Published:Updated:

SME கைடுலைன் : கட்டுக்கடங்காத செலவுகள்... கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!

ச.ஸ்ரீராம்

SME கைடுலைன் : கட்டுக்கடங்காத செலவுகள்... கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!

ச.ஸ்ரீராம்

Published:Updated:

 தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

‘சிறிய அளவில்தான் நான் தொழில் செய்கிறேன். எனக்கிருக்கும் மிகப் பெரிய பிரச்னை எக்கச்சக்கமாக உயர்ந்துவரும் செலவுதான். இதனைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிய வில்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு செலவையும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து யோசித்துதான் செய்கிறேன்’ - இப்படி சொல்கிற எஸ்எம்இகள் தமிழகம் முழுக்க பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
 

எஸ்எம்இகளுக்கு தொழில் செலவுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்தச் செலவுகளை முழுக்கத் தவிர்த்துவிட முடியாது என்றாலும் குறைப்பதற்கு நிறையவே வழிமுறைகள் உள்ளன. சிறப்பாகச் செயல்பட்டு இந்தச் செலவைக் குறைப்பது மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் மதுரை மடிஸியா அமைப்பின் தலைவர் மணிமாறனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தொழில்முனைவோர்கள் செலவு செய்வதில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே அதிக லாபம் பார்க்க முடியும். அதுமட்டுமின்றித் தேவையான விஷயங்களுக்கு மட்டும் செலவுகளை மேற்கொள்வது என்ற பழக்கத்தைக் கொண்டு வந்தாலே அவர்களது தேவையில்லாதச் செலவுகள் குறையத் தொடங்கும். எஸ்எம்இகள் தொழிலில் ஒவ்வொரு துறையிலும் செலவைக் குறைக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

SME கைடுலைன் : கட்டுக்கடங்காத செலவுகள்... கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!

முதலாவதாக, அவரது கொள்முதலில் செலவைக் குறைக்க வேண்டும். ஒரு எஸ்எம்இ அதிக பணத்தைச் செலவழிப்பது அவர் தயாரிக்கும் பொருளுக்கான மூலப்பொருள் வாங்குவதில்தான். இந்த மூலப்பொருளை சரியான இடத்திலிருந்து வாங்க வேண்டும். அதேசமயம் விலை குறைவான, தரமான பொருளாக இருக்க வேண்டும். இதன்மூலம் ஒரு பெரிய தொகையை சேமிப்பாக மாற்ற முடியும். ஒரு லட்சம் ரூபாய் அடக்கத்தில் வாங்க வேண்டிய பொருளை, சப்ளையரை சரியாகத் தேர்வு செய்யாமல் 1.25 லட்சம் ரூபாய்க்கு வாங்கினால் அதுவும் தேவை யில்லாதச் செலவுதான். அதற்காக நன்கு விசாரித்து ஒன்றுக்கு நான்குமுறை மொத்த விற்பனை நிறுவனங்களை அணுகி நம் தேவைக்கு ஏற்ப வாங்குவது சிறந்தது.

SME கைடுலைன் : கட்டுக்கடங்காத செலவுகள்... கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!

இரண்டாவதாக, நாம் கொள்முதல் செய்யும் பொருளை எவ்வளவு தொலைவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறோம் என்பதும் செலவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான விஷயம். அருகிலேயே விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு பொருளை வாங்குவதற்குப் பதில், அதிகத் தொலைவில் இருந்து வாகனம் மூலம் எடுத்துவரும்போது அதற்கான போக்குவரத்துக் கட்டணம் பொருளின் கொள்முதல் விலையை கூடுதலாக்கிவிடும். மேலும் சிலசமயம் வெளிச்சந்தைகளிலும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கக்கூடும். போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைப்பதன் மூலமும் செலவைக் குறைக்கலாம். சில எஸ்எம்இகள் தங்களுக்கான தனிப் போக்குவரத்து அமைப்பை வைத்திருப்பார்கள் அவர்களே பொருட்களைக் கொண்டு வரும்போது போக்குவரத்துக் கட்டணம் என்பது ஓரளவுக்கு குறைய வாய்ப்புண்டு.

மூன்றாவது, பராமரிப்புச் செலவு. இன்று எந்த தொழிலாக இருந்தாலும் அதற்கு இயந்திரங்கள் என்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது அதனைப் பராமரிப்பது  முக்கியமான விஷயமாகி விட்டது. இந்த இயந்திரங்களைப் பராமரிக்க ஆகும் செலவு மிகவும் குறைவுதான். இந்தச் செலவை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, அந்த இயந்திரங்கள் பழுதாகி, அதைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு போய்விடுவார்கள். இதன்பிறகு இதனை சரிசெய்வதற்கு மிகப் பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், சரியான பராமரிப்பை அவ்வப்போது மேற்கொண்டால் அதற்கு ஆகும் செலவு பழுதடைந்தபின் ஆகும் செலவைவிட மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் எஸ்எம்இகள் பராமரிப்பு செலவை சரியாகச் செய்தால், பழுதாகி செலவழிக்கும் செலவைக் குறைக்கலாம்.

SME கைடுலைன் : கட்டுக்கடங்காத செலவுகள்... கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!

நான்காவதாக, பணியாட்களைத் திறம்படக் கையாள்வதன் மூலம் செலவுகளை குறிப்பிடத் தகுந்த அளவில் குறைக்க முடியும். ஒரு தொழிலில் இயந்திரங்கள் அதிகம் பயன்படும் இடத்தில் சரியான தேவையில் அதற்கேற்ப ஆட்களை நிர்ணயிக்க வேண்டும். சரியான ஆள் தேவையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்களை நியமிப்பது, திறன்மிக்க ஆட்களைத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றின் மூலமும் செலவைக் குறைக்கலாம்.  உதாரணமாக, 10 பேர் சேர்ந்து ஒரு நாளைக்கு 10 டன் தயாரிக்கிறார்கள் எனில், அதிக திறன்கொண்ட 8 பேரை வைத்து ஒரு நாளைக்கு 10 டன்  தயாரிக்க முடியும் எனில், அந்த முடிவை எடுப்பதே சரியானதாக இருக்கும்.

ஐந்தாவதாக, சில நிறுவனங்கள் அதிக அளவில் விளம்பரங்களுக்காக செலவு செய்யும். அப்படி செய்யாமல், பொருட்களைத் தேவைப்படும் ஆட்களுக்கு நேரடியாக டெமோ செய்து காட்டுவதன் மூலமும் விளக்கம் அளிப்பதன் மூலமும் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தலாம். அப்படி சந்தைப் படுத்தும்போது விளம்பரத்துக்கான செலவு குறையும்.

SME கைடுலைன் : கட்டுக்கடங்காத செலவுகள்... கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!

ஆறாவதாக, உற்பத்தியில் ஒரு சில செயல்பாடுகளின்போது சில வேலை யாட்கள் தேவைப்படமாட்டார்கள். அவர்களை வேறு வேலையில் ஈடுபடுத்துவதன் மூலம் அதிக ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகாது. அவர்களுக்கு அந்த வேலைக்குத் தரும் தொகை, தனியாக ஒருவரை பணியமர்த்திச் செய்வதைவிடக் குறைவாகவே இருக்கும்.

தேவை என்ன என்பது தெரிந்து அதற்கு ஏற்ப தொழில் செய்தாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும். இந்தச் செலவுகளைக் குறைப்பது லாபம் பார்க்க உதவும். சிறிது சிறிதாக அதிகச் செலவுகளைக் குறைத்தால், அதன் அளவு பெரிதாக மாறி எஸ்எம்இகளின் வர்த்தகத்தில் பணம் சேமிக்கப்படும் என்பதால் இதனை எஸ்எம்இகள் பழக்கப்படுத்தினால் தொழில் சிறக்கும்’’ என்றார்.

இவர் சொல்வதுபோல செய்து செலவைக் குறைத்து எஸ்எம்இகள் தொழிலில் முன்னேறலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism