Published:Updated:

ஷேர்லக் - இணையும் பிக் பிரதர்ஸ்!

ஷேர்லக் - இணையும் பிக் பிரதர்ஸ்!

''இன்று இரவு பெங்களூருக்குப் போகிறேன். எனவே, போனிலேயே பேசிவிடலாமா?'' என்று மதியமே போன் செய்து கேட்டார் ஷேர்லக். ''அதனால் என்ன, பேஷாக பேசிவிடலாம்'' என்று சொல்லிவிட்டு, இரவு எட்டு மணிக்கு அவருக்கு போன் செய்தோம். சொல்லவேண்டிய செய்திகள் பற்றி குறிப்பு எடுத்து வைத்திருந்ததால், கடகடவென பேசினார். அவர் சொன்ன செய்திகள்:

இணைந்த கைகள்!

சில ஆண்டுகளுக்குமுன் பிரிந்த அம்பானி சகோதரர்கள் மீண்டும் பிசினஸ் ரீதியாக ஒன்றுசேரப் போகிறார்கள். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் என்கிற பெயரில் முகேஷ் அம்பானியும்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்கிற பெயரில் அனில் அம்பானியும் டெலிகாம் சேவையை அளித்து வருகிறார்கள். இந்த நிறுவனங்கள் செலவைக் குறைக்க செல்போன் டவர்கள், ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டு, அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகத் தகவல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கு அடுத்தகட்டமாக, இந்த இரு சகோதரர்களும் இணைந்து செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவையை அளிக்கப்போகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்பட போவது பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள். இந்த பங்குகள் விலை வெள்ளிக்கிழமை மட்டும் 2-3% வீழ்ச்சி கண்டது. நீண்ட காலத்தில் அம்பானிகளின் டெலிகாம் பிசினஸ் இணைந்து ஒரே நிறுவனமாகக்கூட மாற வாய்ப்பு இருக்கிறது. அண்ணன் முகேஷ் அம்பானிதான் ரிலையன்ஸ் குழுமத்தில் டெலிகாம் வணிகத்தை ஆரம்பித்தார். அவரிடம்தான் இப்போது அதிக பணமும் இருக்கிறது. அந்தவகையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை முழுவதுமாகவே அவர் வாங்கும் வாய்ப்பும் இருக்கிறது.  

ஷேர்லக் - இணையும் பிக் பிரதர்ஸ்!

அனில் அம்பானி தலைமையிலான நிறுவனம்  அதிக கடனில் சிக்கித் தவிக்கிறது. அதனைக் குறைக்க, ரிலையன்ஸ் கேப்பிட்டல் அதன் 10% பங்குகளை ஜப்பான் நாட்டின் நிதிச் சேவை நிறுவனமான சுமிடோமோ மிட்சுய்க்கு

(Sumitomo Mitsui) விற்பனை செய்ய இருக்கிறது. இதன்மூலம் ரூ.2,000 கோடி கிடைக்கும்.  மேலும், நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,500 கோடியைத் திரட்ட இருக்கிறது. தவிர, பங்கு விற்பனையிலும் இறங்கி ரூ.6,000 கோடியைத் திரட்டுகிறது. இதில் 3,000 கோடி நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பது மூலம் திரட்டப்படுகிறது!    

இன்சைடர் டிரேடிங்கில் ரிலையன்ஸ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி நிறுவனம் மீதான இன்சைடர் டிரேடிங் குறித்த விசாரணை நடந்து வருகிறது. இந்தப் பிரச்னையில் செபி எந்த சமரசத்துக்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், இந்தப் பிரச்னை இப்போது பங்குச் சந்தை மேல்முறையீட்டு அமைப்பிடம் (SAT) வந்துள்ளது. இன்சைடர் டிரேடிங் மூலம் ரிலையன்ஸ் ரூ.513 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது. இந்தப் பிரச்னையில் நிறுவனம் ஈட்டிய லாபத்தைபோல மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். எனவே, அந்தவகையில் ரிலையன்ஸ் மீது ரூ.1,500 கோடி  அபராதம் விதிக்கப்படலாம், உஷார்!  

வங்கிகளின் வாராக்கடன்!

வங்கிகளின் வாராக்கடனைக் குறைக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்க  தொடங்கியிருக்கிறது.  பெரிய நிறுவனங்கள் கடன் வாங்கி நிறைவேற்றும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் செயல்பாட்டுக்கு வராத பட்சத்தில், அந்தக் கடனை மறுசீரமைப்பு செய்துகொள்ள வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுமதி வழங்கி இருக்கிறது. அதாவது, கடனை பத்து ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதை 15 ஆண்டுகளுக்கு மாற்றி அமைக்கும்போது நிறுவனங்களுக்கு குறைவான மாத தவணை செலுத்த வேண்டிவரும். அதை அவர்கள் சுலபமாகக் கட்டுவார்கள். இதனால் வங்கிகளுக்கும் வாராக்கடன் குறையும் என ஆர்பிஐ எதிர்பார்க்கிறது. ஆர்பிஐ-யின் இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால், தொழில் உலகமும் வரவேற்கவே செய்யும்.    

சின்ஹாவின் கோபம்!

ஷேர்லக் - இணையும் பிக் பிரதர்ஸ்!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மீது செபி தலைவர் யூ.கே.சின்ஹா கடும் கோபத்தில் இருக்கிறார். மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்பதே பலரிடம் நிதி திரட்டி நடத்தப்படுவது. ஒரு ஃபண்ட் திட்டத்தில் குறைந்தபட்சம்

20 முதலீட்டாளர்கள் இருக்க வேண்டும். எந்த ஒரு முதலீட்டாளரின் முதலீடும் 25 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால், பல பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இந்த விதி பின்பற்றப்படவில்லை. ஒரு ஃபண்டில் ஒரு முதலீட்டாளரே 98 சதவிகித முதலீடு செய்துள்ளதை செபி கண்டுபிடித்துள்ளது. இப்படி விதிமுறைகளை மீறிய நிறுவனங்களிடம் இருந்து விளக்கம் கேட்டு செபி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  

நிலக்கரியில் தனியார்மயம்!

நிலக்கரித் துறையின் செயல்பாடுகள் வேகப்படுத்தப்படும் என மத்திய பவர் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, கோல் இந்தியாவின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட இருக்கிறது. அந்தவகையில் அந்தப் பங்கை முதலீட்டாளர்கள் கவனித்து வைக்கலாம்.

எஃப்ஐஐ-களின் முதலீடு!

நிறுவனப் பங்குகள், நிறுவனங்கள் மற்றும் அரசுக் கடன் பத்திரங்களில் அதன் முதலீடு சிறப்பாகவே இருக்கிறது. நடப்பு ஆண்டில் இதுவரைக்கும் எஃப்ஐஐ-கள் பங்குகளில் சுமார் 1,000 கோடி டாலரை முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்கள் கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீடு இதனைவிட அதிகமாக 1,050 கோடி டாலராக உள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிக அதிகமாகும். இந்திய சந்தை நீண்ட காலத்திலும் நல்ல வருமானத்தைத் தரும் என எஃப்ஐஐ-கள் நம்புவதால்தான் கடன் சார்ந்த திட்டங்களிலும் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள் என அனலிஸ்ட்டுகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.  

எஃப் அண்ட் ஓ ரோல் ஓவர்!

கடந்த 26-ம் தேதி அன்று முடிந்த எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரியின் முடிவில் கடுமையாக ரோல் ஓவர் ஆகியிருக்கிறது. பட்ஜெட் தேதி அன்று சந்தை எப்படியும் குறைந்த பட்சம் 5% அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இப்படி ரோல் ஓவர் செய்திருக்கிறார்கள். மூன்று மாத சராசரி ரோலோவர் 72% ஆக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் அது 79% ஆக அதிகரித்துள்ளது.

பங்கு பரிந்துரை

ஐடியா (Idea),ஆக்ஸிஸ் பேங்க் (Axis bank), பவர் கிரிட்(Power Grid)