Published:Updated:

SME கைடுலைன்

தோல்வியிலிருந்து வெற்றிக்கு... மீண்டுவரும் வழிமுறைகள்!

SME கைடுலைன்

தோல்வியிலிருந்து வெற்றிக்கு... மீண்டுவரும் வழிமுறைகள்!

Published:Updated:

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

‘நான் நன்றாக பிசினஸ் செய்ய வேண்டும். முன்னணி நிறுவனம் ஒன்றை நடத்த வேண்டும் என்கிற வெறியில்தான் சொந்தத் தொழில் தொடங்கினேன். ஆனால், நான் ஆரம்பித்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியாத நிலையில் இருக்கிறேன். மீண்டும் பழையபடி வேலைக்கே போய்விடலாமா என்று நினைக்கிறேன்’ என்ற எண்ணம் உங்களுக்கு அடிக்கடி வருகிறதா?

 இதற்காக நீங்கள் உங்கள் பிசினஸைவிட்டு வெளியேற வேண்டும் என்பதில்லை. உங்கள் தொழிலில் எந்த இடத்தில் தவறு நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை சரிசெய்தாலே போதும் உங்கள் தொழிலை மீண்டும் ஓஹோவென நடத்த ஆரம்பித்துவிடலாம். தோல்வியின் பிடியில் இருக்கும் ஒரு தொழிலை வெற்றிப்பாதையில் மீண்டும் கொண்டுவருவதற்கு என்ன செய்ய வேண்டும் என கோயம்புத்தூர் கொடிஸியாவின் தலைவர் இ.கோ.பொன்னுசாமியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தொழிலில் ஏற்பட்ட தோல்வியைச் சமாளித்து மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டுமெனில்  எஸ்எம்இகள் சில வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதிலிருந்து மீள வழிமுறைகளைப் பின்பற்றும்போது, நேரம் எடுக்கிறதே என்று தன்னம்பிகை இழந்து துவண்டுவிடக் கூடாது.

SME கைடுலைன்

முதலில், உங்கள் தொழில் தோல்வி அடைந்துவிட்டது என்று நினைக்கா தீர்கள். உங்கள் தொழிலில் எந்த இடத்தில் தவறு நடந்தது என்று ஆராய்ந்துபாருங்கள். துறைவாரியாக உங்கள் தொழிலைப் பிரித்து, அதில் நிதிப் பிரச்னையால் சிக்கல் வந்துள்ளதா அல்லது விநியோகத்தில் வந்துள்ளதா என்று ஆராயுங்கள். இந்த ஆராய்ச்சி மனநிலை உங்களிடம் ஏற்படும்பட்சத்தில் எத்தனை பெரிய சிக்கல் வந்தாலும் அதற்கொரு தீர்வு கண்டு அடுத்த கட்டத்துக்கு செல்லத் தொடங்கிவிடு வீர்கள்.

SME கைடுலைன்

நீங்கள் ஒரு நிறுவனத்தின்கீழ் பல பொருட்களைச் செய்கிறீர்கள் எனில், அதில் ஏதேனும் ஒரு பொருளால்தான் நஷ்டம் என்றால், அதனால் மொத்த நிறுவனத்துக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானால், அதற்காக மொத்த தொழிலும் நஷ்டம் என்று நினைக்கிறீர் கள். இன்னும் சிலருக்கு எந்தப் பொருளில் நஷ்டம் ஏற்படுகிறது என்றே தெரிவதில்லை. அதனால் முதலில் உங்கள் பொருளில் எதில் நஷ்டம் ஏற்படுகிறது என்று பார்த்து, அதனை சரிசெய்து அல்லது அந்தப் பொருளை மட்டும் தயாரிப்பதை நிறுத்தி, அதிகம் விற்பனையாகும் பொருளை சற்று அதிகம் தயாரிக்கத் துவங்குங்கள்.

உங்கள் தொழில் நஷ்டத்தில் உள்ளபோது அதனை சரிசெய்ய நிறுவனத்தில் காஸ்ட் கட்டிங் எனப்படும் சிக்கன நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்குங்கள். அதிகமான செலவுகளைத் தவிருங்கள். உங்களுக்கு அருகில் உள்ள சப்ளையரிடம் இருந்து பொருட்களைப் பெறுவது தொடங்கி, உங்கள் தினசரி நடவடிக்கைகளில் செலவிடும் பணம் வரை அனைத்திலும் சிக்கனத்தைக் கொண்டுவாருங்கள். அதற்காக தேவையானவற்றுக்குச் செலவழிக்காமல் இருந்துவிடாதீர்கள். இவையெல்லாம் நிர்வாகரீதியாக சரிசெய்வதற்கான வழிமுறைகள். முதலில் இவற்றைப் பின்பற்றுங்கள்.

ஆனால், இவைமட்டும் போதாது ஒரு நிறுவனத்தை வெற்றிப்பாதைக்குக் கொண்டுவர. அதன் ஒவ்வொரு பிரிவை யும் ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும். எஸ்எம்இகள் தங்கள் தொழிலில் முதலில் செய்ய வேண்டியது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவை கவனிப்பதுதான்.

இதனைக் கேட்டவுடன் இதெல்லாம் பெரிய நிறுவனங்களுக்குத்தானே! எங்களால் இதனைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழும். ஆனால், எஸ்எம்இ களுக்குத்தான் இது அதிகம் தேவைப்படு கிறது. எங்கு தொழில் செய்கிறார்கள், அங்கு எந்தப் பொருளுக்கு அதிகத் தேவை உள்ளது என்பது தொடங்கி அங்குள்ள வாடிக்கையாளர்களின் மனநிலை வரை ஆராய வேண்டும்.

