Published:Updated:

ஏற்றத்தில் சந்தை... இனி என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடு நிஃப்டி கடந்த வருடம் ஆகஸ்ட் 28-ம் தேதி 5119 என்ற குறைந்தபட்ச அளவைத் தொட்டது. 2014 பிப்ரவரி முதல் வாரத்தில் 6000 என்ற அளவில் வர்த்தமாகிக் கொண்டிருந்த நிஃப்டி, தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின், தொடர் ஏற்றம் கண்டு செப்டம்பர் 2-ம் தேதி அன்று 8100 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. அதாவது, ஏறக்குறைய 58% உயர்வு கண்டிருக்கிறது.

சந்தை தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், முதலீட்டாளர்களின் மனதில் பலவிதமான கேள்விகள்.  சந்தையில்  ஏற்றம் ஆரம்பித்தபோது பல பங்குகள் ஏற்றம் கண்டன. ஆனால், தற்சமயம் நிஃப்டி புள்ளிகள் உயர்ந்தாலும், பல பங்குகளின் விலை தேக்கநிலையையோ அல்லது விலைச்சரிவையோ (கரெக்‌ஷன்) தற்போது சந்தித்திருக்கிறது.  இந்த நிலையில், இனி என்னென்ன பங்குகளை வாங்கினால் லாபம் பார்க்கலாம்? இந்த நிலையிலும் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாமா அல்லது தவிர்க்க வேண்டுமா?

இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் வகையில் தற்போது நிலவக்கூடிய சூழல் குறித்து ஒரு சிறிய ஸ்வாட் (SWOT) ஆய்வு மேற்கொள்வோம். ஸ்வாட் என்பதன் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சொல்லைக் குறிக்கும். எஸ் என்பது ஸ்ட்ரெங்த் (பலம்), டபிள்யூ என்பது வீக்னெஸ் (பலவீனம்), ஓ என்பது ஆப்பர்ச்சூனிட்டீஸ் (வாய்ப்பு), டி என்பது த்ரட்ஸ் (அபாயம்) குறிக்கும். இந்த ஆய்வின்படி இன்றைய சந்தை எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராய்வோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஏற்றத்தில் சந்தை... இனி என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

 பலங்கள்!

 ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராகப் பதவியேற்றப்பின் மேற்கொண்ட நடவடிக்கைகளால் டாலருக்கு நிகரான இந்நிய ரூபாயின் மதிப்பில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. அது தொடரவும் செய்கிறது.

 நிதிநிலைப் பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

 ரிசர்வ் வங்கியும், அரசும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை களாலும், முயற்சிகளாலும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வெகுவாக குறைந்தது.
 முதல் காலாண்டின் பற்றாக்குறை 1.7%

  உலகளவில் ரஷ்யா, உக்ரைன், ஈராக் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளில் பல பிரச்னைகள் இருந்தபோதிலும் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் ஏறவில்லை; சமீபத்திய வாரங்களில் குறைந்து வந்திருக்கிறது.

 வெளிநாடுவாழ் இந்தியர்களிட மிருந்து வரும் பணவரத்து ஏறக்குறைய 7000 கோடி டாலர். அதாவது, ரூ.4,20,000 கோடி. இதுவும் நமது நாட்டு பொருளாதாரத்துக்கு வலுவூட்டுகிறது.

 எட்டு காலாண்டுகளுக்குப்பின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நமது நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 5.7% என்று அரசு அறிவித்துள்ளது.

தனிப்பெரும்பான்மையுடன் அமைந்திருக்கும் மத்திய அரசு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமல்லாது, புள்ளிவிவரங்கள் நமது நாட்டு பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு வந்துகொண்டிருக்கிறது என்ற காரணத்தினால் அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை வாங்குகின்றனர்.

ஏற்றத்தில் சந்தை... இனி என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

 பலவீனங்கள்!

 இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத பணவீக்க விகிதம்.

 குறையாத வட்டி விகிதங்கள்.

 ராஜ்ய சபையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதில் நரேந்திர மோடி அரசுக்கு ஏற்படும் சிரமங்கள்/காலதாமதங்கள்.

 வாய்ப்புகள்!

 உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்கா முன்னேற்றம் கண்டுவருவது; அமெரிக்காவில் 2015-ம் ஆண்டு பல மருந்துகள் காப்புரிமையைவிட்டு வெளியே வருவது; சீனா சர்வதேச ஜவுளி வர்த்தகத்தில் தன் பங்கை குறைத்து வருவது; 2015-ம் ஆண்டு உலக வர்த்தகம் அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இதனால் குறிப்பாக மென்பொருள், மருந்துகள், ஜவுளிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் மூலதனப் பொருட்களின் ஏற்றுமதி  அதிகரிக்கும்.

 உள்கட்டமைப்பு (இன்ஃப்ரா) மற்றும் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துதல், அடுத்த பத்து ஆண்டு களில் எல்லோருக்கும் வீடு, நாடு முழுவதும் கழிப்பறை வசதி போன்ற திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்து வதன் மூலம் ஸ்டீல், சிமென்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

 பெருகிவரும் ஆன்லைன் வர்த்தகம் காரணமாக அட்டைகள் (பேப்பர் போர்டு) தயாரிக்கும் நிறுவனங்கள், லாஜிஸ்டிக்/கூரியர் மற்றும் மீடியா நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி காணும் வாய்ப்புள்ளது.

 2015-ல் வட்டி விகிதங்கள் குறைய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. வட்டி விகிதங்கள் குறைந்தால், அது வாகனம், வங்கி, வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி காண உதவும்.

தற்போதைய சூழலில் பலங்களும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால் பங்குச் சந்தைகள் ஏறுமுகமாக உள்ளன. இருந்தாலும் சில அச்சுறுத்தல்களும் உள்ளன. அவற்றை மனதில் கொள்வது நலம்.

 அச்சுறுத்தல்கள்!

 அமெரிக்காவின் பொருளாதாரம் வலுப்பெற்று, அந்த நாட்டு மத்திய வங்கி, தொடர்ந்து வட்டியை அதிகரிக்கும்பட்சத்தில், சில எஃப்ஐஐகள் பங்குகளை விற்றுப் பணத்தைத் திரும்ப எடுத்துச் செல்லக்கூடும்.

  பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகள், நேரடி வரிவிதிப்பு (டிடிசி), சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), நிலம் கையகப் படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள், புதிய தொழிலாளர் சட்டம் போன்ற மசோதாக்களை நிறைவேற்ற காலதாமதம் ஆவது.

  மாநில தேர்தல் முடிவுகள், குறிப்பாக மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா.

ஏற்றத்தில் சந்தை... இனி என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

 நாம் செய்ய வேண்டியது..!

பலவித நிகழ்வுகள் பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு நல்ல பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்த பங்குகளை நியாயமான விலையில் வாங்குவது என்பது முக்கியம். நல்ல பங்கினையும் அதிக விலை கொடுத்து வாங்கினால் நஷ்டத்தைச் சந்திக்கக்கூடும் என்பது எழுதப்படாத விதி. வாங்கக்கூடிய விலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளப் பங்குகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
 
வளர்ச்சிப் பங்குகள்..!

எந்தத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும், வருடா வருடம் விற்பனை, நிகர லாபம், பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் டிவிடெண்ட், மற்ற நிதிச் செயல்பாடுகளில் முன்னேற்றத்தைக் காணும் நிறுவனங்களின் பங்குகளை வளர்ச்சி பங்குகள் என்று அடையாளம் காணலாம். இத்தகைய நிறுவனப் பங்கு களின் சந்தை விலை அதிகமாக இருக்கும். பிஇ விகிதமும் அதிகமாகி இருக்கும்.

இந்தவகைப் பங்குகளின் வாங்கும் விலையைக் கீழ்க்கண்ட கணக்கீடுகள் மூலம் அறியலாம்.

1. முதலில் இபிஎஸ் (ஒரு பங்கு லாபம்) வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட வேண்டும்.
2. மூன்று வருடம் கழித்து, அதனுடைய இபிஎஸ் என்னவாக இருக்கும் என்று கணக்கிட வேண்டும்.
3. அந்த நிறுவனத்தின் சராசரி பிஇ விகிதத்தைக் கணக்கிட வேண்டும்.
4. இபிஎஸ் மற்றும் பிஇ விகிதத்தை வைத்து மூன்று வருட முடிவில் அந்தப் பங்கின் விலையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
5. அதற்கு இணையான தற்போதைய மதிப்பைக் கணக்கிட வேண்டும்.
6. தற்போதைய மதிப்பிலிருந்து 10 - 15% கழிக்க வேண்டும். அதுதான் நாம் வாங்க வேண்டிய விலை.

இந்த அடிப்படையில் மூன்று பங்குகள் கீழே தரப்பட்டுள்ளன.

ஐடியா செல்லுலார்

பங்கு விலை ரூ. 167.75 (செப்.4)

ஏற்றத்தில் சந்தை... இனி என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

கடந்த ஆறு மாதங்களாக டெலிகாம் துறைக்கு சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. போட்டிகள் குறைந்துவிட்டன. புதிய அரசு ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடுகளை நியாயமான விலையில் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர் மற்றும் டேட்டா பரிவர்த்தனை அதிகரிப்பு போன்ற காரணங்களினாலும் அந்தத் துறை சார்ந்த நிறுவனங் களின் வருமானம் அதிகரித்து உள்ளது.

 கடந்த ஆறு ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளையும் மற்றும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு கீழே உள்ள கணக்கீடுகள் செய்யப்பட் டுள்ளன.

 இபிஸ் வளர்ச்சி விகிதம் 16.08%

 மூன்று ஆண்டுகள் முடிந்தபின் எதிர்பார்க்கப்படும் இபிஎஸ் 9.23

 சந்தை வழங்கும் சராசரி பிஇ 27.37

மூன்று ஆண்டுகளின் முடிவில் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.253

 அதற்கு இணையான தற்போதைய விலை ரூ.167

எனவே, தற்போதைய விலையில் வாங்குவதற்கு ஏற்ற பங்கு என்று கொள்ளலாம்.

யெஸ் பேங்க்

 பங்கு விலை ரூ. 619.15 (செப்.4)

 வேகமாக வளர்ந்துவரும் தனியார் துறை வங்கிகளில் ஒன்று; 31.3.2014 அன்று இந்த வங்கியின் நிகர வாராக்கடன் 0.1%. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவராலும் நன்கு அறியப்பட்ட வங்கி.

 இபிஎஸ் வளர்ச்சி விகிதம் 34.38%

 மூன்று ஆண்டுகள் முடிவில் எதிர்பார்க்கப்படும் இபிஎஸ் ரூ.108.47

 சந்தை வழங்கும் சராசரி இபிஎஸ் 11.56

 மூன்று ஆண்டுகளின் முடிவில் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.1,254

 அதற்கு இணையான தற்போதைய விலை ரூ.824

எனவே, தற்போதைய விலையில் வாங்குவதற்கு ஏற்ற பங்கு என்று கொள்ளலாம்.

டைட்டான்! 
 
பங்கு விலை ரூ. 387.90 (செப்.4)

 எல்லோராலும் நன்கு அறியப்பட்ட நிறுவனம்.

 2013-ம் ஆண்டு நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி போன்ற காரணங் களால் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டது. என்றாலும் நிர்வாகத் திறமையால் சமாளித்துவிட்டனர்.
 31.3.2014-ம் முடிவில் விற்பனை ரூ.11,000 கோடி. அடுத்த ஐந்து ஆண்டு களில் மொத்த விற்பனையை ரூ25,000 கோடி அளவுக்கு உயர்த்தி இலக்கு நிர்ணயித்துச் செயல்படும் நிறுவனம்.

 கணக்கீடு

இபிஸ் வளர்ச்சி விகிதம் 17.54%
மூன்று ஆண்டுகள் முடிந்தபின் எதிர்பார்க்கப்படும் இபிஎஸ் 13.48
சந்தை வழங்கும் சராசரி பி.இ 29.67
மூன்று ஆண்டுகளின் முடிவில் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.400

அதற்கு இணையான தற்போதைய விலை ரூ.263

இந்த விலை மிக அதிகமாகி இருப்ப தால் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு கரெக்‌ஷனுக்காக காத்திருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் செயல்பாடு நன்றாக இருந்தால், நமது கணக்கீடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 சக்கரப் பங்குகள் (சைக்ளிக்கல் ஸ்டாக்ஸ்)

சந்தைப் பங்குகளின் வளர்ச்சி பொருளாதாரத்தையொட்டி இருக்கும். பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் உள்ளதா என்பதைக் கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

1. வளரும் மொத்த உற்பத்தி (ஜிடிபி)
2. குறையும் பணவீக்க விகிதம்
3. குறையும் வட்டி விகிதம்

நமது நாட்டைப் பொறுத்தவரை, மொத்த உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. பணவீக்கமும், வட்டி விகிதங்களும் 2015-லிருந்து குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்தகைய பங்குகளை வாங்குவதற்கு எளிய வழி, அதன் புத்தக மதிப்பை சராசரி விலையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது. சந்தை விலை புத்தக மதிப்பைவிட இரண்டு மடங்கு அல்லது அதற்கும் கீழே இருந்தால் வாங்குவதற்கு ஏற்ற பங்கு; சந்தை விலை புத்தக மதிப்பைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமானால் விற்பதற்கு ஏற்ற பங்கு.

வட்டி விகிதங்கள் குறைய ஆரம்பித்து, பொருளாதாரம் வளர்ச்சி காணும்போது அடுத்த மூன்று ஆண்டுகளில் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ள பங்குகளைத் தேர்ந்தெடுத்து மேலே உள்ள அட்டவணையில் கொடுத்துள்ளோம். தேர்ந்தெடுக்கும்போது நிறுவனங்களின் நிதிச் செயல்பாடு, தொடர்ந்து டிவிடெண்ட் வழங்குதல், சந்தை விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம் 2 அல்லது அதற்குக் கீழே உள்ள பங்குகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளோம்.

இவை நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றப் பங்குகள் என்கிற அளவில் பரிந்துரை செய்திருக்கிறோம்.

போட்டியில் பின்தங்கும் இந்தியா!

உலக அளவில் ஒவ்வொரு நாட்டின் போட்டித்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உலக பொருளாதார மன்றம் ஆய்வு அறிக்கை வெளியிடுகிறது. இந்த நிறுவனம் வெளியிடும் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் (global competitiveness index) இந்தியா
71-வது இடத்தைப் பெற்றுள்ளது.  கடந்த முறை 60-வது இடத்தைப் பெற்ற நாம், இந்த முறை 11 இடங்கள் சரிந்து 71-வது இடத்துக்கு இறங்கி இருக்கிறோம். இந்தக் குறியீட்டில் முதலிடத்தை சுவிட்சர்லாந்து பெற்றிருக்கிறது. சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும் ஹாங்காங் ஏழாவது இடத்தையும் ஜப்பான் ஒன்பதாவது இடத்தையும் பெற்றிருக்கின்றன.