Published:Updated:

கொண்டைச்சரம் பிசினஸ்...  கொட்டும் லாபம்!

வே.கிருஷ்ணவேணி, படம்: ப.சரவணகுமார்

கொண்டைச்சரம் பிசினஸ்...  கொட்டும் லாபம்!

வே.கிருஷ்ணவேணி, படம்: ப.சரவணகுமார்

Published:Updated:

''என் மாமியார் எனக்குப் பரிசளித்த பாதை இது!''

- கண்கள் மின்னச் சொல்கிறார், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை 'மிர்ரா கிரியேஷன்ஸ்’ உரிமையாளர் அமிர்தஜோதி.

ஆசிரியை வேலை, ஆர்ட் அண்ட் கிராஃப்ட், கொண்டைச்சரம் என தன் தினப்பொழுதை பிஸியாக்கிக் கொண்ட இந்த வெற்றிகரமான பிசினஸ் பெண்ணை, மாலைவேளையொன்றில் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கனவுக்கும், நிகழ்காலத்துக்கும் ரொம்ப தூரம் இல்லை. எண்ணத்தில், செயலில் நாம் காட்டும் தீவிரம், கனவை நனவாக்கும். அப்படி அலங்காரம் மற்றும் ஆர்ட் வேலைப்பாடுகள்ல நான் காட்டின ஈடுபாடுதான், இதையே தொழிலாக்கும் சாமர்த்தியத்தைக் கொடுத்திருக்கு. இதுக்கு வழிகாட்டினது என் கணவர் அய்யாவு!'' என்று சுவாரஸ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் ஜோதி.

''சின்ன வயசுல இருந்தே வீட்டை சுத்தமா வெச்சுக்கணும், ஷோ கேஸ், திரைச்சீலை, பூந்தொட்டிகள்னு அலங்கரிக்கணும்னு இதுவே வேலையா இருப்பேன். இதுக்காகவே நிறைய கிராஃப்ட் வேலைகள் கத்துக்கிட்டேன். எம்.எஸ்ஸி., பி.எட்., ஹோம் சயின்ஸ் படிச்சேன். திருமணத்துக்குப் பிறகு, தனியார் பள்ளியில டீச்சர் வேலை. இடையிடையே தனியா கிராஃப்ட் வகுப்புகளும் எடுத்துட்டு இருந்தேன்.

கொண்டைச்சரம் பிசினஸ்...  கொட்டும் லாபம்!

ஒருநாள், 'அந்தக் காலத்துல அழகழகா தலையலங்காரம் பண்ணுவேன். பூச்சரம், கொண்டைச்சரம் எல்லாம் எல்லாருக்கும் செய்து கொடுப்பேன்’னு பேச்சுவாக்குல என் மாமியார் சொன்னாங்க. அந்தக் கொண்டைச் சரம் மேல எனக்கு ஆர்வம் வரவே, 'அத்தை எனக்கு கத்துத் தர்றீங்களா?’னு கேட்க, சந்தோஷமா கத்துக் கொடுத்தாங்க. அதையே அடிப்படையா வெச்சு, விதம்விதமான பூக்கள், பாசிகள், ரிப்பன்கள்னு, புதுமையான டிசைன்கள்ல கொண்டைச்சரங்கள் செய்து பார்த்து, இப்போதைய டிரெண்டுக்கு ஏத்த மாதிரி அப்டேட்கள் செய்துனு, ஒரு கட்டத்துல அதுல எக்ஸ்பர்ட் ஆகிட்டேன்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனக்கு பெரிய ஏணியா இருந்தது. சென்னை, அண்ணாநகர்ல அவங்களோட பயிற்சி நிறுவனம் இருக்கு. அங்க இயற்கைப் பூக்களை வெச்சு நான் பயிற்சி கொடுத்தேன். கொண்டைச்சரத்துக்கு பெண்கள்கிட்ட நல்ல ரீச். கிராஃப்ட் கிளாஸ், கொண்டைச்சரம் தயாரிப்பு மற்றும் பயிற்சி வகுப்புகள்னு பிஸி ஆயிட்டேன். ஒரு கட்டத்துல டீச்சர் வேலையையே விட்டுட்டேன். அந்த அளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு.

என் கணவர், தன்னோட ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுன்ட்ல நான் பண்ணின பொருட்களை அப்லோட் பண்ணுவார். எங்க பிள்ளைங்க ஸ்கந்தப் ப்ரியா, கௌதம் விஷால் ரெண்டு பேரும் இன்ஜினீயரிங் படிக்கிறாங்க. நான் டிசைன் பண்ணின டிரெஸ்களைப் போட்டுட்டு போய் எனக்கு பாராட்டுகளையும், கஸ்டமர்களையும் கொண்டுட்டு வந்துடுவா பொண்ணு. இப்படி வீட்டுக்குள்ளயே நல்ல விளம்பர டீம் இருக்கு!'' என்றபோது அன்பும், பெருமையும் அமிர்தஜோதியின் குரலில்.

மேடை அலங்காரங்கள் மற்றும் பூ அலங்காரங்கள் செய்துகொடுக்கும் ஜோதி, ''கொண்டைச்சரம் மற்றும் மாலை கட்டுவது பற்றி சொல்லிக் கொடுக்க 3,500 ரூபாய் கட்டணம் வாங்குறேன். ஒரு கொண்டைச்சரத்தை 250 - 750 ரூபாய் வரை விற்கலாம். இந்தத் தொழில்ல 30 பர்சன்ட் செலவு பண்ணினா, 70 பர்சன்ட் லாபம் எடுக்கலாம். பெண்கள் மட்டுமில்லாம ஆண்களும் நிறைவா சம்பாதிக்க முடியும்'' என்பவரிடம் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை பல நூறைத் தாண்டும். அவர்களில் நெகிழ்ச்சியுடன் அமிர்தஜோதி நினைவுகூர்வது, அந்தப் பூக்காரப் பெண்ணை! ''அபார்ட்மென்ட்ல பூ விக்கற அந்தப் பொண்ணுக்கு கட்டணம் இல்லாம சொல்லிக் கொடுத்தேன். ஆனாலும், கையில சில ரூபாய்களை திணிச்சிட்டுதான் போனா. அதே அபார்ட்மென்ட்ல இவகிட்ட கொண்டைச்சரம் மற்றும் பூ அலங்காரங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறாங்க இப்ப. 'இந்த கலர் புடவை, இதுக்கு மேட்சிங்கா கொண்டைச்சரம் பண்ணிக்கொடு’னு சொல்லிட்டா, அசத்திடறாளாம். 'பூ மட்டுமே வித்திட்டு இருந்த நான், இப்போ கொண்டைப்பூச்சரம் பிசினஸ் பண்றேன். நல்லா சம்பாதிக்கிறேன். ரொம்ப நன்றி மேடம்!’னு அவ மனப்பூர்வமா சொன்னப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு'' - நெகிழ்கிறார் அமிர்தஜோதி!

கொண்டைச்சரம் பிசினஸ்...  கொட்டும் லாபம்!

வழிகாட்டும் ஒலி! - சின்ன முதலீட்டில் பெரிய லாபம்!

''தன்னை அலங்கரிச்சுக்க விரும்பாத பெண்கள் யாரும் இல்லை. அதே ஆர்வத்தை பிறரை அலங்கரிக்கறதுலயும் காட்டினா, அதுவும் ஒரு பிசினஸ்தான். அப்படித்தான் ஆசை ஆசையா கொண்டைச்சரம் வெச்சுக்கிட்ட நான், அதையே ஒரு தொழிலா தொடங்கிட்டேன். சின்ன முதலீட்டில் பெரிய லாபம் எடுக்கிறேன். வருமானம் அள்ளிக் கொடுக்குற கொண்டைச்சர பிசினஸோட அடிப்படை முதல் மார்க்கெட்டிங் வரை அத்தனையையும் உங்களுக்கும் கத்து தர நான் ரெடி... கத்துக்கறதுக்கு நீங்க ரெடியா?'' என்று கேட்கும் 'மிர்ரா கிரியேஷன்ஸ்’ உரிமையாளர் அமிர்தஜோதி, உங்கள் போனுக்காக காத்திருக்கிறார். தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்... வெற்றிப்பாதையில் நடைபோடுங்கள்!

ஜூலை 1 முதல் 14 வரை

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள். உங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் அங்கே ஒலிக்கும்! என்ன... உங்கள் செல்போனில் 'அவள் விகடன் வழிகாட்டும் ஒலி' என 04466802912 எண்ணை பதிவு செய்துவிட்டீர்கள்தானே!