Published:Updated:

பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்!

பங்கு பரிந்துரைகளுடன்... சி.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தொழில் துறை நல்ல வளர்ச்சியடையும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் காணும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் ஆட்சிபீடத்தில் அமர்ந்தவுடனேயே எடுக்கத் தொடங்கிவிட்டது.  

நிர்வாகம் மேம்படும்!

மத்திய அரசு அலுவலகங்கள் தற்போது வாரத்துக்கு ஐந்து நாட்கள், காலை 9 மணி முதல் 5 மணி வரை இயங்கு கின்றன. ராஜீவ் காந்தி ஆட்சி காலத்திலிருந்து கடந்த 29 ஆண்டுகளாக இதுதான் வழக்கத்தில் இருக்கிறது. இதை மாற்றியமைத்து, வாரத்துக்கு 6 நாள் வேலை என்பது போலவோ, சனிக்கிழமை விடுமுறை விட்டுவிட்டு காலை 8 மணி முதல் 6 மணி வரை வேலை செய்கிற மாதிரியோ அலுவலக நேரத்தை மாற்றியமைக்கலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது. இதன் மூலம் நிர்வாகச் செயல்பாடு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்!

ரூ.53,000 கோடி திரளும்!

செபியும் தன் பங்குக்கு பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் அந்த நிறுவனங்களை வளர்ச்சி காணவைக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு மூலதனம் 10 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தனியார் துறைக்கு இணையாக அரசு நிறுவனங்களிலும் பொதுமக்களின் பங்கு மூலதனத்த 25 சதவிகிதமாக உயர்த்துமாறு மத்திய நிதி அமைச்சகத்துக்கு செபி ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.

பல பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு மூலதனம் 25 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. கோல் இந்தியா, என்.ஹெச்.பி.சி., என்.எம்.டி.சி., எஸ்.ஜே.வி.என், ஹிந்துஸ்தான் காப்பர், ஹெச்.எம்.டி., நேஷனல் ஃபெர்ட்டிலைஸர்ஸ், என்.எல்.சி., எஸ்.டி.சி., ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிறுவனங்களில் மத்திய அரசு தனது பங்கு மூலதனத்தை அடுத்துவரும் 3 ஆண்டுகளில் 75 சதவிகிதமாக அல்லது அதற்கும் கீழாக குறைக்க வேண்டும் என்கிற ஆலோசனையை செபி முன்வைத்துள்ளது. செபியின் இந்த ஆலோசனை ஏற்கப்பட்டால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.53,000 கோடி கிடைக்கும்.

பொதுத்துறை நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு இந்தப் பணம் உதவும்.  

பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்!

பங்குச் சந்தை முதலீடு குறித்து பல தரப்பிலும் பாசிட்டிவ் சென்டிமென்ட் நிலவுவதால், பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு அமோக ஆதரவு கிடைக்கும். இதன்மூலம் நிறுவனங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

பொருளாதார மந்தநிலையால் வங்கிகளின் வாராக்கடன் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. நிகர வாராக்கடன், அதிக வட்டி போன்றவற்றால் வளர்ச்சி குறைந்து போயிருந்த பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கி இருக்கிறது. இதற்கு முதலில் வங்கிகளின் வாராக்கடனை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் வரும் மத்திய பட்ஜெட்டில் வங்கிகளின் வாராக்கடனை குறைக்கும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளின் செலவைக் குறைக்கும் விதமாக சிறிய பொதுத்துறை வங்கிகளைப் பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அனைத்து பெரிய வங்கிகளின் சி.இ.ஓ.களிடம் கருத்துக் கேட்கப்பட்டிருக்கிறது.

தவிர, வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்கும் நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த ஆர்பிஐ-ன் நிதிக்கொள்கை கூட்டத்தில் எஸ்எல்ஆர்-ஐ 0.5 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் மூலம் வங்கிகள் கூடுதலாக 40,000 கோடி ரூபாய் கடன் வழங்க முடியும். இதன்மூலம் அதிகக் கடன், தொழில் துறைக்குக் கிடைக்கும்.

பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்!

இனி, பொதுத்துறை பங்குகள் மீதான முதலீடு எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

இந்தியாவில் ஏறக்குறைய 70 பொதுத்துறை நிறுவனங்கள் இருக் கின்றன. இதில் சுமார் 30 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று மாத காலத்தில் பல பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்!

மும்பையைச் சேர்ந்த ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் ஜி.சொக்கலிங்கம், ''இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறை பங்குகள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இப்போதைய நிலையில், பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியால் அந்தத் துறை நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில், அனைத்து பொதுத்துறை நிறுவனப் பங்குகளும் முதலீட்டுக்கு ஏற்றதா எனில், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதும் நிகர லாப இழப்பில் இருக்கும் நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. அடிப்படையில் வலுவான மற்றும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இந்தத் துறை நிறுவனங்களின் பங்குகள்தான் முதலீட்டுக்கு ஏற்றவையாக இருக்கின்றன'' என்றவர், அதுபோன்ற பங்குகளைக் குறிப்பிட்டார்.

பால்மர் லாறி கோ!

கடன் இல்லா நிறுவனமான இதன் ரொக்க கையிருப்பு ரூ.340 கோடி. 2013-14-ம் ஆண்டுக்கான இதன் பி.இ 8.4-ஆகவும் இபிஎஸ் ரூ.55-ஆகவும் உள்ளது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இந்த நிறுவனத்துக்கு நாடு முழுக்க 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல். 2015-16-ல் பங்கு ஒன்றின் இபிஎஸ் ரூ.60-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்தப் பங்கு மல்டி-பேக்கர் பங்காக மாற வாய்ப்பிருக்கிறது.

கெயில்!

இந்தியாவின் எரிபொருள் மற்றும் உரத் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு உள்நாட்டில் காஸ் இல்லை. எனவே, அதனைப் பெருமளவில் இறக்குமதி செய்து ஈடுகட்டி வருகிறோம். இந்த நிறுவனம் விரிவாக்கத்தில் இருப்பது மற்றும் ஆயில் மானியம் குறைப்பால் இதன் லாபம் அதிகரிப்பு போன்றவை இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கின்றன.

பிஇஎல்!

இந்த நிறுவனம், கடன் இல்லாத நிறுவனம். அதிக ரொக்க இருப்பைக் கொண்டுள்ளது. 2013-14-ல் இதன் பங்குகள் 15 பி.இ. விகிதத்தில் வர்த்தகமானது. இதன் வசம் இருக்கும் ரொக்க இருப்புத் தொகை ரூ.4,500 கோடி. இது அதன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவத் துறையில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ.) அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், ராணுவத்துக்கு அதிகப் பொருட்களை சப்ளை செய்யும் பிஇஎல் நிறுவனத்தின் லாபம் கணிசமாக அதிகரிக்கும். அப்போது பங்குகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரும் எனலாம்.

பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்!

பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க்!

பொதுத்துறை வங்கியான இது நான்கு ஆண்டுகளுக்குமுன், ஐபிஓவில் பங்கு ஒன்றை ரூ.110-க்கு விற்றது. அதன் விலை இப்போது அதிலிருந்து 35% இறங்கி காணப்படுகிறது. நிகர வாராக்கடனை சரிகட்டிய பிறகான பங்கின் விலை, புத்தக மதிப்பில் பாதியாக இருக்கிறது. இதன் மொத்த வணிகத்தில் 1 சதவிகித அளவுக்குதான் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் இருக்கிறது.

அரசு சிறிய வங்கிகளை இணைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல். அப்போது பங்கு ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ரூ.110 ரூபாய் கிடைக்கும். இது 50 சதவிகித வருமானம் ஆகும்.

மொயில்!

இந்த நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்குமுன், ஐபிஓவில் பங்கு ஒன்றை ரூ.375-க்கு விற்றது. அதன் விலை இப்போது அதிலிருந்து 12% இறங்கி உள்ளது. கடன் இல்லா நிறுவனமான இதன் கைவசம் ரூ.2,792 கோடி ரூபாய் ரொக்க கையிருப்பு இருக்கிறது. இது அதன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் ஏறக்குறைய 50% ஆகும்.

இந்த நிறுவனம் புதிதாக 540 ஹெக்டேர் மேங்கனீஸ் தாது சுரங்கத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டுகளில் இதன் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்துள்ள பெரும்பாலான முதலீட்டாளர்கள் இழப்பில் இருக்கிறார்கள். அதனை ஈடுகட்ட பங்குகளைத் திரும்ப வாங்குதல் (பை-பேக்), ஸ்பெஷல் டிவிடெண்ட் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். ''நரேந்திர மோடி முதல்வராக இருந்த குஜராத்தில் அரசுத் துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அங்கு நிறுவனங்களின் செயல்பாட்டில் அரசு தலையீடு குறைவு. அதேபோல், மத்தியிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் நிச்சயம் லாபகரமாக இயங்கும்.

மின் உற்பத்தி, சுரங்கப் பணிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது குறைவாக இருக்கின்றன. இவை சரி செய்யப்படும்போது, முதலில் வளர்ச்சி காண்பது பொதுத்துறை நிறுவனங்களாகவே இருக்கும்'' என்றவர், முதலீட்டுக்கு ஏற்ற பொதுத்துறை பங்குகளைப் பரிந்துரை செய்தார்.

செயில்!

ஒடிஷா மாநில அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததையடுத்து, அங்கு இந்த நிறுவனம் இரும்புத் தாது சுரங்கங்களில் மீண்டும் வேலையை ஆரம்பிக்க இருக்கிறது. உள்கட்டமைப்புத் துறைக்குச் செலவிடுவது குறைந்ததால், செயில் அதன் முழுஉற்பத்தித் திறனில் இயங்க முடியாமல் இருந்தது.

புதிய அரசு உள்கட்டமைப்பு துறைக்கு அதிகம் செலவு செய்யும்போது, இந்த நிறுவனத்தின் உற்பத்தி தானாகவே உயரும்! தவிர, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பட ஆரம்பித்திருக்கிறது. அந்த நாடு அதிக ஸ்டீலை பயன்படுத்தி வருகிறது. இது இந்த நிறுவனத்துக்கு லாபகரமாக இருக்கிறது.

பி.ஹெச்.இ.எல்.!

பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்!

மின்கருவிகள் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 68 சதவிகிதத்திலிருந்து 72 சதவிகிதமாக   உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தில் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 90,000 மெகாவாட்-ஆக இருக்கிறது. முதலீட்டு நிதிப் பற்றாக்குறை, திட்ட செயலாக்க தாமதம் போன்றவற்றால் கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக இருந்தது. புதிய அரசில் இந்தப் பிரச்னைகள் தீர்ந்து, அடுத்த 6-8 மாதங்களில் சரியான பாதைக்கு வந்துவிடும். ரயில்வே துறை நவீனமயமாக்கம் மற்றும் விரிவாக்கத்தின் மூலம் இந்த நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும்.

ஆர்.இ.சி.!

மத்தியில் ஸ்திரமான ஆட்சி அமைந்திருப்பதால், உள்கட்டமைப்புத் திட்டங்கள் வேகமெடுக்க உள்ளன. இதனால் அதிகம் பயன்பெறப்போவது, மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அதிக அளவில் நிதியுதவி அளித்துவரும் இந்த நிறுவனம்தான். மேலும், மின் உற்பத்தித் துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களைக் கொண்டுவர இருக்கிறது. இதுவும் இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக அமையும்.

என்.டி.பி.சி.!

இதன் வணிகம் அடிப்படையில் வலிமையானதாக இருக்கிறது. இந்த நிறுவனம் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. எரிபொருள் கசிவிலும் கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.

நெய்வேலி லிக்னைட்!

தமிழகத்தின் நெய்வேலியைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு மாநில அரசின் ஆதரவு நன்றாக இருப்பதால், நிலம் கையகப்படுத்துதல், சுரங்க சீரமைப்புப் பணிகள் இதற்குப் பிரச்னையாக இல்லை. இதன் மின் உற்பத்தித் திறன் 2025-ம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது.

அடுத்து, சென்னையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

''பிரதமர் நரேந்திர மோடி, நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் போது, பொதுத்துறை நிறுவனங்கள் அதிகப் பயன் பெறும். குறிப்பாக, எண்ணெய் துறை நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள், முன்னணி பொதுத்துறை வங்கிகள் நல்ல வளர்ச்சி காணும். இதற்கு எப்படியும் குறைந்தது இரண்டு வருடங்களாகும். அந்த வகையில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை எஸ்ஐபி முறையில் தொடர்ந்து வாங்கிவருவது நீண்ட காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்'' என்றவர், முதலீடு செய்யவேண்டிய பங்குகளைக் குறிப்பிட்டார்.

பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்!

கன்டெய்னர் கார்ப்பரேஷன்!

சரக்கு பெட்டிகளைத் தயாரித்து அளிக்கிறது இந்த நிறுவனம். போக்குவரத்து சார்ந்த உள்கட்டமைப்புப் பணிகள், ரயில்வே நவீனமயமாக்கம் மற்றும் விரிவாக்கத் தால் இந்த நிறுவனம் நல்ல லாபம் அடையும்.

ஐ.டி.எஃப்.சி.!

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது இந்த நிறுவனம். கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த நிறுவனத்தில் எஃப்.ஐ.ஐ.களின் பங்கு மூலதனம் 52.61 சதவிகிதமாக உள்ளது. இதை 50 சதவிகிதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பங்குகளை நிபுணர்கள் எடுத்துச் சொல்லிவிட்டார் கள். என்றாலும், பரிந்துரை செய்யப்பட்ட இந்தப் பங்குகளில் மொத்தமாக முதலீடு செய்யக்கூடாது. எஸ்ஐபி முறை அல்லது சந்தை இறக்கங்களில் வாங்கிச் சேர்ப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு