Published:Updated:

ஹோம் பட்ஜெட்

வீட்டுச் செலவை சமாளிக்க... சின்னச் சின்னதாக சில தொழில்கள்! இரா.ரூபாவதி படங்கள்: எம்.உசேன், தே.தீட்ஷித்.

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை யில் பெண்கள் வேலைக்குப் போவது என்பது தேவையான ஒன்றாக உள்ளது. ஏனெனில், ஒருவர் சம்பாதித்து குடும்பத்தைச் சமாளிப்பது கடினமான காரியமாகவே உள்ளது. ஆனால், பெண்கள் வேலைக்குப் போவதற்கு ஏதுவான சூழல் இல்லை.

திருமணத்துக்குமுன் வேலைக்குப் போகும்போது திறம்படச் செயல்பட முடியும். அதுவே திருமணத்துக்குப்பின் குடும்பம், குழந்தைகள் என பல பிரச்னைகள் உருவாகும். குழந்தை பிறப்புக்குப் பிறகு பெண்கள் வேலைக்குப்போவது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்றாலும், வீட்டிலிருந்தபடியே சின்னச் சின்னதாக சில தொழில்களைச் செய்வதன் மூலம் நிறையவே சம்பாதிக்க முடியும். அப்படிப்பட்ட சில தொழில்களைச் சொல்கிறார் சென்னை கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ மையத்தின் உதவி இயக்குநர் புனிதவதி.

“இன்றைய காலகட்டத்தில் சாப்பாடு மற்றும் அழகு சார்ந்த விஷயங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. நீங்கள் வசிக்கும் பகுதியில் அதிகமான பெண்கள் வேலைக்குப் போகக்கூடிய வராக இருந்தால், அவர்களின் தினசரி வீட்டு வேலையைக் குறைக்கும் வகையிலான வேலைகளைச் செய்துகொடுத்து காசு பார்க்கலாம். உதாரணமாக, கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் காலையில் காய்கறி நறுக்குவது ஒருவேலையாக இருக்கும்.

ஹோம் பட்ஜெட்

இதைச் சுலபமாக்கும் வகையில் வீட்டிலிருக்கும் பெண்கள் இந்த வேலையைச் செய்துதரலாம். மலிவான விலையில் காய்கறிகள் கிடைக்கும் இடத்தில் வாங்கி அவரவர் தேவையின் அடிப்படையில் நறுக்கித் தரலாம். தரமான காய்கறிகளாக இருப்பது, சரியான நேரத்தில் வாடிக்கையாளர் களுக்குக் கொடுப்பது என்பது முக்கியம்.

அடுத்து, சமையலுக்குத் தேவைப்படும் பொடிகளுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது. அதாவது, சாம்பார் பொடி, மிளகாய் பொடி, ஊறுகாய், ஜூஸ் போன்றவை சந்தையில் கிடைக்கிறது. ஆனால், வீடுகளிலிருந்து செய்துதரும் பொடிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதில் தரம் மற்றும் சுவையின் அடிப்படையில் உங்களின் விற்பனையைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ஹோம் பட்ஜெட்

பியூட்டி பார்லர் தொழிலுக்கு இன்று அதிக வரவேற்புள்ளது. இன்று ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்குத் தனியாகக் கடை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

 அழகு சார்ந்த விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தால் போதும். தேவையிருக்கும் பெண்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று செய்யலாம். இந்தத் தொழிலில் உங்களின் திறமையின் அடிப்படையில் தான் வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை உயரும்.

அடுத்து, இயற்கையை நோக்கி பலரும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, செடி வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். உங்களுக்கு செடி வளர்க்கும் இடம் இருந்தால், சின்னச் சின்ன செடிகளைப் பதியம் செய்து, அதை விற்பனை செய்யலாம். இது 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

ஜுவல்லரி தயாரிப்பு, பிளவுஸ் மற்றும் புடவையில் டிசைன் போட்டு தருவது போன்ற வேலைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஏனெனில், இன்றைய சூழலில் சாதாரணமாக ஒரு திருமணத்துக்குப் போவதற்குக்கூட டிசைனர் புடவை, பிளவுஸ் வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். க்ரியேட்டிவ் திறன் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இதைச் செய்து கொடுக்கலாம்.
கற்பனை வளம் உள்ளவர்கள் கைநிறைய சம்பாதிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதாவது, மண்ணால் செய்து சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கிவந்து அதில் பெயின்ட் செய்து விற்கலாம். இது ஒரு சீஸன் பிசினஸ். அதாவது, பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற பொருட்களுக்கு அதிக மவுசு இருக்கும்.

சின்னச் சின்ன பைகளை தயாரிப்பதும் அதிகம் வரவேற்புள்ள தொழிலாக உள்ளது. இதற்கு அடிப்படையாக தையல் கலை தெரிந்திருந்தால் போதும். அதாவது, நகைக் கடையில் ஆரம்பித்து, நவராத்திரி கொலு வரை அனைத்துக்கும் இந்த அலங்கார பைகளைப் பயன்படுத்து கிறார்கள்.

 இதில் வித்தியாசமான வடிவமும், கலரும்தான் அதிக முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப்படுகிறது. நீங்கள் செய்துதரும் டிசைன் பிடித்திருந்தால், உங்களிடம் தொடர்ந்து வாங்குவார்கள், தெரிந்தவர்களிடமும் அதைப்பற்றிக் கூறுவார்கள்.

அதேபோல, வீட்டு உபயோகப் பொருட்களான பாத்திரம் கழுவும் பவுடர், சோப், பினாயில் போன்ற பொருட்களைத் தயாரிப்பதும் எளிதுதான்.

இதைத் தயாரிப்பதற்கு பெரிய இயந்திரங்கள் எதுவும் தேவையில்லை. வேதிப்பொருட்களை வாங்கிவந்து கலப்பதுதான் முக்கியமான வேலையாக இருக்கும்.

இதைத் தயாரித்துத் தேவைக்கேற்ப விற்பனை செய்யலாம். இதில் பிராண்டட் பொருட்கள் இருக்கும்போது இதை வாங்குவார்களா என யோசிக்கலாம். அந்தப் பொருட்களின் அளவுக்குத் தரத்தைக் கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். மேலும், இதில் பேச்சுத்திறமை இருந்தாலே போதும்; எளிதாகப் பொருட்களை விற்பனை செய்துவிடலாம்.

குறிப்பிட்ட ஒரு பொருளை மட்டும் விற்பனை செய்வதைவிட 4, 5 பொருட்களைச் சேர்த்து விற்பனை செய்வது நல்லது. அதாவது, நீங்கள் புடவையில் வேலைபாடு செய்து கொடுக்கிறீர்கள் எனில், அதற்கு மேட்சிங்கான வளையல், கம்மல், கழுத்துமாலை போன்றவற்றை விற்பனை செய்யும்போது கூடுதல் லாபம் கிடைக்கும். அதேநேரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை யும் கூடும்.

ஹோம் பட்ஜெட்

அதேபோல, இந்த பிசினஸ் செய்வதற்குப் பெரிய மெஷின்கள் தேவையில்லை. எடை போடும் மெஷின், சீலிங் மெஷின் மட்டும் இருந்தால் போதும்.

மேலே கூறியுள்ள பிசினஸ்கள் அத்தனையும் ஓர் உதாரணம்தான். இதைத்தான் செய்ய வேண்டும். இதில் மட்டும்தான் லாபம் கிடைக்கும் என்றில்லை. நீங்கள் பகுதி நேரமாக இதைச் செய்யும்போது குறைந்த அளவில்தான் இதைச் செய்ய முடியும். எனவே, தரமான பொருட்களை, குறைந்த விலையில் கொடுத்தால், ஆர்டர்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.

மேலும், நல்ல அறிமுகம் உள்ள ஏரியா, பார்ப்பவர்கள் ஏதாவது சொல்வார்கள். நமக்கு எதற்கு இந்த வேலை என்று தயங்கிக் கொண்டிருந்தால், வாழ்க்கையில் எதையும் செய்யவே முடியாது.
ஒரு தொழிலை செய்கிறோம், இதைச் சரியாக மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்தாலே போதும். நல்ல லாபம் கிடைக்கும்” என்றார்.

நீங்கள் இப்போது துவங்கும் தொழில்கள் ஆரம்பப் புள்ளிதான். அதைப் பெரிய அளவில் செய்வதற்கு இது ஒரு விதைதான் என்பதைப் புரிந்துகொண்டால், எதிர்காலத்தில் நீங்களும் பெரிய தொழிலதிபர்தான்.

என் தேவைகளை நானே நிறைவேற்றிக் கொள்வேன்

ஹோம் பட்ஜெட்

‘‘எனக்கு வீட்டில் சும்மா இருப்பது, பிடிக்காது. தையல், சமையல், ஜுவல்லரி டிசைன் என எதையாவது ஒன்றை சீஸனுக்கு ஏற்ப செய்வேன். கல்யாண சீஸன் அதிகம் இருக்கும் நேரத்தில் கல்யாணத்துக்குத் தேவையான பைகளைத் தைத்து தருவேன். இதை நேரடியாகச் சென்று ஆர்டர் எடுக்க மாட்டேன். பைகளை அச்சடிக்கும் பிரின்டரிடம் இருந்து வாங்கிவந்து தைத்து தருவேன். அதேபோல, வெயில் காலத்தில் ஜூஸ், ஊறுகாய் என தயாரித்து அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், தெரிந்த வீடுகளுக்கு விற்பனை செய்வேன். இதன்மூலம் ஆயிரமோ, இரண்டாயிரமோ வருமானம் கிடைக்கும். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து என் மகனுக்குத் தேவையான பொருட்களை வாங்குவேன். குறிப்பிட்ட அளவு பணத்தை ஆர்டியிலும் சேமித்து வருகிறேன்.”

இயற்கை உணவு + கூடுதல் வருமானம்.

ஹோம் பட்ஜெட்

‘‘நான் பெரிதாக எதுவும் படிக்கவில்லை. அதேநேரத்தில் பிள்ளைகளும் வளர்ந்துவிட்டார்கள். அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக்கொள்வதால் வீட்டில் எனக்குப் பெரிய வேலை இருக்காது. பிள்ளைகள் சாப்பிடுவதற்கு ஏதாவது செய்து தருவேன். ஒருநாள் கவுனி அரிசி புட்டு செய்து கொடுத்தேன். பிள்ளைகள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் எங்களுக்குச் செய்து கொடுங்கள் எனக் கேட்டார்கள். இப்போது தினமும் இதைச் செய்து விற்பனை செய்கிறேன். இதன்மூலமாக தினமும் 200 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் எங்க ஏரியாவில் பலரது வீட்டில் இதுதான் டிபன்.”