Published:Updated:

ஷேர்லக் - சந்தை 10% இறங்கும்!

ஷேர்லக் - சந்தை 10% இறங்கும்!

பிரீமியம் ஸ்டோரி

தலைநகர் சென்னையில் மாலை நேரத்தில் தவறாது மழை பெய்துவிடுவதால் (சில நிமிடங்கள்தான்), மழை கோட் போட்டபடி நம்மை சந்திக்க வந்திருந்தார் ஷேர்லக். கோட்டை கழற்றிவைத்துவிட்டு, நம்மோடு உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘கடந்த எட்டு நாட்களாக சென்செக்ஸ் 1034 புள்ளிகள் உயர்ந்தி ருக்கிறது. இதனால் கடந்த புதன்கிழமை அன்று 26272 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. 2014-ல் இதுவரைக்கும் சுமார் 25 சதவிகித வருமானத்தைத் தந்திருக்கிறது.

என்றாலும், வாரத்தின் இறுதி நாளான இன்று சரிந்துவிட்டது. இதற்கு காரணம், அடுத்த வாரத்தில்வரும் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரிதான் என்கிறார் கள். இந்த எக்ஸ்பைரிக்குமுன் செவ்வாய்க்கிழமை அன்று ரம்ஜான் என்பதால் அன்று சந்தை விடுமுறை. ஆக, எக்ஸ்பைரிக்குமுன் ஒரே ஒருநாள் தான் அவகாசம் கிடைக்கும் என்பதால் கான்ட்ராக்ட்டை பலரும் நேர்செய்ய முற்பட, சந்தை சரிந்திருக்கிறது.

இந்த இறக்கம் அடுத்த வாரத்திலும் தொடர வாய்ப்புண்டு என்கிறார்கள். சந்தை இப்போதிருக்கும் நிலையிலிருந்து சுமார் 10-15% இறங்கவும் வாய்ப்புண்டு என்றும் சில பெரிய புள்ளிகள் எச்சரிக் கிறார்கள்.

நிஃப்டி 7000 புள்ளிகள் வரை இறங்கலாம் என்கிறார்கள். அப்படி இறங்கும்பட்சத்தில், அருமையான வாய்ப்பு என்று நினைத்து, நல்ல பங்குகளை வாங்கிப்போடத் தவறாதீர்கள்’’ என்றவருக்கு, அவர் விரும்பி கேட்கும் ஆப்பிள் ஜூஸ் தந்தோம். அதை ரசித்துக் குடித்தவரிடம் நாம் அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

‘‘எஃப்ஐஐகளின் மூட் எப்படி இருக்கிறது?’’

‘‘அவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக் கொஞ்சம்கூட குறைய வில்லை. 2014-ல் இதுவரைக்கும் 1,200 கோடி டாலரை இந்திய பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். நம் நாட்டில் தொழில் துறை வளர்ச்சி காணும் என்கிற எதிர்பார்ப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதலே நிஃப்டி குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் இண்டஸ்ரியல் பங்குகளில் எஃப்ஐஐகள் முதலீட்டை உயர்த்தி வருகிறார்கள். இப்போது அது உச்சவரம்பை ஒட்டி 74% அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

அந்தவகையில், இனி எஃப்ஐஐகளின் முதலீடு கேப்பிட்டல் கூட்ஸ் நிறுவனப் பங்குகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல் அண்ட் டி, பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், கிராம்டன் கிரீவ்ஸ், சீமென்ஸ் இந்தியா, கும்மின்ஸ் இந்தியா போன்ற நிறுவனப் பங்குகளில் எஃப்ஐஐகளின் முதலீடு கூடிய விரைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்’’ என்றார்.

‘‘பட்ஜெட் அறிவிப்புகள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வரத்தொடங்கி இருக்கிறது?’’ என்று விசாரித்தோம்.

‘‘இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்கும் என்கிற பட்ஜெட் அறிவிப்பு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய் முதலீடு இந்தியா வுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேர்லக் - சந்தை 10% இறங்கும்!

அடுத்து, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களைப் பாதித்த ஒரு விஷயம் சரிசெய்யப்பட்டிருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரிச் சலுகை மாற்றியமைக்கப்பட்டது.

குறிப்பாக, கடன் ஃபண்டுகளுக்கு நீண்ட கால முதலீடு ஓராண்டு என இருந்தது மூன்றாண்டுகளாக மாற்றப் பட்டது. இது 2014 ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப் பட்டது.

இதனால், ஓராண்டுக்குள் முதலீட்டை வெளியே எடுத்த முதலீட்டாளர்கள், அதிக வரி கட்டும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்த முதலீட்டாளர் களின் வயிற்றில் பால்வார்க்கும் விதமாக ஜூலை 11-ம் தேதி முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெள்ளிக் கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டிருக் கிறார்’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் இந்தியா நிறுவனம், செபியின் ஆணையை நிறைவேற்றிவிடும் போலிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் இந்தியா நிறுவனத்தில் (எஃப்டிஐஎல்) எம்சிஎக்ஸ் நிறுவனம், 26% பங்கு மூலதனத்தை வைத்திருக்கிறது இதை 2 சதவிகிதமாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று செபி ஆணை பிறப்பித்தது.

ஏற்கெனவே 4% பங்கு மூலதனத்தை விற்றுவிட்ட நிலையில் மீதி உள்ள 22% பங்கு மூலதனத்தில் இருந்து 15% பங்கு மூலதனத்தை வாங்கிக்கொள்வதாக கோட்டக் மஹிந்திரா பேங்க் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்குபின் எம்சிஎக்ஸ் பங்கு விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இனி இந்த பங்கை ஃபாலோ செய்தால், பெரிய ஆபத்து இருக்காது’’ என்றார் உஷாராக.

‘‘யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கு விற்பனை மூலம் 300 கோடி ரூபாயை வெகுசுலபமாகத் திரட்டும்போல இருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘எல்லாம் எல்ஐசி கைங்கரியம்தான். முன்னுரிமை பங்கு ஒதுக்கீடு அடிப்படை யில் இந்தப் பணம் திரட்டப்பட இருக்கிறது. இந்த வங்கியானது பங்கு ஒன்றை ரூ.35.50 வீதம் 8.45 கோடி பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கு அரசின் அனுமதி கேட்கப்பட்டி ருக்கிறது.

கூடிய விரைவில் தொழில் அதிபர் விஜய் மல்லையா, ‘வேண்டும் என்றே தவறு செய்தவர்’ (வில்ஃபுல் டிஃபால்டர்) என்று அறிவிக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ரூ.4,022 கோடி கடன் பிரச்னையில் எஸ்பிஐ இந்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேர்லக் - சந்தை 10% இறங்கும்!

அப்படி அறிவிக்கப்பட்டால், விஜய் மல்லையா மீது கிரிமினல் நடவடிக்கை தொடங்கிவிடும். அவர் இனி எந்த வங்கியிலிருந்தும் கடன் வாங்க முடியாது’’ என்று புறப்படத் தயாரானவர், நாணயம் விகடனின் கமாடிட்டி பகுதியில் இடம்பெற்றிருந்த அறிவிப்பைப் பார்த்தார்.

''அட, நாணயம் விகடன் இணையதளத்தில் (nanayam.vikatan.com) கமாடிட்டி தொடர் ஆரம்பித்திருக் கிறீர்கள் போலிருக்கிறதே!

நம்மவர்கள் பங்குச் சந்தை போலவே, கமாடிட்டி சந்தையிலும் லாபம் பார்க்க விரும்புகிறார்கள். அவர்களில் பலருக்கு கமாடிட்டி சந்தை பற்றி அடிப்படை விஷயம் தெரியவில்லை. அவர்களுக்கு பயன்படும் விதமாக இந்தத் தொடர் இருக்கும் என்று நம்புகிறேன்’’ என்று, நம்மைப் புகழ்ந்தவர் புறப்படும் முன் தந்த ஷேர்டிப்ஸ் இதோ.

டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, யெஸ் பேங்க், எல் அண்ட் டி, சீமென்ஸ், அல்ட்ரா டெக், பவர்கிரிட், ஓஎன்சிஜி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு