Published:Updated:

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

தேவையறிந்து வாங்கினால் நஷ்டம் இல்லை! இரா.ரூபாவதி படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தே.தீட்ஷித்.

 ஹோம் பட்ஜெட்

ஒவ்வொரு வீட்டின் பரணிலும் பயன்படுத்தாத பொருட்கள் என பத்து பொருட்களாவது இருக்கும்.  வெஜிடபிள் கட்டர், சப்பாத்தி மேக்கர், எலெக்ட்ரிக்கல் சப்பாத்தி மேக்கர், ஜூஸர், ஆனியன் கட்டர், ஆப்பிள் கட்டர், பாப்கார்ன் மேக்கர், மடித்து வைக்கும் வகையில் இருக்கும் டேபிள் என இந்தப் பட்டியல் நீள்கிறது. கணவன், மனைவி வேலைக்குப் போகும் வீடுகளில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கிறது.  

இந்தப் பொருட்களை வாங்கினால் நமது தினசரி வேலையில் பாதி குறைந்துவிடும் என நினைத்து வாங்கியிருப்பார்கள். ஆனால், இந்தப் பொருட்களை வாங்கியபின், நம் தினசரி வாழ்க்கையில் இந்தப் பொருட்களால் பெரிய பிரயோஜனம் இல்லை என்பது தெரியும். அதாவது, கத்தியைப் பயன்படுத்தி காய்கறிகள் வெட்டும்போது கத்தியை மட்டும் கழுவி வைத்தால்போதும். ஆனால்,  காய்கறி வெட்டும் மெஷினில் அதே வேலையைச் செய்யும்போது, அந்த மெஷினை சுத்தமாகக் கழுவி துடைத்து வைக்கவேண்டும். அப்போதுதான் மெஷினில் உள்ள பிளேடுகள் துருப்பிடிக்காமல் இருக்கும். நீண்ட நேரம் பிடிக்கும் இந்த வேலையைச் செய்ய சோம்பல்பட்டு, பலரும் அந்த மெஷினையே பயன்படுத்தாமல் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்துவிடுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பயன்படாதப் பொருட்களை நாம் ஏன் வாங்குகிறோம், இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் அனிதா ஆர் பட்.

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

''பொருட்களை வாங்குவதில் பெண்கள் எப்போதுமே புத்திசாலிகள்தான். எந்தப் பொருள் புதிதாக சந்தையில் வந்திருக்கிறது, அதன் சிறப்பு என்ன, எந்தெந்த கடையில் என்ன விலையில் விற்கிறார்கள் என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்த்து வாங்குவதுதான் பெண்களின் வழக்கம்.

ஆனாலும், விளம்பரங்கள், கண்காட்சிகள் நிறைந்துவிட்ட இன்றைய உலகில் சில பொருட்களை உணர்ச்சிவசப்பட்டு வாங்கும் தவறையும் சில பெண்கள் செய்துவிடுகிறார்கள். அதாவது, ஒரு படுக்கையை பத்து வகைகளில் பயன்படுத்தலாம். இதனால் முதுகுவலி வராது. வெளியூர்களுக்குச் சுலபமாக எடுத்துச் செல்லாம் என அடிக்கடி வரும் விளம்பரத்தைப் பார்க்கும்போது, வாங்கித்தான் பார்ப்போமே என வாங்கிவிடுகிறார்கள்.  

இந்தப் பொருட்களின் விலை குறைவாக இருப்பது, அதிகம் யோசிக்காமல் வாங்க ஒரு காரணமாகி விடுகிறது. உதாரணமாக, ஆனியன் கட்டர், சப்பாத்தி மேக்கர் போன்ற பொருட்களின் விலை ரூ.100-400-க்குள்தான்.  

பெண்களின் பிரச்னையை மையமாக வைத்து இந்த விளம்பரங்கள் எடுக்கப்படு வதால், பெண்கள் எளிதில் இந்த விளம்பரங்களை ஏற்றுக் கொண்டுவிடுகிறார்கள். அதாவது, உடல் எடையைக் குறைத்து,

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

அழகாக வைத்துக்கொள்ளும் இயந்திரம், முதுகுவலியை எளிதாகப் போக்கும் இயந்திரம் என நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த விளம்பரங்கள் உள்ளன.  இதுபோன்ற பிரச்னைகளை மருத்துவ ரீதியாக அணுகும்போது அதிகச் செலவும், நேரமும் ஆவதால், இதுபோன்ற விளம்பரங்களை எளிய உடனடித் தீர்வாக பெண்கள் நினைக்கின்றனர். இந்தப் பொருட்கள் இஎம்ஐ-யிலும் கிடைப்பதால், அதிகம் யோசிக்காமலே பலரும் வாங்கிவிடுகிறார்கள்.

இந்தத் தவறை ஒருமுறை செய்யலாம். இருமுறை செய்யலாம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இதேமாதிரி செய்யக்கூடாது.  இப்படி தொடர்ந்து செய்தால், தேவை இல்லாத பொருட்கள் நம் வீட்டில் குவியும். தேவைப்படும் பொருளை வாங்கமுடியாத நிலை உருவாகும்.

இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. நாம் வாங்கும் பொருட்கள் நமக்கு அவசியம் தேவையா என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். அடுத்ததாக, நாம் எந்தவிதமான சூழலில் வாழ்கிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்.  உதாரணமாக, எப்போதாவது ஒருமுறை சப்பாத்தி தயாரிக்கும் வீடுகளில் சப்பாத்தி மேக்கர் என்பது தேவையா என்பதை யோசிக்க வேண்டும். காய்கறி நறுக்க வீட்டில் யாராவது இருந்தால், இந்தப் பொருளை வாங்கவே தேவை இல்லை.

எந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும், அதை ஏற்கெனவே வாங்கிய ஓரிருவரிடம் அந்தப் பொருளின் பயன்பாடு பற்றி முழுமையாக கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம். எந்த பொருளையும், விளம்பரத்தில் பார்த்தேன், நன்றாக இருந்தது. அடுத்த வீட்டில் இருக்கிறது; எனவே, நானும் வாங்க நினைத்தேன் என்கிற ரீதியில் நினைத்து, வாங்கக் கூடாது.  

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

வீட்டுப் பயன்பாட்டுக்கு இந்தப் பொருட்கள் கட்டாயம் தேவை என நீங்கள் நினைத்தால்,  பிராண்டட் பொருட்களாக வாங்குவது நல்லது. இது கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். வாரன்டியும் இருக்கும்'' என்று முடித்தார் அனிதா பட்.

ஒரு வருடத்துக்கு சுமார் ஆயிரம் ரூபாய்க்காவது இதுபோன்ற பொருட்களை நாம் வாங்கிவிடுகிறோம். இதனால் நம் பணம்தான் வீணாகிறது. உணர்ச்சி வசப்படாமல், தேவையின் அடிப்படையில் இனி பொருட்களை வாங்கினால், வீண் என்கிற பேச்சுக்கே இடமிருக்காது.

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

தேவைப்படாத பொருட்களை வாங்கி பணத்தை வீணடிப்பதைவிட, ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட், பிபிஎஃப், ஆர்.டி) செய்து, அதன் மூலம் 8 - 10% வருமானம் வரும் என வைத்துக்கொண்டால், சுமார் 76 ஆயிரம் ரூபாய் நமக்குக் கிடைத்துவிடும். இந்தப் பணத்தை உங்கள் எதிர்காலத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாமே!