Published:Updated:

எம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா?

நீரை.மகேந்திரன் படம்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

ஃபாலோ-அப்

 மதுரையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் எம்ஆர்டிடி நிறுவனத்தின் மோசடித் திட்டங்கள் குறித்து செப்டம்பர் 07 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாக எழுதி யிருந்தோம். கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து எம்ஆர்டிடி நிறுவனத்தின் நடவடிக்கைகள் பலமான கண்காணிப்புக்குள்ளாயின. மதுரையைச் சேர்ந்த முரளி என்பவரும், வெற்றிவேல் என்பரும் எம்ஆர்டிடி நிறுவனத்தின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் கொடுக்க, அந்த நிறுவனத்தின் 12 முக்கியஸ்தர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.

மதுரையில் உள்ள மூன்று வங்கிகளில் உள்ள 19 வங்கிக் கணக்கில் சுமார் 18 கோடி ரூபாயை முடக்கி இருக்கின்றனர் காவல் துறையினர். தென் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிறுவனம் நடத்திய வேட்டையின் மூலம் சுமார் 100 கோடி ரூபாய்க்குமேல் வசூலாகி யிருக்கிறது என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 

நாணயம் விகடனில் உஷார் கட்டுரை வெளியானவுடன் ‘எங்கள் நிறுவனம் சட்டப்படியாக இயங்கும் நிறுவனம்’ என்று விளம்பரம் தந்தது எம்ஆர்டிடி.  ‘நாங்கள் எங்கேயும் ஓடமாட்டோம். எங்கள் மீது வேண்டுமென்றே பத்திரிகை களில் தவறாக செய்தி வெளியிடுகிறார்கள்’ என நிறுவனத்தை நடத்தி வருபவர்களும் ஏஜென்ட்டுகளும் ஒரு பெரிய பொய்யை அவிழ்த்துவிட, அப்பாவி மக்கள் மீண்டும் அதே நிறுவனத்தை நம்பி பணம் கட்ட ஆரம்பித்துவிட்டனர்.

எம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா?

அப்பாவி மக்களை நம்பவைக்க இன்னொரு வேலையையும் செய்தனர் இந்த நிறுவனத்தின் தேனி கிளையைச் சேர்ந்தவர்கள். தேனியில் இந்த நிறுவனத்தில் பணம் போட்டவர்களை அழைத்து, அவர்களிடம் நாணயம் விகடன் ரிப்போர்ட்டர் என போலி நபர் ஒருவரை நிறுத்தி, எம்ஆர்டிடி பற்றி தவறான செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

மக்களை ஏமாற்ற இப்படி தொடர்ந்து பல தகிடுதத்தங்களைச் செய்த எம்ஆர்டிடி, அரசாங்கத்தையும் ஏமாற்ற பல வேலைகளைச் சத்தமில்லாமல் செய்திருப்பதை சில விஷயம் தெரிந்த புள்ளிகளின் மூலம் கண்டுபிடித்தோம். இந்த நிறுவனம் குறித்து எழுதுவதற்கு நாம் விசாரித்து வருகிறோம் என்கிற தகவல் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுக்கு சென்று சேர்ந்த சில நாட்களில் (அதாவது, ஆகஸ்ட் மாத இறுதியில்) நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மூலதனம்  (Authorised capital), அளிக்கப் பட்ட பங்கு மூலதனத்தையும் (Paid capital) உயர்த்தியுள்ளனர். அதாவது, நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மூலதனம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.5,13,39,400 என்றும் கணக்கை மாற்றி பதிவு செய்திருக்கின்றனர்.

பங்கு ஒதுக்கீடுகளைப் (allotment) பொறுத்தவரை, கடந்த ஆண்டில் 07.04.13 முதல் பல்வேறு தேதிகளில் ஒரு ஒதுக்கீட்டுக்கு 16,368 மற்றும் 16,709 பங்குகள் வீதம் 31.08.13 தேதி வரை 25 ஒதுக்கீடுகள் செய்துள்ளனர். ஒரு பங்கின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.100 வீதம் கணக்கிட்டு, 3,45,338 பங்குகளை வெளியிட்டுள்ளனர். அதாவது, சுமார் 3,45,33,800 ரூபாய் இந்தத் தேதிகளில் திரட்டப்பட்டுள்ளது. ஆனால், திரட்டிய முதலீடு என்று 5,13,39,400 என்று கணக்கில் காட்டி யுள்ளனர். ஏன் இந்த முரண்பாடு? கூடுதலாக திரட்டியதாகச் சொல்லப் படும் மூலதனம் எங்கே போனது?
 

எம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா?

ஆனால், இந்த நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டின்படி, ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10 என்கிறது எம்ஆர்டிடி நிறுவனம். அப்படியெனில் 51,33,940 பங்குகள் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்தப் பங்குகளை வாங்கியுள்ள பங்குதாரர்கள் எத்தனை பேர், அவர்கள் யார், அவர்கள் டெபாசிட்டாகப் போட்ட பணத்துக்கு  அவர்களுக்கு பங்குகளைத் தந்தார்களா என்கிற கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை.

2013 - ல் திரட்டிய பங்கு  முதலீடு ரூ.14,17,100 என பேலன்ஸ்ஷீட் சொல்கிறது. அதாவது, 1,41,710 பங்குகள் மூலம் மூலதனம் திரட்டப்பட்டுள்ளது. மார்ச் 31, 2013-க்குப் பிறகு, இந்த ஆண்டு செப்.18, 2014 வரையிலான காலத்தில் ரூ.4,99,22,300 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்தப் பணம் எவ்வாறு திரட்டப்பட்டது, இந்தப் பங்கு வெளியீட்டுக்கு செபி அமைப்பின் அனுமதி பெறப்பட்டதா, முதலீட்டாளர்களிடம் பங்கு வெளியீட்டுக்கு என்று சொல்லப் பட்டதா (டெபாசிட் என்றே எல்லோரிடமும் வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது தனிக்கதை),   கணக்கில் எவ்வாறு வரவு வைக்கப்பட்டது என்கிற சந்தேகங் களுக்கு சரியான பதில் இந்த நிறுவனத்திடம் இல்லை. 

எம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா?

இந்த நிறுவனம் திரும்பத் திரும்ப சொல்கிற மாதிரி, நேர்மையான வழியில் சட்டத்துக்கு உட்பட்டுத் தொழில் செய்கிறது எனில், பொதுமக்களிடமிருந்து திரட்டிய பணத்தை ஏன் முறையாகக் கணக்கு வைக்கவில்லை? நிறுவனப் பதிவாளரிடம் தந்த அறிக்கையில் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பது ஏன்? 

இதுமாதிரி நமக்கு எழுந்த பல கேள்விகளுக்கு பதில் கேட்டு, எம்ஆர்டிடி நிறுவனத்துக்கு அனுப்பினோம். நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் ஏதும் வரவில்லை. இதுதொடர்பாக நாம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனில்லை. இந்த நிறுவனத்தின் மீது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர எஸ்.பிதாரி நம்மிடம் எடுத்துச் சொன்னார்.
 

‘‘இந்த நிறுவனம் குறித்து பொது மக்களிடமிருந்து புகார் வரவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்த நிறுவனம் குறித்து வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கை முடக்கி வைத்துள்ளோம். மேலும், மதுரையில் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க, விற்க தடை செய்துள்ளோம். 

இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வர்கள் காவல் துறையில் புகார் அளிக்கலாம். நீதிமன்றத்தின் வழிகாட்டு தல்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். பொதுமக்கள் இதுபோன்ற அனுமதி இல்லாத நிறுவனங்களில் பணம் கட்டாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

எம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா?

ஆர்பிஐ, செபி அனுமதி இல்லை!

கூட்டு முதலீட்டுத் திட்டத்தை நடத்த வேண்டுமெனில் செபியிடம் அவசியம் அனுமதி வாங்கியாக வேண்டும். அதுமாதிரியான எந்த அனுமதியையும் எம்ஆர்டிடி நிறுவனம் தங்களிடம்  வாங்கவில்லை என்பதை செபியும், பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதற்கான அனுமதியை தங்களிடமிருந்து வாங்கவில்லை என  ரிசர்வ் வங்கியும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றன.

எம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா?

எம்ஆர்டிடி நிறுவனத்துக்கு  03.02.2014 தேதியில் ஆர்பிஐ ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறது. அந்தக் கடிதத்தில், இந்த நிறுவனம் திரட்டியுள்ள பணம் சட்டத்தை மீறுகிற அளவில் உள்ளது. எனவே, பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டுவதை (Acceptance of Deposit)  இந்த நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், பொதுமக்களிட மிருந்து திரட்டிய பணத்தை 15  நாட் களுக்குள் திருப்பித் தரவேண்டும்.  டெபாசிட்டை திரும்பக் கொடுப்பதற் கான செயல்திட்டத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும்.

இதை மீறும்பட்சத்தில் சட்டரீதியாக இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரித்தது. ஆனால், ஆர்பிஐயின் உத்தரவை எம்ஆர்டிடி நிறுவனம் சட்டை செய்யவே இல்லை. பணத்தைத் திருப்பித் தர எந்த நடவடிக்கையும் எடுக்காததுடன், தொடர்ந்து பணத்தை வசூலித்து வந்தது.

ஆர்பிஐ கடந்த 09.09.2014 அன்று அனுப்பிய இன்னொரு கடிதத்தில், மதுரை ரூரல் டெவலப்மென்ட் டிரான்ஸ் ஃபார்மேஷன் இந்தியா லிமிடெட் மற்றும் மதுரை ரூரல் டெவலப்மென்ட் ஃபண்ட் இந்தியா லிமிடெட் இந்த இரண்டு நிறுவனங்களும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்கிற வகையில் செயல்பட அனுமதி கேட்டு எங்களிடம் விண்ணப்பிக்க வில்லை. நாங்கள் அனுமதியும் அளிக்கவில்லை என்று  தெளிவுபடுத்தி உள்ளது.

அதே தேதியில் செபியும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. அதில், எம்ஆர்டிடி நிறுவனம் குறித்து ஒரு தகவலை  அனுப்பியுள்ளது. மதுரை ரூரல் டெவலப்மென்ட் டிரான்ஃபார்மேஷன் இந்தியா லிமிடெட் மற்றும் மதுரை ரூரல் டெவலப்மென்ட் பெனிஃபிட் இந்தியா லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கம்பெனிகள் சட்டத்தின்படி, பொதுப் பங்குகள் வெளியிட அனுமதி அளிக்கப்பட வில்லை. இதுதொடர்பாக இந்த நிறுவனத்தின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் சொல்லியிருக்கிறது. 
    

எம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா?

மக்களிடமிருந்து பணத்தைத் திரட்ட எந்த முறையான அனுமதியும் வாங்காமல், கவர்ச்சிகரமான வாக்குறுதி தந்து, மக்களை ஏமாற்றிவந்த இந்த நிறுவனம் இப்போது வசமாக மாட்டிக் கொண்டு விட்டது. இனி, இந்த நிறுவனத்தில் அப்பாவி மக்கள் கட்டிய பணம் அவர்களுக்கு திரும்பக் கிடைக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு