Published:Updated:

SME கைடுலைன் : வரிச் சலுகைகளைப் பெறும் எளிய வழிமுறைகள்!

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...ச.ஸ்ரீராம் படம்: ப.சரவணகுமார்.

SME கைடுலைன் : வரிச் சலுகைகளைப் பெறும் எளிய வழிமுறைகள்!

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...ச.ஸ்ரீராம் படம்: ப.சரவணகுமார்.

Published:Updated:

சிறுதொழில் முனைவோர்கள் தரமாகப் பொருட்களைத் தயாரித்து விற்பதில் திறமை மிகுந்தவர் களாக இருந்தாலும், வரி விஷயத்தில் கொஞ்சம் திக்குமுக்காடவே செய்கின்றனர். நான் வரி கட்ட வேண்டுமா? எனது வரிச் சுமையைக் குறைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கான பதில் தெரியாமல் தவிக்கும் எஸ்எம்இகள் இன்று பல ஆயிரம் பேர்.

எஸ்எம்இகளுக்கு என்னென்ன வரிச் சலுகைகள் உள்ளன, அதிகமாக லாபம் பார்க்கும் நிறுவனங்கள் எப்படி தங்களது வரியைத் திட்டமிட வேண்டும், இதன்மூலம் எப்படி பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பது குறித்து இந்தியா ஃபைலிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லயனல் சார்லஸிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘எஸ்எம்இயாக இருக்கும் ஒருவர் வரி செலுத்துகிறார் என்றாலே அவர் நல்ல நிலையில் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது வாடிக்கை யாளர்கள் மற்றும் சப்ளையர்கள் மனதில் பதிந்துவிடும். இதன்மூலம் தங்கள் தொழில் மீது மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வெகுவாக அதிகரிக்க முடியும். தவிர, அந்த வரித் தாக்கலை வங்கிகளிடம் தரும்போது, உங்கள் மீது நம்பிக்கை அதிகரித்து, கடன் பெறும் தகுதியும் அதிகரிக்கும். எனவே, எஸ்எம்இகள் வரி செலுத்துவது மிகவும் அவசியமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

SME கைடுலைன் : வரிச் சலுகைகளைப் பெறும் எளிய வழிமுறைகள்!

பெரிய நிறுவனங்களைப்போல் நாங்கள் அதிக அளவில் வியாபாரம் செய்யவில்லையே, நாங்கள் ஏன் வரிச் செலுத்த வேண்டும் என்பது பல எஸ்எம்இகளின் கேள்வியாக உள்ளது. ஒருவர் வரி எதுவும் கட்டக்கூடாது  என்று நினைத்தால், அவர் தனக்கு எந்த வருமானமும் வரக்கூடாது என்று நினைப்பதாகத்தான் அர்த்தம்.

வருமானம் வேண்டாத எந்தத் தொழில் முனைவோரும் இருக்க முடியாது. தவிர, வரி விதிப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். நமக்கு மட்டும் விதிக்கப்படுவது அல்ல. எனவே, வரி கட்டாமல் இருக்க வேண்டும் என்கிற சிந்தனையை ஒழித்துக்கட்டிவிட்டு, சிறப்பாகத் திட்டமிடுவதன் மூலம் வரிச் சலுகைகளை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிப்பதே புத்திசாலித்தனம்.

எஸ்எம்இகள் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்முன் சரியான திட்டமிடல் அவசியம். ‘நான் இந்த வருடத்தில் இவ்வளவு பொருட்களைத் தயாரிக்கப் போகிறேன், அதற்கு இவ்வளவு தொழில்நுட்ப இயந்திரங்கள் தேவைப்படும், அதற்காக நான் குறிப்பிட்ட தொகையைக் கடனாக வாங்க  இருக்கிறேன், அந்த வேலைகளைச் செய்ய இத்தனை ஆட்கள் தேவைப்படு வார்கள், அவர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்போகிறேன்’ என்பதுவரை அனைத்தையுமே முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் அவசியம்.

SME கைடுலைன் : வரிச் சலுகைகளைப் பெறும் எளிய வழிமுறைகள்!

இப்படி செய்யும்போதுதான் உங்கள் விற்பனையில் உங்களுக்குக் கிடைத்துள்ள லாபத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வரி, அதில் எதற்கெல்லாம் விலக்கு உண்டு என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் எஸ்எம்இயாக இருக்கும்போது எந்த மாதிரியான வகைப்படுத்துதலில் இருக்கிறீர்கள் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் கூட்டாக (Partnership) தொழில் செய்கிறீர்களா அல்லது தனித்துச் செய்கிறீர்களா என்பதைப் பொறுத்து, நீங்கள் வரி கட்ட வேண்டியிருக்கும்.
எந்த விதத்தில் திட்டமிட்டால், வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இனி பார்ப்போம்.

முதலில், நீங்கள் தொழில் துவங்க வாங்கியுள்ள கடன், அதாவது நீங்கள் தொழில் செய்வதற்காக வங்கியில் அல்லது அரசு அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை நீங்கள் கணக்கில் காட்டிக்கொள்ளலாம். ஆனால், உங்களுக்குத் தெரிந்தவ ரிடத்திலோ அல்லது பதிவு பெறாத நிதி நிறுவனங்களிடமோ அதிகத் தொகையை ரொக்கமாகக் கடன் பெறும்போது, அந்தக் கடனை வரிச் செலுத்தும்போது கணக்கில் காட்ட முடியாது.  20,000 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து பரிவர்த்தனை களும் காசோலையாக இருக்கும் போதுதான் உங்களால் அவற்றைக் கணக்கில் காட்ட முடியும்.

தவிர, நீங்கள் வாங்கும் அந்தக் கடனுக்கு அரசு வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது. உதாரணமாக, எஸ்எம்இகளுக்கு வங்கிகள் 12 சத விகிதத்தில் ஒரு கடனை வழங்குகிறது எனில், அதில் அந்த வட்டி விகிதத்தில் 30 சதவிகிதத்தை வரிச் சலுகையாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இது பலருக்கு தெரியாமலே இருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டால், நீங்கள் 8 - 9% என்கிற அளவில்தான் வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

SME கைடுலைன் : வரிச் சலுகைகளைப் பெறும் எளிய வழிமுறைகள்!

மேலும், இயந்திரங்கள் வாங்க தேவைப்படும் பணத்தைக் கடனாக வாங்கி இருந்தாலும் அதனையும் கணக்கில் காட்டி வரிச் சலுகை பெற முடியும். இதனால் நீங்கள் வரியாகக் கட்டும் தொகை குறையும். நீங்கள் இயந்திரம் வாங்குவது தொடங்கி உங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்துவது ஆகியவற்றுக்கான கடன்களை யெல்லாம் கணக்கில் காட்டி சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இது தவிர, வேறு சில விஷயங்களையும் உங்கள் லாபத்திலிருந்து வரியில் சேராமல் கழிக்க வாய்ப்புள்ளன. நீங்கள் உங்கள் நிறுவனத்தைப் பிரபலப்படுத்த விளம்பரம் செய்த செலவு, இணையதளம் உருவாக்க செய்யப்பட்ட செலவு ஆகிய செலவுகளையும் நீங்கள் உங்கள் கணக்கில் காட்டி வரியிலிருந்து கழித்துக் கொள்ள முடியும்.

உங்களிடம் வேலை செய்யும் பணியாளர்களுக்குப் பிஎஃப், இஎஸ்ஐ ஆகியவற்றை வழங்குவதற்காக நீங்கள் செலுத்தும் தொகையையும் வரிச் செலுத்தும் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

இந்த வரிச் சலுகைகளை எல்லாம் உங்கள் முதலீடுகள் துவங்கி பொருளை சந்தைப்படுத்துதல் வரை உள்ள அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி கணக்கிடும்போது, உங்களால் சரியான லாபத்தை அடைந்து, கூடியவரை வரியை குறைத்தும் தொழில் செய்ய முடியும்.

சரி, இந்தக் கணக்குகளைக் கவனிக்க நான் ஆடிட்டரை அணுகினால், அவர் எல்லாவற்றையும் செய்து தந்துவிடுவார் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. நீங்கள் ஒரு வருடம் முழுவதும் கவனிக்கத் தவறிய விஷயங்களை ஒரு மாத காலத்தில் அவர் சரி செய்து உங்களுக்குப் பலனளிக்க வேண்டும் என்பது சிரமமான காரியமே.

SME கைடுலைன் : வரிச் சலுகைகளைப் பெறும் எளிய வழிமுறைகள்!

 தவிர, இடைப்பட்ட காலத்தில் நீங்கள் செய்த செலவுகளை நீங்களே மறந்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே, ஆடிட்டர் என்பவரை உங்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்திக் கொண்டு, கூடியவரையில் உங்கள் கணக்குவழக்குகளில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்.

இப்படி சொல்வதால், உங்கள் வரிக் கணக்கை நீங்கள் தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. உங்கள் கணக்கு வழக்குகள் பற்றிய அறிவை ஏற்படுத்திக் கொண்டாலே போதும்.

இப்படி உங்கள் தொழிலை திட்டமிட்டுச் செய்து, சரியான ஆலோசகரை அணுகி, வரிக் கணக்கு தாக்கல் செய்வதன்மூலம், நிறைய பணத்தைச் சேமிக்க முடியும்’’ என்றார் லயனல் சார்லஸ்.

வரித் தாக்கலை ஆண்டு தவறாமல் செய்தால், எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த நிறுவனமாக வளரும்போதும், பங்குச் சந்தைகளில் பட்டியலிடும்போதும் உங்கள் நிறுவனத்தின் மதிப்பீட்டுக்கு பெரிய அளவில் உதவி செய்வதாக இருக்கும்.

எனவே, வரிச் சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் வரிச்சுமையைக் குறைத்துக் கொண்டீர்கள் எனில், உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பன்மடங்கு பெருகும்.

 எஸ்.எம்.இ தொழில்முனைவோர் கவனத்துக்கு...

 உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் உங்களுக்கான பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: msme@vikatan.com   குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம். அதற்கு 044-66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism