Published:Updated:

ஷேர்லக் - சந்தையை சறுக்கவைத்த ஈராக்!

ஷேர்லக் - சந்தையை சறுக்கவைத்த ஈராக்!

ஷேர்லக் - சந்தையை சறுக்கவைத்த ஈராக்!

ஷேர்லக் - சந்தையை சறுக்கவைத்த ஈராக்!

Published:Updated:

வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். வந்தவரை உட்காரச் சொல்லி, ''இத்தனை நாளும் மேல்நோக்கியே இருந்த சந்தை இன்று மட்டும் சென்செக்ஸ் 348 புள்ளிகள் இறங்க என்ன காரணம்?'' என்கிற கேள்வியை அக்கறையுடன் கேட்டோம்.

''ஈராக்கில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மதியத்துக்குமேல் ஐரோப்பிய சந்தைகள் சடசடவென கீழே இறங்க, இந்திய சந்தைகளும் சரிந்தன. இத்தனைக்கும் வியாழக்கிழமை அன்று வெளியான பணவீக்கம் குறித்த டேட்டாவும் ஃபேக்டரி அவுட்புட் டேட்டாவும் நன்றாகவே இருந்தது. அடுத்த வாரம் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பது, வாரத் தொடக்கத்தில் சந்தையின் மூவ்மென்ட்களை வைத்தே சொல்ல முடியும். வாரத்தின் தொடக்கத்தில் சந்தை கணிசமாக இறங்கினால், ஒரு இறக்கத்தைத் தவிர்க்க முடியாமல் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி இல்லாமல், சந்தை உயரும்பட்சத்தில், மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கிறது. இறங்கினால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் களுக்கு ஒரு நல்ல வாய்ப்புதானே?'' என்றவருக்கு, சூடான ஃபில்டர் காபி தந்தோம்.

''இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கிறதே?'' என்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''67 வயதான அதன் நிறுவனர்  நாராயணமூர்த்தி, அவரது மகன் ரோஹன் உள்ளிட்டவர்கள் நிர்வாகத் திலிருந்து விலகியிருக்கிறார்கள். புதிய சிஇஓ-ஆக விஷால் சிக்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் பங்கை இதுவரைக்கும் எந்த  தரகு நிறுவனமும் வெளிப்படையாக பரிந்துரைக்கவில்லை. இதற்கிடையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும்விதமாக 200 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை ஓப்பன் மார்க்கெட்டில் வாங்க இன்ஃபோசிஸ் நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக தகவல்'' என்றார் காபியைக் குடித்தபடி.

ஷேர்லக் - சந்தையை சறுக்கவைத்த ஈராக்!

''இன்று திடீரென ஆயில் பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி இருக்கிறதே, என்ன காரணம்?'' என்று விசாரித்தோம்.

''கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸ் (Brent futures) விலை கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் 114 டாலராக உயர்ந்தது. ஈராக்கில் தீவிரவாதிகள் முக்கிய நகரத்தைக் கைப்பற்றியதால், அவர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்; இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்கிற அச்சத்தில் விலை ஏறியிருக்கிறது. இதன்காரணமாக ஆயில் விற்பனை நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்க நேரலாம் என்பதால், பிபிசிஎல் (7%), ஹெச்பிசிஎல் (9%), ஐஓசி (8%) பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமானது. அதேநேரத்தில் ஆயில் உற்பத்தி செய்யும் கெய்ர்ன் இந்தியா பங்கின் விலை 2% அதிகரித்துள்ளது'' என்றார்.

''எஃப்ஐஐகள் இந்திய சந்தையில் பணத்தை வாரி கொட்டி வருகிறார்களே?'' என்றோம் மகிழ்ச்சியாக.

''கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடப்பு 2014-ம் ஆண்டு வரையில் வளர்ந்துவரும் சந்தைகளில் எஃப்ஐஐகள் செய்த முதலீட்டில் 50 சதவிகிதத்துக்கு மேல் இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்து தைவான் (14.6%), தென் கொரியாவில் (13.9%) அதிகம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால்தான். நடப்பு நிதியாண்டில் இதுவரை எஃப்ஐஐகள் 900 கோடி டாலரை இந்திய சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள்'' என நம் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கிற மாதிரி புள்ளிவிவரங்களைத் தந்தார்.

''மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு அண்மையில் வங்கிகள் பக்கம் திரும்பி இருக்கிறதே, என்ன காரணம்?'' என்று வினவினோம்.

''யெஸ் பேங்க், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஃபெடரல் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கார்ப்பரேஷன் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கணிசமான முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப இந்தப் பங்குகளின் விலை கடந்த ஆறு மாதத்தில் சுமார் 40% அதிகரித்துள்ளது.

இன்னொரு வங்கிச் செய்தி. ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, அதன் பங்கின் முக மதிப்பை ரூ.10-லிருந்து ரூ.1-ஆகப் பிரிக்கலாமா என்று யோசித்து வருகிறது. இதனால் இந்தப் பங்கின் விலை விகிதாசார அடிப்படையில் குறையும். இப்படி செய்தால், இந்தப் பங்கில்  சிறுமுதலீட்டாளர்களின் முதலீடு அதிகரிக்கலாம். தற்போதைய நிலையில், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், யெஸ் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் பங்கின் விலை கவர்ச்சிகரமாக இருப்பதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள்'' என்று விளக்கம் தந்தார்.    

ஷேர்லக் - சந்தையை சறுக்கவைத்த ஈராக்!

''சந்தை ஏறுமுகத்தில் இருப்பதால் பல நிறுவனப் பங்குகள் வேக வேகமாக கைமாறி வருகிறதே?'' என்று கேட்டோம்.

''டெக் மஹிந்திரா பங்கின் விலை இனி வேகமாக ஏறும் என்கிற நம்பிக்கையில் அதன் சிஇஓ வினீத் நாயர் ஏறக்குறைய 7 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார். முன்னணி பங்கு முதலீட்டாளர், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, எடெல்வெய்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனப் பங்குகளை ரூ.55 கோடி மதிப்புக்கு வாங்கியுள்ளார்'' என்றார்.

''டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஓரளவுக்கு நிலை பெற்றிருக்கிறதே?'' என்றோம், கொஞ்சம் ஆச்சர்யத்துடன்.

''ரிசர்வ் பேங்க்தான் அதற்கு காரணம். கடந்த மே மாதத்தில் மட்டும் 587 கோடி டாலரை பொதுச் சந்தையிலிருந்து வாங்கி இருக்கிறது. ரூபாயின் மதிப்பை உயர்த்த  தொடர்ந்து ஆர்பிஐ டாலர் வாங்கக்கூடும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்'' என்றவர் ஷேர் டிப்ஸ் தந்துவிட்டு புறப்பட்டார்.

சவுத் இந்தியன் பேங்க்,
அமரராஜா பேட்டரீஸ்.

கடைசி செய்தி: மோடி அரசாங்கத்தின் வருகிற பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு படிப்படியாக

ரூ.5 லட்சம் வரையும், 80சி-ல் வரி விலக்கு 1.5 லட்சம் வரையும்  உயர்த்தப்படலாம் என தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism