பிரீமியம் ஸ்டோரி

ஜீரகம் (Jeera)

சந்தைக்கு தினசரி வரத்து அதிகமாக காணப்பட்டதால், கடந்த வாரம் ஜீரகத்தின் விலை குறைந்தே வர்த்தகமானது. இருப்பினும் வரும் வாரங்களில் தேவை அதிகரிப்பு காரணமாக மேலும் விலை இறங்காமல் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
 
ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா வின் சமீபத்திய அறிக்கைபடி, கடந்த ஏப்ரல்-ஜூலை மாதங்களில் ஜீரகத்தின் ஏற்றுமதியானது, இந்தியாவில் 32% அதிகரித்து 58,000 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், ஜீரகத்தின் ஏற்றுமதி நாடு களான சிரியா, துருக்கியில் நிலவிவரும் போர் பதற்றமாகும்.

இந்திய அரசாங்கத்தின் மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, இந்தியாவில் ஜீரகத்தின் உற்பத்தியானது கடந்த அக்டோபர்-செப்டம்பர் மாதங் களில் 4.56 லட்சம் டன்களாக அதிகரித் துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.94 லட்சம் டன்களாக இருந்தது.

வரும் வாரத்தில் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் (Turmeric)

கடந்த வாரத்தில் சந்தைக்கு தரமான மஞ்சள் அதிக அளவில் வந்ததாலும்,  மஞ்சளின் தேவை அதிகமாக இருந்ததாலும் அதன் விலை அதிகரித்து வர்த்தகமானது. அது மட்டுமல்லாமல், மஞ்சள் விளையும் இடங்களில் சூறாவளி பாதிப்பால் பயிர் சேதம் ஏற்பட்டதும் மஞ்சள் விலை ஏற்றத்துக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது.

சந்தை நிலவரப்படி, கடந்த ஆண்டில் 52 லட்சம் பைகளாக (ஒரு பை என்பது 75 கிலோ) இருந்த மஞ்சள் உற்பத்தி, நடப்பு ஆண்டில் 35-37 லட்சம் பைகளாக குறையும் எனத் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணமாக வர்த்தகர்கள் குறிப்பிடுவது, மஞ்சள் அதிகம் விளையும் நிஜாமாபாத் மற்றும் வாரங்கல் ஏரியாக்களில் இதன் உற்பத்தியானது 17-18 லட்சம் பைகளாக குறைந்துள்ளதுதான். இது, இதற்கு முந்தைய ஆண்டில் 22 லட்சம் பைகளாக இருந்தது.

அதேபோல, 2013-14ம் ஆண்டில் ஏழு லட்சம் பைகளாக இருந்த கர்நாடகாவின் மொத்த மஞ்சள் உற்பத்தி, தற்போது ஐந்து லட்சம் பைகளாக குறைந்துள்ளது.

வரும் வாரத்தில் மஞ்சள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அக்ரி கமாடிட்டி!

ஏலக்காய் (Cardamom)

வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. ஏற்றுமதி தேவைகள் குறைவாக இருப்பதும் இந்த விலை குறைவுக்கு காரணமாக அமைந்தது.

கடந்த வியாழக்கிழமை வரத்து 86 டன்களாகும். ஒரு கிலோ ஏலக்காய் சராசரியாக 725 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 925 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா சமீபத்தில் வெளியிட்ட ஏப்ரல்-ஜூலை 2014-க்கான அறிக்கைபடி, சிறிய மற்றும் பெரிய ரக ஏலக்காய் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது. சிறிய ஏலக்காய் 5 சதவிகிதம் குறைந்து, 755 டன்களாக இருக்கிறது. பெரிய ரக ஏலக்காய் 17 சதவிகிதம் குறைந்து, 115 டன்களாக காணப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

கொத்துமல்லி (Coriander)

கடந்த வாரத்தில் கொத்துமல்லி விலை அதிகரித்து வர்த்தகமானது. இதற்கு முக்கிய காரணம், வலுவான ஏற்றுமதி தேவை காணப்பட்டதுதான்.  இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த தேவையானது ராபி பருவத்தில் விவசாயிகள் அதிகமான கொத்துமல்லி பயிர்களை விதைத்திருப்பதற்கான ஊக்கத்தை வழங்கி இருக்கிறது.

அரசாங்கத்தின் மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2013-14,அக்டோபர்-செப்டம்பர்  மாதங்களில் இந்தியாவின் கொத்துமல்லி உற்பத்தியானது 4.28 லட்சம் டன்களாக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 5.24 லட்சம் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாத நிலவரப்படி, கொத்துமல்லி ஏற்றுமதி 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு