மஞ்சள் (Turmeric)
மஞ்சளின் தேவை குறைவாக இருந்ததாலும், அதிகமான வரத்து காணப்பட்டதாலும் கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. அதுமட்டுமல்லாமல், அதிக மழைப்பொழிவின் காரணமாக சாங்லி ரக மஞ்சள் விளைச்சலில் சேதம் ஏற்பட்டுள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் ஏப்ரம் - மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 88,513 டன்களாக இருந்த மஞ்சள் ஏற்றுமதி குறைந்து, தற்போது 77,500 டன்களாக இருக்கிறது.
ஆந்திரபிரதேச மாநிலத்தின் வேளாண்மைத் துறை 6-ம் தேதி நிலவரப்படி 7,508 ஹெக்டேர் அளவில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டுபார்க்கும்போது 367 ஹெக்டேர்கள் குறைந்துள்ளது. அதேசமயம், தெலுங்கான மாநிலத்தில் 34,933 ஹெக்டேர்களாக இருந்த மஞ்சள் பயிர் விதைப்பு 41,510 ஹெக்டேர்களாக உயர்ந்துள்ளது.
நிஜாமாபாத் மற்றும் ஈரோடு மஞ்சள் மண்டிகளில் கடந்த வார புதன்கிழமை வரத்துக்கள் முறையே 1,800 மற்றும் 6,000 பைகளாக (ஒரு பை என்பது 75 கிலோ) இருந்தன. கடந்த வாரத்தின் புதன்கிழமை அன்று ஹைபிரிட் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 7,169 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது இதற்கு முந்தைய நாளைவிட 300 ரூபாய் குறைவாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜீரகம் (Jeera)
உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு மற்றும் உலக நாட்டுச் சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. சந்தை நிலவரப்படி, குஜராத் மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் உஞ்ஹா சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
கடந்த வாரம் புதன்கிழமையில் மட்டும் உஞ்ஹா சந்தைக்கு வரத்து 8,000 பைகளாக (ஒரு பை என்பது 55 கிலோ) இருந்தது.

2013-14-ம் நிதி ஆண்டின் ஏப்ரல்-மார்ச் மாதங்களில் ஜீரகத்தின் ஏற்றுமதி 42% அதிகரித்து, 1,21,500 டன்களாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 85,602 டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. விலை மதிப்பீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, ஜீரகம் ஏற்றுமதி 39% அதிகரித்து, 1.6 பில்லியன் ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.2 பில்லியன் ரூபாய் அளவுக்கு ஜீரகம் ஏற்றுமதியாகி இருந்தது. நடப்பு 2014-13-ம் நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜீரகத்தின் ஏற்றுமதி அளவு 41,000 டன்னாக உள்ளது.
வழக்கம்போல துருக்கி மற்றும் சிரியாவில் நிலவிவரும் அரசியல் பதற்றம் காரணமாக உலகச் சந்தைகளில் சப்ளை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. அந்த இரு நாடுகளில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் காரணமாக ஜீரக உற்பத்தியானது குறையும். ஏற்றுமதி தேவை அதிகமாக இருப்பதால் வருகிற வாரத்திலும் ஜீரகத்தின் விலையானது அதிகரித்து வர்த்தகமாகும்.
சென்னா (Chana)
விழாக்காலத் தேவை அதிகரிப்பு மற்றும் குறைந்த வரத்துக் காரணமாகக் கடந்த வாரத்தில் சென்னாவின் விலை அதிகரித்து வர்த்தகமானது. வேளாண்மை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையில், ஆகஸ்ட் 7-ம் தேதி நிலவரப்படி, காரீஃப் பருவ பருப்பு வகைள் பயிர் விதைப்பானது 7.61 மில்லியன் ஹெக்டேர் அளவு காணப்படு கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 8.9 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.

வேளாண்மை அமைச்சகம் தரும் தகவல்களின்படி, ராபி பருவ பருப்பு வகைகள் பயிர் விதைப்பானது 2013-14ல் 161.9 லட்சம் ஹெக்டேர்களாக உள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 152.65 லட்சம் ஹெக்டேர்களாக இருந்தன. அதேபோல, ராபி சீஸனில் சென்னா பயிர் விதைப்பும் அதிகரித்து 10.21 மில்லியன் ஹெக்டேர்களாக உள்ளது. விழா காலத் தேவை அதிகமாக இருப்பதால், சென்னாவின் விலைக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் வருகிற வாரங் களிலும் சென்னா விலையானது அதிகரித்து வர்த்தகமாகும்.
கடுகு விதை (Mustard seed)
கடுகு மீல் ஏற்றுமதி தேவை காரணமாக கடந்த வாரத்தில் கடுகு விதையின் விலை சற்றே அதிகரித்து வர்த்தகமானது. ஜூலை, 2014 நிலவரப்படி, கடுகு மீல் ஏற்றுமதியானது 114.26% அதிகரித்து, 87,637 டன்களாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 40,902 டன்களாக இருந்தது. 2013-14 நிலவரப்படி, கடுகு விதை பயிர் விதைப்பானது 7.13 மில்லியன் ஹெக்டேராக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.73 மில்லியன் ஹெக்டேராக இருந்தது. ஆனால், வேளாண்மை அமைச்சகத்தின் மூன்றாவது அட்வான்ஸ் எஸ்டிமேட்படி, 2013-14-ம் ஆண்டுக்கான கடுகு விதை உற்பத்தி 7.8 மில்லியன் டன்களாகும். இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 2.9% குறைவு. கடுகு மீல் ஏற்றுமதி தேவை, குறைவான வரத்து, குறைந்த உற்பத்தி போன்ற காரணங்கள் வருகின்ற வாரத்தில் கடுகு விதை விலைக்கு சாதகமாக அமையும்.
