நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

டாடா மோட்டார்ஸ் சச்சரவு... 'பவரை’ காட்டிய பங்குதாரர்கள்!

செ.கார்த்திகேயன்

'திரை உலக வரலாற்றில் முதன்முறையாக’ என்பதுபோல, இந்திய தொழில்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களின் சம்பள உயர்வானது, அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு நிறுவன இயக்குநர்களின் சம்பள உயர்வை பங்குதாரர்கள் தடுத்து நிறுத்தியிருப்பது இதுவே முதல்முறை என்று ஆச்சர்யப்பட்டு வாயடைத்துப்போய் இருக்கின்றன மற்ற நிறுவனங்கள்.

ஒரு நிறுவனமானது சரியான முறையில் செயல்படாமல் போனால், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்களின் உரிமையைப் பலவழிகளில் நிலைநாட்ட முடியும் என்பதை இந்தச் சம்பவமானது உணர்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், டாடா மோட்டார்ஸைப் பொறுத்தவரை அதன் பங்குதாரர்கள், இயக்குநர்களின் சம்பள உயர்வில் தங்கள் முடிவை சரியாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் கள் என்று சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

டாடா மோட்டார்ஸ் சச்சரவு... 'பவரை’ காட்டிய பங்குதாரர்கள்!

டாடா நடத்திய வாக்கெடுப்பு!

பொதுவாக, ஒரு நிறுவனத்தின் நிகர லாபத்தில் 5 சதவிகிதத்துக்கும்மேல் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு வழங்குவதாக இருந்தால், அரசிட மும், அந்த நிறுவனத்தின் பங்குதாரர் களிடமும் ஒப்புதல் பெறவேண்டும் என்பதே நியதி. அதன் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரவீந்த்ரா பிஷாரோடி (செயல் இயக்குநர் - வர்த்தக வாகனம்), சதீஷ் போர்வாங்கர் (செயல் இயக்குநர் - தரம்) மற்றும் முன்னாள் மேலாண்மை இயக்குநர் கார்ல்ஸ்லீம் ஆகிய மூவரின் சம்பள உயர்வை அதிகப்படுத்த வாக்கெடுப்பு நடத்தியது.

ரவீந்த்ரா பிஷாரோடி மற்றும் சதீஷ் போர்வாங்கருக்கு சலுகைகள், நலன்கள் மற்றும் செலவுகள் போன்றவைத் தவிர, மாதம் 7 லட்சம் ரூபாய் வரை குறைந்தபட்ச சம்பளம் வழங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரின் வருட சம்பளங்கள் முறையே 3.20 கோடி ரூபாய், 2.44 கோடி ரூபாய் மற்றும் கார்ல்ஸ்லீமின் வருட சம்பளம் 14.64 கோடி ரூபாயாக 2014 நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியைக் கேட்டுதான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நிதி நிறுவனங்களின் பங்களிப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடத்திய மொத்த வாக்கெடுப்பில், அந்த நிறுவனத்தில் சுமார் 37 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் நிதி நிறுவனங்களின் வாக்குகளில் 64 சதவிகிதம் இந்த சம்பள உயர்வுக்கு எதிராக விழுந்துள்ளது.  

டாடா மோட்டார்ஸ் சச்சரவு... 'பவரை’ காட்டிய பங்குதாரர்கள்!

எதிர்ப்பு தெரிவித்த எல்ஐசி!

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான எல்ஐசி, டாடா மோட்டார்ஸ் நிறுவன இயக்குநர்களுக்கு வழங்க இருந்த சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது வாக்கை பதிவு செய்திருந்ததாக தெரிகிறது. இருப்பினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் களாக இருந்தும் பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்த வாக்குப்பதிவில் கலந்துகொள்ளவில்லை என்பது கவனிக்கவேண்டிய விஷயம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் இயக்குநர்களின் சம்பள உயர்வை தடுத்து நிறுத்தியதற்கான மிக முக்கியக் காரணம், நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக இருப்பதும், அதனால் அதன் நஷ்டமானது அதிகரித்து வருவதும்தான்.

நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிப்பு!

டாடா மோட்டார்ஸ் சச்சரவு... 'பவரை’ காட்டிய பங்குதாரர்கள்!

''டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2013 -14 நான்காவது காலாண்டின் நஷ்டம் 817 கோடி ரூபாய். இந்த நஷ்டமானது அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 312 கோடி ரூபாயாக இருந்தது. அதனால் இந்த சமயத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான வேலை. இயக்குநர்களின் சம்பளத்தை உயர்த்துவது கிடையாது என்கிற ரீதியிலேயே சம்பள உயர்வு தீர்மானத்தின் மீதான எதிர்ப்பைப் பங்குதாரர்கள் தெரிவித்திருக்கிறார்கள்'' என்கிறது இன்ஷூரன்ஸ் துறை வட்டாரம்.

எதிர்ப்பு வலுத்தது!

பங்குதாரர்களின் இந்த நடவடிக்கை குறித்து பெங்களூரில் இருக்கும் இன்கவர்ன் ரிசர்ச் சர்வீஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் சுப்ரமணியனிடம் பேசினோம். ''இயக்குநர்களுக்கான சம்பளம் அவர்களுடைய பணித் தன்மை, எவ்வளவு பெரிய நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் வருவாய், லாபம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைய வேண்டும். மேலும், இதே பணிக்கு இந்தத் துறையைச் சார்ந்த மற்ற நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளம் மற்றும் இயக்குநர்களின் செயல்பாடு ஆகியவற்றையும் கருத்தில்கொள்வது மிக அவசியம். நிறுவனத்தின் செயல்பாட்டைப் பொறுத்தே ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இல்லாதபோது, சம்பள உயர்வு இருக்கக் கூடாது. தொடர்ந்து நஷ்டத்தில் இருக்கும் கம்பெனிகளில் அதிக சம்பளம் கொடுப்பதும் சரியல்ல. மேலும், நிறுவனங்களில் உள்ள புரமோட்டர் இயக்குநர்களுக்கான சம்பளம் புரமோட்டார் அல்லாத இயக்குநர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது. இதுபோக, மீதியிருக்கும் லாபம் டிவிடெண்டாக வழங்கப் படும்போது சிறுபான்மை முதலீட்டாளர்களும் பயன்பெற முடியும். இந்தச் சம்பள உயர்வுக்கான தீர்மானம் நிறைவேற 75 சதவிகித பெரும்பான்மை தேவை. ஆனால், சுமார் 70 சதவிகிதமே தீர்மானத்துக்கு ஆதரவாகப் பதிவானதால் தீர்மானம் நிறைவேற்றப் படாமல், இயக்குநர்களின் சம்பள உயர்வை முதலீட்டாளர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

டாடா மோட்டார்ஸ் சச்சரவு... 'பவரை’ காட்டிய பங்குதாரர்கள்!

என்ன செய்யலாம் டாடா மோட்டார்ஸ்?

கம்பெனி சட்டம் இடைக்கால டிவிடெண்ட் வழங்குவது குறித்து சில வரைமுறைகளை வகுத்துள்ளது. ஒரு நிதியாண்டின் இடைக்கால லாபத்தை வைத்து இயக்குநர்கள் இடைக்கால டிவிடெண்ட் வழங்குவார்கள். ஆனால், முழு ஆண்டு முடிந்தபின் எதிர்பார்த்த லாபம் வராமல்போய் ஏற்கெனவே வழங்கிய டிவிடெண்ட் தவறு என்றாகும்போது, இயக்குநர்கள் தனிப்பட்ட முறையில் அதிகமாக வழங்கப்பட்ட டிவிடெண்டை கம்பெனிக்கு ஈடு செய்ய வேண்டும். இதுபோல, தற்போது டாடா மோட்டார்ஸ் இயக்குநர்கள் தாங்கள் அதிகமாகப் பெற்ற ஊதியத்தை கம்பெனிக்கு திருப்பித் தர வேண்டும்'' என்கிற கோரிக்கையை வைத்தார் ஸ்ரீராம்.

இதற்குப் பிறகாவது, கம்பெனிகள் தீர்மானம் நிறைவேற்றுவதை ஒரு சம்பிரதாயம்போல எடுத்துக் கொள்ளாமல், முதலீட்டாளர்களிடம் வெளிப்படைத் தன்மையோடு தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களும் கம்பெனியின் முதலாளிகள் தான் என்ற எண்ணத்தோடு செயல்பட்டால், முதலீட்டுச் சந்தை மேம்பட வாய்ப்பு பெருகும். மேலும், இந்தச் சம்பவம் பங்கு முதலீட்டாளர்கள் தங்கள் 'பவரை’ உணர்ந்துகொள்ள ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. சிறுபான்மை முதலீட்டாளர்களும் கம்பெனிகள் அனுப்பும் தீர்மானத்துக்கான தகவல் அறிக்கைகளை நன்கு அலசி ஆராய்ந்து ஓட்டெடுப்பில் பங்குபெற வேண்டும். டாடாவுக்கு ஏற்பட்ட இந்தச் சறுக்கல் சிறுபான்மை முதலீட்டாளர்களை மதிக்காத மற்ற பல நிறுவனங்களுக்கும்ஒரு பாடம்!