நடப்பு
Published:Updated:

நிஃப்டி 8000 ஏற்றம் தொடருமா?

ஒரு விரிவான அலசல்சி.சரவணன்

இந்திய பங்குச் சந்தை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. நிஃப்டி 8000 புள்ளிகளையும், சென்செக்ஸ் 27000 புள்ளிகளையும் கூடிய விரைவில் தொட்டுவிடும் என்கிற நிலைதான் இப்போது. இந்த உயர்வு பல புதிய முதலீட்டாளர்களை சந்தைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இதனால் புதிய டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடுகிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

என்றாலும், இந்த ஏற்றம் தொடருமா என்கிற கேள்வி எல்லா முதலீட்டாளர்களின் மனதிலும் இருக்கவே செய்கிறது. இந்தக் கேள்வியை மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

‘‘சந்தையின் தற்போதைய ஏற்றம் டிசம்பர் மாத இறுதிவரை தொடரும். அப்போது நிஃப்டி புள்ளிகள் 9200 ஆகவும், சென்செக்ஸ் புள்ளிகள் 31000 ஆகவும் இருக்கக்கூடும்.
இந்த ஏற்றம் தொடர்ச்சியானதாக இருக்கும். சந்தை இடையிடையே இறங்கினாலும் 100-200 புள்ளிகள்தான் இறங்கும். இந்த ஏற்றத்தில் இதுவரை லாபம் தராத பங்குகள்கூட லாபம் தர ஆரம்பிக்கும்” என்றவரிடம், ‘சந்தையின் இந்தத் தொடர் ஏற்றத்துக்குக் காரணம் என்ன?’ என்று கேட்டோம்.

நிஃப்டி 8000 ஏற்றம் தொடருமா?

‘‘முப்பது ஆண்டுகளுக்குப்பின் அறுதிப்பெரும்பான்மையுடன் நிலையான மத்திய அரசு அமைந் திருப்பது, அமெரிக்காவில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதால் டாலர் மதிப்பு வலிமையாகி வருவது, டாலர் மதிப்பு அதிகரிப்பால் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்ற கமாடிட்டிகளின் விலை குறைந்து வருவது போன்றவை முக்கியக் காரணங்களாக உள்ளன. கச்சா எண்ணெய் விலை தற்போதைய 100 டாலரிலிருந்து 80 டாலராக அடுத்த 6 மாதத்துக்குள் குறையக்கூடும்.

மேலும், இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். அந்தவகையில் பார்மா மற்றும் ஐ.டி நிறுவனங்கள் நன்றாகச் செயல்பட ஆரம்பித்துவிடும். தவிர, மத்திய அரசின் செயல்பாடுகள் வேகம் எடுத்திருக்கிறது. இ-காமர்ஸ் வழியில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. இதனால் அரசின் செலவு கணிசமாகக் குறையும். அரசின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மை அதிகரித்தி ருக்கிறது. இவை சந்தையை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல போதுமான காரணங்களாக இருக்கின்றன.
 

நிஃப்டி 8000 ஏற்றம் தொடருமா?

செயில், ஓஎன்ஜிசி நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் பங்கு மூலதனத் தில் குறிப்பிட்ட பகுதியை விலக்கிக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் காஸ் பாலிசி இறுதி செய்யப்பட்டுவிடும். அந்தவகை யில் பங்குச் சந்தை இனி இறங்க வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது” என்றவர், தற்போதைய நிலையில் முதலீட்டுக்கு ஏற்ற ஐந்து பங்குகளைக் குறிப்பிட்டார்.

‘‘பல்வேறு காரணங்களால் கவர்ச்சிகரமான விலையில் காணப்படும் ஐந்து பங்குகளை இப்போது வாங்கலாம். இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், பயோகான், அபர் இண்டஸ்ட்ரீஸ் (Apar Industries), மஹிந்திரா ஹாலிடே ஆகியவை அந்தப் பங்குகள். (பரிந்துரை செய்யப்பட்ட பங்குகள் பற்றிய குறிப்புகள் அடுத்த பக்கத்தில்)

நிஃப்டி 8000 ஏற்றம் தொடருமா?

சந்தையின் ஏற்றம் தொடரும் என ஏ.கே.பிரபாகர் சொன்னாலும், இனிவரும் நாட்களில் ஒரு சிறிய இறக்கத்துக்குத் தயாராக இருங்கள் என்று எச்சரிக்கிறார் டெக்னிக்கல் அனலிஸ்ட் பி.ராம். டெக்னிக்கல்படி இனி சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என அவரிடம் கேட்டோம். அவர் சொன்னதாவது:

‘‘இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதற்குமுன் 2011-ல் நாணயம் விகடனில் சொன்னது போலவே, சந்தை இப்போது ஏற்றத்தைக் கண்டு வருகிறது. மத்தியில் புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் நரேந்திர மோடி அரசின் மேலுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் சந்தை ஏறி வருகிறது. மேலும், முதலீட்டாளர்கள் குறிப்பாக, அந்நிய நிதி முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐக்கள்), புதிய அரசானது தொழில் மற்றும் வணிகச் சூழலை மாற்றியமைப்பதன் மூலம் இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கிறார்கள். அதன் அடிப்படையிலே முதலீடு நடந்து வருகிறது.

நிஃப்டி 8000 ஏற்றம் தொடருமா?

ஆனால், காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மேலும், வரும் காலாண்டுகளில் அதிக வளர்ச்சி ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை களில் தெரியவில்லை. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பங்குகளின் விலை அதிகரித்து விட்டதால், அவர்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும்போது சந்தை இறக்கத்தைச் (கரெக்‌ஷன்) சந்திக்கும்.

நிஃப்டி 8000 ஏற்றம் தொடருமா?

சந்தையின் தற்போதைய ஏற்றம் இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் இப்போது முதலீடு செய்தவர்கள் குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் லாபம் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதேநேரத்தில், சந்தையில் நெகட்டிவ் சென்டிமென்ட்கள் எதுவும் இல்லை எனில், இப்போதைய ஏற்றம் சென்செக்ஸ் புள்ளிகளை 30000க்கும் நிஃப்டி புள்ளிகளை 9000க்கும் கொண்டு செல்லும். கடந்த 2013 ஆகஸ்ட் முதல், தற்போதைய சந்தை ஏற்றத்தைக் கவனித்தால், இடையிடையே பிராஃபிட் புக்கிங் நடந்தாலும், கணிக்கப்பட்ட படியே சந்தை ஏற்றம் கண்டு வருகிறது. இது தொடர்ந்தால், நிஃப்டியின் அடுத்த ஏற்றம் 8500-9000 புள்ளிகளாக இருக்கும்.

நிஃப்டி 8000 ஏற்றம் தொடருமா?

தற்போதைய நிலையில் நிஃப்டி ஸ்டாப் லாஸ் 7500; சென்செக்ஸ் ஸ்டாப் லாஸ் 25000-ஆக உள்ளது. இதற்கும் கீழே இறங்கினால், தற்போதைய காளைச் சந்தை முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு சந்தை நீண்ட கரெக்‌ஷனை சந்திக்கும்.சந்தையின் ஏற்றம் மாறி இறங்கத் தொடங்கினால், சந்தை சிறிது நீண்ட காலத்துக்கு ஒரேநிலையில் வர்த்தகமாகி வரும் அல்லது கரெக்‌ஷனை சந்திக்கும். அப்போது தற்போதைய நிலையிலிருந்து சந்தை 20 - 30% இறக்கம் காணும். அதாவது, நிஃப்டி புள்ளிகள் 1500-2000 புள்ளிகளும், சென்செக்ஸ் 4000-6000 புள்ளிகளும் இறக்கம் காணலாம். இந்த காலகட்டத்தில் நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவனப் பங்குகள் அல்லது இடிஎஃப்களில் முதலீட்டை செய்துவிட்டு, அடுத்த ஏற்றத்துக்குக் காத்திருக்கலாம். அடுத்த ஏற்றம் என்பது 2015, 2016-ம் ஆண்டுகளில் இருக்கும்.

சந்தை ஏற்றத்தின் இறுதிகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் குறுகிய காலத்தில் நல்ல லாபத்தைப் பார்ப்பது கடினம். அந்தவகையில் நீண்ட கால முதலீட்டு நோக்கில் மட்டுமே இப்போதைய நிலையில் பங்குகளை அணுக வேண்டும். இந்த விஷயத்தில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

சந்தையில் முதலீடு செய்ய நினைக்கும்  முதலீட்டாளர்கள் நிபுணர்களின் இந்த கருத்துகளை அலசி ஆராய்ந்துவிட்டு, ஒரு முடிவு எடுக்கலாமே!

குறிப்பு: பங்கு விலை 22.8.14 நிலவரப்படி