அடுத்த முக்கியப் பிரிவாக இருப்பது நிதி. ஒரு தொழிலை நடத்த போதிய நிதி உள்ளதா, இதற்கு எவ்வளவு கடன் வாங்கினால், நம்மால் தொழிலை சரியாகச் செய்ய முடியும் என்று பார்ப்பதற்குப் பதில், நம்மால் எவ்வளவு கடன் வாங்கினால் அடைக்க முடியும் என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு கடன் வாங்குவது என்று திட்டமிடுவது சிறந்தது. அல்லது நீங்கள் சற்று ரிஸ்க் எடுப்பவராக இருந்தால் புதிய மார்க்கெட்டில் தைரியமாக இதே பொருளுடன் களமிறங்குவது தொழிலை மீட்டெடுக்க வாய்ப்பாக அமையும். ஆனால், இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தயாரிப்பை விற்கப்போகும் இடம் நிச்சயம் அந்தப் பொருளுக்கு அதிகத் தேவை இருக்கும் இடமாக அமைய வேண்டியது அவசியம்.

நல்ல தொழில் செய்யும் திறன், அதனைச் சமாளிக்கும் நிதி என எல்லாம் இருந்தாலும் சிலரது தொழில்கள் நஷ்டத்தை நோக்கி செல்லக் காரணம், திறன்மிக்க பணியாளர்கள் இல்லாததே. அல்லது திறன்மிக்க பணியாளர்கள் குறுகிய காலத்தில் தொழிலை கற்றுக்கொண்டு நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதே.

SME கைடுலைன்

இதனைச் சமாளிக்க நல்ல திறன்மிக்க பணியாளர்களைப் பணியமர்த்துவது அல்லது திறன் குறைவாக உள்ள பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலே போதும்.
இதுதவிர, அரசின் உதவிகளை எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நம் தொழில் உத்திகளை மாற்றியமைப்பதன் மூலம் குறைந்தபட்ச வருமானம் பெற்று, நிறுவனத்தை லாபப் பாதைக்கு கொண்டு வரலாம்.

சில சமயங்களில் திடீரென ஏற்படும் விபத்துகளாலோ அல்லது பொருட்கள் சேதமடைவதாலோ ஏற்படும் நஷ்டத் திலிருந்து தப்பிக்க இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். இன்ஷூரன்ஸ் எடுக்காததினால் ஏற்படும் நஷ்டம் பல ஆண்டுகளாக நாம் சம்பாதித்த லாபத்தை இழக்க வைத்துவிடும்.

ஆக, உங்கள் தொழிலை வெற்றிகரமாகச் செய்வதற்கு இதுமாதிரி என்னென்ன விஷயங்களிலெல்லாம் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்தால், உங்கள் பிசினஸ் வாழ்க்கை நிச்சயம் சக்சஸ்தான்’’ என்று முடித்தார் அவர்.

தொழில் சரியாக நடக்கவில்லையே என்கிற வருத்தத்தில் இருக்கும் எஸ்எம்இகள் இந்த ஆலோசனைகளை அவசியம் பின்பற்றியாகவேண்டும்.

எம்எஸ்எம்இ வழங்கும் சேவைகள்!

எம்எஸ்எம்இ அலுவலகங்களின் மூலம் சிறுதொழில் முனைவோர்களுக்கு என்ன மாதிரியான சேவைகள் கிடைக்கும் என்பது தெரியாமலே இருக்கிறது. ஒரு தொழிலின் திட்ட அறிக்கை தயாரிப்பது தொடங்கி, ஏற்றுமதி, பயிற்சி வகுப்புகள், சந்தைப்படுத்துதல் என அனைத்துவிதமான தகவல்களையும் வழங்குகிறது தமிழகம் முழுக்க உள்ள எம்எஸ்எம்இ அலுவலகங்கள். அதுதவிர, அனைத்துவிதமான தகவல்களையும் ஆன்லைன் மூலமாகவே எஸ்எம்இகள் தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைன் மூலமாக தந்துவருகிறது. (இந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்ள  http://www.msmedi-chennai.gov.in/MSME/ServicesOffered.jsp என்ற இணையதள முகவரிக்குச் செல்லுங்கள்!) இதில் எந்தெந்த மாவட்டத்தில் எப்போது பயிற்சி வகுப்புகள் நடக்கிறது, எங்கு கண்காட்சிகள் நடக்கப்போகிறது என்பது போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதன்மூலம் தமிழகம் முழுக்க உள்ள எல்லா எஸ்எம்இகளும் பயன் பெறலாம்.

SME Q &A

நான் சென்னையில் சிறுதானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறேன். சந்தைப்படுத்துதல் மற்றும் எங்கு தொழில் வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற தகவல்கள் தேவை?
@ ராஜ்குமார்.

இதுகுறித்து சென்னை எம்எஸ்எம்இ அதிகாரிகளிடம் கேட்டோம். ‘‘சிறுதானியப் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் தயாரிக்க அரசே பயிற்சியளிக்கிறது. அதற்கான பயிற்சிகளை மாவட்ட தொழில் மையத்தில் கேட்டுப் பெறலாம். அதுமட்டுமின்றி, நீங்கள் செய்யும் தொழிலுக்கான தொழில் வாய்ப்புகளையும் அரசே ஏற்படுத்தித் தருகிறது. அதன்மூலமும் நீங்கள் பயனடையலாம்.’’

எஸ்.எம்.இ தொழில்முனைவோர்  கவனத்துக்கு...


உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் உங்களுக்கான பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இ-&மெயில் முகவரி: msme@vikatan.com  குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம். அதற்கு 044&66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism