நடப்பு
Published:Updated:

பவர் ஆஃப் அட்டர்னியை திரும்பத் தர மறுத்தால்...?

பவர் ஆஃப் அட்டர்னியை திரும்பத் தர மறுத்தால்...?

கேள்வி - பதில்

?  நான் வெளிநாட்டில் இருக்கிறேன். சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதற்காக என் நண்பருக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்திருந்தேன். இப்போது, என் நிலத்தை விற்பனை செய்ய வேண்டாம்; பவர் ஆஃப் அட்டர்னியை திரும்பக் கொடுங்கள் என்று கேட்டால், ஏற்கெனவே திரும்பத் தந்துவிட்டேன் என்கிறார். இப்போது என்னிடம் பவர் ஆஃப் அட்டர்னியின் நகல்தான் இருக்கிறது. இதனால் ஏதாவது சிக்கல் வருமா?

கண்ணன், அரியலூர். பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

“முதலில் வில்லங்க சான்றிதழ் பெற்று பார்த்தால், சொத்து விற்கப்பட்டு உள்ளதா என்பது தெரியும். இரண்டு மாதங்களுக்கு முன்வந்த அரசு உத்தரவின்படி, ஆன்லைன் (www.tnreginet.net) மூலம் விண்ணப்பித்தால், இரண்டு மணி நேரத்துக்குள் வில்லங்க சான்றிதழ் கிடைக்கும். சொத்து விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்தவுடன், உங்கள் நண்பருக்கு ஒப்புகைப் பதிவுக் கடிதம் (Registered post with acknowledgement) மூலம் ‘தங்களுக்குக் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னியை ரத்துச் செய்கிறேன்’ என்று தெரிவிக்கவும். மேலும், நீங்கள் தந்த பவர் ஆஃப் அட்டர்னியை திருப்பி அனுப்பும்படி கேட்டுக்கொள்ளவும். அவர் அந்தக் கடிதத்தைப் பெற்றுகொண்டதற்கான உறுதி செய்யும் ஒப்புகை கிடைக்கப் பெற்றவுடன் தாங்கள் எழுதிய கடித நகலுடன் இணைத்து வைத்துக் கொள்ளவும். பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு வேண்டுமெனில், பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு உங்கள் நண்பரை அழைத்துச் சென்று பவரை ரத்து செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கவும்.’’
 

பவர் ஆஃப் அட்டர்னியை திரும்பத் தர மறுத்தால்...?

?ஹெச்டிஎஃப்சி எஸ்எல் கிரெஸ்ட் பாலிசி எடுத்திருக்கிறேன். இதில் வருடத்துக்கு 50,000 ரூபாய் பிரீமியம் செலுத்தி வருகிறேன். 5 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால், 10 ஆண்டுகள் கழித்து இரட்டிப்பாகக் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். இந்தப் பாலிசியைத் தொடரலாமா?

ரஞ்சித், மதுரை. எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

“நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாலிசி யூலிப் திட்டம். இதில் என்னென்ன கட்டணங்கள் உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, நிர்வாகக் கட்டணம், ஃபண்ட் நிர்வாகக் கட்டணம், யூனிட் ஒதுக்கீடுக் கட்டணம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். இந்தக் கட்டணங்கள் போக மீதமுள்ள பணத்தை மட்டும்தான் முதலீடு செய்வார்கள். முதலீடு செய்த தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
 
இந்தத் திட்டத்தைத் தொடர நீங்கள் விரும்பவில்லை எனில், நீங்கள் 10 லட்ச ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 2,500 ரூபாய்தான் பிரீமியமாக இருக்கும். மீதமுள்ள 47,500 ரூபாயை ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது ஹெச்டிஎஃப்சி புரூடென்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்யும் பணம் மூன்று மடங்கு ஆக உயர வாய்ப்பு உள்ளது.’’

பவர் ஆஃப் அட்டர்னியை திரும்பத் தர மறுத்தால்...?

? 30 வயதாகும் நான் தனியார் நிறுவனத்தில் மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கிறேன். என்னிடம் இரண்டு பான் கார்டு உள்ளது. ஒன்று என் பெயரிலும், இன்னொன்று இந்து கூட்டுக் குடும்பத்தின் பெயரிலும் உள்ளது. என் தனிப்பட்ட வருமானத்தை என் பான் எண்ணிலும், கூட்டுக் குடும்பத்தின் வருமானத்தைக் குடும்பத்தின் பான் எண்ணிலும் கணக்கு வைக்கிறேன். கூட்டுக் குடும்பத்தின் பெயரில் சமீபத்தில் நான் ஒரு ஃபிளாட் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளேன். இந்த நிலையில் வங்கியில் என் வருமானத்தின் அடிப்படையில் வீட்டுக் கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்?

பழனி, தேவகேட்டை. என்.எஸ். சினிவாசன், ஆடிட்டர்.

“கூட்டுக் குடும்பத்தின் மூலம் சொத்து வாங்க முடியும். வீட்டுக் கடன் வாங்க மார்ஜின் தொகை (கடன் தொகையில் சுமார் 20-15%) வைத்திருக்க வேண்டும். இதன்பிறகுதான் கூட்டுக் குடும்பத்தின் பெயரில் வீடு வாங்குவதற்கான மீதி தொகையை வீட்டுக் கடன் மூலமாகப் பெறலாம். இந்த வீட்டுக் கடன் கூட்டுக் குடும்பத்தின் பெயரில் கிடைக்கும். நீங்கள் வேண்டுமானால் வீட்டுக் கடனில் இணைக் கடன்தாரராகச் சேர்ந்து கொள்ளலாம். தேவைப் பட்டால் கேரன்டராக உங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

வீடு கட்டி முடிந்தபிறகு வீட்டை வாடகைக்கு விடப் போகிறீர்களா அல்லது நீங்களே குடியேற போகிறீர்களா என்பதைப் பார்க்க வேண்டும். வாடகைக்கு விட்டால், அந்தப் பணத்தை வீட்டுக் கடன் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வரிச் சலுகை பெறும்பட்சத்தில் இந்த வாடகையை வருமானமாகக் காட்ட வேண்டும். வீட்டை சொந்தப் பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளும்போது வீட்டுக்கான வாடகையை கூட்டுக் குடும்பத்தில் வரவு வைத்து, நீங்கள் ஹெச்ஆர்ஏ க்ளைம் செய்து கொள்ளலாம்.”

பவர் ஆஃப் அட்டர்னியை திரும்பத் தர மறுத்தால்...?

? எனக்கு 23 வயது. 60 வயதுக்குபின் பென்ஷன் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கிறேன். மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். எனக்கேற்ற திட்டங்களை கூறவும்.
விஜயன், கடலூர்.

ஜெ.ஜெயக்குமார், நிதி ஆலோசகர்.

“23 வயதிலேயே ஓய்வுக்காலம் குறித்து யோசித்ததற்கு வாழ்த்துகள். ஏனெனில் இந்தக் காலத்தில் பலரும் செலவு செய்வது குறித்துதான் முதலில் யோசிக்கிறார்கள். ஓய்வுக்காலத்துக்காக சேமிப்பதற்கும், முதலீடு செய்வதற்கு உங்களுக்கு 37 ஆண்டுகள் உள்ளது. மேலும், பணவீக்க விகிதத்தை எதிர்கொள்ள பங்குச் சார்ந்த திட்டம்தான் சரியான தேர்வாக இருக்கும். பங்குச் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்றுதான். அதாவது, சந்தையில் ஏற்றஇறக்கம் இருக்கும். இந்த ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ள தயார் எனில், முதலீடு முழுவதையும், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யலாம். நீண்ட காலத்தில் பங்குச் சந்தை ரிஸ்க் என்பது பரவலாக்கப் பட்டுவிடும். நீங்கள் ஹெச்டிஎஃப்சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் பிளான், பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம்.”

?2 லட்சம் ரூபாய் முதலீட்டில் டிரேடிங் செய்து வருகிறேன். எனக்கு வேறு எந்தவிதமான வருமானமும் கிடையாது. இதில் கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டுமா? நஷ்டம் வரும்போது என்ன செய்ய வேண்டும்?

அனுசியா, கோவை. எஸ்.கிருஷ்ணன், ஆடிட்டர்.

“புதிய வருமான வரி வரம்பின்படி 2.5 லட்சம் ரூபாய் வரை, உங்களின் வருமானத்துக்கு நீங்கள் எந்த விதமான வரியும் செலுத்தத் தேவையில்லை. அதே 5 லட்சம் ரூபாய் வரை 10 சதவிகிதமும், 5 - 10 லட்சம் ரூபாய் வரை 20 சதவிகிதமும் 10 லட்சத்துக்கு மேல் 30 சதவிகிதமும் வருமான வரி செலுத்த வேண்டும். நஷ்டம் ஏற்படும்போது, சரியான சமயத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்து நஷ்டம் ஏற்பட்டதைப் பதிவு செய்தால், அதனை அடுத்த 8 ஆண்டுகளுக்கு எடுத்து செல்ல முடியும்.’’  
 

பவர் ஆஃப் அட்டர்னியை திரும்பத் தர மறுத்தால்...?