Published:Updated:

ஷேர்லக் - அண்ணனை முந்தும் தம்பி!

ஷேர்லக் - அண்ணனை முந்தும் தம்பி!

பிரீமியம் ஸ்டோரி

புத்தம் புதிய டேப்லெட் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு நம் முன் ஸ்டைலாக வந்து உட்கார்ந்தார் ஷேர்லக். ‘‘எங்கே பிடித்தீர்கள்?'' என்று கேட்டோம். ‘‘எல்லாம் பிக் பில்லியன் டே புண்ணியம்’’ என்றார் லேசாகப் புன்னகைத்தபடி.

‘‘இன்ஃபோசிஸ் செப்டம்பர் காலாண்டு முடிவு எப்படி?’’ என்று நமது முதல் கேள்வியைக் கேட்டோம்.

‘‘ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின்  வருமானம் 3.1%, நிகர லாபம் 7.3% அதிகரித்துள்ளது. முழு நிதி ஆண்டில் வருமான அதிகரிப்பு 7-9 சதவிகிதமாக இருக்கும் என ஏற்கெனவே சொன்னதை இப்போதும் சொல்கிறது. மேலும், இரண்டாம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாப வரம்பு, ஆர்டர் மேம்பட்டிருப்பது சாதகமான விஷயம்தான்.  பெரும்பாலான நிறுவனங்கள் பங்குப் பிரிப்பில் ஈடுபட்டி ருக்கும் நிலையில் இந்த நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது. கூடவே, பங்கு ஒன்றுக்கு ரூ.30 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள் ளது’’ என்றார்.

‘‘பொதுத்துறை பங்குகள் மீது சிறு முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஆர்வம் பிறந்திருக்கிறதே?’’ என்றோம்.

‘‘பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு மூலதனம் குறைந்தபட்சம் 25% இருக்க வேண்டும் என்றும், இதனை 2017 ஆகஸ்ட்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் செபி அறிவித்துள்ளது. இது அரசின் பங்கு விலக்கலுக்கு மிகவும் உதவியாக இருக்கும். செபியின் இந்த உத்தரவுப்படி, முப்பதுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 60,000 கோடி மதிப்புள்ள பங்குகளை அடுத்த மூன்று வருடங்களில் விற்பனை செய்ய இருக்கின்றன’’ என்றார். 

ஷேர்லக் - அண்ணனை முந்தும் தம்பி!

‘‘முதலீட்டு  விஷயத்தில் அண்ணனைத் தம்பி முந்துகிறார் போலிருக்கிறதே?’’ என்றோம், சூடான டீ தந்தபடி.

‘‘மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அம்பானி சகோதரர்கள் முகேஷ் மற்றும் அனில் கலந்து கொண்டனர். இதில் அண்ணன் முகேஷ், அந்த மாநிலத்தில் ரூ.20,000 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்தார். ஆனால், அனிலோ ஒருபடி மேலேபோய், ரூ.60,000 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்தார். இதன்  மூலம் 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். பிக் பிரதர்களின் பார்வை நம் தமிழகத்தின் மீது விழாதா?’’ என்று அவர் நம்மிடம் கேட்க, பதில் சொல்ல முடியாமல் நாம் தவித்தோம்.

‘‘அதிக ரொக்க கையிருப்பை வைத்துக்கொண்டு, பல நிறுவனங்கள் சும்மா இருக்கிறது போலிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘ஒருபக்கம் வட்டி அதிகம் என சில நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யாமலும், வாங்கிய கடனை சரியாக கட்ட முடியாத நிலையிலும் இருக்கின்றன. மற்றொருபக்கம் டஜனுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் ஏராளமான ரொக்க கையிருப்பை ஒன்றும் செய்யாமல் வைத்திருக்கின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு அதிகமாகக் கிடைக்கக்கூடிய லாபம் கிடைக்காமல் இருக்கிறது. இந்தப் பட்டியலில் கோல் இந்தியா, பிஇஎல், என்எம்டிசி, இன்ஃபோசிஸ், மேக்ஸ் இந்தியா, கெய்ர்ன் போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை’’ என்று போட்டு உடைத்தார்.

‘‘ஆர்பிஐ வட்டியைக் குறைக்காததற்கு முக்கிய காரணகர்த்தாக்களில் ஒன்று சர்வதேச நிதியம் என்கிறார்களே, உண்மையா?’’ என்று வினவினோம்.

‘‘இந்தியாவில் உணவு பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என ஆர்பிஐ சொல்லியிருக்கிறது. பல ஆண்டுகளாக இந்தியாவில் உணவு மற்றும் எரிபொருள் சார்ந்த பணவீக்க விகிதம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது சர்வதேச அளவில் உணவு பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை (பீப்பாய் 85 டாலருக்கு கீழே) கணிசமாக குறைந்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் விரைவில் உணவு பணவீக்க விகிதம் வேகமாக குறைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார் கள் அனலிஸ்ட்கள். அப்படி குறைந்தா லும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் உடனடியாக வட்டியைக் குறைப்பாரா என்பது பெரிய கேள்விக்குறிதான். இந்த விஷயத்தில் பிரதமரே சொன்னால்கூட அவர் கேட்பாரா என்பது சந்தேகமே’’ என்றார்.

‘‘அண்மையில் ஒரேநாளில் 5% அளவுக்கு டெக் மஹிந்திரா, மைண்ட் ட்ரீ போன்ற நிறுவனப் பங்குகளின் விலை இறங்கி இருக்கிறதே?’’ என்றோம் சற்று அதிர்ச்சியோடு.

‘‘சர்வதேச முதலீட்டு வங்கியான சிட்டி, இந்த நிறுவனப் பங்குகள் மீதான நடுத்தரக் கால முதலீட்டு தரக்குறியீட்டை குறைத்ததே இதற்கு காரணம். அதே நேரத்தில் ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்டகால முதலீட்டில் இந்தப் பங்கு களின் இலக்கு விலையை அதிகரித்தது.  எனவே, நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.

‘‘எஃப்எம்சி அமைப்பு, செபியுடன் இணைக்கப்பட்டுவிடும்போல இருக்கிறதே?’’ என்று விசாரித்தோம்.

‘‘கமாடிட்டி சந்தைகளை கண்காணிக்கும் பார்வேர்டு மார்க்கெட் கமிஷனை (எஃப்எம்சி) செபியுடன்  இணைக்க மத்திய அரசு யோசித்து வருவதாகத் தகவல். எஃப்எம்சி-ஐவிட செபியில் பணியாளர்கள் அதிகம் என்பது தொடங்கி செபி பல்வேறு வசதிகளை அதிகமாக கொண்டிருக்கிறது. அந்தவகையில் அது எஃப்எம்சி-ஐவிட கமாடிட்டி சந்தையைச் சிறப்பாக கண்காணிக்கும் என்பது மத்திய அரசின் எண்ணம். அப்படி இல்லை எனில்,  எஃப்எம்சிக்கு அதிக அதிகாரம் அளிக்கும்விதமாக ஃபார்வேர்டு கான்ட்ராக்ட் ரெகுலேஷன் ஆக்ட் (எஃப்சிஆர்ஏ) திருத்தப்படலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.  கமாடிட்டி சந்தை எதிர்காலத்தில் நன்கு வளர வேண்டுமெனில், அதை தனி அமைப்பாகவே கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.

அவர் புறப்படும்முன், ‘‘நம் சந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?’’ என்று கேட்டோம்.

‘‘சர்வதேச காரணங்களால் சந்தை இடையிடையே இறங்கினாலும்  நீண்ட காலத்தில் ஏற்றம்தான். அதற்கு நான்கு முக்கிய காரணங்கள். அமெரிக்காவில் இப்போதைக்கு வட்டி விகித உயர்வு இல்லை; சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சிக் கண்டு வருகிறது; அமெரிக்க டாலருக்கு இணையான  இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவுக்கு நிலையாக இருந்து வருகிறது; இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2014-15-ல் 5.6 சதவிகிதமாக  இருக்கும் என்பவையே அந்த காரணங்கள்’’ என்றவர், ‘‘சந்தை ஏற்ற இறக்கமாக இருப்பதால், இந்த வாரம் நோ ஷேர் டிப்ஸ்’’ என்று சொல்லி விட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு