Published:Updated:

SME கைடுலைன்!

போட்டியைச் சமாளிக்க உதவும் பிராண்டிங்! ச.ஸ்ரீராம்

SME கைடுலைன்!

போட்டியைச் சமாளிக்க உதவும் பிராண்டிங்! ச.ஸ்ரீராம்

Published:Updated:

 தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

எஸ்எம்இ-களில் சிலர் நாங்கள் தயாரிக்கும் பொருட்கள் தரமானதாக இருக்கிறது; சந்தைப்படுத்துதலில் நல்ல முனைப்போடு செயல்படுகிறோம்; ஆனாலும் எங்கள் பொருளை வாடிக்கையாளர் மனத்தில் பதிய வைப்பது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். இதனால் மார்க்கெட்டில் எங்களுக்கென தனி அடையாளம் கிடைப்பது கடினமாக உள்ளது என்கின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு பல தீர்வுகள் இருந்தாலும், அதில் முக்கியமான தீர்வாக இருப்பது பிராண்டிங். அதாவது, எந்தவொரு பொருளையும் அதை வாங்குபவர்களின் மனத்தில் பதிய வைப்பதுதான் பிராண்டிங். இந்த பிராண்டிங்கை எஸ்எம்இ-கள் எளிமையாகச் செய்வது எப்படி என பிரபல பிராண்ட் ஆலோசகரான ராமானுஜம் ஸ்ரீதரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எஸ்எம்இ-கள் என்றாலே சிறிய அளவில் தொழில் செய்பவர்கள். அவர்களால் அதிகத் தொகையை செலவு செய்து விளம்பரம் செய்ய முடியாது என்ற எண்ணமே உள்ளது. அது தவறு, அப்படி நினைப்பவர்கள் பிராண்டிங்கை வெறும் விளம்பரம் செய்வது என்று மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்கள். பிராண்டிங் என்பது விளம்பரம் செய்வது மட்டுமல்ல. அதனைத் தாண்டி நிறைய விஷயங்கள் பிராண்டிங்கில் உள்ளன.

SME கைடுலைன்!

இன்னும் சிலர், நான் சிறிய அளவில்தான் தொழிலை செய்கிறேன், என் நிலையில் பிராண்டிங் என்பது தேவையா என்று நினைக்கின்றனர். இதையும் தவறான அபிப்ராயம் என்றே சொல்ல வேண்டும். இன்றைக்குப் பெரிதாக இருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே ஒருகாலத்தில் சிறியதாக இருந்தவைதான். அன்றைக்கே பிராண்டிங் பற்றிய விழிப்பு உணர்வோடு செயல்பட்டதால், இன்றைக்கு அந்த நிறுவனங்களின் பிராண்டுகள் நம் எல்லாருக்கும் நன்றாகவே தெரிகிறது.

பிராண்டிங் செய்ய பல கோடி ரூபாய்களைச் செலவு செய்ய வேண்டும் என்றில்லை. சில ஆயிரம் ரூபாயில்கூட எளிமையாகச் செய்யலாம். உங்கள் ஊரில் உள்ள அமைப்புகள் அல்லது அரசு நடத்தும் கண்காட்சிகளுக்குச் சென்று உங்கள் நிறுவனத்தைப் பற்றியும், உங்களது தயாரிப்புகள் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் தயாரிப்பு தேவைப்படும் மக்கள் அந்தப் பொருளை ஏறெடுத்துப் பார்ப்பார்கள். உங்கள் தயாரிப்பு பற்றி பத்திரிகைகளிலும் மற்ற ஊடகங்களிலும் ஏதேனும் கட்டுரைகள் வெளியாகி இருந்தால், அதனை வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு எடுத்துக்கொண்டு செல்வதன் மூலம் மக்களின் கவனத்தைப் பெற முடியும். உங்கள் தயாரிப்புகளைப் பார்க்கவரும் பார்வையாளர்களுக்குச் சிறந்த சேவையைத் தருவதன் மூலமும், அவர்களிடம் நீங்கள் தரும் விசிட்டிங் கார்டில்கூட உங்களை நீங்கள் பிராண்டிங் செய்துகொள்ள முடியும். உங்கள் தயாரிப்பை பிராண்டிங் செய்ய உங்களுக்குத் தேவை வித்தியாசமான அணுகுமுறை மட்டுமே!

குறிப்பிட்ட அளவு மக்களை உங்கள் தயாரிப்புகள் சென்று அடையும் வரை, உங்கள் பொருட்களைப் பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல், டார்கெட்டட் குரூப் எனப்படும் குறிப்பிட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தாலே போதும். இந்த அளவு பெரிதாகப் பெரிதாக, உங்கள் தயாரிப்பின் பிராண்டிங் அதிகரிக்கும். இப்படி தொடர்ந்து அதிகரிக்கும்போது, உங்கள் நிறுவனம் பெரிய நிறுவனமாக மாறியிருக்கும். அப்போது ஓரளவுக்குப் பணத்தைச் செலவு செய்து விளம்பரம் செய்ய முடியும்.

SME கைடுலைன்!

சிலர், நான் இப்போதுதான் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். கொஞ்ச காலம் கழித்து என் தொழிலை பிராண்டிங் செய்துகொள்கிறேன் என்கின்றனர். இந்த இடத்தில் எஸ்எம்இ-கள் முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பிராண்டிங் என்பது நாம் தொழில் செய்ய ஆரம்பித்ததிலிருந்து கவனத்தோடு செய்யவேண்டிய ஒரு விஷயம். தொடக்கத்தில் பெரிய அளவில் இதைச் செய்யாவிட்டாலும் சிறிய அளவிலாவது நிச்சயம் செய்ய வேண்டும். ஏனெனில், மக்களுக்கு எப்போதுமே பிரபலமான தயாரிப்புகளை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் இருக்கும் என்பதால், சிறு தொழில்முனைவோர்களும் ஆரம்பம்தொட்டு பிராண்டிங் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

நுகர்வோர் பொருட்களைத் தயாரிப்பவர்கள், சிறிய அளவில் சாம்பிள் பொருட்களைத் தந்து பிராண்டிங் செய்யலாம். உங்கள் தயாரிப்புகளைக் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யலாம். பேக்கிங் கவர் மீது இருக்கும் உங்கள் நிறுவனத்தின் பெயர், லோகோ, பொருள் பற்றிய குறிப்புகள், தயாரித்த நிறுவனத்தின் முகவரி மற்ற விவரங்கள் என எல்லா விஷயங்களையும் தெளிவாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறமாதிரி வடிவமைத்துக்கொள்வது அவசியம்.

நான் ஓர் ஏற்றுமதியாளர். நான் தயாரிக்கிற பொருட்களை உள்ளூரில் விற்பதில்லை. எனக்கு பிராண்டிங் அவசியமா என சிலர் கேட்கலாம். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கும் பிராண்டிங் அவசியம். இவர்களுக்கான பிராண்டிங் என்பது பெரிய நிறுவனங்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு, எவ்வளவு விரைவாக ஆர்டர்களைப் பூர்த்திசெய்து தருகிறார்கள், என்ன தரத்தில் செய்து தருகிறார்கள், ஐஎஸ்ஓ போன்ற தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் என்ற கோணத்தில் இருக்கும். இது இவர்களைப் போட்டியாளர்கள் மத்தியில் தனித்துக்காட்ட உதவும்.

ஆரம்பத்தில் நேரடி பிராண்டிங் செய்து, மக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு உங்கள் நிறுவனம் மற்றும் தயாரிக்கும் பொருள் பற்றி தெரிந்துவிட்டது எனில், அடுத்தகட்டமாக நீங்கள் இணையதளம் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், உங்கள் தயாரிப்புகளையும், அதனைப் பற்றிய விவரங்களையும் சிறப்பம்சங்களையும் தெரிவிக்க ஆரம்பிக்கலாம். அது உங்கள் தயாரிப்பை நிறையபேரிடம் கொண்டு செல்ல உதவும். இன்று இணையதளங்கள் மிகக் குறைந்த கட்டணத்திலும், சமூக வலைதளங்கள் இலவசமாகவும் கிடைப்பதால் இவர்கள் தங்கள் பொருளை பிராண்டிங் செய்வது மிகவும் எளிது.

பிராண்டிங்கை விளம்பரம் என்று பார்க்காமல் தனது தயாரிப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் அற்புதமான விஷயம் என்பதைப் புரிந்துகொண்டால், அதற்கான கவனத்தைச் செலுத்த நாம் தவறவே மாட்டோம்'' என்று முடித்தார் ராமானுஜம் ஸ்ரீதர்.

இனி எஸ்எம்இ-கள் தங்கள் தயாரிப்புகளை பிராண்டிங் செய்ய கவனம் செலுத்தலாமே!

எஸ்.எம்.இ தொழில்முனைவோர் கவனத்துக்கு...

உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் உங்களுக்கான பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: msme@vikatan.com குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம். அதற்கு 044-66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.

SME Q & A

நான் தற்போது செயற்கை நகை மேக்கிங் தொழில் செய்து வருகிறேன். எனது தொழிலை ஆன்லைனிலும் செய்ய ஆசைப்படுகிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

SME கைடுலைன்!

@ காயத்ரி

''முதல்கட்டமாக, உங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்படி குறைந்த கட்டணத்தில் ஓர் இணையதளத்தைத் துவங்குங்கள். அதில் உங்கள் தயாரிப்புகள் பற்றியும் அதன் விலை, அதனைப் பெற அணுக வேண்டிய முகவரி போன்ற தகவல்களை இடம்பெற செய்யுங்கள். இதனை இலவசமாகக் கிடைக்கும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்துங்கள். ஓரளவுக்கு ஆன்லைன் வர்த்தகம் உங்களுக்கு நம்பிக்கை தருகிறது என்ற நிலைக்கு வந்தபின் உங்கள் இணையதளத்தை இ-காமர்ஸ் தளமாக மாற்றி, நேரடியாக ஆன்லைனிலேயே பணம் கொடுத்து பொருள் வாங்கும் தளமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.''

SME கைடுலைன்!

பி.ஜெயப்பிரகாஷ், ஃபேவரைட்ஸ் ஜூட் - ஈக்கோ ஃப்ரெண்ட்லி புராடக்ட் மேனுஃபேக்சரர், பல்லடம்.

''நான் கடந்த 5 வருடமாக சணல் உபயோகப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறேன். சணல் ஹேண்ட்பேக், தாம்பூல பை, பைல்ஹோல்டர், கப் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். நான் இந்தத் தொழிலை துவங்கியபோது கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மூன்று பேர் மட்டுமே இந்தத் தொழிலை செய்து வந்தனர். இன்று பலரும் செய்து வருகின்றனர்.

SME கைடுலைன்!

பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் ஏற்படும் ஆபத்துகள், அதற்கு விதிக்கப்பட்டு வரும் தடைகள் போன்றவற்றால் இயற்கை சார்ந்த இந்த சணல் உபயோகப்பொருட்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது. கொல்கத்தா போன்ற வடமாநிலங்களில் இந்தத் தொழிலுக்கு உள்ள வரவேற்பு போலவே நம் தமிழ்நாட்டிலும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் அளித்த பயிற்சியின் மூலமாகவே நான் இந்தத் தொழிலைத் துவங்கினேன். ஆரம்பத்தில் குறைந்த அளவில் செய்தோம். தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வாரத்துக்கு 800 பேக்குகள் உற்பத்தி செய்கிறோம். மத்திய அரசானது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பல்வேறு மாவட்டங்களில் சணல் உபயோகப் பொருட்களின் கண்காட்சியை நடத்துகிறது. பெரும்பாலும் பொருட்காட்சிகளில் அரங்கு அமைத்து நேரடி விற்பனை செய்கிறோம்.

இந்தத் தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை எனக்கு வருமானம் கிடைக்கிறது. தற்போது என்னிடம் மூன்று பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். நாங்கள் தயாரிக்கிற பொருட்கள் தரத்துடன் கூடிய தனித்தன்மையோடு இருப்பதும், குறித்த நேரத்தில் ஆர்டர்களை டெலிவரி செய்வதும்தான் எங்களது தொழிலுக்குப் பலமாக உள்ளது.''

தி.ஜெயப்பிரகாஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism