Published:Updated:

வளர்ச்சிக்கு உதவும் தகவல் தொழில்நுட்பம்!

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...ச. ஸ்ரீராம்

SME கைடுலைன்

லகமே இன்று கணினிமயமாகிவரும் வேளையில் 'எங்க ஆபீஸ்ல கம்ப்யூட்டர் எதுவும் இல்லீங்க' என்று சொல்வது நிச்சயம் பெருமைக்குரிய விஷயம் அல்ல. இன்றைய காலகட்டத்தில் கணினியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ளவில்லை எனில், போட்டியை சமாளிப்பது சிரமமாகிவிடும். ஐ.டி எனப்படும் தகவல் தொழில் நுட்பத்தை  எஸ்எம்இகள் தங்கள் தொழிலில் கொண்டுவருவதன் மூலம்  பல நன்மைகளை பெற முடியும்.    ஐ.டி தொழில்நுட்பம் மூலம் எஸ்எம்இகள்  அடையும் பயன்களைப் பற்றி கார்  (kaar) டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் மாறனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

''கம்ப்யூட்டரை அடிப்படையாகக் கொண்டு ஒரு நிறுவனத்தின் முக்கிய துறைகளை ஒருங்கிணைப்பதுதான் தகவல் தொழில்நுட்பம். இது பெரிய நிறுவனங்களுக்குத்தான் ஏற்றது. சிறிய நிறுவனங்கள் கையாள்வது சிரமம் என எஸ்எம்இகள் நினைக்கிறார்கள். சொல்லப் போனால், சிறிய நிறுவனங்களுக்குத்தான் இதனால் அதிக நன்மை கிடைக்கும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அதிகம் செலவாகுமே என எஸ்எம்இகள் தயங்கலாம். சாதாரணமாக நாம் ஆட்களை வைத்து செய்யும்போது ஆகும் செலவைவிட குறைவாகவே செலவாகும். 

வளர்ச்சிக்கு உதவும் தகவல் தொழில்நுட்பம்!

தகவல் தொழில்நுட்பத்தை ஒரு நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ஒரு நிறுவனத்தின் நிதித் திட்டமிடல் தொடங்கி, சந்தைப்படுத்துதல், நிர்வாகம் என அனைத்துத் துறைகளிலும் இதன் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். ஒருவருக்கான சம்பளக் கணக்கு தொடங்கி அவரது வருகைப் பதிவேடு மற்றும் அவர் தொடர்பான விவரங்கள் அனைத்தையுமே கணினி மயமாக்குவதன் மூலம் எளிதாகச் செய்ய முடியும். இதற்கென தனியாக எந்தவொரு ஊழியரையும் நியமிக்கத் தேவையில்லை என்பதால், ஒரே ஒருமுறை செலவு செய்தால் போதும், அதன்பிறகு பராமரிப்பு செலவு தவிர வேறு பெரிய செலவு எதுவும் இருக்காது.

வளர்ச்சிக்கு உதவும் தகவல் தொழில்நுட்பம்!

நிறுவனம் தொடர்பான தகவல்களைப் பராமரிக்க தேவையான மென்பொருட்களை அதிக விலை தந்துதான் வாங்கவேண்டும் என்றில்லை. மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாகக் கிடைக்கும் ஓப்பன் சோர்ஸ் (open source) மென்பொருள்களும் உள்ளன. இதனைப் பயன்படுத்தி உங்களின் நிறுவனத்தை எளிதாக கணினிமயமாக மாற்றி அமைக்க முடியும்.

அலுவலகத்துக்குள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களிடமும் நல்ல அணுமுறையை மேற்கொள்ள இந்தத் தகவல் தொழில்நுட்பம் மிகவும் வசதியாக இருக்கும். ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்தின் தயாரிப்பை வாங்கி விட்டால் அவரை திருப்திப்படுத்தும் விதமாக, அடுத்தத் தயாரிப்பை உங்கள் நிறுவனம் வெளியிடும்போது அதனைப் பற்றிய தகவல்களை அவருக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின் அஞ்சல் மூலம் தெரிவிப்பது தொடங்கி, உங்கள் நிறுவனத்தைப் பற்றியும், உங்கள் தயாரிப்புகளைப் பற்றியும் கூறும்போது தானாகவே உங்கள் மதிப்பு கூடிவிடும்.

இன்று செல்போன் வைத்திருப்பவர் களில் பாதிபேர் இன்டர்நெட் வசதியுடன் கூடிய  ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது சமூக வலைதளங்கள் மூலமாக உங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்தும்போது, பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்.

சமூக வலைதளங்களை திறமையாக பயன்படுத்துவதில் சில உத்திகள் உள்ளது. உதாரணத்துக்கு, உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறவர், தனது சமூக வலைதளம் மூலம் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும்போது, அந்த சமூக வலைதளத்தில் உள்ள 'டார்கெட்டிங்’ எனப்படும் வசதியைப் பயன்படுத்தலாம். அதன்மூலம் குறிப்பிட்ட பகுதி மற்றும் வயது கொண்ட வாடிக்கையாளர்களைக் குறிவைத்து மார்க்கெட்டிங் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சரியான வாடிக்கையாளரை சென்றடைய முடியும். இதற்கான செலவு என்பது சில ஆயிரம் ரூபாய்கள் தான். இது போஸ்டர் மற்றும் விளம்பரங்களுக்குச் செய்யும் செலவை விடக் குறைவு மற்றும் வலிமை மிக்கது.

இளைஞர்களை மையப்படுத்தி ஆரம்பிக்கும் தொழில்களுக்கு மொபைல் ஆப்ஸ்தான் இன்றைக்கு பலரும் பயன்படுத்தும் மார்க்கெட்டிங் உத்தியாக உள்ளது. காரணம், இளைஞர்கள் கடைகளில் விளம்பரப் படுத்திச் செய்யும் விளம்பரங்களைவிட விரல்நுனியில் ஆப்ஸ்கள் மூலமாகவும், சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களையே அதிகம் விரும்பு கின்றனர். அதுமட்டுமின்றி, இன்று ஒரு பொருளை வாங்கிப் பயன்படுத்தினால், இது நன்றாக உள்ளது அல்லது நன்றாக இல்லை என்பதை உடனே பதிவு செய்துவிடுகின்றனர். நீங்கள் தயாரிக்கும் பொருள் தரமாக இருந்தால், சமூக இணையதளங்களைப் பயன்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

வளர்ச்சிக்கு உதவும் தகவல் தொழில்நுட்பம்!

உங்கள் நிறுவனம் பற்றிய தகவல்களை கணினியில் சேமிப்பது மட்டுமின்றி, க்ளவுட் கம்ப்யூட்டிங் எனப்படும் இன்டர்நெட்டை பயன்படுத்தி விர்ச்சுவலாக தகவல்களைச் சேமிக்கும் வசதியும் பெருகியுள்ளது. இதனால் தொழில்நுட்ப வசதியைக் கட்டாயம் எஸ்எம்இகள் தெரிந்துகொண்டு பயன் படுத்த வேண்டியது அவசியமாகிறது

எஸ்எம்இகள் ஏன் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாறவேண்டும்?

1. இன்று போட்டி என்பது அளவுக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது. புதிதாக உருவாகும் நிறுவனங்கள் தொழில் நுட்பத்தோடு களமிறங்கும்போது, முன்பே ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களைக் கட்டாயம் தொழில்நுட்ப ரீதியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது குறைந்துவிடும்.

2. வணிக ரீதியாக, காஸ்ட் கட்டிங் என்பது தொழில்நுட்ப மேம்பாட்டால் அதிகம் சாத்தியப்படும். தகவல் தொழில்நுட்பம் நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகளில் பாதியைக் குறைக்கும். இதனைப் பராமரிக்க மட்டும்தான் செலவாகும்.

3. இன்றைய வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப ரீதியான ஆன்லைன் வர்த்தகத்தை விரும்புவதால் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கவர இந்த முறை வழிவகுக்கும்.

4. நிர்வாகத் தகவல்கள் அதிகமாகும்போது, அதனை எழுதி வைத்துப் பராமரிப்பது 10-15 வருடங்களில் காணாமல் போகவோ அல்லது அழிந்து போகவோ வாய்ப்புள்ளது'' என்று முடித்தார்.

எனவே, இனியாவது எஸ்எம்இகள் தங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்!

படம்: ஜெ.வேங்கடராஜ்

எஸ்எம்இகளுக்கு உதவும் டை!

டை (TIE) என்பது அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமைப்பாகும். இது 17 நாடுகளில் 61 கிளைகளோடு இயங்கி வருகிறது. இந்த அமைப்புக்கு சென்னையிலும் கிளை உள்ளது. இதன் முக்கிய நோக்கம், தொழில்முனைவோர்களின் வளர்ச்சிக்கு உதவுவதுதான். ஒரு தொழில்முனைவோர் இதில் உறுப்பினராக இணைந்துவிட்டால், அவர் தனது தொழிலை செம்மையாக நடத்தத் தேவையான நிதித் திட்டமிடல், தொழில்நுட்ப மேம்பாடு, சந்தைப்படுத்துதல் போன்ற பல துறைகளில் ஆலோசனையும் வாய்ப்புகளையும் பெறமுடியும். ஆண்டுதோறும் இந்த அமைப்பு கூட்டங்களை நடத்தி தொழில்முனைவோருக்கு பல வாய்ப்புகளை வழங்க வழி செய்கிறது. இதுவரை தமிழகம் முழுக்க  13,000க்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் இணைந்து பயன் பெற்றுள்ளனர். இதில் இணையும் தொழில்முனைவோர் களுக்குக் குறைந்த பதிவுக் கட்டணத்தில் சேவைகள் அளிக்கப்படுகிறது. இதில் பதிவு செய்து தகவல்களைப் பெற www.chennai-tie.org என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

SME Q & A

சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு உள்ள அரசின் திட்டங்கள் குறித்து எப்படி தெரிந்துகொள்வது?

@ பாஸ்கர், திருச்சி.

வாசகரது கேள்விக்கு திருச்சி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''சந்தைப்படுத்துதல் குறித்த விளக்கங்கள் மற்றும் அதற்கான வாய்ப்புகளை அரசு சிறுதொழில் பிரிவான எம்எஸ்எம்இயே ஏற்படுத்தித் தருகிறது. அதற்கான பயிற்சிகளையும் வழங்குகிறது. அதுதவிர, ஃபியோ (FIEO)  போன்ற அமைப்பும் ஆலோசனை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்றுமதி குறித்த திட்டங்களையும் பயிற்சி வகுப்புகளைப் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்''. 

http://www.msmedi-chennai.gov.in, http://www.fieo.org

எஸ்.எம்.இ தொழில்முனைவோர் கவனத்துக்கு... உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் உங்களுக்கான பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: msme@vikatan.com குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம். அதற்கு 044-66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.

அடுத்த கட்டுரைக்கு