நடப்பு
Published:Updated:

ஷேர்லக் - கசப்பு மருந்துக்கு தயாராகுங்கள்!

ஷேர்லக் - கசப்பு மருந்துக்கு தயாராகுங்கள்!

வெள்ளிக்கிழமை மதியம் முதலே சென்னை முழுக்க மழை. பல பகுதிகளில் வெள்ளம்போல தண்ணீர் ஓடினாலும், மழைக்கோட்டை அணிந்தபடி தனது புல்லட்டில் நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். மழையில் நனைந்து வந்தவரை சுடச்சுட டீ தந்து வரவேற்றோம். ‘‘தேங்க்யூ, தேங்க்யூ’’ என்றபடி வாங்கிக் குடித்தவர், செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘பதவியேற்று ஐந்து மாதங்களாக நம் பொருளாதார முன்னேற்றத்துக்கு எந்த முக்கியமான நடவடிக்கையும் எடுக்காத பிரதமர் மோடி, இப்போது தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். முதன்மை பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிர மணியனைத் தேர்வு செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் தலைமைச் செயலராக இருந்த ராஜீவ் மெக்ரிஷியை பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக நியமித்திருக்கிறார்.

இந்த இரண்டு பேரும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் செலக்‌ஷனாம். அரவிந்த் உலக அளவில் முக்கியமான பொருளாதார நிபுணர். பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர அவர் மிகவும் உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறது மத்திய அரசாங்கம். இவரது தலைமையில் இனி உருவாகும் மத்திய பட்ஜெட்டில் நிச்சயம் சில கசப்பு மருந்து இருக்கும் என்கிறார்கள். எதற்கும் தயாராக இருப்பது நமக்கு நல்லது.

ஷேர்லக் - கசப்பு மருந்துக்கு தயாராகுங்கள்!

அஹமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-ல் படித்தவர் அரவிந்த். அப்போதும் சரி, பிற்பாடு ஐஎம்எஃப்பில் வேலை பார்த்த போதும் சரி, தற்போது கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜனுடன் நல்ல நட்பு  உண்டு. எனவே, ரகுவும் அரவிந்தும் ஒருசேர நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வாய்ப்புண்டு என்றும் அரசாங்கம் நினைக்கிறதாம்.

ராஜீவ் மெக்ரிஷியைப் பொறுத்தவரை, இங்கிலாந்தில் நிர்வாகம் படித்தவர். நேர்மையான, மிகத் திறமையான ஐஏஎஸ் ஆபீஸர். இன்றைக்கு ராஜஸ்தானில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர முக்கிய காரணமாக இருந்தவர். இவரது சேவை மத்திய அரசுக்கு கட்டாயம் தேவை என்றாலும், அந்தப் பொறுப்பில் இருந்த அரவிந்த் மாயாராமைத் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் ராஜீவை உட்கார வைக்கிற அளவுக்கு அவருக்கு பொருளாதாரம் அத்துப்படியா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பார்ப்போம், நிதித் துறைக்கு புதிதாக வந்திருக்கும் இந்த இருவரும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள் என்று’’  பேசிக் கொண்டே போனவரிடம் அடுத்த கேள்வியைக் கேட்டோம்.
‘‘ஐ.டி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எப்படி?’’ என்று கேட்டோம்.

‘‘மோசம் என்று சொல்ல முடியாது. இரண்டாம் காலாண்டில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ்-ன் வருமானம் 6.4% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 3.1 சதவிகிதமாக உள்ளது.

டிசிஎஸ் நிறுவனம், அதிகப் பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்கும் அதன் துணை நிறுவனமான சிஎம்சி-ஐ அதனுடன் இணைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. 100 சிஎம்சி பங்கு களுக்கு (முக மதிப்பு ரூ.10) 79 டிசிஎஸ் பங்குகள் (ரூ.1 மதிப்பு) வழங்கப்படுகிறது. சிஎம்சி-ன் சேர்மனாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இப்போது டிசிஎஸ்-ன் சிஇஓவாக உள்ளார். சிஎம்சி இணைப்பு மூலம் இந்தியாவில் டிசிஎஸ் செயல்பாடு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இன்ஃபோசிஸ் புதிய சிஇஓ விஷால் சிக்கா, நிறுவனத்திலிருந்து கடந்த காலத்தில் வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை மீண்டும் நிறுவனத்துக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.

இன்னொரு ஐ.டி நிறுவனமான மைண்ட் ட்ரீ-ன் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 5.9% அதிகரித்துள்ளது. இதே காலத்தில் வருமானம் 4.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தக் காலாண்டில் புதிதாக 810 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. மேலும், பங்கு ஒன்றுக்கு ரூ.3 (30%) டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது.

ஐ.டி நிறுவனங்களோடு வேறு சில நிறுவனங்களைப் பற்றியும் சொல்லிவிடு கிறேன். இரண்டாம் காலாண்டில் ஃபெடரல் வங்கியின் நிகர லாபம் 9% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 6.42 சதவிகிதம்தான் உயர்ந்துள் ளது. அண்மையில் இந்தத் தனியார் வங்கியில் எஃப்டிஐ வரம்பு அதிகரித்ததை அடுத்து பங்கின் விலை 52 வார உச்சத்தை (ரூ.92) தொட்டது. அதன்பிறகு பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது பங்கின் விலை ரூ.135 என்கிற அளவில் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

என்ஐஐடி டெக்-ன் நிகர லாபம் 36% வீழ்ச்சி அடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை அளித்து வரும் இந்த நிறுவனத்தின் தேய்மானச் செலவு அதிகரித்ததை அடுத்து லாபம் குறைந்திருக்கிறது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 59% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு புதிய அரசின் மீதான மக்களின் நம்பிக்கை உயர்ந்திருப்பதே காரணம் என நிறுவனத்தின் எம்டி பவன் முன்ஜால் தெரிவித்துள்ளார்’’ என பல நிறுவ னங்களின் காலாண்டு முடிவுகளை சொல்லி முடித்தார்.

‘‘டிஎல்எஃப் கதை இப்படி ஆகிவிட் டதே?’’ என்றோம் சற்று கவலையுடன்.

‘‘கடந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தையை மிகவும் கலக்கிய விஷயம். இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் மற்றும் அதன் சேர்மன் கே.பி.சிங் உள்ளிட்ட ஆறு அதிகாரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை வர்த்த கத்தில் ஈடுபட செபி அமைப்பு தடை விதித்தது.

இந்தத் தடையால் டிஎல்எஃப் பங்கின் விலை ஒரேநாளில் 30% விலை வீழ்ச்சி கண்டது. இதனால் அதன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.7000 கோடி குறைந்துபோனது.

2007-ம் ஆண்டு டிஎல்எஃப் ஐபிஓ வந்தபோது, அதன் முக்கிய நிர்வாகிகள் மூன்று பேரின் மனைவிகள் பெயர்களில் பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட் டுள்ளது. இவர்கள் பங்கு வேண்டி விண்ணப்பித்த மூன்று நிறுவனங்கள், டிஎல்எஃப்-ன் துணை நிறுவனங்கள் என்பது மறைக்கப்பட்டிருக்கிறது. இதில் நிறுவனச் சட்டம் மீறப்பட்டுள்ளது. தவறான தகவல்களைப் பங்குச் சந்தைக்குக் கொடுத்தது ஆதாரப்பூர்வ மாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

செபியின் இந்தத் தடை தகவல் திங்கள்கிழமை சந்தை முடிந்தபிறகுதான் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், திங்கள்கிழமையே டிஎல்எஃப் பங்குகள் 4% வீழ்ச்சி கண்டது. செபி அமைப்பின் தடை விவரம் முன்கூட்டியே டிரேடர்களுக்குத் தெரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

செபி-ன் இந்த தீர்ப்பு டிஎல்எஃப் நிறுவனத்தின் கடன் குறைப்புத் திட்டத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் கடன் ரூ.21,000 கோடிக்கு மேல் இருந்தது.

இது 2014, ஜூன் மாதத்தில் ரூ.19,000 கோடியாகக் குறைக்கப்பட்டது. இதை ரூ.10,000 கோடியாகக் குறைக்கத் திட்டமிட்டு, டிஎல்எஃப் செயல்பட்டு வந்தது. செபி தடையால் இதன் கடன் குறைப்புத் திட்டம் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது’’ என்றார்.

‘‘அல்ட்ராடெக் நிறுவனப் பங்கின் விலை ஒரேநாளில் 6.4% குறைந்துள்ளதே?’’ என்றோம் சற்று அதிர்ச்சியாக.

‘‘இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் தொழிற்சாலைகளை விற்க திட்டமிட்டுள்ளது. இதை முதலீட்டாளர்கள் விரும்பவில்லை என்பதால் பங்குகளைக் கணிசமாக விற்றிருக்கிறார்கள். இதனால், பங்கின் விலை குறைந்துள்ளது’’ என்று பேசிக்கொண்டே போனவர்,

‘‘மீண்டும் மழை பெரிதாக வருவதற்குள் நான் கிளம்புகிறேன்’’ என்றவர், நாணயம் வாசகர்கள் அனைவருக்கும்  ‘ஹேப்பி தீபாவளி’ சொன்னதுடன், தீபாவளி பங்குகளையும் சொல்ல மறக்கவில்லை. அந்தப் பங்குகள் இதோ... விஐபி இண்டஸ்ட்ரீஸ், பாரத் ஃபோர்ஜ், ஆர்இசி,

நாட்கோ பார்மா, டிசிபி பேங்க், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், பயோகான், ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.