ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட். இதன் பெயரில் உள்ளதுபோல, மருந்துத் துறை சார்ந்த ஃபண்டாகும். பொதுவாக, துறை சார்ந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் என்பதால், சிறிய முதலீட்டாளர்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறையாக முதலீடு செய்ய வருபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம். ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருபவர்கள் (தங்களது போர்ட் ஃபோலியோவை டைவர்ஸிஃபைடு செய்வதற்காகவும்) மற்றும் இந்தத் துறை பற்றிய ஞானம் உள்ளவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
இந்த ஃபண்டை பரிந்துரை செய்வதற்கான காரணம் என்ன?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மருந்துத் துறை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் டிமாண்ட் வளர்ந்துகொண்டே வரக்கூடிய துறை களில் ஒன்றாகும். இந்திய மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குப் பெருவாரியாக ஏற்றுமதி செய்கின்றன. மேலும், காப்புரிமையை (Patent) விட்டு வெளிவரும் மருந்துகளைத் தயாரிப்பதில் இந்திய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்திய நாடு பொருளாதாரத்தில் மேம்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில், மருந்துத் துறையின் வளர்ச்சி அமோகமாக இருக்கும். ஏனென்றால், மக்களின் வருமானம் அதிகரிக்கும்போது, உடல் நலத்துக்குச் செலவிடும் தொகை யும் அதிகமாகும்.
மேலும், நம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக கான்ட்ராக்ட் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி (CRAMS – Contract Research and Manufacturing Business) செய்துதரும் தொழிலும் பெருகி வருகிறது. நடப்பு ஐந்து வருடத்தில் (2010 –2015) இந்திய உள்நாட்டு மருந்துச் சந்தையின் வளர்ச்சி சிஏஜிஆர் அடிப்படையில் ஆண்டுக்கு 16% இருக்கும் என கிரிஸில் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அதேபோல், மருந்து ஏற்றுமதியின் வளர்ச்சி ஆண்டுக்கு 17 சதவிகிதமும், கிரேம்ஸ் செயல்பாட்டின் வளர்ச்சி 33 சதவிகிதமாகவும் இருக்கும் எனவும் அதே நிறுவனம் கணக்கிட்டு உள்ளது.

இந்திய மருந்து நிறுவனங்கள் உலகளவில் 100-க்கும் மேலான நாடு களுக்கு ஏற்றுமதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை, ஐ.டி நிறுவனங்களைவிட அதிகமானது. நமது உள்நாட்டு மருந்துச் சந்தையின் வால்யூம் உலகளவில் நான்காவது பெரிய சந்தை யாகும். மேலும், நமது மருந்துத் துறையின் சராசரி வளர்ச்சி நமது ஜிடிபியைப்போல் ஒன்றரை மடங்குக்கும்மேல்.
ஆகவே, இந்தத் துறை ஒரு எவர்கிரீன் துறையாகும். குறுகிய காலத்தில் சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருவாயைத் தரவல்லது. இந்த ஃபண்டில் செய்யப்போகும் முதலீட்டை மக்கள் எந்த இலக்குக்காகவும் செய்யாமல், சொத்தினைப் பெருக்குவதற் காக (Wealth Creation) செய்யலாம்.

இந்த ஃபண்டின் மேனேஜர் சைலேஷ் ராஜ் பான் ஆவார். இவரே, நாம் ஏற்கெனவே இந்தப் பகுதியில் பரிந்துரைத்த ரிலையன்ஸ் ஈக்விட்டி ஃபண்டின் மேனேஜரும் ஆவார். இந்த ஃபண்ட் தற்போது ரூ.809 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஜூன் 05, 2004) ஒருவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம், தற்போது (செப்டம்பர் 26, 2014) ரூ.11,86,520-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 27.10 சதவிகிதத்துக்குச் சமம். 2004-ம் ஆண்டில் முதலீட்டுக்காக வாங்கிய வீடோ, நிலமோ அல்லது தங்கமோ, இந்த அளவு (11 மடங்குக்கும் மேலான) வருமானத்தைத் தந்திருக்குமா என்பது சந்தேகமே!
இந்த ஃபண்ட் ஏறக்குறைய 45 சத விகிதத்தை லார்ஜ் கேப் பார்மா நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால் கேப் பார்மா நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்து உள்ளது. அபாட் இந்தியா, டிவிஸ் லேபாரட்டரீஸ், கெடிலா, லூபின் மற்றும் சன் பார்மா இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இந்த ஃபண்ட் கடந்த 1, 2, 3, 5 மற்றும் 10 வருட காலங் களில் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஃபண்ட் கடந்த 9 ஆண்டுகளில் (2005 – 2013) நான்கு முறைதான் பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது. மீதி ஆண்டுகளில் அந்தக் குறியீட்டுடன் ஒப்பிடும்போது அதிகபட்சமாக 5% வரை நெகட்டிவ் வருமானத்தைத் தந்துள்ளது. ஆனால், பாசிட்டிவ் வருமானம் தந்துள்ள ஆண்டுகளில் அதிகபட்சமாக 49% வரை குறியீட்டைவிட அதிக வருமானத்தைத் தந்துள்ளது. ஆகவே, இந்த ஃபண்டில் அதிக வருமானத்தை ஈட்ட விரும்புபவர் கள் நீண்ட நாட்கள் ஃபண்டில் முதலீடு செய்து இருக்கும் நோக்கத்துடன் உள்ளே நுழைய வேண்டும்.

இந்த ஃபண்டில் மொத்தம் 16 பங்குகள் உள்ளன. இந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளில் இன்னும் இரு ஆப்ஷன்கள் முதலீட்டாளர்களுக்கு உள்ளன. அவை, எஸ்பிஐ பார்மா ஃபண்ட் மற்றும் யூடிஐ பார்மா அண்ட் ஹெல்த் ஃபண்ட் ஆகும். இந்த மூன்று ஃபண்டுகளிலும் அதிகமான சொத்து நிர்வாகத்தைக் கொண்டது இந்த ஃபண்டாகும்.

நீண்ட காலத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், தங்களது மாதாந்திர முதலீட்டில் ஒரு பகுதியை இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். தற்போது எஸ்ஐபி முறையிலும், பார்மா துறை குறியீடு வெகுவாக அடி வாங்கும் போது மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.
