Published:Updated:

ஹோம் பட்ஜெட் : கடன் வாங்கும் தகுதியை பெண்கள் உயர்த்திக் கொள்வது எப்படி?

இரா.ரூபாவதி படங்கள்: தே.தீட்ஷித், ரா.வருண் பிரசாத்.

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

படித்து முடித்ததும் எதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் கனவாக உள்ளது. வேலைக்குப் போய்ச் சம்பளம் வாங்க ஆரம்பித்தவுடன் அடுத்தடுத்த தேவைகள் வந்துகொண்டே இருக்கும். வாகனம், வீடு, தொழில் என அந்தக் கனவு விரிந்துகொண்டே இருக்கும்.

இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான பணம் முழுவதையும் நாமே வைத்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே, கடன் வாங்க வேண்டிய அவசியம் உருவாகிறது. பெண்கள் நேரடியாக கடன் வாங்கும்போது அதற்கான வட்டி விகிதத்தைச் சில வங்கிகள் குறைத்து தருகின்றன. தனிப்பட்ட ஆட்களிடம் கடன் வாங்குவதைவிட இது நல்லது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், கடன் வாங்குவதற்கான தகுதியை எப்படி உயர்த்திக் கொள்வது எப்படி என்பது குறித்துப் பாரதிய மகிளா வங்கியின் முதன்மை மேலாளர் கே.பாலகார்த்திகாவிடம் கேட்டபோது விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் கடன் வாங்கும் சதவிகிதம் அதிகமாகி உள்ளது. ஆனால், அவர்கள் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளாலும், கவனக்குறைவாலும் தங்களின் கடன் வாங்கும் தகுதியைக் குறைத்துக்கொள்கிறார்கள்.

ஹோம் பட்ஜெட் : கடன் வாங்கும் தகுதியை  பெண்கள் உயர்த்திக் கொள்வது எப்படி?

வேலைக்குப் போகும் மற்றும் சொந்தமாகத் தொழில் செய்யும் பெண்கள்தான் கடன் வாங்குவதற்கான முயற்சி செய்வார்கள். வேலைக்குப் போகிறவர்கள் தங்களின் வருமானத்துக்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும். மேலும், சம்பள ரசீது அல்லது வருமான வரி தாக்கல் விவரம் ஆகியவற்றைச் சரியாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இதைச் சில பெண்கள் வைத்திருப்பது இல்லை. தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு உரிய ரசீதை நிறுவனங்களிடம் இருந்து பெறுவதில்லை. அதேபோல வருமான வரித் தாக்கல் செய்வதை பலர் விரும்பு வதில்லை. இதனால் கடன் தேவைப்படும் நேரத்தில் கடன் வாங்க முடியாமல் போகிறது.

இன்றைய தேதியில், அதிகமாகக் கடன் வாங்குவது சொந்தமாகத் தொழில் செய்யும் பெண்கள். சிலர்

ஹோம் பட்ஜெட் : கடன் வாங்கும் தகுதியை  பெண்கள் உயர்த்திக் கொள்வது எப்படி?

சின்ன அளவில் வீட்டிலே பிசினஸ் செய்வார்கள். இவர்கள் செய்துவரும் தொழிலை விரிவுப்படுத்துவதற்காகக் கடன் கேட்டு வங்கியை அணுகுவார்கள். ஆனால், அவர்கள் பிசினஸ் செய்வதற்கான எந்த ஆதாரமும் அவர் களிடம் இருக்காது. அதாவது, செய்யும் தொழிலை முறைப்படி பதிவு  செய்யாமலே செய்துகொண்டு இருப்பார்கள். இதுபோன்று சிறிய அளவில் செய்யும் தொழில்களைத் தமிழ்நாடு குறுந்தொழில் மையத்தில் பதிவு செய்வது முக்கியம். இதை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அதோடு சில தொழில்கள் செய்ய முறையான உரிமம் வாங்க வேண்டியிருக்கும். அதையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

பிசினஸின் பெயரில் ஒரு நடப்புக் கணக்கு ஆரம்பித்து, பிசினஸ் வருமானத்தை அந்தக் கணக்கில் போட்டு வைப்பது நல்லது. இது உங்களின் பணச்சுழற்சியின் அளவை தெரிந்துகொள்ள உதவும். பணச் சுழற்சி அளவு அதிகமாகும்போதும் கடன் வாங்கும் விகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுப்படுத்துவதற்கு அல்லது புதிதாகத் துவங்குவதற்குத் திட்ட அறிக்கை ஏதாவது கொடுக்க வேண்டியிருந்தால் அதை முடிந்தவரை நீங்களே தயார் செய்வது நல்லது. இது தொடர்பான ஆலோசனையை மட்டும் ஆடிட்டரிடமிருந்து பெறுங்கள்.

சிலர் தங்களது வருமான வரித் தாக்கலை ஒவ்வொரு ஆண்டும் செய்யாமல், கடன் வாங்க வேண்டும் என்பதற்காக மட்டும் அவசர அவசரமாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து, அதற்கான ஆதாரத்தை வங்கியில் தருவார்கள். இரண்டு வருமான வரித் தாக்கலுக்கு இடையே குறைந்தபட்சம் ஆறு மாதத்துக்குமேல் இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் கடன் கிடைக்கும். இதற்குக் குறைவாக இருந்தால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

ஹோம் பட்ஜெட் : கடன் வாங்கும் தகுதியை  பெண்கள் உயர்த்திக் கொள்வது எப்படி?

அதேபோல எந்தக் கடன் வாங்கு வதற்காக வங்கியை அணுகினாலும் உங்களின் சிபில் ரிப்போர்ட்டை கட்டாயம் வங்கிகள் பார்க்கும். இதில் 650-700 பாயின்ட்டுகளுக்குமேல் இருப்பவர்களுக்குதான் கடன் வழங்க முன்வருவார்கள். சில சமயங்களில் பெண்கள் தங்களுடைய பெயரில் கணவர் அல்லது நண்பர்கள் என யாருக்காவது கடன் வாங்கித் தந்துவிடு கிறார்கள். அவர்கள் சரியாகக் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில், உங்களின் பெயர் சிபில் ரிப்போர்ட்டில் பதிவாகும். மேலும், இடையில் கடனை செலுத்தாமல், மொத்தமாகக் கடனை செட்டில் செய்கிறீர்கள் எனில் அதற்கான ஆவணங்களை முறைப்படி வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

இதுவரை நான் கடனே வாங்க வில்லை. சிபில் ரிப்போர்ட்டில் எனக்கு ஸ்கோர் என்பதே இருக்காது. எனக்குக் கடன் தருவார்களாக என சில பெண்கள் கேட்கிறார்கள். இதுவரை கடன் எதுவும் வாங்காதவர்களுக்கு சிபில் ரிப்போர்ட்டில் -1 என ஸ்கோர் இருக்கும். இப்படி இருப்பவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்கும்'' என்றார்.

நம் பெயரில் கடன் எதற்கு என்று தயங்காமல், கடன் வாங்கும் தகுதியை உயர்த்திக் கொண்டால், பிற்பாடு அது நமக்கு நிச்சயம் உதவும்.

எனக்கு எளிதாக கடன் கிடைக்கும்...

சித்ரா மோகன்குமார், சென்னை.

ஹோம் பட்ஜெட் : கடன் வாங்கும் தகுதியை  பெண்கள் உயர்த்திக் கொள்வது எப்படி?

‘‘கடந்த 10 வருடமாக சொந்தமாக நர்சரி பிசினஸ் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பிசினஸ் வருமானம் குறித்து எந்தவிதமான ஆதாரமும் நான் வைத்திருக்கவில்லை. கொஞ்சம் வருமானம் வர ஆரம்பித்தவுடனே வங்கியில் என் பிசினஸ் பெயரில் நடப்புக் கணக்கு ஆரம்பித்தேன். அதேபோல் லாபம், நஷ்டம் என எல்லாவற்றையும் வருமான வரி தாக்கல் செய்து அந்த ஆவணங்களை வைத்திருக்கிறேன். மேலும், முதலில் பிசினஸ் ஆரம்பிக்கும்போது கடன் வாங்காமல் கையில் இருந்த பணத்தை வைத்து ஆரம்பித்தேன். இப்போது என் பிசினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறேன். என்னிடம் வங்கி கேட்கும் ஆவணங்கள் அனைத்தும் இருப்பதால் எனக்கு எளிதாக கடன் கிடைக்கும் என நினைக்கிறேன்.’’