Published:Updated:

ஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 8

ஓய்வுக்கால நிதி திட்டமிடல்! ஸ்ரீதரன் தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

வேலைக்குச் செல்பவர் நிச்சயம் என்றாவது ஒருநாள் ஓய்வுபெற்றே ஆகவேண்டும். இதற்குத் தனியார் வேலை, அரசு வேலை என்கிற பாரபட்சம் எல்லாம் கிடையாது. ஓய்வு பெற்றபிறகு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பிறரை சார்ந்திருக்காமல் அந்தநேரத்திலும் நம்முடைய சம்பாத்தியத்தில் வாழ்வது எப்படி என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஓய்வுக்காலத் தேவையும் ஒன்று. இந்தத் தேவைக்காகச் சம்பாதிக்கும் காலத்தில் முறையாகத் திட்டமிடுவதன் மூலம் ஓய்வுக்காலத்தைப் பணப் பற்றாக்குறை இல்லாமலும், பிள்ளைகளைச் சிரமப்படுத்தாமலும் நிம்மதியாகக் கழிக்கலாம்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது அவர்களின் ஓய்வுக்காலம் குறித்த கவலை பெரிதாக இல்லாமலே இருந்தது. காரணம், பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு அவர்களைப் பார்த்துக்கொள்வது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை. குடும்பத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை என்று வரும்போது, தனிக் குடும்பமாகப் பிரிந்து வாழும் நிலையே பெரிய, சிறிய நகரங்களில் உருவாகி வருகிறது. இதனால் ஓய்வுக்காலத்தில் பெற்றோர்கள் தனித்துவிடப்படுகிறார்கள்.

ஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 8

ஆனால், அவர்கள் ஓய்வுக்காலத்துக்காக ஏற்கெனவே நிதியைத் திட்டமிட்டு சேமித்து வைத்திருந்தால், பிள்ளைகள் கவனிக்காமல் போனாலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம். இதுவரை ஓய்வுக்காலத்துக்காக எந்தத் திட்டமிடலையும் செய்யாதவர்கள் இனி எப்படி திட்டமிடலாம் என்று பார்ப்போம்.

ஓய்வுக்கால நிதி!

ரமேஷ் என்பவருக்கு இப்போது வயது 40. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது 60-வது வயதில் ஓய்வுபெற விரும்புகிறார்.

இவரது தற்போதைய மாத செலவுகள் 35,000 ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது. தான் ஓய்வுபெற்ற பின்னும் ஏறக்குறைய இதே செலவுகளுடன் தன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

இவர் இன்னும் 20 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்பதால், அந்த காலகட்டத்தில் ஓய்வுக்காலத் தேவைக்கான நிதியை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். 6 சதவிகித பணவீக்க அடிப்படையில் தற்போதைய இவரது 35,000 ரூபாய் செலவானது, இன்னும் 20 ஆண்டுகள் கழித்து மாதம் 1.24 லட்சம் ரூபாயாக உயர்ந்து இருக்கும்.

ஆக, மாதம் 1.24 லட்சம் ரூபாய் ரமேஷ§க்கு வருமானம் கிடைக்க வேண்டும் எனில், ஏறக்குறைய 3.30 கோடி ரூபாய் இவரது வங்கி சேமிப்பில் இருக்க வேண்டும்.

பிஎஃப் மற்றும் பணிக்கொடை!

ஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 8

தற்போது இவரது கையில் ஏற்கெனவே சேர்த்துவைத்திருக்கும் முதலீடு 20 லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த முதலீட்டுக்கு தொடர்ந்து 20 ஆண்டுகள் 12% வருமானம் கிடைத்தால், 1.92 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதனுடன் அவர் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் பணிக்கொடை மற்றும், பிஎஃப் 30 லட்சத்தையும் சேர்த்தால், ஓய்வுக்காலத்துக்கான தொகையில் 2.22 கோடி ரூபாய் கிடைக்கும்.

மீதி தேவைப்படும் 1.08 கோடி ரூபாய்க்கு மாதம் 11,000 ரூபாயை ஓய்வுக்காலத்துக்காக 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதுபோல ஒவ்வொருவரும் தங்கள் ஓய்வுக்காலத் தேவை எவ்வளவு இருக்கும் என்பதை அறிந்து, அதற்கான நிதித் திட்டமிடலை இன்றே தொடங்குவது நல்லது.

இந்த நிதித் திட்டமிடலை நாமே செய்துகொண்டு, முதலீடுகளைத் தொடங்க முடியும். என்றாலும், இதில் நிபுணத்துவம் கொண்ட நிதி ஆலோசகர்களைக் கலந்தாலோசித்து அவர்களின் வழிகாட்டுதலோடு செய்வது நல்லது.

நிதி ஆலோசகரின் முக்கியத்துவம்!

உங்களுக்கு காய்ச்சல் என்றால் மருத்துவரை பார்ப்பதுபோல, சட்ட சிக்கல் என்றால் வக்கீலை பார்ப்பதுபோல, உங்கள் குடும்பத்தின் நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல நிதி ஆலோசகரை நிச்சயம் அணுகத்தான் வேண்டும். நிதித் திட்டமிடுபவரின் வேலை, உங்கள் எதிர்காலத் தேவைகளைக் கண்டறிந்து, தற்போதைய வரவு செலவு மற்றும் கடன் விவரங்களை ஆராய்ந்து அதன்படி நிதித் திட்டத்தை உங்களுக்கு வழங்குவதுதான்.

மருத்துவர் மற்றும் வக்கீல்களிடம் நம் பிரச்னைகளை எதையும் மறைக்காமல் தெளிவான விவரங்களுடன் எடுத்துச் சொல்கிற மாதிரி, நிதி ஆலோசகரிடமும் குடும்பத்தின் நிதி சார்ந்த விவரங்களை வழங்க நாம் தயாராக இருக்க வேண்டும். முக்கியமாக, ஏதோ ஒரு காலத்தில் நாம் வாங்கிய கடன்களை மறைக்காமல் எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் பட்ட கடன்களை சொன்னால், நம்மை தப்பாக நினைத்துவிடுவார்களோ என்று மட்டும் நினைக்கவே கூடாது.  

ஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 8

ஒரு நிதி ஆலோசகரைப் பார்க்கும் முன், குடும்பத்தின் நிதி விவரங்களை எடுத்துச் செல்வது அவசியம். தவிர, அந்த  நிதி ஆலோசகரை அணுகும்முன், அவர் குறித்த விவரங்களையும் நன்கு தெரிந்துவைத்துக் கொண்டு அணுகுவது முக்கியம். தாமாகவே முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யாமல் அவரது உதவியுடன் சரியான முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது உத்தமம். திட்டங்களைத் தேர்வு செய்யும்போது, அதில் உங்கள் பங்கு இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிதித் திட்டமிடலை பெற்றபின், அதை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இடையிடையே வரும் பொருளாதாரச் சிக்கல்களினாலும், அவசர தேவைகளினாலும் நிதித் திட்டமிடலின் படி சொல்லப்பட்டிருக்கும் முதலீட்டை நிறுத்திவிடக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நிதித் திட்டமிடலின்படி ஆரம்பித்த முதலீடு களை ஆண்டுக்கு ஒருமுறையாவது மறுபரிசீலனை செய்வது கட்டாயம்.

ஒரு தனிமனிதனுக்கு நிதித் திட்டமிடல் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதை இந்தத் தொடர் மூலம் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இனி சம்பாதிக்கும் வருமானத்தை முதலீடு செய்து தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் கடமை உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. வாழ்த்துக்கள்!

 (நிறைவு பெற்றது)
படங்கள்:  அ.ஜெஃப்ரி தேவ்

சேமிப்பு கைகொடுத்தது!

சுரேஷ், தேனி.

''நான் எலெக்ட்ரிஷியனாக  தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். ஒரு மாசத்துக்கு சுமார் 10,000 - 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில்  வாடகை 2,500 ரூபாய், ரெண்டு குழந்தைகளோட படிப்புச் செலவுக்கு 1000 ரூபாய், வீட்டுச் சாமான்கள் மற்றும் இதர செலவுகளுக்கு 4,000 ரூபாய் வரைக்கும் செலவு செய்வேன்.

ஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 8

மாத அவசரத் தேவைக்கு என்று 1,500 ரூபாயை என் மனைவியிடம் கொடுத்துவிடுவேன். வங்கி சேமிப்பாக மாதம் 1,500 ரூபாய் சேமித்து வந்தேன்.

கடந்த இரண்டு வருடங்களாக சேமித்த தொகை அவசரத் தேவைக்கு கைகொடுத்தது. தற்போது இன்ஷூரன்ஸின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதால், இந்தச் சேமிப்புடன் அதற்காகவும் மாதம் அதிகபட்சமாக ரூ.500-ஐ ஒதுக்கலாம் என்று இருக்கிறேன்'' என்றார்.

நாணயம் பரிந்துரை: இவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே நல்லது. இதற்கான ஆலோசனையை இவர் ஒரு நிதி ஆலோசகரிடம் கேட்டுப் பெறலாம்!

செய்தி, படம்: வீ.சக்தி அருணகிரி.