Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

டாக்டர் சங்கர சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

 ரூபாய்  1

தங்கக் காப்புக்கான விடை!

ஒரு ஜமீன்தாரிடம், அவரின் பரம்பரைச் சொத்தான தங்கக் காப்பு ஒன்று இருந்தது. அவருக்கு நான்கு மகன்கள். ஜமீன்தார் அந்தத் தங்கக் காப்பை தன் மூத்த மகனுக்குக் கொடுக்க நினைத்தார். ஆனால், அவரின் நான்கு மகன்களும் அந்தப் பரம்பரைச் சொத்தான தங்கக் காப்பில் இருந்து தங்களுக்கு ஒரு துண்டு வேண்டும் என்று கேட்டனர். அந்தத் தங்கக் காப்பின் விட்டம் 28 செ.மீ என்றால், ஒவ்வொரு மகனுக்கும் எத்தனை செ.மீ நீளம் உள்ள தங்கக் காப்பு துண்டு கிடைக்கும்? என்கிற கேள்வியைக் கடந்த வாரம் கேட்டிருந்தேன்.

இந்தக் கேள்விக்கான விடையைப் பல நூறு வாசகர்கள் சரியாக எழுதி அனுப்பி இருக்கிறார்கள். சரியான விடை அனுப்பிய வாசகர்கள் எதிர்காலத்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். இனி இந்தக் கேள்விக்கான விடையை இப்போது சொல்கிறேன்.

வட்டத்தின் சுற்றளவு 2π r πயின் மதிப்பு 22/7. வட்டத்தின் (தங்கக் காப்பின்) விட்டம் (d) 28 செ.மீ. எனில், அதன் ஆரம் (r) 14 செ.மீ. எனவே, வட்டத்தின் சுற்றளவுக்கான சூத்திரப்படி, 2πr = 2x22/7x14= 88 செ.மீ. இதை 4 பேருக்கு பங்கிட வேண்டும் என்பதால் 4-ல் வகுக்க, ஒவ்வொருவருக்கும் 22 செ.மீ நீளமுள்ள தங்கக் காப்புத் துண்டு கிடைக்கும்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

ரூபாய்  2

வேலைவாய்ப்பும் திட்டங்களும்!

இந்தியாவில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா பணிகளில் இருப்பவர்கள் 39.7 கோடி பேர். 2.8 கோடி பேர்கள் மட்டும் அமைப்பு சார்ந்த பணியில் உள்ளனர். 23.7 கோடி பேர் விவசாயத் துறையில் பணியில் உள்ளனர். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தமுள்ள பணியாளர்கள் 40.2 கோடி. 31.3 கோடி பேர் முக்கியப் பணிகளிலும் 8.9 கோடி பேர் விளிம்புநிலைப் பணிகளிலும் உள்ளனர். அமைப்பு சார்ந்த பணியில் உள்ளவர்களில் 17.8% பெண்கள். மொத்த பெண்கள் தொகையில் 25.6% பேர் பணியில் உள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்குப் பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

உதாரணமாக, 2001-ம் ஆண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்புகளை பத்து மில்லியனாக

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

(1 கோடி) உயர்த்துவதற்கு எஸ்.பி.குப்தா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அமைப்பு சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு 8% மட்டுமே வாய்ப்பு உள்ளது என்றும் அமைப்புசாரா பணிகளில்தான் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு 92% வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நிலவும் முக்கிய வகையான வேலையின்மைகள் குறித்தும் பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்தும் போட்டித் தேர்வுகளில் கேள்விகள் வரும். அதுபற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளன.

வேலையின்மை!

அமைப்பு வேலையின்மை (Structural Unemployment) என்பது உற்பத்தித் திறன் குறைவினால் வருவது.

வெளிப்படை வேலையின்மை (Open Unemployment)  என்பது படித்த மற்றும் படிக்காத மக்களிடையே காணப்படும் வேலையின்மை.

மறைமுக வேலையின்மை (Disguised Unemployment)  என்பது உற்பத்திக்கு பங்களிப்புச் செய்யாமல் ஒருவர் வேலையில் இருப்பது: அவரை நீக்கினாலும் உற்பத்தித் திறன் மாறாது.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

பருவகால வேலையின்மை (Seasonal Unemployment)  என்பது, விவசாயத் துறையில் வருடம் முழுவதும் வேலை இருப்பதில்லை; குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இருக்கும்.

இடைக்கால வேலையின்மை (Intermittent Unemployment) ஒருவர் ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறும்போது ஏற்படுகிறது.

உராய்வு வேலையின்மை (Frictional Unemployment) என்பது சந்தை நிலவர மாற்றத்தால் தேவை குறைவு மற்றும் புதிய தொழில்நுட்ப அறிமுகம் காரணமாக ஏற்படுவது.

கட்புலனாகா வேலையின்மை (Invisible Unemployment) என்பது பணியில் உள்ள ஒருவர் தன் பணியில் ஆர்வமின்றி இருப்பது (Lake Of Willingness to Work)  அல்லது பணியில் உள்ள ஒருவர் குறைவாகப் பயன்படுத்தப்படுவது (Underutilizing the Employee).

தகுதியற்ற வேலைவாய்ப்பு (Under Employment) என்பது ஒருவர் தன் கல்வித் தகுதிக்கு கீழான வேலையில் இருப்பது.

வேலைவாய்ப்புத் திட்டங்கள்!

சுய வேலைவாய்ப்புக்கான கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் (TRYSEM) - 1979

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் - 1980

ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் - 1983

ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY) - 1989

நேரு ரோஜ்கார் யோஜனா - (1992-93)

பிரதம மந்திரி ரோஜ்கார் யோஜனா - (PMRY)  - 1993

சுவர்ண ஜெயந்தி கிராம சுவராஜ்கர் யோஜனா - 1999.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் - 2006

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGP)  பிப்ரவரி 2, 2006-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வருடத்துக்கு 100 நாள் வேலை வழங்குவது இதன் முக்கிய நோக்கம்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் SGRY, NFFWP திட்டங்கள் உள்வாங்கப்பட்டன. தேசிய முற்போக்கு கூட்டணி அரசு 2006-ம் ஆண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை இயற்றியது.

இந்த இடத்தில் திட்டத்துக்கும், சட்டத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். வேலைவாய்ப்புக்கென்று ஓர் அரசாங்கம் கொண்டுவரும் திட்டத்தை அடுத்து வரக்கூடிய அரசாங்கம் செயல்படுத்தலாம் அல்லது அதிக முக்கியத்துவம் தராமல் வேறொரு திட்டத்துக்கு முக்கியத்துவம் தரலாம்.

ஆனால், ஓர் அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்தை மற்றொரு அரசாங்கம் பின்பற்றாமல் விடமுடியாது. அந்தச் சட்டத்தை நீக்க வேண்டுமானாலும்கூட நாடாளுமன்றம் மூலம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவேதான், கிராமங்களில் வருடத்துக்கு நூறு நாள் வேலை வழங்கும் திட்டத்தை முந்தைய அரசு சட்டமாக இயற்றிக் கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், விமர்சனங்கள் குறித்தும் படித்துத் தெரிந்துகொண்டால் முதன்மைத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு எளிதாக விடையளிக்கலாம்.

ரூபாய்  3

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

ஜூலை 2014-ல்  டிஎன்பிஎஸ்சி  குரூப் - 1 தேர்வு நடைபெறவுள்ளது. எனவே, கடந்த ஆண்டு குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட பொருளாதாரக் கேள்விகள் குறித்து சிறிது விளக்க முடியுமா? என வாசகர் ஒருவர் கேட்டுள்ளார். குரூப்-1 தேர்வு எழுதவுள்ள பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட பொருளாதாரக் கேள்விகள் குறித்து சிறிது பார்க்கலாம்.

குரூப்-1 தேர்வில் வருடம் சார்ந்த கேள்விகள் பொதுவாகக் கேட்கப்படுவதுண்டு. அந்தவிதத்தில் 2013-ம் ஆண்டிலும் அதுபோன்ற கேள்விகள் வந்துள்ளன. குறிப்பாக, வேளாண்மை விலைக் குழு (Agricultural Price Commission) எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்ற கேள்வியும் (விடை, 1965), தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம் (National Agricultural Insurance Scheme)  எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்ற கேள்வியும் (விடை 1999-2000) கேட்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கேள்விகளும் வருவதுண்டு. அதற்கு உதாரணமாக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி கீழே தரப்பட்டுள்ளது.

மேலும், சில பொருளாதாரத் தகவல்கள் குறித்த புள்ளிவிவரங்களும் கடந்த ஆண்டு தேர்வில் நிரப்புக முறையில் கேட்கப்பட்டன. அதற்கு உதாரணமாக ஒரு கேள்வியும் கீழே தரப்பட்டுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?

1. இந்தத் திட்டம் கிராம ஊராட்சிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 2006-2007-ல் தொடங்கப்பட்டது.

2. இந்தத் திட்டம் தலா வருமானம் அதிகம் கொண்ட பணக்கார கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

(a) 1 சரி, 2 தவறு

(b) 1 மற்றும் 2 சரி

(c) 1, 2 இரண்டுமே தவறு

(d) இவற்றில் எதுவுமில்லை

விடை: (a) 1 சரி, 2 தவறு

இனி கேள்விகளுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட முதலீட்டில் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் சுமார் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. கிராம ஊராட்சிகளுக்கு அவற்றின் குறைந்த தலா வருமானத்தின் அடிப்படையில் ஏறுவரிசையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் குறித்து விரிவாக படிக்க விரும்பும் மாணவர்கள், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணையதளத்தைப் பார்க்கலாம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகின் ------- சதவிகித மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. ஆனால், உலக மாசுபடுதலில் ----------- சதவிகிதத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், இந்தியா ---------- சதவிகித கார்பன்டை ஆக்ஸைடு மட்டுமே வெளியிடுகிறது.

(a) 4.6,22,4
(b) 4,4.6,22
(c) 17.4,4,4.6
(d) 22,4.6,90

விடை:(a) 4.6,22,4

(தயாராவோம்)
படம்: பா.காளிமுத்து

2. US accounts for only ------ percent of world population and is causing ----- percent of world pollution whereas India causes ---- percent of carbon dioxide emissions

(a) 4.6,22,4
(b) 4,4.6,22
(c) 17.4,4,4.6
(d) 22,4.6,90

Ans: (a) 4.6,22,4

1. Which of the following statements about ‘Anaithu Grama Anna Marumalarchi Tittam’ are correct?

1.Launched in 2006-07 with a view to develop basic infrastructure facilities in village Punchayats

2.The scheme accords priority to the richest village panchayats which have high percapita income.

(a) 1 is true but 2 is false

(b) 1 and 2 are true

(c) 1 and 2 are false

(d) None of these

Ans: (a) 1 is true but 2 is false

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு