Published:Updated:

SME கைடுலைன்

வங்கிகளைப் பயன்படுத்தி வளரும் வழிகள்!ச.ஸ்ரீராம்

SME கைடுலைன்

வங்கிகளைப் பயன்படுத்தி வளரும் வழிகள்!ச.ஸ்ரீராம்

Published:Updated:

எம்எஸ்எம்இகளின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதற்காக வங்கிகள் பல்வேறு தொழில் கடன்களை வழங்கி வருகின்றன. வங்கிகள் நடத்தும் இந்தத் திட்டங்கள் பற்றி எம்எஸ்எம்இகளுக்கு தெளிவாகத் தெரிவதில்லை. இதனால் தொழிலை திறமையாக செய்யத் தெரிந்திருந்தும் அதனை பெரிய அளவில் செய்ய முடியாமல்  கஷ்டப்படுகிறார்கள் பலர். எம்எஸ்எம்இகளுக்கு வங்கிகள் எந்தமாதிரி தொழில் திட்டங்களை வைத்திருக் கின்றன,  இந்தத் திட்டங்களை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்  என வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம். விளக்கமாகச் சொன்னார்கள் அவர்கள்.

''பொதுவாக, எம்எஸ்எம்இகளை இரண்டு வகையாகப் பிரிப்போம். ஒன்று, தயாரிப்பு அல்லது உற்பத்தி நிறுவனங்கள்; மற்றொன்று, சேவை நிறுவனங்கள். இந்த இரண்டு பிரிவு களிலும் அவர்களது முதலீட்டு அளவை பொறுத்து, அவர்களைக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் களாகப் பிரிக்கிறோம்.

உற்பத்தித் துறையை எடுத்துக் கொண்டால், இடம் மற்றும் இயந்திரங்கள் மீதான முதலீடு ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் அவர்களைக் குறுந் தொழில்முனைவோர் (Micro) எனவும், ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான முதலீடு இருந்தால் அவர்களை சிறு தொழில் முனைவோர் (Small) எனவும், முதலீடு ரூ.5 கோடிக்கு அதிகமாகவும், 10 கோடிக்கு மிகாமல் இருந்தால் அவர்களை நடுத்தரத் தொழில்முனைவோர் (Medium) எனவும் வகைப்படுத்துகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

SME கைடுலைன்

இதேபோல், சேவைத் துறையில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான முதலீடு உள்ளவர்களை குறுந்தொழில் முனைவோர் எனவும், ரூ.10 லட்சம் முதல் 2 கோடி வரை உள்ளவர்ளை சிறு தொழில்முனைவோர் என்றும், ரூ.2 கோடிக்கு மேல் 5 கோடி வரை உள்ளவர் களை நடுத்தரத் தொழில்முனைவோர் என்றும் மத்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைபடி, எம்எஸ்எம்இ சட்டம்

2006ன்படி வகைப்படுத்தப்பட்டுள் ளனர். இந்தப் பிரிவுகளின்படிதான் எம்எஸ்எம்இகள் வங்கிகளிடமிருந்து பயன்களைப் பெற முடியும்.

புதிதாகத் தொழில்  தொடங்குபவர்கள் வங்கிகளின் இந்த வகைப்பாட்டைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்கள் கட்டுமானம் மற்றும் இயந்திரங்கள் மீதான முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

எம்எஸ்எம்இகள் வங்கிகளைப் பெரிதும் அணுகுவது அவர்களுக்கான நிதித் தேவையைப் பெறத்தான்.  வங்கிகள் அவர்களுக்கு இரண்டுவிதமான நிதிச் சேவைகளை அளிக்கிறது. ஒன்று, நேரடி நிதிச் சேவை. அதாவது, அவர் களுக்குப் புதிதாக தொழில் தொடங்க அவர்களது திட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கடன் வழங்குவது. அல்லது அவர்கள் தொழிலுக்கு ஏற்றவாறு கடன் வசதி செய்து தருவது. மற்றொன்று, அரசின் மானியங்களை வங்கிக் கணக்கு வாயிலாகப் பெற்றுத் தருவது.

அதுமட்டுமின்றி, எம்எஸ்எம்இகளுக்குக் கடன் வழங்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கும் மற்ற கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் வங்கிகள் கடன் வழங்கி உதவுகின்றன. எம்எஸ்எம்இ சட்டத்தின்படி, ஒதுக்கப்படும் வங்கிகள் தாங்கள் கடன் வழங்குவதில் குறிப்பிட்ட சதவிகிதத்தை எம்எஸ்எம்இகளுக்கு ஒதுக்கவேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துள்ளன.

SME கைடுலைன்

வங்கிகள் அளிக்கும் சலுகைகள்:

1. முறையான திட்டங்களுடனும், வங்கிக் கணக்கை திருப்தியளிக்கும் வகையிலும் பராமரிக்கும் எம்எஸ்எம்இகளுக்குக் கடன் வழங்க பட்டியல் இடப்பட்ட வங்கிகள் ஒரு கோடி ரூபாய் வரை உத்தரவாதமில்லாக் கடனையும் மற்ற வங்கிகள் அவர்களது திட்ட மதிப்புக்கேற்ப குறிப்பிட்ட அளவில் உத்தரவாதமில்லாக் கடனையும் வழங்குகின்றன.

2. தனிநபர்கள் நிறுவனம் ஆரம்பிக்கவும், அதற்கான இயந்திரங்கள் வாங்கவும் எம்எஸ்எம்இகளுக்கு வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன.

3. எம்எஸ்எம்இகளுக்கென தனிப் பிரிவையும், சில வங்கிகள் தனிக் கிளையையும் அமைத்து நிதி மற்றும் வங்கி ரீதியான அனைத்து சேவையையும் வழங்கி வருகின்றன.

4. எம்எஸ்எம்இகளுக்கு நிதி குறித்த ஆலோசனைகளையும், எப்படி நிதியைக் கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வையும் வங்கிகள் சிறப்புப் பயிற்சிகள் மூலம் வழங்கு கின்றன.

SME கைடுலைன்

5. கிளஸ்டர் என்ற கூட்டுத் தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி, அதற்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து வரும் மானியங்களை வங்கிகள் மூலம் பெற்று எஸ்எம்இகள் பயனடைகின்றனர்'' என்றனர் வங்கி அதிகாரிகள்.

இதுதவிர, எஸ்எம்இகள் தங்கள் கணக்கை தனி நிறுவனத்தின் பெயரிலோ ஒரு கூட்டமைப்பின் பெயரிலோ துவங்கலாம். கடன் வழங்குதல் அதற்கான உத்தரவாதம் ஆகியவற்றில் சாதாரணக் கணக்குகளைக் காட்டிலும் எம்எஸ்எம்இகளின் கணக்குகளுக்கு சிறப்புச் சலுகைகளும், அவர்கள் ஒழுங்காகக் கணக்குகளைத் தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு அடுத்தடுத்த கடன்களின்போது முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றன.

உற்சாகமாகத் தொழில் செய்ய நினைக்கும் எம்எஸ்எம்இகள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திப் பயனடையலாமே!

எஸ்.எம்.இ தொழில்முனைவோர் கவனத்துக்கு...

உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் உங்களுக்கான பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: msme@vikatan.com   குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம். அதற்கு 044-66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism