், கெயில் (7.5%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (3%) பங்குகளும் உயர்ந்துள்ளது'' என்றவர், கிளம்பத் தயாரானார்.

''டிப்ஸ் ஏதாவது..?'' என்று நாம் இழுக்க, £ம். ஒரு துண்டுச் சீட்டு தந்தார். அதிலிருந்த பங்குகள்:

ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, நெஸ்லே, பிடிலிட்டி இண்டஸ்ட்ரீஸ், டைட்டன்.

கடைசி செய்தி: எல் அண்ட் டி ஃபைனான்ஸ்  பங்கில் இன்சைடர் டிரேடிங் செய்ததற்காக 70 நிறுவனங்களை செபி கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறது. கிரெடிட் சூஸி, கோல்டுமேன் சாக்ஸ் சிங்கப்பூர்  போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும். உஷார்! உஷார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு