நடப்பு
Published:Updated:

ஷேர்லக் - ரகுராம் Vs அரவிந்த்!

ஷேர்லக் - ரகுராம் Vs அரவிந்த்!

‘நிஃப்டி 8000 - சந்தை ஏறுமா?’ நம் கேபினுக்குள் நுழைந்தவுடன் கவர் ஸ்டோரி வாசகங்களைப் படித்த ஷேர்லக், ‘‘கரெக்ட், எல்லா வாசகர்களின் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி இதுதான். சரியான விஷயத்தைத்தான் கவர் ஸ்டோரியாகப் போட்டிருக் கிறீர்கள்’’ என்றபடி உட்கார்ந்தவுடன்,  ‘‘சந்தையின் அடுத்த மூவ் எப்படி இருக்கும்?’’ என்று கேட்டோம்.

‘‘அடுத்த வாரத்தில் வெளியாகும் செய்திகளைப் பொறுத்தே உடனடி இறக்கமா அல்லது இன்னுமொரு 10% உயர்ந்தபின் இறக்கமா என்பது அமையும். அமெரிக்காவில் ஜாக்சன்ஹோலில் ஃபெடரல் ரிசர்வ் ஆண்டுதோறும் நடத்தும் முக்கிய கூட்டம் கடந்த 21-ம் தேதி தொடங்கி இருக்கிறது. இந்தக் கூட்டத்திலோ அல்லது இதனைத் தொடர்ந்தோ அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், நம் சந்தையில் பணம் போட்ட எஃப்ஐஐகள் உடனடியாக பணத்தை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால், சந்தை கொஞ்சம் சறுக்கலாம். என்றாலும் சந்தை மீண்டும் உயரும். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் நல்ல பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால், நல்ல லாபம் பார்க்கலாம்’’ என்றார்.

‘‘அமெரிக்க ஃபெட் வட்டி விகிதத்தை உயர்த்துவது இருக்கட்டும். நம்மூர் ஆர்பிஐ எப்போதுதான் வட்டியைக் குறைக்கப் போகிறதாம்?’’

என்று கேட்டோம் சற்று அலுத்துக் கொண்டபடி.

‘‘நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாக இருக்கும் என நிதி அமைச்சகத்தின் செயலாளர் அர்விந்த் மாயராம் குறிப்பிட்டுள்ளார். விரைவில் பணவீக்க விகிதம் குறையும். அப்போது ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். கச்சா எண்ணெய் விலை வேகமாக இறங்கி னால், பணவீக்கமும் வேகமாக இறங்க வாய்ப்பு இருக்கிறது'' என்று நம்பிக்கை தந்தவருக்கு சுடான டீ தந்தோம்.

ஷேர்லக் -  ரகுராம் Vs அரவிந்த்!

‘‘பங்குகள் மீதான அடமான கடன் தருவதில் ஆர்பிஐ சில திடீர் நிபந்தனை களைப் போட்டிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘கடந்த ஓராண்டில் சென்செக்ஸ் 45 சதவிகிதத்துக்கு மேலே ஏறி இருக்கிறது. கூடவே பல பங்குகளின் விலை அதை விடவும் அதிகமாக ஏறி இருக்கிறது. இந்தப் பங்குகளின் விலை திடீரென அதிகமாக இறங்கினால், அடமான கடன் தந்த நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். அதனால் பங்குகளை அடமானமாக பெற்றுக் கொண்டு கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி), பங்குகளின் சந்தை விலையில் 50 சத விகிதத்துக்குமேல் கடன் தரக் கூடாது. அதுவும் நல்ல, தரமான பங்குகளுக்கு மட்டுமே தரவேண்டும் என ஆர்பிஐ நிபந்தனை விதித்துள்ளது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். இதனால் வங்கி சாரா நிதி நிறுவனங் களின் வருமானம் கொஞ்சம் குறையும். என்றாலும், விலை போகாத பங்குகளை தலையில் கட்டிக்கொண்டு அழவேண்டிய நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாது. அந்தவகையில் இது சரியான முடிவுதான்’’ என்றார்.

‘‘மணப்புரம் ஃபைனான்ஸ் பங்கின் விலை 52 வார உச்சத்தைத் தொட்டு இருக்கிறதே, விலை இன்னும் ஏறுமா?’’ என்று கேட்டோம் ஆசை ஆசையாய்.

‘‘தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனமான இதன் பங்கு விலை தொடர்ந்து 4 வர்த்தக தினங்களாக 30 சதவிகிதத்துக்கும்மேல் ஏறி 52 வார உச்ச விலையைத் தாண்டி ரூ.29.85-க்கு அதிகரித்துள்ளது. தங்க நகைக் கடன் மீதான நிபந்தனைகளை ஆர்பிஐ நீக்கி இருப்பது, அண்மையில் இந்த நிறுவனம் என்சிடி மூலம் 200 கோடி ரூபாய் திரட்டியிருப்பது போன்றவை இந்த ஏற்றத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. பங்கு விலை உச்சத்தில் இருப்பதால், இப்போதைக்கு இதில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது'' என்று ஆலோசனை தந்தார்.

‘‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு சோதனைமேல் சோதனையாக இருக்கிறதே?’’ என்றோம்.

ஷேர்லக் -  ரகுராம் Vs அரவிந்த்!

‘‘கடந்த இரு காலாண்டுகளில் இந்த நிறுவனம், பங்குச் சந்தைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய விவரங்களை தராமல் டேக்கா கொடுத்து வருகிறது. இதனால் செப்டம்பர் 19 முதல் என்எஸ்இ அதன் அனைத்து குறியீடு களிலிருந்தும் நீக்க இருக்கிறது. எஃப்அண்ட்ஓ பிரிவிலிருந்தும்கூட நீக்கப்பட இருக்கிறது. பிஎஸ்இயும் இதனைப் பின்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த பங்கை வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒரு நல்ல முடிவை எடுப்பது அவசியம்’’ என்றார்.   
 
‘‘என்எஸ்இஎல் பிரச்னையில் சிக்கிய ஜிக்னேஷ் ஷாவுக்கு பெயில் கிடைத்திருக்கிறதே?’’ என்று வியந்தோம்.

‘‘மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவால், என்எஸ்இஎல் நிறுவனத்தில் நடந்த ரூ.5,600 மோசடியில் அதன் தாய் நிறுவனமான  ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸின் சேர்மன் ஜிக்னேஷ் ஷாவுக்கு தொடர்பு இருக்கிறது என்பதை சரியாக நிரூபிக்க முடியவில்லையாம். இதனை அடுத்து 110 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த அவரை ஜாமீனில் விடுவிக்க மும்பை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது'' என்றார்.

‘‘செபியின் அதிரடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி இருக்கிறதே?’’ என்று வினவினோம். 

‘‘இன்சைடர் டிரேடிங் தொடர்பாக கடந்த சில தினங்களாக செபி அதிகாரிகள் விப்ரோ, ஐடிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பணியார் களுக்கு அபராதம் போட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் சந்தையில் வாங்கிய பங்குகள் மற்றும் நிறுவனம் ஒதுக்கித் தந்த பங்குகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் (காலாண்டு முடிவுகள் வெளியாகும் நேரம் மற்றும் ஆண்டு பொதுக்கூட்டம் நடக்கும் நேரம்) விற்பனை செய்து இப்போது இன்சைடர் டிரேடிங் பிரச்னையில் மாட்டியிருக்கிறார்கள்.  இவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இன்சைடர் டிரேடிங் பற்றி தெரியாத பணியாளர்கள்தான் இதில் அதிகமாம். இதைத் தவிர, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி வர்த்தக அளவை அதிகரித்ததாக கெல்வின், ஃபின்கார்ப் உள்ளிட்ட 44 நிறுவனங்கள், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதித்துள்ளது’’ என்று எச்சரித்தார்.

‘‘கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருகிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘கச்சா எண்ணெய் விலை நன்கு குறைந்திருக்கிறது. இது ஒரு பீப்பாய்க்கு 90 டாலர் வரை குறைய வாய்ப்புண்டு என்கிறார்கள். இந்த அளவோ அல்லது இதைவிட குறையுமானால், ஆயில் மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களின் லாபம் கணிசமாக அதிகரிக்கும். எனவே, எண்ணெய் நிறுவனங்களின் மீது ஒரு கண் வையுங்கள்’’ என்றவர், ‘‘சந்தை உச்சத்தில் இருப்பதால், இப்போதைக்கு ஷேர் டிப்ஸ் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு, நடையைக்கட்டினார்.

கடைசி செய்தி: ரகுராம் Vs அரவிந்த்!

சர்வதேச பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியத்தை மோடி அரசாங்கம் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்க இருப்பதாகத் தகவல். ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனை போலவே இவரும் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-ல் படித்தவர். ரகுராமை சமாளிக்க அவரைப் போன்ற ஒருவரையே களத்தில் குதிக்கவைக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது அரசாங்கம் என்று கிசுகிசுக்கிறார்கள். சபாஷ், சரியான போட்டி!