நடப்பு
மியூச்சுவல் ஃபண்ட்
புத்தக விமர்சனம்
Published:Updated:

ஹோம் பட்ஜெட் - பிற்பாடு கிடைக்கும் போனஸ்... முன்கூட்டியே செலவழிக்கலாமா?

இரா.ரூபாவதி படம்: தே.தீட்ஷித்.

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

சிக்கலைச் சமாளிக்கும் வழிகள்!

செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டாலே போதும் அடுத்தடுத்து பண்டிகைகள் வந்து ஊரே அமர்க்களப்படும். இதிலும் தீபாவளிப் பண்டிகையின்போது நாம் அனைவருமே நிறைய செலவு செய்வோம். இந்தச் செலவுக்கான பணத்துக்கு எந்த வகையிலும் திட்ட மிடாதவர்கள், பிற்பாடு கிடைக்கப் போகும் போனஸ் தொகையை முன்கூட்டியே செலவு செய்து, துணிமணிகள், ஏசி, வாஷிங்மெஷின் போன்ற பொருட்களை வாங்குகிறார்கள்.

இப்படி செய்வது சரியா, இப்படி செய்வதால் என்னென்ன சிக்கல் ஏற்படும், இதனைச் சமாளிக்கும் வழிகள் என்னென்ன என்பது குறித்து விளக்கினார் நிதி ஆலோசகர் அனிதா ஆர் பட்.

“போனஸ் பணத்தைக் குறிவைக்கும் வகையில் பல விளம்பரங்கள் ஒரு மாதத்துக்கு முன்பே வந்துவிடும். அதாவது, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், விலையில் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், ஜம்போ காம்போ ஆஃபர் என பல வழிகளில் வாடிக்கை யாளர்களைக் கவரும் வகையில் விளம்பரம் செய்வார்கள். இந்த விளம் பரங்களினால் ஈர்க்கப்படுகிறவர் கள் எப்படியாவது இந்தப் பொருளை வாங்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

ஹோம் பட்ஜெட் - பிற்பாடு கிடைக்கும் போனஸ்... முன்கூட்டியே செலவழிக்கலாமா?

மேலும், அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்களும் தீபாவளிக்காக முன்கூட்டியே வாங்கிய பொருட்களைக் கொண்டுவந்து காண்பிக்கும்போது, நாமும் இதை வாங்கலாமே என்ற ஆர்வம் வரும்.  இப்படி பல பொருட்களை எந்தத்  திட்டமிடலும் இல்லாமல் நாம் வாங்குகிறோம்.

அதாவது, அடுத்த மாதம் போனஸ் வரும் என்பதன் அடிப்படையில் இப்போதே செலவுகளைச் செய்கிறார் கள். இந்தச் செயல் மிகவும் தவறானது. பண்டிகை என்று வரும்போது செலவே செய்யக்கூடாது என்று நான் சொல்ல வில்லை. ஆண்டுக்கு ஒருமுறை பண்டிகையின்போதுதான் நாம் துணிமணிகளை வாங்குகிறோம்.  எனவே, அந்த நேரத்திலும் ஓரளவுக்கு செலவு செய்யவில்லை எனில், குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்த முடியாது.

ஆனால், கைக்கு வந்துசேராத பணத்துக்கு பதிலாக கடன் வாங்கியோ அல்லது தற்போது சேமிப்பில் இருக்கும் பணத்திலிருந்து ஒருபகுதியை எடுத்தோ செலவு செய்வது தேவைதானா என்பதே என் கேள்வி. கூடுதலாகக் கிடைக்கும் பணம், அது குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி, கையில் கிடைத்தபிறகு செலவு செய்வதே   சரியாக இருக்கும்.

ஹோம் பட்ஜெட் - பிற்பாடு கிடைக்கும் போனஸ்... முன்கூட்டியே செலவழிக்கலாமா?

அடுத்த மாதம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கும் பணம் திடீரென வராது என்று முடிவானால், முன்கூட்டியே செய்த செலவைச் சமாளிக்க புதிதாக கடன் வாங்க வேண்டியிருக்கும். அல்லது நாம் எதிர்பார்க்கும் தொகையைவிட குறைவான தொகை கிடைத்தாலும் சிக்கல்தான். அதாவது, தீபாவளி போனஸ் அடுத்த மாதம் ரூ.15 ஆயிரம்  கிடைக்கும் என நீங்கள் கணக்குப் போட்டு வைத்திருக்கிறீர்கள். ஆனால், ரூ.10 ஆயிரம்தான் போனஸ் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தச் சமயத்தில் ரூ.13 ஆயிரம் முன்கூட்டியே செலவு செய்திருந்தால், கூடுதலாக செலவு செய்த ரூ.3,000-த்தை ஈடுசெய்வதில் சிக்கல்தான் ஏற்படும். போனஸ் தொகை போக மீதமுள்ள ரூ.3,000 கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும்.

இதுமாதிரியான செலவுகள் குடும்ப நிம்மதியைக் குலைக்கக்கூடியவை. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு உருவாகி, பிற்பாடு அது பூதாகாரமாக வெடித்து, பண்டிகையை நல்லபடியாக கொண்டாட முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடும். இதனைச் சமாளிப் பதற்கு சில வழிமுறைகள் இருக்கவே செய்கிறது. கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டாலே போதும், இதுமாதிரி யான சிக்கல்களில் நாம் சிக்காமலே தப்பித்துவிடலாம்.

முதலில், பிற்பாடு வரும் பணத்தை நம்பி, இன்றைக்கு கடன் வாங்கி அல்லது சேமிப்பில் இருக்கும் பணத்தைச் செலவழிக்கும் பழக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள். கைக்கு காசு வந்தபிறகு செலவு, இல்லாவிட்டால் அந்த செலவே வேண்டாம் என்று சொல்லும் மன உறுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, இந்த தீபாவளியை விட்டுவிட்டு, அடுத்த தீபாவளிக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை சேமிப்பதற்கான வழிமுறைகளை இன்றே ஆரம்பிப்பது. சிம்பிளாக வங்கியில் ஒரு எஃப்டி அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இவ்வளவு தொகை என ஒதுக்கி சேர்ப்பதன் மூலம் அடுத்த ஆண்டு தீபாவளியைக் குதூகலமாகக் கொண்டாடலாம்.
இப்படி செய்வதில் இன்னொரு நன்மையும் கிடைக்கும். தீபாவளிக்குத் தேவையான பணம் நீங்கள் சிறுக சிறுக சேமித்துவிட்டதால், போனஸ் பணமோ அல்லது வேறு ஏதாவது பணமோ மொத்தமாகக் கிடைக்கும்போது, அதனைக் கொண்டு தங்க நகையோ அல்லது வீட்டுக்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளையோ வாங்கலாம். இதனால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வராது. பண்டிகையை எல்லோரும் உற்சாகமாக கொண்டாடவும் செய்ய லாம்’’ என்று முடித்தார் அனிதா பட்.

அட, இதுவும் நல்ல யோசனையா இருக்கே என்பவர்கள் இந்த ஆண்டு தீபாவளி முதலே இந்த யோசனையை செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினால், அடுத்த தீபாவளிக்கு பிற்பாடு கிடைக்கும் பணத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது! 
 

திட்டமிட்டு செலவு செய்வேன்!

பூமா, சென்னை.

ஹோம் பட்ஜெட் - பிற்பாடு கிடைக்கும் போனஸ்... முன்கூட்டியே செலவழிக்கலாமா?

‘‘கையில் பணம் வந்த பிறகுதான் செலவு செய்வது என் வழக்கம். அதற்குமுன் கிடைக்கும் பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம் என்பதை ஒரு லிஸ்ட் எடுத்து வைத்துக்கொள்வேன். பணம் கைக்கு வந்தபிறகு தேவையான செலவுகளைச் செய்வேன். வீட்டில் கட்டாயம் எதாவது பொருட்கள் வாங்க வேண்டியிருந்தால் வாங்கிவிடுவேன். இல்லையென்றால் அந்தப் பணத்தை முதலீடாக மாற்றிவிடுவேன். கிடைக்கும் முழுத் தொகையையும் முதலீடு செய்ய மாட்டேன். தீபாவளிக்கு வாங்க வேண்டிய புது டிரஸ் போன்றவற்றை வாங்குவேன். மீதமுள்ள பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்து, அவசரத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வேன்.’’