ஸ்பெஷல் 1
Published:Updated:

பேப்பர் கப் பிசினஸ்... சில விளக்கங்கள்!

ஃபாலோ-அப் வே.கிருஷ்ணவேணி

 'மாதம் 1,40,000 வருமானம்... பிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்!' என்ற தலைப்பில், திருச்சியைச் சேர்ந்த ஆண்டாள் பற்றி 6.5.14 தேதியிட்ட இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, நம் அலுவலகத்தைத் தொடர்புகொண்ட ஈரோடு வாசகர் பாலசுப்பிரமணியம் ''பேப்பர் கப் பிசினஸில் நிச்சயம் இவ்வளவு வருமானத்தைப் பெற முடியாது. ஈரோட்டுல கிட்டத்தட்ட 60 மெஷின்கள் போட்டு தொழில் பண்ணிட்டிருந்தாங்க. அதுல நானும் ஒருத்தன். 24 மணி நேரம் மெஷின் ஓடினாலும் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பாதிக்க முடியாது. தொழில்ல நஷ்டமானதால, ஜவுளிக்கடையில வேலை பார்க்கிறேன்'' என்று சொன்னார்.

இதை அப்படியே, ஆண்டாள் முன்பாக வைத்தபோது, ''பேப்பர் கப், பேப்பர் பிளேட், பேப்பர் லேமினேஷன், அதுக்கான மெஷினரீஸ் விற்பனைனு எல்லாத்தையும் சேர்த்துதான் 1,40,000 ரூபாய்னு அதுல சொல்லியிருந்தேன். அவர் முழுசா படிச்சிருந்தா இது புரிஞ்சிருக்கும். ஈரோட்ல மட்டுமே அறுபது பேப்பர் கப் மெஷின் இருந்ததா சொல்லியிருக்கார். அந்தந்த ஊரோட தேவையைப் பொறுத்து தொழிலை ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும். ஒரே இடத்துல இவ்வளவு பேர் மெஷின் போட்டு தொழில் பண்ணிட்டு இருந்தா, இந்த பிசினஸ் மட்டுமில்ல, எந்தத் தொழிலா இருந்தாலும் நஷ்டம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்தான்.

பேப்பர் கப் பிசினஸ்... சில விளக்கங்கள்!

பேப்பர் கப் பிசினஸ்ல ஹோல்சேல் மார்க்கெட்டிங்கைதான் எல்லாரும் குறிவைப்பாங்க. ரீ-டெயில்ங்கற சில்லறை வியாபாரத்துலயும் இறங்கி, கடைகள், கல்லூரிகள், பள்ளிகள்னு விற்பனை செய்தாதான், ஆரம்ப அடிகள் நிதானமா இருக்கும்.

ஒரு டன் ஓட்டி முடிச்சுட்டு, சரக்கு தேங்காம இருக்க, விலை குறைவா இருந்தாலும் ஹோல்சேல்ல வித்துடலாம்னு நினைக்கக் கூடாது. அடுத்த முறை அவங்க விலையை இன்னும் குறைச்சுக் கேட்பாங்க. அதனால ஆரம்பத்துலேயே பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயிச்சுடணும்.

இதை எல்லாம் கவனத்துல வெச்சு, ஒரு டன் ஓட்டினா, மாசத்துக்கு 13 நாட்கள் குறையாம ஓட்ட முடியும். மாசம் 30,000 ரூபாய் பேப்பர் கப்புல மட்டுமே வருமானம் பார்க்க முடியும். இப்படி ஜெயிச்சவதான் நானும்'' என்று சொன்னார் ஆண்டாள்.