நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

ஷேர்லக் - சந்தையின் சரிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

ஷேர்லக் - சந்தையின் சரிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

''பட்ஜெட் வந்தாச்சு. இனி இந்த பட்ஜெட்டால் என்னென்ன பங்குகள் விலை உயர வாய்ப்புண்டு?'' - நம் கேபினுக்குள் வந்து உட்கார்ந்தவுடன் நாம் ஷேர்லக்கிடம் கேட்ட முதல் கேள்வி இது.

''இந்த பட்ஜெட்டை ஒரு மிடில் க்ளாஸ் பட்ஜெட் என்றுதான் சொல்ல வேண்டும். வரிச் சலுகை அறிவிப்பால், சேமிப்பு அதிகமாகி முதலீடு கூடுவதற்கு வாய்ப்பு அதிகமாகியுள்ளது. அனைத்து முதலீட்டுக்கும் ஒரே டீமேட், ஒரே கேஒய்சி கொண்டு வருவது இன்னும் பல  முதலீட்டாளர்களைப் பங்குச் சந்தைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம்.

பட்ஜெட் அறிவிப்புகளால் கவனிக்க வேண்டிய துறைகள் என பெரும்பாலான அனலிஸ்ட்கள் சுட்டிக்காட்டுவது இன்ஃப்ரா, பேங்க், பவர், ரியல் எஸ்டேட், வீட்டு வசதி துறைகள்.

இன்ஃப்ரா!

இந்தத் துறையைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் 16 புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும்; சாலை மேம்பாட்டுக்கு ரூ.37,880 கோடி நிதி ஒதுக்கீடு, புதிய விமான நிலையங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல் அண்ட் டி, எஸ்ஸார் போர்ட்ஸ் (Essar Ports), ஐஆர்பி இன்ஃப்ரா (IRB Infra) விலை உயரும்.

ரியல் எஸ்டேட்!

இன்ஃப்ரா துறை வளர்ச்சிக் காணும் போது, கூடவே ரியல் எஸ்டேட் துறையும் அது சார்ந்த ஸ்டீல், சிமென்ட் துறைகளும் வளர்ச்சி காணும். சோபா டெவலப்பர்ஸ், டாடா ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல், ஜேகே லஷ்மி சிமென்ட்  போன்ற பங்குகளை வாங்கலாம்.

ஷேர்லக் - சந்தையின் சரிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

வீட்டுக் கடன்!

வீட்டுக் கடன் வட்டிக்குக் கூடுதலாக ரூ.50,000 வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எல்ஐசி ஹெச்எஃப்எல் (LIC HFL) ஹெச்டிஎஃப்சி, கிருக் ஃபைனான்ஸ் (Gruh Finance) ) போன்ற நிறுவனங்களின் செயல்பாடு மேம்படும் என்பதால் இவற்றின் பங்குகளில் நீண்ட காலத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

வங்கித் துறை!

வங்கிகள் நீண்ட கால இன்ஃப்ரா ஃபண்டுகள் மூலம் திரட்ட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் குறிப்பாக, எஸ்பிஐ, பிஎன்பி (PNB), கார்ப்பரேஷன் பேங்க் போன்ற பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதேபோல், முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க்-ன் வருமானமும் உயர வாய்ப்பு உருவாகும். எனவே, இவற்றின் பங்குகளில் ஒரு கண் வைக்கலாம்.

எஃப்எம்சிஜி!

கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எஃப்எம்சிஜி நிறுவனங்கள் அதிக லாபம் அடையும். ஹெச்யுஎல் (HUL), ஐடிசி (ITC), கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் (Godrej) உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கக் கூடும்.

பவர் மற்றும் ஆயில் அண்ட் காஸ்!

பவர், ஆயில் அண்ட் காஸ் துறைகளில் சீர்திருத்தம் செய்யப்பட இருக்கிறது. மேலும், மின் திட்டங் களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட இருக்கிறது. அந்தவகையில் கோல் இந்தியா (Coal India), கெயில் இந்தியா (Gail India), என்டிபிசி (NTPC), ஓஎன்ஜிசி (ONGC), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், ஜெய்பிரகாஷ் பவர், கேஇசி இன்டர்நேஷனல் (KEC International), குஜராத் ஸ்டேட் பெட்ரோநெட் உள்ளிட்ட நிறுவனங்களைக் கவனிக்கலாம்.

விவசாயம்!

புதிய யூரியா கொள்கையை விரைவில் மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இது தீபெக் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கும். சூரியசக்தி, உணவுப் பதப்படுத்துதலுக்குப் பட்ஜெட்டில் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஜெயின் இர்ரிகேஷன், கோஹினூர் ஃபுட்ஸ் நிறுவனங்களுக்கு லாபமாக இருக்கும்.

இன்ஷூரன்ஸ்!

இந்தத் துறையில் எஃப்டிஐ முதலீடு வரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பது மேக்ஸ் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும். டிஜிட்டல் இந்தியா, 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கம், கம்ப்யூட்டர் உதிரிபாகங்களுக்கு இறக்குமதிவரி நீக்கம் போன்றவை ஐ.டி நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இது லாபகரமாக இருக்கும்'' என ஒரே மூச்சில் பல விஷயங்களைக் கொட்டியவர், ''அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாத மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் வருமான வரியை மிச்சப்படுத்த நினைப்பவர்கள் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு ஃபண்டான இஎல்எஸ்எஸ்-க்கு ஆதரவு அளிக்கலாம். ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்கள், இன்ஃப்ரா ஃபண்டுகள், பேங்கிங் ஃபண்டுகளைக் கவனிக்கலாம்'' என்றார்.

''பட்ஜெட் தவிர வேறு தகவல்கள் ஏதாவது?'' என்று அவரை வேறு செய்திகளுக்கு இழுத்தோம்.

''இன்ஃபோசிஸ் ரிசல்ட் வந்திருக்கிறது. இதன் முதல் காலாண்டு நிகர லாபம் இதற்கு முந்தைய காலாண்டைவிட  3.5% குறைந்துள்ளது. 2014-15-ல் இந்த நிறுவனத்தின் வருமான வளர்ச்சி டாலர் மதிப்பில் 7 - 9 சதவிகிதமாக இருக்கும் என கைடன்ஸ் தரப்பட்டிருக்கிறது. இது டாலர் மதிப்பு ரூ.60 என்கிற கணக்கில் போடப்பட்டிருக் கிறது'' என்றார்.

''பட்ஜெட்டுக்கு முன்பு நன்கு ஏறிய சந்தை தற்போது இறங்குமுகத்தில் இருக்கிறதே?'' என்றோம்.

''உண்மைதான். கடந்த மே மாதத்தில் இந்திய தொழில் வளர்ச்சி குறியீடு (ஐஐபி) 4.7% வளர்ச்சி கண்டிருக்கிறது. இது கடந்த 19 மாதங்களில் மிக அதிகம். இந்தத் தகவல் வெள்ளிக்கிழமை வெளியானது. என்றாலும், வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களைப் பாதிக்கும் கார் (GAAR)வரி பட்ஜெட்டில் நீக்கப்படாமல் இருப்பது போன்ற நெகட்டிவ் செய்திகளால் சென்செக்ஸ் 348 புள்ளிகள் ஒரேநாளில் இறங்கி இருக்கிறது.

சந்தை இன்னும் கொஞ்சம் இறங்குவதற்கு தயாராக உள்ளது போலவே தெரிகிறது. ஆனால், எஃப்ஐஐ-கள் இன்னும் இந்தியா மீது நம்பிக்கையை இழக்கவில்லை. சென்செக்ஸ் குறைந்த அளவில் இருந்தபோது முதலீடு செய்யாதவர்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு என்றே சொல்லலாம். அதனால் சந்தை சரிவை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றவர், ''மழை வரும்போல இருக்கிறது, நான் கிளம்புகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.