Published:Updated:

SME கைடுலைன்

எஸ்எம்இ-களின் நிரந்தர வெற்றிக்கு 7 வழிகள்!ச.ஸ்ரீராம்

SME கைடுலைன்

எஸ்எம்இ-களின் நிரந்தர வெற்றிக்கு 7 வழிகள்!ச.ஸ்ரீராம்

Published:Updated:

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

இன்று சிறிய அளவில் தொழில் நடத்தி வருகிறேன். அதனை விரிவுபடுத்தும் எண்ணமும் உள்ளது. ஆனால், இந்தத் தொழிலை நான் எத்தனை நாளுக்குச் சிறப்பாகச் செய்வேன் என்பது தெரியவில்லை.

பெரிய நிறுவனங்கள் அளவுக்குத் தொழிலை உயர்த்த முடியுமா, என் தொழிலை  நிரந்தரமாக வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும், இதற்கு நான் என்னை எப்படி தயார் செய்துகொள்ள வேண்டும்? எஸ்எம்இகளின் மனதில் இருக்கும் இதுபோன்ற கேள்விகளை பிசினஸ் கன்சல்டன்டான சேகர்சான் நிறுவனத்தின் சிஇஓ ஆர்.சேகரிடம் கேட்டோம். அவர் சொன்ன பதிலைத் தெரிந்துகொள்ளும் முன் அவரைப் பற்றி ஒருசில வரிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாணயம் விகடனில் ஏற்கெனவே பல கட்டுரைகளை எழுதியுள்ள சேகர், சமீபத்தில் 'பிசினஸ் 20:20’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். கோல்ட்ராட் எழுதிய 'கோல்’ (சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, விகடன் பிரசுரத்தில் புத்தகமாகவும் கிடைக்கிறது!) புத்தகம் தந்த 'இன்ஸ்ப்ரேஷனில்’ இந்த புத்தகத்தை எழுதியதாகச் சொல்கிறார் சேகர். ஒரு பிசினஸ் என்பது எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அருமையான கதாபாத்திரங்கள் மூலம் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். சென்னையில் உள்ள புராடக்டிவிட்டி அண்ட் குவாலிட்டி பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

இனி சேகர் சொல்லும் நிரந்தர வெற்றிக்கான ஏழு வழிகளைப் பார்ப்போம்.

SME கைடுலைன்

1 எங்கு இருக்கிறீர்கள்?

''முதலில் உங்கள் நிறுவனம் எந்த நிலையில் உள்ளது, அதன் நிதி நிலைமை எப்படி உள்ளது, அதற்கு ஏற்ற கடனைத்தான் நீங்கள் வங்கியில் வாங்கியிருக்கிறீர்களா என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுத் தெளிவு பெறுங்கள். உண்மைநிலை என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். உதாரணமாக, ஒருவர் இரண்டு விலை அதிகமுள்ள கார்களை சமுதாய அந்தஸ்துக்காக வாங்கி வைத்துக்கொண்டு, என் தொழிலில் நஷ்டம் உண்டாகிறது என்று கூறினால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கார் வாங்கும் பணத்தை நீங்கள் தொழிலில் முதலீடு செய்திருந்தால், அது உங்களுக்கு லாபம் சம்பாதித்துத் தந்திருக்குமே! எனவே, உங்கள் இன்றைய நிலையை விருப்பு, வெறுப்பு இல்லாமல் அலசி ஆராயுங்கள்.

2 சமயோஜித அறிவு!

உங்கள் நிறுவனம் லாபத்திலோ அல்லது நஷ்டத்திலோ இருந்தால், அப்போது சமயோஜித அறிவோடு செயல்பட வேண்டியது அவசியம். ஒருவேளை நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அதனை எப்படி லாபகரமாக்குவது, அதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்த விஷயங்களை அறிந்து, அதற்குத் தீர்வு காண முயல வேண்டும். அல்லது லாபத்தில் இருந்தால், அதனை எப்படி வாய்ப்பாக மாற்றிக்கொள்வது என்பது குறித்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

SME கைடுலைன்

3தெளிவான பார்வை!

இன்று தொழில் செய்கிறேன்; ஏதாவது ஒரு பிரச்னை வந்தால், எப்படியாவது சமாளிப்பேன் என்கிற நோக்கில் உங்கள் தொழிலை நீங்கள் செய்தால், அது உங்களுக்கு நிரந்தர வெற்றியைத் தராது. அதற்கான சரியான மற்றும் தெளிவான பார்வை உங்களிடம் இருக்க வேண்டியது கட்டாயம். உங்களது இலக்கு என்ன, அதனை எப்படி அடையப்போகிறீர்கள் என்பதை உங்கள் தெளிவான பார்வை மட்டுமே தீர்மானிக்கும். உங்கள் தேவை என்ன, அதற்காக நீங்கள் பெறும் நிதி எவ்வளவு, அதற்கு எவ்வளவு வட்டி கட்டப்போகிறீர்கள் என எல்லா விஷயங்களிலும் உங்கள் பார்வை மிகத் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.

4காலத்தை நிர்ணயித்தல்!

உங்கள் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கியபின் நேரம் என்பது உங்கள் தொழிலின் முக்கிய அம்சமாக மாறத் தொடங்கிவிடும். ஒரு ஆர்டரை எடுக்கும்முன் அதனைச் செய்துமுடிக்க உங்களிடம் எவ்வளவு கால அவகாசம் உள்ளது, இதற்கேற்ற வசதி உங்களிடம் உள்ளதா என்பதையெல்லாம் ஆராய்ந்து, அதற்கேற்ப ஆர்டர்களை வாங்கி, அதை தரமாக, உரிய நேரத்தில் செய்து தருவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த நம்பிக்கை உங்கள் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் பெரிய பங்காக இருக்கும். ஆகவே, உங்கள் காலத்தைச் சரியாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்

5உங்களது ரிஸ்க் லெவல் என்ன?

எஸ்எம்இகள் பலர் தாங்கள் செய்துவரும் தொழிலில் ஓரளவுக்கு வருமானம் வருகிறது. நான் ஏன் தேவை யில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலரோ, அதிக லாபம் வரும் என்ற ஆசையில் தவறான கணக்கைப்போட்டு தங்கள் சக்திக்கு மீறி அதிக ரிஸ்க் எடுத்து நஷ்டத்துக்கு உள்ளாவார்கள். சரியான திட்டமிடல் இல்லாததே இதற்குக் காரணம். நீங்கள் செய்யும் தொழில் என்ன, அதில் உள்ள ரிஸ்க் என்ன, அந்த ரிஸ்க்கை நீங்கள் எந்த அளவுக்கு எடுக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற் கேற்றவாறு உங்களைப் படிப்படியாக உயர்த்திக்கொள்வது நிரந்தர வெற்றிக்கு அவசியம்.

SME கைடுலைன்

6எல்லைகளை விரிவுபடுத்துங்கள்!

SME கைடுலைன்

நான் சிறிய அளவில்தான் தொழில் செய்கிறேன்; என்னால் இதற்குமேல் தொழில் செய்வது இயலாத காரியம். அப்படிச் செய்தால் எனக்கு லாபம் கிடைக்குமா என்று யோசிப்பவர்கள் அதிகம். உங்களது இலக்குகள் என்பது குறுகிய எல்லை களுக்குள் இருக்கக்கூடாது. என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் என திருபாய் அம்பானி நினைத்திருந்தால், ஜவுளித் தொழிலில் ஆரம்பித்து பெட்ரோல் சுத்திகரிப்பு செய்யும் தொழில் வரை அவர் உயர்ந்திருக்க மாட்டார். உங்களது இலக்குகளுக்கான எல்லைகளைக் குறுகிய வட்டத்துக்குள் நிர்ணயிக்கும்போது, உங்கள் தன்னம்பிக்கையும் சிறிய வட்டத்திலேயே அடங்கிவிடும். எனவே, உங்களது எல்லைகளை விரிவுபடுத்துங்கள்.

7.நிறுவனத்தின் அமைப்பு!

உங்கள் நிறுவனத்தைச் சிறிய அளவிலிருந்து பெரிய அளவுக்கு லாபகரமானதாக மாற்ற உங்கள் நிர்வாக அமைப்பிலும் நீங்கள் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களின் தனித் திறமையைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தொழில் வளர்ச்சிக்காக சில முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரத்தை அவர்களுக்குத் தரவேண்டும்.

SME கைடுலைன்

இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினாலே போதும், சிறிய அளவில் தற்போது இருக்கும் உங்கள் தொழில், எதிர்காலத்தில் நிரந்தர வெற்றி தரும் பெரிய நிறுவனமாக மாறும்'' என்று முடித்தார்  சேகர்.

சிறிய அளவில் செய்துவரும் தொழிலை பெரிதாக வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற ஆசை பல எஸ்எம்இ களுக்கு உண்டு. அவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாமே!

எஸ்.எம்.இ தொழில்முனைவோர் கவனத்துக்கு...

உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் உங்களுக்கான பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: msme@vikatan.com குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம். அதற்கு 044-66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism