Published:Updated:

ஷேர்லக் - என்எல்சியில் லாபம் பார்த்த தமிழக அரசு!

ஷேர்லக் - என்எல்சியில் லாபம் பார்த்த தமிழக அரசு!

உள்ளே வரலாமா?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். வந்து அமர்ந்தவரிடம் பல்வேறு பங்குகள் பற்றி நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும்...

‘‘கேமான் இன்ஃப்ரா நிறுவனத்தில் என்ன பிரச்னை?"

‘‘கம்பெனியில் பிரச்னை இல்லை. இன்சைடர் டிரேடிங்கில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அதன் முன்னாள் சேர்மன் அபிஜித் ராஜன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செபி தடை விதித்துள்ளது. இதேபோல் இதற்குமுன்பு ஒருமுறையும் செபியால் அபிஜித் ராஜன் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இவர் தற்போது கேமான் இந்தியா நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார். இப்படி முதலீட்டாளர்கள் பணத்தில் விளையாடுபவர்கள் எந்த நிறுவனத் திலும் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால்தான் இதுபோன்ற பிரச்னை மீண்டும் வராது.’’

‘‘கடந்த ஜூன் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஐடிசி பங்குகளை கணிசமாக விற்றுள்ளனவே?’’

‘‘பட்ஜெட்டில் சிகரெட்டுக்கு மிக அதிக வரி விதிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பால், இப்படி பங்குகளை விற்றுத்தள்ளியிருக்கின்றன மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். இதேபோல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சேச கோவா, யுனைடெட் ஸ்பிரிட் பங்குகளையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்றுள்ளன.

அதேநேரத்தில், அவை எல் அண்ட் டி, இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்றவற்றில் முதலீட்டை கணிசமாக அதிகரித்துள்ளன. இதுவரைக்கும் இல்லாதவகையில் ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.55,000 கோடிக்கு முதலீடு செய்திருக்கின்றன.’’

‘‘எஸ்பிஐ ரூ.20,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கப்போகிறதே?’’

‘‘நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான எஸ்பிஐ விரைவான விரிவாக்கத் திட்டத்தில் இருக்கிறது. மேலும், அது பேசல்3 விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இருக்கிறது. அதற்கு தேவையான நிதி கைவசம் இல்லாததால், அரசின் பங்கு மூலதனத்தை 58.6 சதவிகிதத்திலிருந்து 53 சதவிகிதமாக குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்துடன் எஸ்பிஐ பேசி வருவதாக தகவல். இது நடைமுறைக்கு வந்தால் எஸ்பிஐ-யால் தாராளமாக ரூ.20,000 கோடி நிதித் திரட்ட முடியும்.’’

‘‘ஓஎன்ஜிசி பங்கு விற்பனை எந்த அளவில் இருக்கிறது?’’

ஷேர்லக் - என்எல்சியில் லாபம் பார்த்த தமிழக அரசு!

‘‘இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான ஓஎன்ஜிசியில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 69% இருக்கிறது. இதில் 5% பங்குகளை (42.7 கோடி பங்குகள், தற்போதைய மதிப்பில் ரூ.17,400 கோடி) விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அண்மையில் ஆயில் அமைச்சகத்துக்கு இந்த கம்பெனி சார்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.
மானியச்சுமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டபிறகு பங்கு விற்பனையில் இறங்கினால்தான் அதிக விலை கிடைக்கும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தகவல்.’’

‘‘பங்குச் சந்தை முதலீடு மூலம் தமிழக அரசு கணிசமான லாபம் அடைந்திருக்கிறதே?’’

‘‘என்எல்சி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு கிளம்பிய போது, பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு அந்த நிறுவனப் பங்குகளில் ரூ.223 கோடியை முதலீடு செய்தது. அது இப்போது ரூ.582 கோடியாக அதிகரித்துள்ளது. இரண்டரை வருட காலத்தில் பங்கின் விலை சுமார் 60% அதிகரித்து உள்ளது. மேலும், டிவிடெண்டாக மட்டும் 16 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. பங்கு மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகி இருக்கிறது.’’

‘‘முதல் காலாண்டு முடிவுகள் எப்படி வந்துகொண்டிருக்கிறது..?’’

‘‘பொதுவாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாப அதிகரிப்பை ஒட்டியே இதர நிறுவனங்களின் குறிப்பாக, ஐ.டி நிறுவனங்களின் லாப அதிகரிப்பு இருக்கும். ஆனால், இப்போது அப்படி இல்லை. இன்ஃபோசிஸைவிட பல ஐ.டி கம்பெனிகள் அதிக லாபம் ஈட்ட ஆரம்பித்திருக்கின்றன.

மைண்ட்ட்ரீ முதல் காலாண்டில், சந்தை எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி, 37% நிகர லாபம் ஈட்டியுள்ளது. பெரிய மதிப்பீட்டில் (மில்லியன் டாலர்) புராஜெக்ட்களை நிறைவேற்றி இருப்பது, இந்த நிறுவனத்தின் சேவைக்கு அதிக தேவை உருவாகி இருப்பது, ஃபார்ச்சூன் 100 நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிகரித்திருப்பது என பல காரணங்கள் இந்த லாப அதிகரிப்பின் பின்னணியில் இருக்கின்றன.

அடுத்து, டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில் 45% அதிகரித்துள்ளது. ஒருமுறை வருமானம் ரூ.490 கோடி இந்தக் காலாண்டில் வந்தது இந்த அதிக அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. அதேநேரத்தில், இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, இந்தியச் சந்தைகளில் இது 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்த பங்கின் மீது கண்வைக்கலாம்.

ஃபெடரல் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது. இதன் நிகர வாராக் கடன் கணிசமாக குறைந்து சொத்தின் மதிப்பு மேம்பட்டுள்ளது. இதனால் ரிஸ்க் ஒதுக்கீடு குறைந்துள்ளது. மேலும், நிகர வட்டி வருமானம் அதிகரித்துள்ளது. இதனால், வங்கியின் லாபம் கூடி இருக்கிறது.’’

‘‘ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் இணைக்கப்படலாம் என்கிற பேச்சு கிளம்பி இருக்கிறதே?’’

‘‘ன்ஃப்ரா மற்றும் குறைந்த விலை வீடு கட்ட நீண்ட கால பாண்டுகள் மூலம் திரட்டப்படும் நிதிக்கு சட்டப்படி ரிசர்வ் வங்கியில் வைக்கவேண்டிய தொகைகளுக்கு (எஸ்எல்ஆர் 22.5%, சிஆர்ஆர் 4%) விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. ஹெச்டிஎஃப்சியை ஹெச்டிஎஃப்சி பேங்குடன் இணைத்துவிட்டால், உள்கட்டமைப்புத் துறைக்காகத் திரட்டும் பணத்தைக் கடனாக தந்து நல்ல லாபம் பார்க்கலாமே என்பது இந்த இணைப்புக்கு சொல்லப்படும் ஒரு காரணம். அதெல்லாம் ஒன்றுமில்லை, இது கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் பேச்சுதான். இப்போது அதை கொஞ்சம் விரைவுபடுத்தி இருக்கிறார்கள். அவ்வளவுதான் என்று சொல்கிறவர் களும் உண்டு.’’

‘‘கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனம் தனது கன்ஸ்யூமர் பிரிவை பிரிக்கப் போகிறதாமே?’’

‘கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனம் அதன் லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கன்ஸ்யூமர் பிரிவை தனியாக பிரித்து பங்குச் சந்தையில் பட்டியலிட இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபத்தில் கன்ஸ்யூமர் பிரிவின் பங்களிப்பு 50 சத விகிதத்துக்குமேல்.’’

ஷேர்டிப்ஸ்: ஷேருச்சாமி ஏற்கெனவே தந்துவிட்டதால், அடுத்த வாரம் தருவதாக சொல்லிவிட்டார் ஷேர்லக்.