Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

டாக்டர் சங்கர சரவணன்

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

டாக்டர் சங்கர சரவணன்

Published:Updated:

ரூபாய்-1

இந்திய அரசு 1991-ம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதில், தாராள மயமாதல் (Liberalization), தனியார் மயமாதல் (Privatization), உலகமயமாதல் (Globalization) ஆகிய மூன்று கொள்கை களும் அடங்கும். இந்த மூன்று கொள்கை களில் மிக முக்கியமானது, உலகமயமாதல். உலகமயமாதல் என்பது பொருளாதார மேதை டேவிட் ரிக்காடோவின் ஒப்பீட்டு விலைப் பயன் (Comparative cost Advantage) கொள்கையின் அடிப்படையில் தோன்றியது.

ஒப்பீட்டு விலைப் பயன் கொள்கை என்பது ஒரு நாடு எந்த உற்பத்திப் பொருளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு  வசதிகளைப் பெரும் பொருள்செலவில் உருவாக்கி இருக்கிறதோ, அந்த உற்பத்தி பொருளையே தன் நாட்டுத் தேவைக்கும், பிற நாட்டுத் தேவைகளுக்கும் உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவானது.

இரு நாடுகளுக்குத் தலா இருவேறு உற்பத்திப் பொருள்கள் தேவைப்படுகிற பட்சத்தில் அந்த உற்பத்திப் பொருள் களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை இரு நாடுகளும் தனித்தனியே உருவாக்குவதைவிட, தலா ஓர் உற்பத்திப் பொருளுக்கான கட்டமைப்பு வசதியை உருவாக்கி, தாங்கள் உருவாக்காத உற்பத்திப் பொருளை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதே லாபகரமானது என்பதே ஒப்பீட்டு விலைப் பயன் கொள்கை ஆகும்.

கம்யூனிஸ மற்றும் சோசலிஷ கொள்கைகளில் நம்பிக்கைக் கொள்வோர் உலகமயமாக்கல் என்பது மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவம், உலகின் பிற பாகங்களில் கால் பதிக்கிற செயல் என்பார்கள். முதலாளித்துவக் கொள்கையின் காதலர்கள் உலக மயமாக்கல் என்பது ஒப்பீட்டு விலைப் பயன் அடிப்படையில் உலக நாடுகளை உயர்த்தும் உன்னதக் கோட்பாடு என்பார்கள்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

 ரூபாய்-2

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் உலகமயமாக்கல் இந்தியாவின் மூத்த குடிமக்களை எவ்வாறு பாதித்தது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘ஊறுகாய் பாட்டிலுடன் ஊருக்குச் சென்று, ஊறுகள் பல பெற்று, உள்ளூர் திரும்பும் மூத்த குடிமக்கள்’ என்று எங்கோ ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது நினைவுக்கு வருகிறது. உலகமயமாக்கலின் விளைவாகத் தங்கள் மகனும், மருமகளும் அமெரிக்காவில் வேலை பார்ப்பதால் வயது முதிர்ந்த காலத்தில் ஆறு மாதம் அங்கே சென்று குழந்தைகளைக் கவனித்து, குளிர் தாங்கமுடியாமல் தாய் நாடு திரும்பி வந்து, தனிமையில் வாடி மீண்டும் அடுத்த ஆண்டு அமெரிக்கா வுக்குப் பயணமாகும் அப்பாவி மூத்த குடிமக்களைப் பற்றிதான் மேற்படி கேள்வி ஆராயச் சொல்கிறது.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

பேரன் அமெரிக்கக் குடிமகன் என்றும், பேத்தி பேசும் அமெரிக்க ஆங்கிலம் தங்கள் மகன், மருமகளுக்கே புரியவில்லை என்றும் உள்ளூர் திரும்பி அமெரிக்காவின் சிறப்புகளை மூத்த குடிமக்கள் ஆரவாரித்துக் கொண்டா லும், அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லக்கூட அருகில் ஆதரவாக யாரும் இல்லையே என்ற கவலை அவர்களை வாட்டத்தான் செய்கிறது. வர்த்தகம், அந்நிய முதலீடு, மனித வளம், தொழில்நுட்ப பரிமாற்றம், வேலைவாய்ப்பு போன்றவற்றால் வளர்ந்து வரும் நாடுகள் உலகமயமாக்கல் மூலம் பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடுகளின் தரத்தை எட்டிப்பிடிக்கும் என்று சொல்லும் பொருளாதார அறிஞர்களும் உண்டு.

 அந்நிய முதலீடும், தொழில் நுட்பங்களும் வளரும் நாடுகளின் வருவாயையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்றாலும், இந்த வாய்ப்பு கிடைக்காத நாடுகளில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும்தான் மிஞ்சுகின்றன என்று உலகமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்களை எடுத்து வைக்கின்றன ஜி77 போன்ற உலக அமைப்புகள். உலகமயமாக்கல் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை மேன்மேலும் அதிகரிக்கிறது என்ற கருத்தை தீவிரமாக முன்வைக்கிறது உலக சமூக அமைப்பு (World Social Forum).

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகள் விவசாய விளைபொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிகிறது. விவசாய விளைபொருட்களின் விலை, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுவதால், முன்னேறிய நாடுகள் தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து, அதிக லாபம் ஈட்டும் அளவுக்குப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகள் ஈட்ட முடியவில்லை என்ற கருத்தும் கவனிக்கத்தக்கது.

உலகமயமாக்கல் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக அமைவதாகக் குற்றம் சாட்டுகிற கிரீன்பீஸ் (Greenpeace) போன்ற உலகச் சுற்றுச்சூழல் அமைப்பு கள் சுற்றுச்சூழலோடு நாடுகளின் கலாசாரமும் சேர்ந்தே கெடுகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றன. உலக மயமாக்கல் கலாசாரத்தின் பன்முகத் தன்மையை அழித்து, உலகம் தழுவிய ஒற்றைத் தன்மை கொண்ட கூட்டுக் கலாசாரத்தை உருவாக்க முனைவதற்கும் கடும் எதிர்ப்புகள் எழுகின்றன. ஆனால், நகரங்களில் வாழும் இளைய தலைமுறை உலகமயமாக்கல் கலாசாரத்தைத் தங்கள் வாழ்வில் வந்த வசந்தமாகப் பார்க்கிறது.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

பெப்ஸி, கோலா பானங்கள் நம்மூர் கலர் சோடா பானங்களை அழித்ததும், பீட்சாவும், பர்கரும் ஐயோ வடை போச்சே என்று நம்மை வருத்தப்பட வைத்ததோடு மட்டுமல்லாமல், இப்போது  பன்னாட்டு உணவுக் கூடங்களே உள்நாட்டு உணவுப் பதார்த்தங்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளன. அதாவது, இப்போது உலகமயமாக்கலால் கேஎஃப்சியிலும், மெக்டொனால்டிலும் இந்திய உணவுகள் கிடைக்கிறது. Glocalization என்பது Globalization மற்றும் Localization என்ற இரண்டு வார்த்தைகளின் சேர்க்கை. இதைத் தமிழில் உலகலூர்மயமாக்கல் என்று சொல்லலாமா அல்லது உலக உள்ளூர்மயமாக்கல் என்று சொல்லலாமா என்று அக்கம் பக்கத்துத் தமிழ் ஆர்வலர்களை விசாரியுங்கள்.

உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்கு உலகமயமாக்கல் ஊறுவிளைவித்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தேசப்பிதா மகாத்மா காந்தி ஒருமுறை, ‘‘வெளியில் உள்ள காற்று ஜன்னல் வழியாக வந்து எனக்கு இதமாக இருந்தால் ஜன்னலை தொடர்ந்து திறந்து வைப்பேன். அதே காற்று வீட்டு வாசல் வழியாக நுழைந்து என்னுடைய அறைப்பொருள்கள் அனைத்தையும் கலைத்துப்போடுமானால் ஜன்னல் கதவுடன் சேர்த்து வீட்டுக் கதவையும் மூட வேண்டி வரும்’’ என்றார்.
உலகமயமாக்கல் ஜன்னல் வழியே நுழைந்து இதம் தரும் காற்றா? வீட்டுக்கதவு வழியே நுழைந்து அடுக்கியிருக்கும் பொருள்களைக் கலைத்துபோடும் காற்றா? என்ற பட்டிமன்றம் பொருளாதார அரங்கில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தீர்ப்புதான் இன்னும் தெளிவாக வரவில்லை.

ரூபாய்-3

2014-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு சமீபத்தில் நடந்தது. மூன்று வாரங்களுக்குமுன், அந்த குரூப்-1 தேர்வில் எப்படிப்பட்ட கேள்விகள் வரவாய்ப்புண்டு என்பதை 2013-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கியிருந்தோம். அதில் வருடம் சார்ந்த பொருளாதாரக் கேள்விகள் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வருடந்தோறும் தவறாமல் கேட்கப்படுவதைச் சுட்டிக்காட்டி யிருந்தோம். இந்த ஆண்டும் அவ்வாறு வருடம் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதையும், நாணயம் விகடன் கட்டுரை தந்த மேற்படி வழிகாட்டுதலால் பயனடைந்ததாகவும் கும்பகோணத்திலிருந்து சக்திவேல் என்ற வாசகர் அலைபேசியில் நம்மிடம் தெரிவித்தார்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (விடை 1999), பொகாரோ எஃகு உற்பத்தி ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு (1973) போன்ற கேள்விகள் அதற்கு உதாரணம்.

இந்தத் தேர்வில் ஆளுமை சார்ந்த கேள்விகளாக (Personality Based Questions) இரண்டு பொருளாதாரக் கேள்விகள் வந்தன. இந்தியாவில் வறுமையை மதிப்பீடு செய்யும் நெறிமுறையை வகுக்கும் குழு 2009-ம் ஆண்டு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது என்ற கேள்வியும் (விடை சுரேஷ் டெண்டுல்கர்), இந்தியாவில் செலவு வரியை (expenditure tax) அறிமுகப்படுத்தியவர் யார்? என்ற கேள்வியும் (விடை டி.டி.கிருஷ்ணமாச்சாரி) கேட்கப்பட்டிருந்தன.

2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறப்பு மண்டலம் குறித்த சட்டத்தின் குறிக்கோள் மற்றும் 2004-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய சந்தை நிலைப்படுத்தும் திட்டம் ஆகியவை பற்றிய கேள்விகளும் வந்தன. 2014-ம் ஆண்டு் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட மேலும் இரு பொருளாதாரக் கேள்விகளைப் பார்ப்போம்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

1. கீழே தரப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வு செய்து, தரப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

கூற்று (A): வங்கி வட்டாரத்தில் ‘ரத்னாகர்’ வங்கியை ‘நான்காம் நெடுஞ்சாலை வங்கி’ என அழைக்கின்றனர்.

காரணம் (R) : இந்த வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், நெடுஞ்சாலை யில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

(a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. (A) வின் சரியான விளக்கம் (R) ஆகும்.
(b)  (A) சரி (R) தவறு
(c)    (A) சரி ஆனால் (A)விற்கு (R) சரியான விளக்கம் அல்ல
(d) (A) மற்றும் (R) இரண்டுமே தவறு

2. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்க

கூற்று (A) : புதிய பொருளாதாரக் கொள்கைப்படி, உலகமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.
காரணம் (R) : உலகமயமாதல் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்புக்கான செலவை அதிகரிக்கிறது.

இவற்றுள் சரியான விடை எது?

(a) (A) சரியானது ஆனால் (R) தவறானதாகும்.
(b) (A) தவறானது ஆனால் (R) சரியானதாகும்.
(c) (A) மற்றும் (R) இரண்டும் தவறானவை.
(d) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) - (A)க்கான விளக்கம் அல்ல.

மேலே குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்குமான விடைகளை இப்போது பார்க்கலாம். முதல் கேள்விக்கான விடை (a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. (A)-வின் சரியான விளக்கம் (R) ஆகும். ரத்னாகர் வங்கி NH-4 வங்கி என்று அழைக்கப்படுவது வங்கி வட்டாரத்தில் நன்கு தெரிந்த ஒரு விஷயம். 1235 கி.மீ. நீளம் கொண்ட NH-4ல் உள்ள மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் தனது வங்கிப் பணியைச் சிறப்பாக மேற்கொள்கிறது.

 2014-ம் ஆண்டில் இதன் கிளைகளின் எண்ணிக்கை 200-ஆக உயர்த்தப்படும் என்றும், NH-8லும் கிளைகள் தொடங்கப்படும் என்றும் அந்த வங்கி அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டே மேற்படி வினா கேட்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கேள்விக்கான சரியான விடை (a) (A) சரியானது, ஆனால் (R) தவறானது என்பதாகும். ஏனெனில், புதிய பொருளாதாரக் கொள்கைப்படி, உலகமயமாக்கல் வளர்ச்சிக்கான ஒரு கருவி.
அதே சமயத்தில் உலகமயமாக்கல் போக்குவரத்து,தொலைத்  தொடர்புக்கான செலவை இணையப் பயன்பாட்டின் காரணமாகப் பெருமளவுக்குக் குறைத்துள்ளது. உலக மயமாக்கல் காரணமாக அமெரிக்கா அடுத்த வீடாகிவிட்டது. ஆனால், அடுத்த வீடுதான் அமெரிக்காவாகி விட்டது என்ற கூற்றையும் நீங்கள் கேட்டிருக்கலாம்.  

(தயாராவோம்)