Published:Updated:

ஷேர்லக் - லாபம் குறைந்தால் சம்பளம் கட் !

ஷேர்லக் - லாபம் குறைந்தால் சம்பளம் கட் !

ஷேர்லக் - லாபம் குறைந்தால் சம்பளம் கட் !

ஷேர்லக் - லாபம் குறைந்தால் சம்பளம் கட் !

Published:Updated:

‘‘மூன்று நாட்கள் மட்டுமே  பங்கு வர்த்தகம் நடந்த இந்த வாரத்தில், மார்க்கெட் தொடர்பான பெரிய பரபரப்பு ஒன்றுமில்லை. என்றாலும், சந்தை பற்றி நிறைய செய்திகளை அள்ளி வந்திருக்கிறேன்’’ - நம் கேபினுக்குள் நுழைந்தவுடன் ஷேர்லக் இப்படிச் சொன்னார். ‘‘சரி, கொட்டும்’’ என்றோம்.

‘‘இந்தியாவின் உற்பத்தி கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக் கிறது. ஹெச்எஸ்பிசியின் பர்ச்சேஸிங் மேனேஜர் இண்டெக்ஸ் (2014-15) கடந்த ஜூலை மாதத்தில் 5.3ஆக இருந்தது. தற்போது அது 5.1-ஆகக் குறைந்திருக்கிறது. தேவை குறைவாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள் மூலப்பொருட்கள் வாங்குவதைக் குறைக்கத் தொடங்கி இருப்பதோடு, கைவசமுள்ள மூலப்பொருட்களின் அளவையும் காலி செய்யத் தொடங்கி இருக்கின்றன.

ஒரு தொழில் நிறுவனம் சரியாகச் செயல் படுவதற்கு புறக் காரணங்கள் அதிகமாக இருந்தால், அந்தக் காரணங்கள் சரியாகிறவரை பொறுமை காட்டலாம். ஆனால், அகக் காரணங்கள் சரியில்லை எனில், அதைக் கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும். இதற்கு நல்லதொரு உதாரணம், அமெரிக்காவின் மிகப் பெரிய ஐ.டி நிறுவனமான சிஸ்கோ. இந்த நிறுவனம் நிர்ணயித்தபடி வருமானம் மற்றும் லாப இலக்கை எட்டாததால், சிஸ்கோ நிறுவனத்தின் சிஇஓ சம்பளம் 22% குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், நம் நாட்டிலும் நடந்தால்தான், பல நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியைக் காணும். பொதுத்துறை நிறுவனங்களில் இந்த நடவடிக்கை கட்டாயம் தேவை’’ என கொஞ்சம் காட்டமாகவே பேசினார் ஷேர்லக்.
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இது ஐபிஓ காலம் போலிருக்கிறதே?’’ என அடுத்த டாப்பிக்கை நாம் எடுத்துக் கொடுத்தோம்.

‘‘நடப்பு ஆண்டில் இதுவரைக்கும் 14 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளன. நிலக்கரியைச் சுத்தப்படுத்தும் நிறுவனமான ஏசிபி இந்தியா மூன்று கோடி பங்குகளை வெளியிட செபி அமைப்பிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறது. இதேபோல், தொலைக்காட்சி நிறுவனமான வீடியோகான் டி2ஹெச், ரூ.700 கோடி திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது’’ என்று விளக்கம் தந்தார்.
 

‘‘ஐவிஆர்சிஎல் நிறுவனப் பங்கின் விலை ஒரேநாளில் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘அதிகக் கடனில் சிக்கித் தவிக்கும் இந்த நிறுவனம், அதன் கடன் சுமையைக் குறைப்பதற்காக ரூ.4,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்கத் திட்ட மிட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு ரூ.7,800 கோடி கடன் இருக்கும் நிலையில், ரூ.20,000 கோடிக்கு ஆர்டர் இருப்பதால்தான், பங்கு விலை உயர்ந்துள்ளது’’ என்று பதிலளித்தார்.

ஷேர்லக் - லாபம் குறைந்தால் சம்பளம் கட் !

‘‘இன்ஃப்ரா துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளதே?’’ என்று வினவினோம்.

‘‘உண்மைதான். ஆனால், இந்தியாவில் இன்னும் இன்ஃப்ரா முதலீடுகள் வேகம் எடுக்கவில்லை. அப்படி எடுக்கும் பட்சத்தில்தான் நாடு உண்மையான வளர்ச்சியைக் காணும். இன்ஃப்ராவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் இந்திய சிமென்ட் துறையின் வளர்ச்சி வேகம் எடுக்க இன்னும் காலம் எடுக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். தற்போது இந்தியாவில் சிமென்ட் உற்பத்தித் திறன் 375 மில்லியன் டன். ஆனால், தேவை 300 மில்லியன் டன்தான்’’ என்றார்.
 
‘‘இந்தியாவின் ஜிடிபி பற்றி ஃபிட்ச் தரக்குறியீடு நிறுவனம் பாசிடிவ்வாகக் குறிப்பிட்டுள்ளதே?’’ என்று ஆச்சர்யம் காட்டினோம்.

‘‘நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவிகிதமாக இருக்கும் என ஃபிட்ச் தரக்குறியீடு நிறுவனம் கணித்திருக்கிறது. இது 2015-16-ல் 6.5% இருக்கும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது. இந்த வளர்ச்சி என்பது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அதிக முதலீட்டின் மூலம் சாத்தியமாகும் என ஃபிட்ச் சொல்லி இருக்கிறது. ஆர்பிஐ கணிப்பின்படி, நடப்பு நிதி ஆண்டில் இந்திய ஜிடிபி வளர்ச்சி 5.5 சதவிகித மாகவும், அடுத்த ஆண்டில் 6.3 சதவிகிதமாகவும்  இருக்கும்’’ என்றார்.

‘‘பங்குச் சந்தையின் ஏற்றத்தைப் பயன்படுத்தி பெரும் பணக்காரர்கள் லாபம் சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்களே?’’ என்றோம்.
‘‘ஹெச்என்ஐகள் பங்குகளில் முதலீடு செய்யும் பிஎம்எஸ் திட்டங்களில் கடந்த 2013 செப்டம்பர் நிலவரப்படி, ரூ.15,097 கோடி நிர்வகிக்கப் பட்டு வந்தது. இது 2014 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.32,040 கோடியாக அதிகரித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவ னங்கள், இந்திய பங்குச் சந்தை நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைத் தரும் என்று தீர்க்கமாக நம்புகின்றன. அவை கடந்த மாதத்தில் நம் பங்குச் சந்தை இறங்கியபோதெல்லாம்,  முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்கிச் சேர்த்தன.

குறிப்பாக, எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஹிண்டால் கோ போன்ற பங்குகளில் கணிசமான முதலீட்டை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘எஃப்எம்சி சேர்மன் ரமேஷ் அபிஷேக் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் மோசடி பிரச்னையில் சிறப்பாகச் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு முதலீட்டை திருப்ப பெற்றுக் கொடுத்ததோடு, கமாடிட்டி சந்தை மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். அவரது பதவிகாலம் அடுத்த வாரத்தில் முடிவடைகிறது. அவர் முடிக்க வேண்டிய வேலைகள் மற்றும் அவருக்குப் பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள காலதாமதம் காரணமாக, இன்னும் மூன்று மாதத்துக்கு ரமேஷ் அபிஷேக் பதவிகாலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று சொன்னார்.

‘‘சந்தையின் போக்கு எப்படி. இனி வரும் வாரங்களில் உயருமா?’’ என்று கேட்டோம், அவர் புறப்படும் முன்பு.

‘‘நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் - செப்டம்பர்) சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் அளித்துள்ள வருமானத்தில் இந்திய சந்தைகள் முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் சென்செக்ஸ் 18.96%, நிஃப்டி 18.80% அதிகரித்து உள்ளது.  அடுத்தடுத்த இடங்களில் சீனா (16.26% - ஷாங்காய் எஸ்இ காம்போசைட் ), தாய்லாந்து (15.22% - ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் தாய் இண்டெக்ஸ்), ஜப்பான் (9% - நிக்கி 225), அமெரிக்கா ( 5.63% - எஸ் அண்ட் பி 500 இண்டெக்ஸ்) ஆகிய நாடுகள் உள்ளன.

நாம் ஏற்கெனவே சொன்னதுபோல், குறுகிய காலத்தில் இந்திய சந்தை ஏற்ற இறக்கத்தைக் கண்டாலும் நீண்ட காலத்தில் ஏற்றம் காணும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை உறுதிப்படுத்தும் விதமாக, 2015 டிசம்பருக்குள் 31000 ஆகவும் உயரும் என அமெரிக்காவின் சிட்டி நிறுவனம் கணித்துள்ளது’’ என்றவர், புறப்படத் தயாரானவுடன், ஒரு துண்டுச் சீட்டு தந்தார். அதில் அவர் சொல்லி இருந்த ஷேர்டிப்ஸ்கள்...
 

ஹெச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டர் ரெட்டீஸ், கிளென்பார்மா, வோல்டாஸ் (இவை நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே)
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism